பழந்தமிழக வரலாறு – 10 ஆ.மாமூலனாரும் செருப்பாழிப்போரும் செங்குட்டுவனும்

கணியன்பாலன்

மாமூலனார் பாடல்கள்:

     மாமூலனார், பரணர், கபிலர் ஆகியவர்கள் குறித்து அப்பாதுரையார் தனது தென்னாட்டுப் போர்க்களங்கள் என்ற நூலில், “பரணர் சங்ககாலப் புலவர்களிலேயே மிக முற்பட்டவர், மிக நீண்ட நாள் வாழ்ந்தவர், அவர் முதுமைக்காலத்திலே கபிலர் இளையவராக இருந்தார், மாமூலனாரோ பரணரிலும் பழமையானவர். அவர் மௌரியருக்கு முற்பட்டு கி.மு. 3ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தவர்” எனக்கூறுகிறார்(11). ஓரளவு பொருத்தமான காலத்தையே அப்பாதுரையார் கூறியுள்ளார் எனலாம். ஆகவே முதலில் ஓரளவு துல்லியமான காலத்தை நிர்ணயிக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் கொண்ட மாமூலனாரின் ஒருசில சங்கப் பாடல்களைக் காண்போம். இவர் பாடல்கள் மொத்தம் 30 ஆகும். அகநானூற்றில் 27 பாடல்களும், நற்றிணையில் இரு பாடல்களும், குறுந்தொகையில் ஒரு பாடலும் பாடியுள்ளார். புறநானூற்றில் இவர் பாடல் எதுவும் இடம்  பெறவில்லை.

              மாமூலனார் தனது பாடல் ஒன்றில்(அகம்-265) மகதத்தை ஆண்ட  நந்தர்கள் பெரும் புகழை உடையவர்களாகவும், பெரும் படை உடையவர்களாகவும்  இருந்ததோடு, மிகப் பெரிய அளவிலான செல்வத்தையும் கொண்டிருந்தனர் என்கிறார்.  நந்தர்கள் காலம் கி.மு.4 ஆம் நூற்றாண்டு ஆகும்.  நந்தர்கள் குறித்துப் பேசிய அவர், தனது வேறு இரு சங்கப் பாடல்களில்(அகம்-251, 281),  நந்தர்களுக்குப் பின், மகத ஆட்சிக்கு வந்த  மௌரியர்களின்  தமிழகப் படையெடுப்பு  குறித்து, வடதமிழகம் மௌரியப் படையெடுப்பால் அழிந்து கொண்டிருந்த போது, சிற்றரசர்களான மோகூர் பழையன் போன்ற, தமிழரசுகளின்  எல்லைக் காவல் படைத் தலைவர்கள், அதனைத்தடுத்து நிறுத்தி, மௌரியப்படைக்குப்  பணியாது எதிர்த்து நின்றனர். அதனால் மோகூர் பழையன் போன்ற தமிழக எல்லைக்காவல் படைத் தலைவர்களின் எதிர்ப்பை முறியடித்து வெற்றிபெற,  வடுகர்கள் வழிகாட்ட, வம்ப மோரியர்கள் (மோரியர் என்பது  மௌரியர் என்பதன் பிராகிருதச்  சொல்லாடல் ஆகும்), மேற்குமலைத் தொடர்ச்சியில் உள்ள  பாறைக் குன்றுகளை வெட்டித் தகர்த்து, பாதையமைத்து, பெரும்படை கொண்டு  தமிழகத்தை நோக்கி  படையெடுத்து வந்தனர் என்கிறார் மாமூலனார்.

