கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

வாசுதேவ ரைவசுதே வர்வெஞ்சி றைநீங்கி
ஓசை யமுனா ஓய்ந்திட -நீசனவன்
கூற்றனாய் வாய்த்தவன் கம்சன் கொலைக்கஞ்சி
மாற்றான்தாய் பக்கம் மகன்….!
நடுநிசியில் ரோகினி நட்ஷத் திரத்தில்
கொடுஞ்சிறையில் தோன்றிய கண்ணா-முடிமிசையில்
அப்பன் சுமந்திட ஆயர்தம் கோகுல
குப்பம் நுழைந்தவனே காப்பு….!
ஒருத்தி கருத்தரிக்க வேறொருத்தி காத்த
கருத்த நிறக்கண்ணன் நின்போல் -பிறப்பில்
அனாதை ஆனாலும் ஆய்ச்சியர் அன்பால்
அனாதி அவன்கதை ஆச்சு….!
திரும்ப சிறையில் பிறந்து சிரித்து
விரும்பி வ்ரஜமண் விரைந்து -கறந்த
பசுக்கள் பால்மடி பச்சிளங் கன்று
ருசிக்கும்முன் உண்ணகண்ணா ரா….!
(யமுனை)ஆத்திலொரு காலாக (சிறை)சேத்திலொரு காலாக
காத்திருக்கேன் கேள்விக் குறியாக -பூத்திருவை
மார்பினில் சூடிய மாதவா, நேருக்கு
நேர்பதில் கூறுவதென் நாள்….கிரேசி மோகன்….!