தலையங்கம்

வங்கிக்கணக்கின் பாதுகாப்பு!

பவள சங்கரி

தலையங்கம்

ஆதார் அட்டை பயன்பாட்டை வலியுறுத்துகின்ற இக்காலகட்டத்தில் சமீப காலங்களில் இது தொடர்பாக வரக்கூடிய செய்திகள் நன்மையளிக்கக் கூடியதாக இல்லை. ஆதார் அட்டையின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருக்கவில்லை என்றே கருதமுடிகின்றது. தற்போது இரண்டடுக்குப் பாதுகாப்பு செய்யப்பட்டிருப்பதாகவும், பாதுகாப்பான அட்டைகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டாலும் இது காலங்கடந்த அறிவிப்பாகவேக் கொள்ளமுடிகின்றது. இந்தச் சூழலில் வங்கிக் கணக்குகளில் ஆதார் எண்ணை இணைக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்துவது மேலும் குழப்பம் விளைவிக்கக்கூடியதாகவே உள்ளது. கோவை மாவட்டத்தில் சமீப நாட்களில் வங்கிக் கணக்குகளிலிருந்து பல இலட்சம் உரூபாய் இந்த முறையில் கையாடல் செய்யப்பட்டதாக வங்கிகளே அறிவித்து அவரவர் கணக்குகளை பாதுகாப்பாக வைத்திருக்கும்படி அறிவுறுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இது மோசமானதொரு பின் விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதாகும். இப்பொழுதெல்லாம் சர்வ சாதாரணமாக ஒருவரது கைபேசி எண்களைப்பெற்று வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிகின்றது. அதே கைபேசி எண்ணையும் ஆதார் எண்ணையும் கொண்டு வங்கிக் கணக்குகளை எளிதில் கையாள முடியும் என்பதும் உண்மை. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தனி நபர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் வகையறிந்து நமது நாட்டிலும் அதற்கேற்ப ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம். சமீபத்தில் ஒரு பிரபல நிறுவனத்தின் அனைத்துத் தொடர்புகளும் செயலிழக்கச் செய்யப்பட்டு பல இலட்சம் டாலர்கள் பரிவர்த்தனைக்குப் பிறகே அதனுடைய வணிக இரகசியங்கள் பாதுகாக்கப்பட்ட செய்திகள் கருத்தில் கொள்ளத்தக்கது. இதுபோன்று தவறுகள் மேலும் நடக்காதவாறு அரசு உடனடி நடவடிக்கை எடுத்து நமது ஆதார் எண்ணின் உள் குறியீடுகள் பாதுகாப்பிற்கான உறுதி அளிப்பதன் மூலமாக மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டியது அவசியம்.

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க