       அகம் 251ஆம் பாடலில் மாமூலனார், நந்தர்களின் செல்வ வளம் குறித்து, “நந்தன் வெறுக்கை எய்தினும்”(நந்தர்களின் செல்வத்தைப் பெறினும்), எனக் குறிப்பிட்டுவிட்டு,  மௌரியர்களைப் பற்றிய அம்முதல் பாடலில் அவர்களை “வம்பமோரியர்” எனக்குறிப்பிடுகிறார். இப்பாடல் மௌரியர்கள் தமிழகத்தை நோக்கி  படையெடுத்து வந்தபோது பாடிய முதல் பாடல் ஆகும். நந்தர்கள் வீழ்ச்சியடைந்து விட்டார்கள் என்பதை மாமூலனார் முன்பே அறிந்திருப்பார் எனினும், அதற்குப்பின் ஆட்சிக்கு வந்த புதியவர்கள் யார் என்பதை, மௌரியர்கள் தமிழகத்தின் மீது படையெடுத்து வந்தபோது தான் அவர் அறிந்திருப்பார் போல் தெரிகிறது. அதனால் தான் பழையவர்களான நந்தர்களுக்குப் பின் புதிதாக ஆட்சிக்கு வந்தவர்களைக் குறிப்பிடும் போது அவர்களைப் புதியவர்கள் என்கிற பொருளில் வம்பமோரியர் என்கிறார். அதேசமயம் மௌரியர்கள் குறித்த இரண்டாவது  பாடலான அகம் 281ல் வம்ப என்பதை விடுத்து மோரியர் என்றே மாமூலனார் குறிப்பிடுகிறார்.  மாமூலனார் தவிர வேறுசில சங்கப்புலவர்களும், மௌரியர்களின்  தமிழகப் படையெடுப்பு  குறித்துப் பாடியுள்ளனர்.  வேங்கட மலைத் தலைவன் ஆதனுங்கனைப் பாடவந்த  கள்ளில் ஆத்திரையனாரும்(புறம்-175), தனது அகப்பாடலில் காதலன் கடந்து சென்ற பாதை குறித்துப் பாடிய உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனாரும்(அகம்-69) மௌரியர்களின்  தமிழகப் படையெடுப்பு  குறித்துப் பாடியுள்ளனர்.

மௌரியர்களின்  தமிழகப் படையெடுப்பு :

       நந்தர்களை அகற்றிய பின், மகதத்தில் ஆட்சி ஏற்ற  மௌரியர்கள் வட இந்தியாவின்  பெரும்பகுதியைக் கைப்பற்றிய பின்  தென் இந்தியா மீது படை எடுத்ததும், இன்றைய கர்நாடகம் வரை  அவர்கள் தங்கள் படையெடுப்பை  நடத்தியதும் குறித்து  வரலாறு பேசுகிறது.  ஆனால் மௌரியர்கள், வடுகர்கள் துணையோடு  தமிழகத்தைத்  தங்கள் பெரும்படை கொண்டு தாக்கினர் என்கிற, மேலே உள்ள சங்கப் பாடல்கள்  தரும்  நிகழ்வுகள் குறித்து வரலாற்றில் செய்திகள் எதுவும் இல்லை. இப்படை எடுப்பு நடந்த காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டின் தொடக்கம் ஆகும். மௌரியர்களின் இந்தத் தமிழகப் படையெடுப்பு, சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி என்பவனின் தலைமையில் தமிழக ஐக்கிய கூட்டணி அரசுகளால் முறியடிக்கப்பட்டது.  இவன் குறித்தும் இப்போர் குறித்தும் ஊன்பொதி பசுங்குடையாரும், இடையன்சேந்தன் கொற்றனாரும், பாவைக் கொட்டிலாரும் பாடியுள்ளனர்-(12).

கே. ஏ. நீலகண்ட சாத்திரி &  டி.டி. கோசாம்பி:

         மாமூலனாரின் சங்கப்பாடல்கள் குறித்து கே. ஏ. நீலகண்ட சாத்திரி அவர்கள், “மாமூலனார் கூறும் நிகழ்ச்சிகள் அசோகன் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே நடைபெற்றிருக்கக் கூடும் என்று நாம் கூறலாம்” எனவும் ‘வம்ப’ என்ற சொல்லுக்குரிய ‘புதிய’ என்பதன்படி, “மாமூலனார் தமது பாடலை இயற்றிய காலத்தில் மௌரியர்கள் தென்னாட்டிற்கு வந்தது அண்மையில் நடந்த நிகழ்ச்சியாய் இருந்திருக்கலாம்” எனவும் மாமூலனாரின் கூற்று நம்பத்தகுந்தவை எனவும் குறிப்பிடுகிறார்-(13). வரலாற்று ஆய்வாளர் ஆர். எஸ். சர்மா அவர்கள், “நந்தர்கள் மிகவும் செல்வச் செழிப்பில் செழித்தனர். மிகவும் வலிமை வாய்ந்தவர்களாய் விளங்கினர்” என்கிறார்-(14). இக்கூற்று மாமூலனார் 2300 வருடங்களுக்கு முன்பு கூறியதோடு ஒத்துப்போகிறது.

     மௌரியர்களின் தமிழகப்படையெடுப்பு குறித்து டி.டி. கோசாம்பி அவர்கள், “அசோகரோ, அவரது தந்தையோ போர் நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடாமலேயே மைசூர் அவர்கள் வசமானது. பண்டைத்தமிழ்க் கவிதை இலக்கியம் குறிப்பிடும் வம்பமோரியர் என்பது, திருப்பித் துரத்தியடிக்கப்படும் முன்போ அல்லது தம் தேர்களால் கடக்க முடியாத ஒரு மலையால் தடுத்து நிறுத்தப்படும் முன்போ உள்ளபடியே மதுரையையே அடைந்திருந்த ஒரு மௌரியப்படையையே குறிப்பிடுவதாகலாம்” என்கிறார்-(15). மேலே தந்த சங்கப்பாடல்கள், மௌரியர்களின் தேர் முதலான பெரும் படையைக் கொண்டு செல்வதற்குத்தான் மலையை வெட்டி மௌரியர்கள் பாதை அமைத்தனர் என்கின்றன. ஆதலால் மௌரியப்படை மலையால் தடுத்து நிறுத்தப்படவில்லை, அவை தமிழர்களால் துரத்தியடிக்கப்பட்டது. ஆதலால், மௌரியர்கள் தமிழகம்வரை படையெடுத்தனர் என்பதையும் ஆனால் அவர்கள் தமிழரசுகளால் துரத்தியடிக்கப்பட்டனர் என்பதையும் டி.டி. கோசாம்பி அவர்களின் மேற்கண்ட சொற்களும் உறுதிப்படுத்துகின்றன.

மகத அரசில் ஆட்சி மாற்றம்:

     ஆகவே மாமூலனாரின் பாடல்கள் மகதஅரசில் கி.மு. 4ஆம் நூற்றாண்டில் நடந்த ஆட்சி மாற்றங்கள் குறித்தும், நந்தர்களுக்குப் பின்வந்த மௌரியர்களின் தமிழகப் படையெடுப்பு குறித்தும் பேசுகிறது. மாமூலனார் நந்தர்களைப் பற்றி அறிந்திருப்பதும், மௌரியர்களைப் புதியவர்கள் எனக் குறிப்பிடுவதும் அதே காலகட்டத்தில் அவர் வாழ்ந்து வந்தவர் என்பதை உறுதிப்படுத்துகிறது. கே. ஏ. நீலகண்ட சாத்திரி, டி.டி. கோசாம்பி ஆகியவர்களின் கூற்றும் இதனை வலியுறுத்துகிறது. ஆகவே மகத அரசில் நடந்த இந்த ஆட்சி மாற்றங்களின் ஆண்டுகள் மாமூலனாரின் காலத்தை நிர்ணயிக்கப் பயன்படும் எனலாம். கிரேக்க மாவீரன் அலெக்சாண்டர் கி.மு. 327 வாக்கில் இந்தியாவின் மீது படையெடுத்தான். அவன் கி.மு. 325 வாக்கில் இந்தியாவிலிருந்து திரும்பினான். கி.மு. 323இல் பாபிலோனியாவில்  இறந்தான். அதன்பின் சந்தரகுப்த மௌரியன் நந்தர்களின் மகத ஆட்சியை வீழ்த்தி விட்டு கி.மு. 321 வாக்கில் மகத ஆட்சியைக் கைப்பற்றினான். இந்த ஆண்டுகள் ஆதார பூர்வமான உலக வரலாற்றுக்காலத்தோடு இணைக்கப்பட்ட ஆண்டுகள். முறையானதும் சரியானதுமான இந்த ஆண்டுகளைக் கொண்டு தமிழக வரலாற்றுக்காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாமூலனார் காலம்:

