ஆக்கப் பொறுத்தாலும் ஆறப் பொறுத்தாலும்
காக்கும் கடவுள் கவலைப்படான் -நோக்கு
விதித்ததை ஏற்றி வினையால் அணைத்து
புதைப்ப(து) அவன்பொழுது போக்கு….(1)….20-1-2010

போக்கத்(து) உலகில் பொழுதைக் கழித்திரு
காக்கும் கடவுளுடன் கைகோர்த்து -தாக்கும்
செடியாய வல்வினைகள் செங்கரும்பாம், ஊன்றத்
தடியாகும் பட்டினத் தார்….(2)….20-1-2010

தாரில் மலரவன் நாராம் மணக்கும்நாம்
சோறில் சுவையவன், சக்கைநாம் -நேரில்
வரத்தயங்கும் கீதமவன் வந்துவிட்ட நாமக்
கரத்தியங்கும் புல்லாங் குழல்….(3)….20-1-2010

குழலுற்ற கீதத்தைக் காதுற்றுக் கேளீர்
விழலுக்(கு) இறைக்காதீர் வீணாய் -தழலுக்குள்
வேகாது, தண்ணீரில் வீழ்ந்தும் நனையாது
சாகாத அவ்வுணர்வே சத்து….(4)….20-1-2010

சத்துக்கு ஆனந்தம் சித்தின் விளையாட்டு
அத்தனையும் வேடிக்கை ஆகப்பார் -புத்தி
மனமுள்ளம் நெஞ்சென்ற மாயங்கள் நால்வர்
உனையுண்ணத் தூக்கும் உறவு….(5)….21-1-2010

உறவும் பகையும் துறவும் தெளிவும்
வரவு செலவாகும் வாழ்க்கை -பறவை
ஒருகூடு விட்டு மறுகூடு போகும்
பெறுவீடு காணப் பயன்….(6)….21-1-2010

பயனற்ற பாண்டம் பழுதாக மீண்டும்
வியனுலகை விட்டேக வேண்டும் -அயனோ
அரனோ, அரியோ அவதாரம் வந்தும்
மரணத்தில் தானே முடிவு….(7)….21-1-2010

முடிவற்ற ஆசை முதலுக்கே மோசம்
வெடிவைத்து வந்திடுமா வானம் -படியற்ற
சொர்கத்தைக் காண செடியேறு கின்றாயே
தர்கமற்ற தேடல் தவம்….(OR)
தர்கத்தைத் தாண்டல் தவம்….(8)….21-1-2010

தவமாய்த் தவமிருந்து தத்துவங்கள் தேர்ந்து
சவமாய் சுடுகாடு செல்வீர் -சிவஞானம்
சிந்திக்க வாராது சித்தம் ஒருமிக்க
சந்திக்க முந்துவான் சம்பு….(9)….21-1-2010

சம்பு மஹேசனை நம்பியவன் நானென்று
கும்பிடப் போக வரும்குறுக்கே -ஒன்பது
வாசலுடற் கோசத்தில் நேசமுறக் காண்போமே
ஈசனிடம் சாத்தான் இயல்பு….(10)….21-1-2010

இயல்பாய் இருத்தல் இயலாமல் பாடும்
குயில்கரையும் காகத்தின் கூட்டில் -பயில்வீர்
பெருக்கெடுக்கும் கங்கையும், பாழான நீரும்
சிரம்தெளித்துக் கொள்ளும் சமம்….(11)….21-1-2010

சமர்த்தஅவ் ஆன்மனை சிந்தா சனத்தில்
அமர்த்தி இகபரம் ஆளு -நிமிர்த்த
முடியாத நாய்வால், மரம்தாவும் மந்தி
விடியாத நெஞ்சை விலக்கு….(12)….22-1-2010

விலக்க விருப்பம் , விரைந்து நெருங்கும்
விளக்கம் தெளிவு விடியல் -கலக்கம்
இனிநமக்(கு) இல்லைநாம் கண்ணனைப் போல
தனிமரத் தோப்பில் திளைப்பு….(13)….22-1-2010

திளைப்பாய், இளைப்பாய், களைப்பாய் புலனார்
அலைக்கழிப்பால் ஆயுள் அடைப்பாய் -முலைப்பால்
அருந்திட மீண்டும் அவனிக்கு வருவாய்
திருந்திட ஏற்பாய் துறவு….(14)….22-1-2010

