நல்லதோர் வீணை..!
நல்வளமாம் நீர்வளமும் நிலவளமும் நிறைந்ததிருநாட்டில்..
……….நீதிவழுவாதோர் நாட்டுக்கு நல்லதெனப் பலசொன்னார்.!
நல்லெண்ணம் கொண்டஞானியரும் முனிவரும் உதித்தநம்..
……….நானிலத்தில் நாட்டுப்பற்றுக்கு இனியதிகப் பஞ்சம்தான்.!
வல்லரசாகும் நம்நாடுமென இளைஞரின் இளநெஞ்சினில்..
……….வல்லமை யெனும் விதையன்றே விதைத்தானொருவன்.!
வெல்லமுடியா மகாகவியாமவன்!கேட்டான் சிவசக்தியிடம்..
……….நல்லதோர் வீணைசெய்து புழுதியில் எறியலாமாவென.?
நல்லாட்சி நல்குதற்கே நாட்டுப்பற்றுடன் நாளுமுழைத்தார்..
……….கல்லுடைத்துச் செக்கிழைத்தார் சிறைக்கும் சென்றார் .!
பொல்லாத சொப்பனமின்று கண்டாற்போல்நாம் பெற்றது..
……….எல்லாமும் மீண்டுமிழக்கும் நாளுமினி வந்துவிடுமோ.?
சொல்லாட்சி செய்கின்ற சொற்பெருக்கராலே மக்களுக்குச்..
……….சேவையொன்று மில்லை நற்சிந்தனையும் இல்லையாம்.!
பல்லுயிரும் பெறுகின்ற பரமசுகமந்த இயற்கைவளத்தைப்..
……….பலருமொன்றாகச் சுரண்ட நினைப்பதுதான் தகுமோ.!
தீரன்வீரனென்றும் தியாகியென..தனக்குத்தானேச் சொல்லி..
……….தன்பெயருடன் இணைத்துக் கொள்வார் சுயநலவாதிகள்.!
காரணங்கள் பலசொல்லி சிந்தைமழுங்கும் செயல்தனில்..
……….கட்டிளங்காளையரை..கன்னியரைத் தன்பக்கம் இழுப்பர்.!
பீரங்கி முழங்கப் பெற்றபெருஞ்சுதந்திரம் சீர்குலையும்படி..
……….பாரம்பரியமழிக்கவே முயல்வார் நயவஞ்சகத்தார் பலர்.!
வீரத்தையெழச் செய்யும்தம் பாட்டினால் மீண்டுமொரு..
……….வண்ணக் கொடியேந்த பாரதிபோலின்னும் பலர்தேவை.!
நல்லதோர் வீணையின் நரம்பிலெழும் நாதம்போல்..
……….நம் மனதிலெழும் நல்லெண்ணமாமதை மீட்கவேண்டும்.!
புல்வனத்திலே தோன்றியதொரு புதியமலரைப் போலவே..
……….பாருலகத்தில் பாரதத்தின் தனித்தன்மை ஓங்கிடவேணும்.!
சொல்லிலேமயங்கிச் சொக்கிநின்று கேடுறும் வாழ்வுநீக்கி..
……….செல்லும் நல்லியலார்வழி தோன்றவகை செய்யவேணும்.!
வல்லுனர்கள்நல் வாழ்வுக்கு வழிவகுத்த வரையரையை..
……….வகையாய்க் கற்பதற்கே கல்வியறிவு பெற்றிடல்வேணும்.!
====================================================================
நன்றி:: தினமணி கவிதைமணி வெளியீடு::28-01-18
நன்றி:: கூகிள் இமேஜ்.