     நந்தர்கள் சுமார் கி.மு. 365 முதல் கி.மு. 321 வரை சுமார் 44 ஆண்டுகள் மட்டுமே ஆண்டனர். அவர்களில் மகாபத்ம நந்தன் இந்தியா முழுவதும் புகழ் பெற்றவனாக இருந்தான். நந்தர்களின் புகழ் இந்தியா முழுவதும் பரவி இருந்த காலத்தில் இயற்றப்பட்டது தான் மாமூலனாரின் அகம் 265ஆம் பாடலாகும். கி.மு. 321இல் நந்தர்கள் வீழ்ச்சி அடைந்தனர்  என்பதால், அவர்களின் புகழும் அத்தோடு வீழ்ச்சி அடைந்தது. நந்தர்களுக்குப்பின் மௌரியர் ஆட்சியேற்ற பின்னரும், அவர்கள் தமிழகத்தின் மீது படையெடுத்து வந்த போதும் மாமூலனார் வாழ்ந்து வந்தவர். ஆகவே நந்தர்கள் வீழ்ச்சியடைவதற்கு முன்னர் சுமார் கி.மு. 330 வாக்கில் தனது இளைய வயதில் மாமூலனார் நந்தர்களைப் புகழ்ந்து பாடிய பாடல்தான் அகம் 265ஆம் பாடலாகும். ஆகவே அப்பாடலைப் பாடியபோது அவரது வயது 30 எனக் கொண்டு, அவர் கி.மு. 360 வாக்கில் பிறந்தார் எனக் கணிக்கப்பட்டது..

சோழர்களின் முதன்மை:

     மௌரியர்களின் தமிழகப் படையெடுப்பு குறித்த மாமூலனார் குறிப்புகளுக்கு, அசோகன் கல்வெட்டுகளில் ஆதாரங்கள் உள்ளன. கி.மு. 325 முதல் கி.மு. 300 வரையான காலகட்டத்தில், அதாவது கி.மு. 4ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் மெகத்தனிசு, சாணக்கியர் போன்றவர்களால் தமிழக மூவேந்தர்களில் முதன்மையான அரசாகவும் ஒரே அரசாகவும் குறிக்கப்படுவது பாண்டிய அரசு தான். ஆனால் கி.மு. 3ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பொறிக்கப்பட்ட, அசோகன் கல்வெட்டுகளில் முதன்மை பெற்றிருப்பது சோழ அரசு தான். பாண்டிய அரசு அசோகனின் இரு கல்வெட்டுகளிலும் இரண்டாவது இடத்தில் தான் குறிக்கப்பட்டுள்ளது. அரை நூற்றாண்டுக்குள் மௌரிய அரசியலில் சோழர்கள் முதன்மை பெற்று, பாண்டியர்கள் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்ட நிகழ்வே மௌரியர்களின் தமிழகப் படையெடுப்புக்கான ஆதாரமாகும். இதனை விரிவாகக் காண்போம்.

பெரும்தோல்வி:

     சந்திரகுப்த மௌரியரின் ஆட்சிக்காலம் கி.மு. 321 முதல் கி.மு. 297 வரையான 24 வருடங்கள் ஆகும். அவர் மகன் பிந்துசாரரின் ஆட்சிக்காலம் கி.மு. 297 முதல் கி.மு. 272 வரையான 25 வருடங்கள் ஆகும். சந்திரகுப்த மௌரியரின் ஆட்சிக்காலத்திலேயே, கி.மு. 300க்குப்பின் தக்காணத்தைக் கைப்பற்றும் பணி தொடங்கிவிடுகிறது. ஆனால் பிந்துசாரரின் ஆட்சிக்காலத்தில் அதாவது கி.மு. 297க்குப்பிறகு அது தீவிரப்படுத்தப் படுகிறது. இதுகுறித்து கா. அப்பாதுரை அவர்கள் முனைவர் எம். இராசமாணிக்கனார் அவர்கள் சங்கஇலக்கியங்களில் இருந்து திரட்டிய தொகுப்பை அடிப்படையாகக் கொண்டு, ஒரு விரிவான விளக்கத்தை வழங்கியுள்ளார்-(16).

                தக்காணத்தையும் தமிழகத்தையும் கைப்பற்றும் மௌரியர்களின் படையெடுப்பு கிட்டத்தட்ட கி.மு. 297 முதல் கி.மு. 288 வரையான காலங்களில் மிகத் தீவிரத்தோடும், மௌரியப்பேரரசின் முழு ஆற்றலோடும் நடைபெற்றது. தக்காணத்தின் பலபகுதிகள் பிடிக்கப்பட்டன. ஆனல் தமிழகத்தை பொருத்தவரை அப்படையெடுப்பு ஒரு பெரும் தோல்வியில் முடிந்தது என்பதுதான் வரலாறு. சங்க இலக்கியங்கள் தரும் செய்தியும் அதுவேயாகும். பாரசீகப்பேரரசு கி.மு. 5ஆம் நூற்றாண்டில் கிரேக்க அரசுகளைக் கைப்பற்ற முயன்றபோது அம்முயற்சி பெருந்தோல்வியில் முடிந்தது போன்ற நிலையே மௌரியப்பேரரசின் தமிழகப் படையெடுப்புக்கும் ஏற்பட்டது. பின் பிந்துசாரரின் கடைசி ஆண்டுகளில் தமிழரசுகளோடு நட்புறவு ஏற்படுத்தப்பட்டது.