துறவில் மரமாய், உறவில் கிளையாய்
பிரிவில் கனியாய்ப் பழுத்து -நிறைவில்
நிலைத்திருப்பாய் நெஞ்சமே ஞானக் கடலின்
அலைக்கரத்தால் மண்தொட்(டு) அகன்று….(15)….22-1-2010

அகன்று விரியும், அணுவாய்க் குறையும்
உகந்த உறவில் உலவும் -புகன்ற
மறைகளும் காணா மகத்துவம் நெஞ்ச
அறைதனில் வாழும் அவன்….(16)….22-1-2010

அவனால் அவனி, அவன்தான் புவனி
அவனை அவனால் கவனி -அவனே
வருவான் குருவாய் அறிவைத் தருவான்
பெருவாய் பரம பதம்….(17)….22-1-2010

பதப்பருக்கை பானை புசிக்கின்ற பூதம்
முதற்கொண்டிங்(கு) எல்லாமே மாயை -எதற்காக
அம்மா பசியென்றிங்(கு) ஆலாய்ப் பறக்கின்றாய்
சும்மா இருக்க சுகம்….(18)….23-1-2010

சுகம்கிடைத்தும் ஓரிடத்தில் சும்மா இராமல்
நகம்கடித்து நாற்புறமும் நோக்கி -முகம்சுளிப்பாய்
மேலான பேரின்பம் தோலால் கிடைக்காது
வேளாண்மை செய்யான்மா வில்….(19)….23-1-2010

வில்லிருந்தும் தோளிருந்தும் வீரம் பிறக்காது
கள்ளிருந்தும் போதை கிடைக்காது -உள்ளிருக்கும்
ஆன்மனே ஆண்மை அவனெழுச்சி சம்போகம்
ஊன்மனங்கள் சோரும் உறுப்பு….(20)….23-1-2010

உறுப்பதற்கு ஞானம், உரைப்பது மோனம்
பிறப்பிறப்(பு) இல்லா புருஷன் -கருப்பொருளாய்
சக்தியவள் , அன்பில் சிவனவன், பாலில்
யுக்தியிலாண் பெண்ணாம் அது….(21)….23-1-2010

அதுவாக ஓர்நாள் ருதுவாகும் ஆன்மா
அதுவரை ஐம்புலனை ஆள்வாய் -கதையல்ல
கற்பனை மாயையைக் கட்டக் களித்துடுவான்
அற்பனும் அக்குடையை ஆண்டு….(22)….26-1-2010

ஆண்டோனும் ஆண்டியும் மாண்டபின் மீண்டுமிங்கு
ஆண்டியாய் ஆண்டோனாய் ஆகிடுவர் -வேண்டாமே
வேஷமிது அஞ்ஞானம் வேதாந்த கும்பலின்
பாஷையில் கோவிந்தா போடு….(23)….26-1-2010

போடுவதை உண்ணாது போயின்ப வேட்டையில்
ஆடியிரை ஆகி அனல்சுடு -காடுவர
அய்யோ எனக்கூவ அய்யோ மணவாளன்
கொய்யா(து) இருப்பானா கூறு….(24)….26-1-2010

கூறிடும் கீதை குரான்பைபிள் எல்லாமே
போரிட ஐம்புலன் போகுமென்று -சாறான்மா
விட்டிந்த சக்கையாம் கட்டையைப் பேணுகிற
மட்டிங்கு ஜீவனுக்கு மண்….(25)….26-1-2010

மண்ணோடு மண்ணாகும் மேனியை மெய்யென்று
உன்னோடு சேர்த்து உழலாதே -பெண்ணோடு
ஆணாகும் பேரின்ப ஆன்மா அசலாம்
நானாகும் தோற்றம் நகல்….(26)….27-1-2010

நகிலைப் புகழ்ந்து முகில்குழலைப் பாடி
துகிலணி மாதர் துணையே -புகலென்று
வீழ்ந்து வணங்காதே தாழ்ந்து துதிக்காதே
ஆழ்ந்திரு ஆன்மாவில் வாழ்ந்து….(27)….27-1-2010

