மீ.விசுவநாதன்
பகுதி: 15

பாலகாண்டம்

ஸ்ரீராம-தர்ம-சரிதம்-2-1-1-2
“சித்தாசிரமம் என்ற காட்டுப் பகுதி”

சிந்தையிலே மகிழ்ச்சிதனைக் கூட்டும்
“சித்தாச்ர ம”க்கதையைக் கேட்பீர் !
முந்தயநாள் மாவிஷ்ணு இங்கே
முடிவில்லா மாதவத்தைச் செய்தார் !
மந்திரத்தை மனத்துள்ளே ஓதி
மகத்தான பேரின்பங் கொண்டார் !
அந்தவோர் வேளையிலே தேவர்
அனைவருமே அவர்முன்னே வந்தார் ! (1)

“எங்களது மனக்குறையைக் கேட்பீர் !
இணையில்லா தர்மத்தால் மூன்று
மங்காத உலகத்தை ஆளும்
வரங்கொண்ட “மாபலி”யாம் ராஜன்
இங்குயர்ந்த வேள்வியொன்று செய்து
இரப்போர்க்கு இல்லையின்றி ஈந்து
பொங்குபுகழ் பெற்றுவிட்ட தாலே
போச்சுதையா இந்திரனின் பேரும் ! (2)

“வாமனாவதார நோக்கம்”

நன்றுடனே ஓருதவிநீர் செய்வீர்
ஞானி”காசி யபர்”க்குமக னாகச்
சென்றுடனே பிறந்திடுவீர் ” என்றார்
தேவரெலாம் விஷ்ணுவிடம் ஒன்றாய் !
அன்றவர்க்கு வாக்களித்த விஷ்ணு
அழகான வாமனனாய்த் தோன்றி
நின்றானே மாபலியின் முன்னே
சிறுகையால் தானம்தா வென்று ! (3)

மாபலியும் ஈந்தவுடன் மூன்று
வளரடியால் வான்பூமி தொட்டு
மாபலியில் தலைமேலே மூன்றாம்
மணியடியை அழுத்தியவன் வைக்க
பூமழையாய்ப் புண்ணியமும் பெற்று
புகழோடு சிரஞ்சீவி ஆனான் !
மாவிஷ்ணு தவம்செய்த காடே
மதிப்புமிகு “சித்தாச்ரம்” ஆச்சு ! (4)

இப்படியோர் இடத்தில்தான் நாங்கள்
இமைமூடித் தவம்செய்வோம் உள்ளே !
எப்படியோ இதையறிந்து கொண்டு
எங்களது வேள்வித்தீ மீதில்
தொப்பெனவே மாமிசத்தை வீசி
தொல்லையினைச் செய்கின்றார் ரெண்டு
தப்பான அசுரர்கள் நித்தம் !
தடுத்திடுவாய் ஸ்ரீராமா” என்றார் ! (5)

“வேள்வியைக் காத்தல்”

ஆகட்டும் குருதேவா என்று
அதிகாலைச் சூரியனைப் போற்றி
தேகத்தில் பற்றினையே விட்ட
தெளிவான யோகிகள் செய்யும்
யாகத்தைக் காப்பதற்கே இங்கே
அரணாக இருவருமே நிற்போம்
சோகத்தைப் போக்கிடுவோம், “ராமன்”
சொன்னசொலைக் காத்திடுவேன் என்றான் ! (6)

“மாரீசன், சுபாகு”வென ரெண்டு
வாலிபத்து அரக்கருடன் நல்ல
போரிட்டு மாரீசன் மீது
பொல்லாத அம்பொன்றை ஏகி
நூறான யோசனைகள் தாண்டி
நுரைபொங்கும் கடலுக்குள் போட்டான் !
கூரான அம்பொன்றை வீசி
சுபாகுவெனும் அரக்கனையும் கொன்றான் ! (7)

“தீயவர்கள் செயலுக்கு நானே
தீர்ப்பெழுதித் தீர்திடுவேன்! எந்த
மாயாவி யானாலும் தர்ம
வாழ்வுக்காய்ப் போராடி வெல்வேன்!”
யோகியரே ஆசிதாரும் என்ற
யுகபுருஷன் ஸ்ரீராமன் பார்த்து,
“ஆசிபல ஆசிபல” வென்று
அரியகுரு அன்பொழுகச் சொன்னார்! (8)
(ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் பாலகாண்டத்தில் 29, 30ம் பகுதி நிறைந்தது)

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on ““ஸ்ரீராம தர்ம சரிதம்” (15)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *