கொரிய – தமிழ் கலாச்சார ஒற்றுமை!
பவள சங்கரி
வளர்பிறை (சுக்ல பட்சம்) என்பது ஒவ்வொரு மாதத்திலும் 15 நாட்களுக்கு வருவது. சந்திரன் அமாவாசையிலிருந்து சிறிது, சிறிதாக வளர்ந்து வருவதை வளர் பிறைத் திதிகள் அல்லது சுக்கில பட்சம் என்கிறார்கள். நம் பாரம்பரிய சடங்குகள் பெரும்பாலும் இந்த காலகட்டங்களிலேயே நடத்தப்பெறுகின்றன.
கொரியர்களின், முழு இராசி சுழற்சி 60 ஆண்டுகளைக் கொண்டதாக உள்ளது. இவர்களின் சந்திர நாட்காட்டி 60 வித்தியாசமான பெயர்களைக் கொண்டுள்ளது. நம் இராசி சுழற்சிகளும் 60 ஆண்டுகளும், வித்தியாசமான பெயர்களைக்கொண்டும் உள்ளதும் நாம் அறிந்ததே.
முன் காலங்களில் மனித ஆயுள் குறைவாகவே இருந்தது. ஒருவர் முழுமையான இராசி சுழற்சியான 60 ஆண்டுகளைக் காண்பது அரிதாகவே இருந்தது. அப்படி முழுமையான வாழ்க்கையை வாழ்ந்தவர்களை அவர்கள் குழந்தைகள் மகிழ்ந்து, உற்றார், உறவினர், நட்புகளுடன் உற்சாகமாகக் கொண்டாடி தங்கள் பெற்றோரை வாழ்த்தி வணங்குவது வழக்கத்தில் உள்ளது. இதன் அடிப்படையிலேயே இன்றும் இதை மணிவிழா அல்லது 60ஆம் கல்யாணம் என்று கொண்டாடப்படுகிறது. இதே பாரம்பரியப் பழக்கம் கொரிய நாட்டிலும் வழிவழியாக வழங்கி வருகிறது என்பதே சுவையான தகவல்!