“சிங்காரச் சென்னை” – 235!
பவள சங்கரி
“சிங்காரச் சென்னை”, இந்தியாவின் சுத்தமான நகரங்களின் பட்டியலில் 235வது இடத்திற்குச் சென்றதற்கான காரணங்களை புட்டுப்புட்டு வைத்துள்ளது இதற்கான தேர்வுக்குழு! புயலுக்குப்பின் 3 மாதம் கழித்து சென்னை மாநகரகத்தின் அனைத்துப்பகுதிகளிலும் சென்று ஆய்வு செய்து, புயலால் ஏற்பட்ட சேதங்கள் இன்னும் அகற்றப்படாமல் ஒவ்வொரு பகுதிகளிலும் குவிந்துகிடப்பதும், கழிவு சுத்தீகரிப்பு மேலான்மை செயல்படாமல் இருப்பதும், சரியான திட்ட வரைமுறைகள் தீட்டப்படாமல் இருப்பதும், கழிவறைகள் அருவருக்கத்தக்க முறையில் இருப்பதுமே இதற்கான காரணங்களாகக் கூறப்பட்டுள்ளன. இது முற்றிலும் உண்மை என்ற வகையில் நாம் சென்னையைச் சுற்றிப்பார்த்தாலே இந்த நிலையை காணமுடிகிறது. இதில் முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டியது நோய்கள் வேகமாகப் பரவக்கூடிய அபாயங்கள் உள்ளதையும் எச்சரிக்கையாகக் கொள்ளவேண்டும். மைசூர், பங்களூரு போன்ற பெருநகரங்களில் சுத்தத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு காலை 6 மணி முதல் நூற்றுக்கணக்கான பணியாட்கள் துப்புரவு பணிகளில் ஈடுபட்டிருப்பதை கண்கூடாகக் காணமுடிகிறது. ஆனால் நமது மாநில அரசோ அல்லது மாநகராட்சி நிர்வாகமோ இதில் துளியும் கவனம் செலுத்துவதில்லை என்பதே வேதனைக்குரிய விசயம் ..