வாழ்க்கையில் வென்றென்ன வாரிக் குவித்தென்ன
சீழ்க்கை அடித்து சிலிர்த்தென்ன -ஊழ்பையன்
எள்ளி நகையாடி ஏய்ப்பது கேட்கிலையோ
பள்ளி எழுந்திருப் பாய்….(28)….27-1-2010

பாயில் படுத்து பணியாய் புணர்ந்திட
நோயாய் வயோதிகம் நேர்ந்ததே -காயை
தனியாய்த் தவத்தில் பிணிமூப்(பு) இராது
கனியாக்கும் வித்தையைக் கல்….(29)….27-1-2010

கல்வியா செல்வமா கேட்போர்க்கு வீரமாய்
சொல்லுவாய் ஆன்ம சுதந்திரத்தை -அல்லலாய்
பாரமாகி மூப்பில் பிணியுற்ற வேளையில்
வீரமா கோழைக்கு வாய்ப்பு….(30)….27-1-2010

வாய்க்கரிசி போட்டவாய் மாய்ந்தவுயிர் போகும்முன்
வாய்க்கு ருசியாய் விருந்துண்ணும் -வாய்க்குவாய்
பேராண்மை போற்றுவர் பத்தாம்நாள் தூற்றுவர்
ஓரான்மா தானுன் உறவு….(31)….27-1-2010

உறவுக்குத் தேவை உருவும் திருவும்
கறவைக்குப் பின்லாடம் காலில் -பறவைக்கு
உள்ள சுதந்திரமும் இல்லை, சிறகுவிரி
கள்ளத் தனத்திலென்ன கற்பு….(32)….28-1-2010

கற்பூர வாசனை கழுதை அறியுமா
விற்பனைக்கு வந்தாலும் வீடுபெறும் -நற்கதியை
நெஞ்சமது ஏற்காது வஞ்சக மாயைகை
அஞ்சுவிரல் கோர்க்கும் அசடு….(33)….28-1-2010

அசடுக்கு உண்டு அடைக்கும்தாள் வாழ்க்கை
கசடற கற்றுக் கொடுத்தும் -முசுடாய்
கதவைத் திறக்காது, காற்றாக ஞானப்
பதவி வரப்போடும் பூட்டு….(34)….28-1-2010

பூட்டாத நெஞ்சக வீட்டாசை வாயிலில்
கூட்டைம் புலன்களே காவலாம் -கோட்டான்கள்
ஆண்டவன் வேடத்தில் ஆளை மயக்கிடும்
வேண்டாமை வேண்டல் விதி….(35)….28-1-2010

விதியை ஜெயிக்க மதியின் முயற்சி
நதியை குடத்தில் நிரப்பல் -எதையும்
புதிதாய்ப் பழகேல் பழயன போற்று
உதவிக்கு உபநிடதம் உண்டு….(36)….28-1-2010

உண்டாகி உண்டுமிழும் குண்டாகி, வேதக்கற்
கண்டாகி, வேதாந்த சிண்டாகி -தண்டாகி
செண்டாகி, முண்டகத்து வண்டாகி ஜீவான்மா
ரெண்டாகி வந்துபோகும் பண்டு….(37)….29-1-2010

பண்டமாய் பாத்திரமாய் உண்டவனாய் ஜீரணிப்பாய்
பிண்டமாய் மோட்சமாய் பித்ருவாய் -எண்டிசையாய்
பூதமாய் புல்பூண்டாய் யாதுமாய் உள்ளதாய்
ஆதலே ஆன்மீக ஆய்வு….(38)….1-2-2010

ஆய்ந்தரிய ஆன்மா அவரைக்காய் அல்லவே
மேய்ன்தழியும் ஐம்புல மாடுகளை -சாய்ந்திருந்து
வேடிக்கைப் பார்த்திடும் வேதாந்த பட்சியாம்
பாடிக்கை கோர்த்துப் பற….(39)….3-2-2010

பறந்திடும் ஆவி ,பிறந்திறக்கும் மேனி
மறந்திடும் மாயமனக் கூனி -நிரந்தரம்
ஒன்றந்த ஆன்மனுடன் ஒன்றி இருத்தலே
கன்றிந்த ஜீவனுக்கு காப்பு….(40)….3-2-2010

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *