நலிந்து வரும் ஜவுளித்துறை

பவள சங்கரி

தலையங்கம்

விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிக வேலை வாய்ப்புகளை அளிக்கக்கூடிய, ஜவுளித்துறையின் நலிந்துவரும் இன்றைய நிலை மத்திய , மாநில அரசுகள் அதனை புறக்கணிப்பதையே வெளிப்படுத்துகின்றது. மற்ற நாடுகளில் இதற்கான மூலப்பொருட்கள் கொள்முதலுக்கு 4% வட்டி மட்டுமே விதிக்கப்படுகின்றது. ஆனால் இந்தியாவில் 12% வட்டி விதிக்கப்படுகின்றது. பருத்தி விளைச்சல் அமோகமாக இருப்பினும் ஆலை உரிமையாளர்களால் அதிக கொள்முதல் செய்யமுடிவதில்லை. பண முதலைகள் பருத்தியை அதிகமாகக் கொள்முதல் செய்து பதுக்கி வைத்து செயற்கையான விலையேற்றத்தை ஏற்படுத்துகின்றனர். இதைத் தவிர்ப்பதற்கு மத்திய அரசு பருத்தியைக் கொள்முதல் செய்வதற்கு 4% வட்டியில் கடன் அளிக்க ஏற்பாடு செய்தால் ஆலை உரிமையாளர்கள் 6 மாதம் முதல் 10 மாதம் வரை பயன்படுத்தக்கூடிய பருத்தியைக் கொள்முதல் செய்து உற்பத்தியில் தங்களுடைய முழுத் திறனையும் வெளிக்கொணரமுடியும். இதனால் நூல் விலை குறைவதோடு ஜவுளி உற்பத்தியையும் பெருக்க முடியும்.

ஒரு காலத்தில் தமிழ்நாடு பருத்தி விளைச்சலில் சிறந்து விளங்கி அதனை ஏற்றுமதி செய்யும் மாநிலமாகத் திகழ்ந்தது. இன்று விளை நிலங்கள் மிகவும் குறைந்துவிட்ட நிலையில் அதன் விளைச்சலும் 5% ஆகக் குறைந்துவிட்டது. தமிழ்நாட்டில் இருக்கும் மொத்த ஆலைகளுக்குத் தேவையான பருத்தியின் 95 சதவிகிதம் வெளி மாநிலங்களிலிருந்து எதிர்பார்க்க வேண்டியுள்ளது. நமது தமிழ்நாட்டில் மட்டும் 52 மில்லியன் சுழல் அச்சுகள் உள்ள ஆலைகள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இதையொட்டிய ஜவுளியின் மற்ற துறைகளிலும் நிர்வாகத்திறமை, தொழில் திறமை போன்றவைகள் அதிகப்படியாக இருப்பினும், அரசின் ஆதரவு இல்லாததால் கூலிக்கு வேலை செய்யவேண்டிய கட்டாய நிலையில் உள்ளது என்பதோடு வட மாநிலங்களை சார்ந்திருக்க வேண்டிய சூழ்நிலையும் உருவாகிறது. ஏற்றுமதியிலும் ஜவுளிக்கு ஆதரவான கொள்கை இல்லாததால் ஏற்றுமதி மூலமாக கிடைக்கக்கூடிய மிகப்பெரும் அந்நியச் செலாவணியையும் இழக்கக்கூடிய நிலையே உள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாத ஜவுளித் துறையை மத்திய அரசு உதாசீனப்படுத்தாமல் அதற்குரிய நலத்திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டியது அவசியம் .

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.