எழுத்து – 8
அக்கினியும் அக்கிரமமும் தாங்கவியலாது விசிறலாம்.
அற்புதமும் ஆனந்தமும் ஓங்கிடப் பாவெழுதலாம்.
உக்கிரமாய் சிலர் தனித்தமிழ் தமிழென
அக்கறையாய்க் குரலெழுப்புகிறார்! எத்தனை மொழிகளோடு
முக்குளித்த தமிழ் எழுத்துகளைப் பிரிக்கவியலுமா!
பரிபூரணமாய் மூச்சிலும் பேச்சிலும் பின்னிப்
பிணைந்ததை வேறு வேறாக்கல் அசாத்தியம்.
இணைந்த கலப்பு எழுத்தாகவே எழுதுகிறோம்.
வடமொழித் தழுவலின்றி முதற் காப்பியமாய்
இடம் பெற்ற பெருமை சிலப்பதிகாரத்திற்காம்.
வடம் பிடிக்குமென் தூரிகைக்குள் கடல்
வானம் என்று ஆச்சரியங்கள் பலவுண்டு.
தேங்கி நிற்கும் சிந்தனை வெள்ளம்
பாங்காகக் காகிதப் பள்ளத்தில் பாய
ஓங்கிய தேசமெனும் நதிக்கரையில் படகோட்டி
ஓங்கிடுமென் எழுத்து தமிழ் உல்லாசபுரியில்
வெற்று மண்ணில் பிறந்தேன் இன்று
வெற்றியில் பயணிக்கிறேன் தமிழ் வயலில்
சுற்றும் குதிரைச் சவாரி இது
பற்றறுத்து வெட்ட முடியாத தமிழ்
அற்பமல்ல! வீரியச் சிறகுடைய பாரம்பரியம்.
வெற்றுக் கல் அல்ல! பிரமாண்டக்
கற்பாறை! நாளும் செதுக்குகிறேன் சிற்பம்.
அற்புதம்! அனந்தம்! அவசியம்! அனுகூலம்!
இயற்கையெனும் பச்சையங்களில் நீந்தி இன்ப
மயற்கையில் எழுத்துப் பூ மலரும்
வயற்காட்டுத் தமிழரசி யான்! கவிதை
முயற்கொம்பல்ல! நாளும் சுவாசிக்கும் பூப்பாத்தி.
வியத்தகு வெண்மாளிகையில் முத்துக்களாய் உருளும்
நயமிகு ஆர்மோனிய இசையாய் தவழும்
கயமையாய்த் திமிறியும் நழுவும் எழுத்தை
சுயமாய் பொறுமையாய் கட்டி இழுப்பேன்.
வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 30-8-2018