தமிழ் இயக்கம் கலந்துரையாடல் கூட்டம்!
பவள சங்கரி
தமிழ் இயக்கம் அமைப்பு உருவாக்க கலந்துரையாடல் கூட்டம் 14-02-2018 புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விஐடி பல்கலைக்கழக வேந்தர் கல்விக்கோ.முனைவர்.கோ.விசுவநாதன் தலைமையில், ஈரோடு செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. தலைமை உரை ஆற்றிய வேந்தர் அவர்கள் நமது தமிழ் மொழியை சீரும் சிறப்புமாக எடுத்துச் செல்லும் வகையில் பல கருத்துகளைக் கூறினார். இது போன்ற இயக்கங்களில் இளைய தலைமுறையினரும், குறிப்பாகப் பெண்களும் பங்கேற்கும் வகையில் செயல்படவேண்டும் என்று வலியுறுத்தினார். குழந்தைகளுக்குப் பெயர் வைப்பதில், இந்தக் காலத்தில் பெண்கள் சோதிடம் பார்த்து பெயர் வைப்பதாகக்கூறி பெரும்பாலும் வாயில் நுழையாத வடமொழி எழுத்துகளைக்கொண்ட பெயர்களையேச் சூட்டுகிறார்கள். நம் தமிழ் மொழியின் தொன்மையையும், பெருமையையும் அவர்கள் உணரும் வண்ணம் இந்தத் தமிழ் இயக்கம் முன்னெடுக்கப்படும். இது குறித்த தங்கள் ஆக்கப்பூர்வமானக் கருத்துகளையும் அனைவரும் பகிர்ந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. புலவர் பதுமனார், கவிஞர் அப்துல்காதர், திரு.சுகுமாரன் திருப்பூர் முத்தமிழ் சங்கத் தலைவர் கே.பி.கே.செல்வராஜ், திரு ஸ்டாலின் குணசேகரன், திரு.முத்துக்குமாரசாமி, ஈரோடு தங்க. விசுவநாதன் மற்றும் திரு செ.ரா. சுப்பிரமணியம் ஆகியோரும் கலந்துகொண்டு சிறந்த கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.
கல்வெட்டறிஞர் துரை சுந்தரம்
தமிழ் இயக்கத்தின் கலந்துரையாடலும், கருத்துக் கேட்புமான நிகழ்ச்சியும் பவளசங்கரி அவர்களின் நூல்கள் வெளியீட்டு நிகழ்ச்சியும் இணைந்து நடைபெற்ற விழாவில் நானும் கலந்துகொண்டேன். வி.ஐ.டி. பல்கலையின் வேந்தர் கோ.விசுவநாதன், தமிழறிஞர் அப்துல் காதர், வ.உ.சி.யின் பேரன் முத்துக்குமாரசாமி, புலவர் பதுமனார், மதுரை சிதம்பர பாரதி, ஈரோடு ஸ்டாலின் குணசேகரன் மற்றும் பலர் விழாவைச் சிறப்பித்தனர். பலரும் தமிழின் இன்றைய நிலை குறித்துக் கவலை கொண்டனர். நாம் பேசுவது தமிங்கிலம் ஆகிவிட்டதே. நல்ல தமிழில் எழுத மறந்தோமே. குழந்தைகளுக்கு நல்ல தமிழ்ப்பெயர் சூட்ட மறந்து “ஸ்”, “ஷ்” என்று பெயர் முடியும் வண்ணம் பாம்பு சீறும் நிலைக்குத் தமிழைத் தள்ளிவிட்டோம். வேந்தர் கோ.வி. அவர்கள் தம் உரையில் குறிப்பிட்டார்கள்: தொன்மையும் தொடர்ச்சியும் கொண்டு மாறாமல் இருக்கும் மொழி தமிழ் ஒன்றுதான். நம் இன்றைய நிலை என்ன? பெயர் வைப்பதிலே வடமொழி. பேசுவதிலே ஆங்கிலக் கலப்பு. ஒரு நாளிதழிலே இரண்டு பக்கக் கட்டுரையில் 130 ஆங்கிலச் சொற்கள் இருந்தன. தமிழ் நாளிதழ்களிலே, ஒருமை, பன்மைப் பிழைகள். இவற்றைச் சுட்டிக்காட்ட யாரும் இல்லை. ஆனால், ஆங்கிலத்தில் பிழையாக எழுதினால் சட்டென்று சுட்டுவதற்கு ஆட்கள் இருக்கின்றனர். தென்னாப்பிரிக்கா டர்பன் நகரில் ஏழு இலட்சம் தமிழர்கள். குழந்தைகளுக்குத் தமிழ்ப்பெயர் இடுகிறார்கள். ஆனால் தமிழில் பேச இயலாது. இந்தோனேசியாவில் தமிழர்க்கு அங்கீகாரமில்லை. ஏன், இந்தியா முழுதும் பல மாநிலங்களில் வாழும் தமிழருக்குத் தமிழ் படிக்க வாய்ப்பில்லை. தமிழ் கற்பித்தல் பற்றிக் கலந்து ஆலோசனை செய்யவேண்டியுள்ளது. உலகத் தமிழர்கள் ஒன்று கூடவேண்டும்.
பேராசிரியர் அப்துல் காதர் அவர்கள் பகிர்ந்து கொண்டவை: வீண் விளம்பரங்களாலே தமிழன் வீழ்ந்து கொண்டிருக்கிறான். ஈழத்தில் நடந்தது என்ன? ஒரே நாளில் குண்டுகளின் பொழிவில் 50,000 குழந்தைகளும், ஒன்றரை இலட்சம் பெரியவர்களும் கொல்லப்பட்டனர். 2009-இல் தமிழரைப் புதைக்க 1200 வெட்டியான்களைப் பணியில் அமர்த்தியது ஈழ அரசு.பணியில் தொய்வு நேராதிருக்க ஈழ அரசு வெட்டியான்களுக்கு 24 மணி நேரமும் சாராயத்தை ஊற்றிக்கொடுத்துக்கொண்டே இருந்தது. உடல்களை அள்ளி அள்ளிப் போடுகையில், ஒரு கர்ப்பிணிப்பெண்ணின் உடலிலே லேசான அசைவு தெரிந்தது. தூக்கிப் போட்ட வேகத்தில் குழந்தை பிறந்தது. ஈமச்சடங்கின்போது நீர்க்குடம் உடைப்பது நம் மரபு. அந்தக்குழந்தையும் தன் பனிக்குடத்தை உடைத்துத் தன் ஈமக்கடனை நிறைவேற்றியது. ஈழத்தில் இனி மிஞ்சப்போவது அம்மா என்று குரல் கொடுக்கும் மாடும், அக்கா என்று குரல் தரும் கிளியும்தான். திருவண்ணாமலைக் கோயிலுக்குள் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். அண்ணாமலைக் கோயிலில் அப்துல் காதரா? கேள்வி எழுந்தது. அதற்கு இடம் கொடுத்தது தமிழ்தானே! தமிழால் ஒன்று சேர்வோம். தமிழகம் எங்கும் பெருமாளின் கல்யாணக் கோலமாகிய கிடந்தகோலம் காணலாம். ஆனால், வடவேங்கடம் தமிழகத்தின் எல்லையல்லவா? அங்கு தமிழ் நிற்பதைக் குறிக்கப் பெருமாளும் நின்ற கோலம்! 1965-இல் மதுரை தியாகராசர் கல்லூரியில் படித்தபோது, தினமணி நாளிதழில் இரண்டு பக்கக் கட்டுரையில் 130 வடமொழிச் சொற்கள். நாங்கள் மாணவர்கள் போராடித் தமிழை மீட்டெடுத்தோம். அதன்பின், தினமணியில், ஸ்ரீ , ’திரு’ என்றாயிற்று. மண்ணைப் பார்க்கவேண்டுமென்றால், தலை குனிந்துதான் ஆகவேண்டும். ஆனால், ஈரோட்டு மண் தமிழரைத் தலை நிமிரச் செய்யும் மண்! தமிழால் ஒன்று சேர்வோம்.