வன்முறை வழியே அல்ல; அறவழியே சிறந்த வழி

1

மறவன்புலவு க.சச்சிதானந்தன்

 

அறவழியில் நிற்பதால் மனிதநேயம் சுரக்கிறது.

 

கொலைகளை நியாயப்படுத்திய 20, 21ஆம் நூற்றாண்டுகள், ஈழத் தமிழர் வரலாற்றில் கறை படிந்த காலமே.  எதிர்காலம் எம்மைத் தூற்றும். அந்தப் பழிக்கு நாம் அனைவரும் ஆளாகி உள்ளோம்.

 

1975 ஆனி.

அல்பிரட் துரையப்பா கொலை, அன்று மாலை என் வீட்டில் அழுதவாறு இருந்தேன். விக்கி விக்கி, விம்மி விம்மி அழுதேன். அவர் எமக்கு உறவா எனக் கேட்டார் துணைவியார்.

தமிழாராய்ச்சி மாநாட்டுக் கொலைகளுக்கு அவர் காரணமல்லவா? அழுதுகொண்டிருந்த என்னிடம் ஓடிவந்து கேட்டவர் என் மூத்த உறவினர்.

என் தீவிர பங்களிப்புடன் நடந்த தமிழாராய்ச்சி மாநாட்டு நிகழ்ச்சியின் உச்சத்தில் 9 உயிர்கள். அன்றும் மார்கழியில் அழுதேன், மீண்டும் ஆவணியில் அழுதேன்.

 

1976 மார்கழி.

சிறையில் இருந்து தமிழ் இளைஞர் பலர் விடுதலை.  வன்முறையில் ஈடுபட மாட்டோம், வெளிநாடு சென்று விடுகிறோம்.

14 இளைஞர், ஒருவர் பின் ஒருவராக என் அலுவலகம் வந்தனர். எவரும் எனக்கு முன் அறிமுகம் இல்லாதவர்கள். ஒவ்வொருவரையும் குடியகல்வு அலுவலகத்துக்கு என் காரில் அழைத்துச் சென்றேன்.  கடவுச் சீட்டுப் பெறும் இருவருக்கு உறுதிக் கையொப்பமிடும் தகுதி,  மூத்த அரச அலுவலராதலால் எனக்கு இருந்தது.  குடிவரவு – குடியகல்வுத் தலைவரிடம் சென்று பேசினேன். 14 இளைஞர்களுக்கும் உறுதி ஒப்பம் இட்டேன். கடவுச் சீட்டுப் பெற்று அந்த மாதமே வெளிநாடு சென்று புகலிடம் தேடினர் அவர்கள்.

1979 மாசி.

கைதடியில் 50-60 இளைஞர்களுக்கு 2 நாள்கள் முழு நேரப் பயிற்சி.  அறவழியில் பயிற்சி. அறவழிப் போராட்டத்தில் பயிற்சி.
அறவழிப் போராட்டக் குழு தொடக்கம்.  பெயரில் போராட்டம் என்பதைச் சேர்த்தேன். அறவழியே சிறந்தது என அன்று நம்பியவர் பலர் தடம் மாறாது இன்றும் உளர்.

 

1985 தைக் கடைசி.

தில்லி வெளியுறவுத் துறை அலுவலகம். உமாமகேசுவரன், சித்தார்த்தன், வெற்றிச்செல்வன். நானும் உடன் சென்றேன்.
மீரா சங்கர் (அமெரிக்காவில் இந்தியத் தூதராகிக் கடந்த மாதம் தில்லி திரும்பியவர்)  தெற்காசிய மேசைக்குப் பொறுப்பான அன்றைய துணைச் செயலர்.
பஞ்சாப்பில் நிகழ்வது போதாதா? தமிழ்நாட்டிலும் வன்முறை நிகழ்வுகளுக்குக் கால்கோள் இடாதீர்கள். ஈழத்து இளைஞர்களுக்கு ஆயுதம் வழங்காதீர்கள்.
வன்முறையை விலைக்கு வாங்காதீர்கள். ஆயுதப் பாரம்பரியம் மறந்து 400 ஆண்டுகளாகிவிட்டன. எமக்கு ஆயுதங்கள் வேண்டாம்.  சிங்களத் தலைமைக்கு நியாயங்களை எடுத்துரைக்க எத்தனையோ வழிகள் இந்தியாவுக்கு உண்டு.
கியூபாவை வழிக்குக் கொண்டுவரக் கென்னடியின் பிக்குடாத் தோல்வி. அதே கியூபாவைச் சுற்றி அமெரிக்கக் கப்பல்கள் சோவியத் ஊடுருவலைத் தடுத்த உபாயத்தை வெற்றியை அறியாதவர்களா நீங்கள் என்றேன்.
ஆயுதம் கொடுக்க வேண்டாம் என மீரா சங்கரிடம் வாதாடினேன், என் இரு மருங்கிலும் மேற்காணும் மூவரும். பின்னர் என்னைக் காணும் பொழுதெல்லாம் அந்த வாதங்களை நினைவூட்டுவார் மீரா சங்கர். அண்ணை அன்றே சொன்னார் என்பார் சித்தார்த்தன்.

 

1986,

சென்னை இந்திரா நகர் வீடு. உண்ணாவிரதத்தில் பிரபாகரன்.
வெள்ளிக்கிழமை காலை. மயிலாப்பூர் கோயிலில் வழிபட்டேன். மாலை ஒன்று வாங்கினேன்.
இந்திரா நகர் சென்றேன். பிரபாகரனுக்கு மாலை போட முயன்றேன். மாலைகளைப் பெறுவதில்லை என்றார்.
தம்பி,  இதுதான் வழி.  நல்ல வழி. அறவழி என்றேன்.  பாராட்டினேன்.
நானும் காந்தியத்தில் ஈடுபாடுடையவன் என்றார். சிங்களவன் கையில் ஆயுதமல்லவா இருக்கிறது என்றார்.

