“ஸ்ரீராம தர்ம சரிதம்” (17)
மீ.விசுவநாதன்
பகுதி: 17
பாலகாண்டம்
கங்கை, உமா தேவி கதை
வைகறைப் பொழுது வந்ததென
வாழ்த்தி எழுப்பி விட்டவுடன்
கைகளால் நீரை வான்நோக்கி
வழங்கித் துதித்தான் காகுத்தன் !
பொய்யிலா குருவின் முகம்நோக்கி
“புனித சோணா நதிகடந்து
அய்யனே எங்கு செலவுள்ளோம்
அடியேன் தனக்கு அருளென்றான்!” (1)
உலகினைத் தாங்கும் உத்தமரின்
உயர்ந்த வழியே நம்வழிதான்
பலவினை போக்கும் கங்கைநதி
பார்த்து வணங்கப் போகின்றோம்
அலைகிற மனத்தை அடக்கிடுவோர்
அங்கே அதிக மென்றுரைத்தார்
விலையிலா தவத்தில் சிறந்துயர்ந்த
விசுவா மித்ர ராஜரிஷி. (2)
கங்கையை அடைந்து நீராடி
கதிரைத் துதித்து வழிபட்டு
எங்குமே பரந்த இந்நதியின்
ஏற்றம் மிகுந்த வரலாற்றை
உங்களின் வாக்கு வழியாக
உரைக்கக் கேட்க விருப்பமென
அங்கமே பணிந்து ஸ்ரீராமன்
அரிய முனியைத் துதிசெய்தான். (3)
யோகியர் சாந்த இடமாக
சோலைக் காட்டு மாமலையாய்
ஆகிய இமய “இமவானும்”
அன்பு மனைவி “மேனா”வும்
தூவிய பக்தி மலர்களுக்கு
தோகை இருவர் பிறந்தார்கள் !
தீவிர தவம்செய் “உமை”இளையாள்
தேவ “கங்கை” மூத்தவளாம். (4)
தேவரே கங்கை மகள்கேட்டு
தேடி வந்த காரணத்தால்
மூவரும் போற்றும் முதல்மகளை
முறையாய்க் கொடுத்தார் இமவானும் !
பூமகள் உமைக்கோ சிவன்கரத்தைப்
போற்றிப் பிடிக்கத் துணைசெய்தார் !
மாபெரும் மலையோன் மகள்கதையின்
மகிமை சொல்லில் அடங்காது. (5)
உமையினை மணந்த பரமசிவன்
உடலின் காம உணர்வினுக்குத்
தமைதினம் அடிமை செய்ததினால்
தவத்தில் மேன்மைத் தேவர்கள்
சிவனிடம் பணிவாய், “சிற்றின்ப
நினைவை விட்டு வருகவென்றார்”
அவனி சிறக்க வேண்டுமென்று
அவர்தன் வீர்யம் அடக்கிவைத்தார். (6)
உங்களின் வாக்குப் படிகேட்டு
உயிராம் வீர்ய ஒளிசேர்த்து
இங்குநான் பூமி மீதினிலே
இறையின் சக்தி அளிக்கின்றேன்
அங்கமே அக்னி உருவமென
அழகு “கார்த்தி கேய”னென்று
அங்குள கார்த்தி கைப்பெண்கள்
அறுவர் பாலில் வளர்வனென்றார். (7)
ஓசையே இல்லா உள்ளத்தில்
ஓம்ஓம் என்ற பிரணவத்தை
ஆசையாய்க் கொண்டு தவம்செய்ய
அன்னை உமையும் காந்தனுமே
மாசினை அழிக்கும் கங்கையுடை
மலையாம் இமயம் அடைந்தார்கள் !
ஈசனின் மகனாம் கந்தனவன்
தேவ சேனா பதியானான். (8)
(தர்ம சரிதம் வளரும்)
(ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் பாலகாண்டத்தில் 35, 36, 37ம் பகுதி நிறைந்தது)