அதிகமான ஜிஎஸ்டி வரிவிதிப்பால் அரசிற்கு அதிக வருமானமா அல்லது மக்களுக்கு அதிக நெருக்கடியா?
பவள சங்கரி
தலையங்கம்
பல்வேறு பொருட்களுக்கு குறைந்தபட்சமாக 5%, அதிகபட்சமாக 28% வரி விதிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதம் முதல் நடைமுறைக்கு வந்த இந்த வரிவிதிப்பால் அரசிற்கு கிடைத்த வருமானம் சுமாராக 95,000 கோடி ரூபாய். ஆனால் கடந்த ஆகஸ்ட் மாத வருவாய் 90,000 கோடியாகக் குறைந்துள்ளது என்று அரசின் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. ஒரு மாதத்தில் 5,000 கோடி ரூபாய் வரி வருவாய் குறைந்துள்ளது. அதாவது தொழில்துறையில் ஒரு மாதத்தில் சுமாராக 50,000 கோடி ரூபாய்க்கு உற்பத்தி அல்லது தொழில் நலிவடைந்துள்ளது என்பதையே இது உணர்த்துகிறது. அதிக வரிவிதிப்பால் தொழில்கள் முடங்குமேயொழிய அதிக வருவாய் கிடைக்கும் வாய்ப்பு குறைவு என்றே கொள்ள முடிகிறது. விழாக்காலமான இந்த சமயத்தில் வரி வருமானமும், தொழில் துறையும் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைய வேண்டிய காலகட்டம். மாறாக வரி வருவாய் குறைந்துள்ளது என்பது சிந்திக்க வேண்டிய விசயம். இன்று உணவு விடுதித் தொழில் நலிவுறும் நிலையில் உள்ளதைக் காணமுடிகிறது. பெரும்பாலும் உயர்மட்ட வகுப்பினர் வரி விதிப்பைப் பற்றி கவலை கொள்வதில்லை. ஆனால் பெருவாரியாக உள்ள மத்திய தர வகுப்பினர் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வாரத்திற்கு ஒரு நாளோ அல்லது மாதத்திற்கு இரண்டு நாட்களோ குடும்பத்துடன் உணவு விடுதிக்குச் செல்லக்கூடியவர்கள், குளிர் சாதன வசதியுள்ள விடுதிகளைத் தவிர்த்து சாதாரண விடுதிக்குச் செல்கின்றனர். அங்கும் கார வகைகளுக்கு அதிகமான வரியும், இனிப்பு வகைகளுக்கு குறைவான வரி விதிப்பும் செய்துள்ளது வருத்தம் அளிக்கக்கூடியது. இதில் சில உணவு விடுதிகள் இந்த வரி விதிப்பை பயன்படுத்தி மேலும் அதிக விலையில் விற்கின்றனர். அவர்கள் கொடுக்கும் இரசீதுகளில் இந்த வரிவிதிப்பு குறித்த எந்த விதமான தகவல்களும் இருப்பதில்லை. இதனால் பெரும்பாலான உணவு விடுதிகள் பெரும் சரிவைச் சந்திக்கின்றன. இப்படித்தான் அதிக வரிவிதிப்பால் அனைத்துத் தொழில்களும் நலிவுறும் அபாயமும் உள்ளது. அமெரிக்க அதிபர் பெரிய நிறுவனங்களுக்கான வரியை 30 சதவிகிதத்திலிருந்து 20 சதவிகிதமாகக் குறைத்து, இதன் மூலம் பொருளாதாரமும் தொழிலும் வளர்ச்சியடைந்து வேலை வாய்ப்புகளும் பெருகும் என்றும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். நமது அரசும் பெட்ரோலியப் பொருட்களுக்கான விலை உயர்வை கட்டுக்குள் வைப்பதற்கும், ரூபாயின் மதிப்பை அதிகரிப்பதற்கும் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டிய கட்டாயச் சூழலில் உள்ளது. அனைத்துப் பொருட்களையும் ஜிஎஸ்டி வரிவிதிப்பிற்குள் கொண்டுவந்த நடுவண் அரசு, பெட்ரோலியப் பொருட்களை மட்டும் இதற்குள் கொண்டுவராமல் மாநில அரசுகளை கேட்டுக்கொண்டிருப்பது நியாயமாகுமா? பெட்ரோலியத் துறை அமைச்சர் பல முறை அறிவித்தும் இதை நடைமுறைப்படுத்தாமல் இருப்பது பொது மக்களை மேலும் வேதனைக்குள்ளாக்குகிறது. ஜிஎஸ்டி வரிவிதிப்பில் உள்ள இந்த குளறுபடிகள் நீங்கி ஒரு இந்தியா ஒரு வரிவிதிப்பு என்ற நிலை வந்தால் நாடு நலம் பெறும் என்ற எதிர்பார்ப்பும் மக்களிடையே உள்ளது.