 

1987 தொடக்க காலம்.
மகாத்மா காந்திக்கும் ராஜாஜிக்கும் பெயரன் ராஜ்மோகன் காந்தி.
மேகாலயா நண்பர் ஒருவருடன் கொழும்புக்கு என்னை அனுப்பினார்.  அங்கு சிங்களப் பெண்மணி எம்மை வரவேற்றார்.
குடியரசுத் தலைவர் ஜே. ஆர். ஜெயவர்த்தனாவிடம் மூவரும் சென்றோம். அமைதித் தீர்வை நோக்கி,  அரசியலமைப்பைத் தமிழரும் இணைந்து புதிதாக உருவாக்குவோம் என முன்மொழிந்தேன்.
பிரபாகரனைச் சந்திக்க விரும்புகிறேன் என்றார் ஜெயவர்த்தனா.  அரசியலமைப்பைத் திருத்த முடியாது என்றார்.
வன்முறை பெருகும் என்றேன்.  பார்த்துக் கொள்கிறேன் என்றார்.
இலங்கைக்கு இந்தியப் படையை அனுப்ப வேண்டும்.  பங்களூரில் ஆதரவு மாநாடு.
ஈழவேந்தன், சந்திரகாசன், நான், மற்றும் இந்தியர் பலர். இந்தியப் படையை அனுப்பாதீர்கள். ஏற்கனவே உள்ள ஆயுதங்களைக் களையும் வழிகளைக் காணுங்கள். படை செல்வதால் சிக்கல் தீராது.

 

மறு நாள் இந்துவில் செய்தி.
படித்தபின் என்னைக் கிண்டல் செய்த ஈழத் தமிழ் அரசியல் தலைவர்கள். கொழும்பிலிருந்து பாராட்டியவர் நீலன் திருச்செல்வம். வன்முறை வேண்டாம், பேசித் தீர்ப்போம் என்ற கண்ணோட்டம் அவருக்கு.

 

1991 மாசிக் கடைசி.

தில்லியில் இராசீவ் காந்தி இல்லம். மாலை 4 மணி.
காசி ஆனந்தனுடன் நான். “இந்தியப் படை சென்றதால் வந்த பகைமையை மறப்போம்.  மீண்டும் ஈழத்தமிழரை நண்பராகப் பாருங்கள்” – காசி ஆனந்தன் சொல்கிறார் ராசீவிடம்.
தவறுகள் நடந்துவிட்டன என்கிறார் ராசீவ். நல்ல செய்தியுடன், மார்ச் 28இல் மீண்டும் சந்திப்பு என ராசீவ் கூறியபின் ராசீவ் இல்லத்திலிருந்து புறப்பட்டோம்.

 

1991 மே மூன்றாவது வாரம்

சென்னையில் காசி ஆனந்தன் அழுதவாறு சில நாள்கள். வெண்ணெய் திரண்டு வரும் பொழுது தாழி உடைந்ததால். அந்தச் சந்திப்பின் பின் ராசீவ் தேர்தலில் வெற்றி பெறுவார்.  ஈழத் தமிழருக்கு விடிவு வரும் எனக் காசி ஆனந்தன் நம்பி இருந்தார்.

 

1996,

கொழும்பில் அமைச்சராகத் தேவானந்தா.  திருகோணமலை வழி என் தாயார் யாழ்ப்பாணம் செல்ல வேண்டும். கப்பலில் இடமில்லை என்றனர்.
தேவானந்தாவிடம் கிருட்டிணன் அழைத்துச் சென்றார்.  தேவானந்தாவின் மாடி அறையில் துப்பாக்கி வரிசை.
இவற்றை எப்பொழுது புதைக்கப் போகிறீர்கள்?  அதன் பின்னரே எமக்கு விடிவு என்றேன்.  அவரது உரத்த சிரிப்பு எனக்குப் பதில்.
வரலாறு சுமத்தவுள்ள அந்தப் பழிக்கு நாம் ஆளாகக் கூடாது என நான் பலவாறு முயன்றேன்.  உள்ளார்ந்து முயன்றேன்.
ஆனால் அந்தப் பழிக்கு நாம் அனைவரும் ஆளாகி உள்ளோம்.

 

தினை விதைத்தவன் தினை அறுப்பான்

வினை விதைத்தவன் ….???

 

படத்திற்கு நன்றி

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “வன்முறை வழியே அல்ல; அறவழியே சிறந்த வழி

  1. ’கத்தி எடுத்தவன் கத்தியாலேயே சாவான்’ என்பதும் நினைவுக்கு வருகிறது. ’என் ஆயுதத்தை எதிராளியே தீர்மானிக்கிறான்’ என்ற கூற்றும் கருதத்தக்கது. இதே ஆயுதங்கள், சில நேரங்களில் வெற்றியையும் அளித்திருக்கின்றன. இந்த வெற்றிகளுக்கும் தோல்விகளுக்கும் அடிப்படை ஒன்றே:

    வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
    துணைவலியும் தூக்கிச் செயல் (குறள் 471)

    ஆயுதப் போராட்டமோ, அமைதிப் போராட்டமோ, இவற்றைச் சீர்தூக்கிப் பார்க்காமையே வீழ்ச்சிக்கான மூல காரணம்.

    எனினும், வரலாற்றின் நேரடி சாட்சியான தங்கள் வாயிலாக இப்பதிவுகளை அறிவது, அதிக முக்கியத்துவம் வாய்ந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.