மனிதர்கள் எதனால் வாழ்கிறார்கள்?—(What Men Live By) (6)

லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy)

தமிழாக்கம்- சற்குணா பாக்கியராஜ்

மைக்கேல், சைமனின் வீட்டிற்கு வந்து ஒரு வருடமாகி விட்டது. மைக்கேல் காலை முதல் மாலை வரை செருப்புகள் தைத்தான். வேலை இல்லாத போது மெளனமாகக் கூரையைப் பார்த்துக் கொண்டிருப்பான். வீட்டை விட்டு வெளியே போவதோ பிறரிடம் பேசுவதோ கிடையாது. சைமன் வீட்டிற்கு வந்த முதல் இரவு மெட்டரீனா உணவு கொடுத்த போது அவன் புன்னகை செய்தது போல் மறுபடி ஒரு தடவையும் புன்னகை புரியவில்லை.

ஒரு நாள் காலை சைமனும் மைக்கேலும் செருப்புத் தைத்துக் கொண்டிருந்தனர். வெளியில் மூன்று குதிரைகள் பூட்டிய ஒரு அழகிய வண்டி வந்து அவர்கள் வீட்டின் முன் நின்றது. வண்டியின் முன் பகுதியிலிருந்து ஒரு பணியாள் இறங்கி வண்டியின் கதவைத் திறந்த போது, விலையுயர்ந்த உரோமக் கோட்டு அணிந்திருந்த ஒரு செல்வந்தர் சைமனுடைய வீட்டை நோக்கி வந்தார். மெட்ரீனா இருக்கையிலிருந்து எழுந்து, கதவை விரிவாகத் திறந்து வைத்தாள். வந்தவர் மிகவும் உயரமாக இருந்ததால், நிலைக் கதவு தலையில் இடிக்காமலிருக்க குனிந்து நுழைய வேண்டியிருந்தது. அவர் அறையினுள் நுழைந்து தலை நிமிர்ந்த போது தலை, கூரையைத் தொட்டு விடுவது போல் இருந்தது.

வந்தவர், கோட்டைக் கழற்றி விட்டுப் பெஞ்சில் அமர்ந்து “உங்களில் யார் எசமான்?” என்று கேட்டார்.

சைமன் பணிவுடன். “நான்தான் ஐயா’ என்றான்.

அந்தச் செல்வந்தர் தன் பணிவிடையாளை அழைத்து, தான் கொண்டு வந்திருந்த விலை உயர்ந்த தோலை மேசை மேல் விரிக்கச் சொன்னார். பின் சைமனை நோக்கி “இது மிகவும் விலை உயர்ந்த தோல், ஜெர்மனியிலிருந்து வரவழைக்கப்பட்டது. இதன் விலை இருபது ரூபிள்கள். நீ எனக்கு ஒரு சோடி பூட்ஸ்கள் தைக்க வேண்டும், பூட்ஸ்கள் குறைந்தது ஒரு ஆண்டு உழைக்க வேண்டும். அதற்கு முன்னால் தையல் பிரிந்து விட்டாலோ அல்லது பூட்ஸின் வடிவம் குலைந்து விட்டாலோ உன்னைச் சிறைச்சாலைக்கு அனுப்பிவிடுவேன். பூட்ஸ் வடிவம் மாறாமலும், தையல் பிரியாமலும் இருந்தால் பத்து ரூபிள்கள் கொடுப்பேன்” என்றார்.

சைமன், மிகவும் மெல்லிய குரலில், ”இந்த வேலையை எடுக்கலாமா?” என்று மைக்கேலைக் கேட்டான். அதற்கு மைக்கேல் மெளனமாகத் தலையை அசைத்துச் சம்மதம் தெரிவித்தான்.

சைமனும் அந்தச் செல்வந்தர் இட்ட கட்டுப்பாடுகளுக்கு இணங்கி பூட்ஸ்த் தைக்க ஒப்புக் கொண்டு, அவருடைய கால் அளவுகளை வரைந்து கொண்டான். அவர் மைக்கேலைப் பார்த்து “இவன் யாரென்று” கேட்டார். அதற்கு சைமன், ”இவன் என்னுடன் செருப்புத் தைப்பவன். இவன்தான் உங்கள் பூட்ஸ்களைத் தைப்பான்” என்றான்.

அவர் மைக்கேலைப் பார்த்து “நான் சொன்னதை நினைவில் வைத்துக் கொள், பூட்ஸ் ஒரு வருடத்திற்குக் குறையாமல் உழைக்க வேண்டும்” என்றார். மைக்கேல் அவருக்குப் பதில் கொடுக்காமல் அவருடைய முதுகின் பின்னால், அறையின் மூலையில் யாரையோ பார்ப்பது போல் ஊன்றிக் கவனித்துக் கொண்டிருந்தவன், திடீரெனப் புன்னகை பூத்த போது அவன் முகம் பிரகாசமடைந்தது. அதைக் கவனித்த செல்வந்தர், “முட்டாள், ஏன் சிரிக்கிறாய், பூட்ஸ்களை ஒழுங்காகத் தைத்துக் குறித்த நேரத்தில் கொடுக்க வேண்டும்* என்றார். அதற்கு மைக்கேல் தகுந்த நேரத்தில் தைத்துக் கொடுக்க ஒப்புக் கொண்டான்.

அந்தச் செல்வந்தர் பெஞ்சிலிருந்து எழும்பி தன்னுடைய பூட்ஸ்களை அணிந்து கொண்டு உரோமக் கோட்டையும் போர்த்திக் கொண்டு வெளியே செல்லும் போது கதவருகே குனிந்து செல்ல மறந்து விட்டதால் தலை பலமாகக் கதவில் அடிபட்டு விட்டது. அவர் கோபத்துடன் தலையைத் தடவிக் கொண்டே வண்டியிலேறிச் சென்று விட்டார்.

சைமன் இவ்வளவு திடகாத்திரமான மனிதரை இதுவரையும் பார்த்ததில்லை. ஆதலால் அவர் போன பின், “அவர் எப்படி வாட்ட சாட்டமாக இருக்கிறார், மரச்சுத்தியால் அடித்தாலும் கொல்ல முடியாது. தலை கதவில் இடித்த போது கூட ஒன்றும் ஆகவில்லை” என்று வியந்தான். “அவர் போல் செல்வந்தராக வாழ்ந்தால், ஏன் பலசாலியாக இருக்க முடியாது? “மலை போல் இருக்கும் போது, மரணம் கூடத் தொடமுடியாது” என்று மெட்ரீனாவும் ஆச்சரியப்பட்டாள்.

தொடரும்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.