மௌரியப் படையெடுப்பு:

     கி.மு. 297 வாக்கில் பிம்பிசாரன் மகத ஆட்சியில் அமர்ந்தவுடன் தக்காணப் படையெடுப்பைத் தீவிரப்படுத்தினான். மௌரியப்படை தக்காணத்தின்மீது படையெடுத்து வந்த போது அவர்களுக்கு வடுகர்கள் துணையாக இருந்து ஆதரவு தந்தனர். மௌரியப்படையில் சேர்ந்துகொண்ட கோசர்களும், வடுகர்களும் தென்பகுதியில் இருந்த அனைத்து அரசுகளோடும் போர் செய்து வென்று வரலாயினர்.  மௌரியர்கள் முதலில் வடுகர்கள் துணைகொண்டு துளுவ நாட்டைத்தாக்கி அதனை ஆண்ட நன்னன் மரபினனை முறியடித்து, அவனது தலைநகர் பாழியைக் கைப்பற்றிக் கொண்டனர். பின் அதனை ஒரு வலிமையான அரணாக மாற்றியமைத்து அங்கிருந்து அவர்கள் அதியமான் மரபினரையும், சோழநாட்டின் எல்லையிலுள்ள அழுந்தூர்வேள் திதியனையும், பாண்டிய நாட்டு எல்லையிலுள்ள மோகூர் பழையனையும் படிப்படியாகத் தாக்கத்தொடங்கினர்.

சதிய புத்திரர்கள்:

     அதியமான் மரபினர் மௌரியர்களை எதிர்த்து, தொடர்ந்து இறுதிவரை தாக்குதல் நடத்தினர். தமிழகத்தின் வடமேற்குப் பகுதியில் மேற்குக் கடற்கரையில் உள்ள குதிரை மலை முதல் கொங்குநாடு வரை அதியன்கள் மரபினர் ஆண்டு வந்ததால் அவ்வழியே படையெடுத்து வந்த மௌரியப் படைகளை அவர்கள் கடுமையாக  எதிர்த்துப் போரிட்டனர். அதன் காரணமாகவே அசோகரின் கல்வெட்டில் அவர்களுடைய அரசகுடி வடமொழிப்(பிராகிருதம்) பெயரில், சதிய புத்திரர்கள் என மூவேந்தர்களுக்கு இணையாக இடம்பெற்றனர். இந்த அதியன் மரபினரும், சோழ நாட்டெல்லையில் உள்ள அழுந்தூர்வேள் திதியனும், பாண்டிய நாட்டின் எல்லையிலுள்ள மோகூர்ப்பழையனும் மௌரியர்களை எதிர்த்துத் தாக்கி அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.

பார்வை:

11.அப்பாதுரையார், தென்னாட்டுப் போர்க்களங்கள், பக்: 81.

12.ஊன்பொதி பசுங்குடையார் பாடிய புறநானூற்றுப்பாடல்: 378; இடையன் சேந்தன் கொற்றனார் பாடிய அகநானூற்றுப்பாடல்: 375; பாவைக்கொட்டிலார் பாடிய அகநானூற்றுப்பாடல்: 336.

13.நீலகண்ட சாத்திரி, சோழர்கள், தமிழில் கே.வி. இராமன், புத்தகம்-1, நவம்பர்-2009, பக்: 28, 37.

14.பண்டைக்கால இந்திய, ஆர். எஸ். சர்மா, தமிழில் மாஜினி, NCBH  வெளியீடு, ஜூன்-2004, பக்:180.

  1. டி.டி. கோசாம்பி, ‘இந்திய வரலாறு ஓர் அறிமுகம்’ தமிழில் சிங்கராயர், அக்டோபர்- 2011, விடியல் பதிப்பகம், பக்: 271.

16.தென்னாட்டுப் போர்க்களங்கள், கா. அப்பாதுரை, ஜூலை-2003, பக்: 57-63.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க