இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . (261)

0

அன்பினியவர்களே!

அன்பான வணக்கங்கள்.

இதோ அடுத்தொரு வாரம். அடுத்தொரு மடல். அன்புடை வல்லமை வாசகர் மத்தியில் வலம் வரும் வாய்ப்பு. சில வாரங்கள் காணாமல் போயிருந்த என் மடல் மீண்டும் உங்கள் முன்னே துளிர்த்து விழுகிறது. எனது வருடாந்த சென்னை விஜயத்தை முடித்துக் கொண்டு கடந்த சனிக்கிழமையே திரும்பவும் லண்டனை வந்தடைந்ததுவே தாமதத்துக்குக் காரணம். மாசிப்பனியோடு கலந்த ஒரு மெல்லிய சூட்டினை அனுபவித்து விட்டு உறைநிலையைத் தாண்டுவதற்கு போராடும் லண்டன் குளிருக்குள் மீண்டும் வந்து சிக்கிக்கொண்ட வேளை.

ஒருமாத கால இடைவெளியில் லண்டனில் அப்படி ஏதாவது மாற்றம் ஏற்பட்டிருக்குமோ என்று பார்த்தால் இல்லை என்பதுவே பதிலாகப் படுகிறது.எதிர்பார்த்த குளிர், எதிர்பார்த்தபடியே “பிரெக்ஸிட்” பற்றிய பலகோணச் சர்ச்சைகள் என ஏமாற்றமில்லாமல் என்னை வரவேற்றது லண்டன்.

பணிபுரியும் மக்கள் தாம் பெறும் ஊதியத்துக்கேற்ப வரிப்பணத்தை அரசுக்குச் செலுத்துகிறார்கள். தாம் செலுத்தும் வரிப்பணத்தைக் கொண்டு தாம் வாழும் சமுதாயத்துக்குத் தேவையான அத்தியாவசிய சேவைகளைப் பாரபட்சமின்றி அரசாங்கம் வழங்கும் எனும் ஒரு நம்பிக்கையே ஜனநாயகம் எனும் கோட்பாட்டினை இன்னும் பல நாடுகளில் நடைமுறையில் வைத்திருக்க உதவுகிறது. ஆனால் இந்த நம்பிக்கை தகர்க்கப்படுமானால் மக்களுக்கு அரசின் மீதும் , அரச நிர்வாகத்தினை நடத்துபவர் மீதும் அவநம்பிக்கை ஏற்பட ஆரம்பிக்கிறது. இந்த அவநம்பிக்கையின் விளைவாகத் தீவிரவாதக் கொள்கைகளை அதிரடியாக முன்வைப்பவர் மக்களின் வாக்குகளைப் பெறும் நிலை ஏற்படுகிறது.

இத்தகைய ஒரு நிலைப்பாட்டின் வெளிப்பாடே இன்று இங்கிலாந்து அரசாங்கத்துக்கு மக்கள் கொடுத்த ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறக் கோரும் “ப்ரெக்ஸிட்” எனும் கோரிக்கை. இக்கோரிக்கை வெறும் ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரித்தானியா வெளியேறுவது எனும் தீர்மானத்தை மட்டும் முடுக்கி விடவில்லை, இங்கிலாந்து நாட்டில் வாழும் பலவேறு இன மக்களிடையே நிலவி வந்த புரிந்துணர்வில் கூட சிறு விரிசலை ஏற்படுத்தியிருக்கிறது என்பதுவே உண்மை. இந்த ஒரு நிலையில் தான் நான் கடந்த சில நாட்களின் முன்னே வானொலியில் கேட்க விழைந்த ஒரு செய்தி என்னைச் சிந்திக்கத் தூண்டியது. இங்கிலாந்தில் லண்டனின் முக்கியப் பகுதிகளில் ஒன்று “வெஸ்ட் மினிஸ்டர்” பகுதியாகும். இப்பகுதியின் நகரசபை சமீபத்தில் தமது எல்லைக்குள் வாழும் மக்களனைவருக்கும் ஒரு பொதுவான கடிதத்தை அனுப்பியுள்ளதாம். அக்கடிதத்தில் “எமது நகர எல்லைக்குள் வாழ்பவர்களில் செல்வம் கொண்ட மக்கள் தாமாகவே அந்நகர மக்களின் வாழ்வாதாரத்துக்குத் தேவையான சேவைகளை வழங்குவதற்குத் “தன்னார்வ” (Voluntary)அடிப்படையிலுதவும் வகையில் பண உதவி செய்யக் கோரியிருந்தார்கள். அதைப்பார்த்த மக்கள் அதிர்ச்சியடைந்ததில் ஆச்சரியமில்லை. இங்கிலாந்து உலகத்தில் பொருளாதாரத்தில் முன்னணியில் இருக்கும் நாடுகளில் ஐந்தாவது இடத்தை வகிக்கிறது. அத்தகைய நாட்டின் ஒரு கேந்திர பகுதி அங்கு வசிக்கும் மக்களுக்கான அத்தியாவசியத் தேவைகளை முன்னெடுப்பதற்கு மக்களின் கைகளை எதிர்பார்க்கிறார்கள் எனும் செய்தி ஆச்சரியமளிப்பதில் என்ன தவறு.

