Advertisements
ஓவியங்கள்கிரேசி மொழிகள்திருமால் திருப்புகழ்நுண்கலைகள்

’படமும், பாடல்களும்’’…..!

 

ஐயப்பன் வெண்பாக்கள்
——————————

ஆணென்றும் பெண்ணென்றும் நானென்றும் நீயென்றும்
வீணிந்த வித்தியாசம் ஏனென்று – ஆணென்ற
பெண்மைக்கும் பெண்பாதி ஆண்மைக்கும் சேயானோய்
உண்மைக்குள் உய்ய உதவு….

அரிதாரம் பூசி அரிதாரம் ஆனான்
கரியாடை பூண்டோன் கரத்தில் -அறிவே
அரனில் அரியை அறிய புரிவாய்
சரணம் சபரி மலைக்கு….

அத்தனும் பித்தனும் சித்தம் ஒருமித்த
தத்துவமே தான்தோன்றி தற்பரமே -சத்குரு
ஈசா சபரிகிரி வாசா சரணமுற்றோர்
நேசா வணக்கம் நினக்கு….

வங்கக் கடல்கடைந்த சிங்கனும் சங்கரனும்
அங்கம் கலக்க அவதரித்த -எங்களின்
அண்ணா மலைபுர அய்யன்தேர் கண்டதில்
பண்ணாத பாவமும் போச்சு….

பிறப்பெனக்கு வேண்டும்நின் பம்பையில் நீராய்
இறப்பணைந்த கற்பூரத் தீயாய் -மறப்பெனக்கு
காமக் குரோத உலோபமத மாச்சரியம்
நாமத் திருநீறோ னே…

பங்குனி உத்திரத்தன்று எழுதியது….!
———————————————-

’’பங்குனி உத்திரா பந்தளப் புத்திரா
செங்கட் திருமால் சுமந்தவா -இங்குநீ
தோன்றிய இந்நாளில் தோத்திரம் செய்வோர்க்கு
ஊன்றிடும் கோலுன் உறவு’’….

’’பிணிகொண்டு கூற்றின் படிவாசல் நிற்போர்
மணிகண்டன் நாமம் முழங்க -இனிகண்டம்
இல்லையென்(று) ஆகிடும் ஈரொன் பதாம்படிமுன்
தொல்லையாம் தேங்காய் தெறித்து’’….

’’மீனாள் திருமணத்தில் மாலோன் அழகுகண்டு
மான்மழு வாளன் மயங்கினான் -கானில்
அபரிமித மோஹினியை ஆலிங் கனித்திட
சபரிகிரி வாசன் ஜனிப்பு’’….

”சங்குதிரி சூலத்தை சேரப் பிறந்தவன்,
பங்குனி உத்திரன்முன், பம்பையில் -முங்கி
சரணம் விளிப்போர்க்கு சாதகங்கள் இன்றி
மரண ஜனனம் முடிவு’’….

ஐயப்பன் திருப் புகழ்….
—————————

“புலிவா கணத்தில் மணிமா லையுற்ற,
மலையே றுபக்தர் -குருநாதா
திருவா திரைக்கும் திருவோ ணருக்கும்
சிசுவாய் ஜனித்த -சபரீசா

புலிவால் பிடித்த கதையாய் ஜகத்தில்
புழுவாய் துடிக்கும் -எமதான்மா
அருணா சலத்தில் ரமணே சருற்ற
அனுபூ திபெற்று -இகவாழ்வில்

ஜொலியாய் ஜொலிக்க வருவாய் சுருக்க
குருவாய் இருக்க -எரிமேலி
விசுவா சமிக்க திருவா வர்நட்பு
உடையோய் எனக்கு -அருள்வாயே

பலிமேல் பதித்த அடியால் வரத்தை
உறமால் குடைக்குள் -சிறிதாகி
உலகேழ் அளக்க விரிவான் விதிர்க்க
வளர்மோ கினித்தாய் -பெருமாளே”….(or ) பெறும்ஆளே…

“ஈரைந்து மாதங்கள் ஈன்றோள் மடியிருந்து,
பாரைம் புலன்களால் பாழுற்றாய் , -ஈரொன்,
பதுபடி ஏறி பதிசபரி ஈசன்
கதியென்(று) இருமுடி கட்டு”….

”இன்று வருவாரோ!, நாளை வருவாரோ!,
என்று வருவார் எமனென்று, -மென்று
முழுங்கிடாது நெஞ்சே, மணிகண்டன் தாளில்
புழங்கிட நீலிமலை போ”….

 

“வீறுபுலி வாகன(ம்)உ லாவுமுகம் ஒன்று
வாவருடன் தோழமைகு லாவு(ம்)முகம் ஒன்று
மாறுபடு மோகினிசு மந்தமுகம் ஒன்று
மேலரவம் பூணுமரன் தந்தமுகம் ஒன்று
மாறன்வழி போகாமல் மேய்க்கும்முகம் ஒன்று
ஏறுமடி யார்கள்பயம் போக்குமுகம் ஒன்று
கூறும்சர ணாகதியை கேளு(ம்)முகம் ஒன்று
கானிலுறை காந்தசப ரீசமணி கண்டா”….!

‘இளங்காலை சூரியன்போல் இன்று மணிகண்டர்
அலங்காரம் அற்புதம், அந்தோ, -விளங்காது,
சாஸ்தா சரணமென்று சொல்லிடச் செல்லாது,
WASTEடாய் அமர்ந்தேனே வீடு’’….கிரேசி மோகன்

——————————————————-

Print Friendly, PDF & Email
Download PDF
Advertisements
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க