ஆச்சரியம் மட்டுமல்ல ஆத்திரம் கூட அடைகிறார்கள் உழைக்கும் பணத்தில் 20%  தொடக்கம் 40% வரையில் தாம் உழைக்கும் ஊதியத்துக்கேற்ப அரசாங்கத்துக்கு அளிக்கும் வரிப்பணம், தாம் வாழும் தமது இல்லங்களின் பெறுமதியைப் பொறுத்து தாம் வாழும் பகுதியின் நகரசபைகளுக்கு அளிக்கும் “நகரசபை வரி அல்லது கவுண்சில் டக்ஸ்” , அத்தோடு உபயோகிக்கும் நீருக்கான வரி எனப் பலவிதமான வரிகளை மக்கள் அளிக்கும் நோக்கம், தாமளிக்கும் வரிகளைச் சரியான வகையில் கையாண்டுச் சமுதாயத்தின் அத்தியாவசியச் சேவைகளை அனைவருக்கும் பாரபட்சமின்றி அளிப்பார்கள் எனும் நம்பிக்கையின் அடிப்படையிலேயே என்றால் அது மிகையாகாது. ஆனால் இன்றோ அந்நம்பிக்கையை அசைத்துப் பார்க்கும் வகையில் நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. மாறி மாறி வரும் அரசாங்கங்களின் மூலம் தமது அல்லல்கள் தீரும் என எதிர்பார்க்கும் மக்கள் ஏமாற்றத்தின் விளிம்புக்குத் தள்ளப்படுவது தீவிரவாதக் கொள்கைகளை முன்னேடுக்கும் கட்ச்சிகளுக்கான ஆதரவை அதிகரிக்கும் என்பதுவே உண்மை.

தேசியவாதம் எனும் கோஷம் மெதுவாக இனத்துவேஷம் எனும் எல்லையை நோக்கி நகர்ந்து செல்வதை உணர முடிகிறது. சமுதாய முற்போக்குச் சிந்தனை கொண்ட கட்சிகள் என்று தம்மைத் தாமே விமர்சித்துக் கொள்ளும் முக்கிய அரசியல் கட்சிகள் இந்நகர்வின் நிகழ்வினைச் சரியாக எடைபோடத் தவறி விடுவார்களோ? எனும் அச்சம் பல கோணங்களில் தலைதூக்குகிறது. ஒரு தேசத்தின் அரசியல் [அயணம் என்பது பல முக்கியப் பாதைகளினூடாக பயணிப்பதைத் தவிர்க்க முடியாது. ஆனால் அப்பயணங்கள் மிக முக்கியமான சந்திகளை வந்தடையும் போது எந்தத் திருப்பத்தைத் தெரிவு செய்யப் போகிறார்கள் :என்பது மிகவும் முக்கியமான கேள்வியாகும். இங்கிலாந்தின் அரசுக் கட்டிலில் மாறி மாறி ஏறிக் கோலோச்சும் இவ்வரசியல் கட்சிகள் சரியான பாதையைச் சரியான நேரத்தில் தேர்ந்தெடுப்பார்களா? என்பதற்கான விடையைக் காலம் தான் எமக்கு அளிக்குமோ?

மீண்டும் அடுத்த மடலில்…

அன்புடன்
சக்தி சக்திதாசன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *