கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
KRISHNA FOR TODAY….!(ஹேப்பி கண்ணன் பிறந்தநாள்)….!
———————————————
கடந்த பத்து வருடங்களாக, அடியேன் ’’காலைக் கடன்’’
கேசவ் அனுப்பும் கண்ணன் ஓவியத்திற்கு வெண்பா வடிக்கும் (திரு)’’மாலைகடன்’’….நன்றி கேசவ்….!தொடரட்டும் நம் பணி….!
“ஏறுமயில் ஏறிவிளை யாடும்முகம் ஒன்று” மெட்டில் எழுதியது….!

கண்ணன் திருப் புகழ்
————————–
“கோலுயர கன்றுகளை காத்தமுகம் ஒன்று
கோபியர்கள் கூட்டமதில் கொஞ்சுமுகம் ஒன்று
நீலயமு னாநதியில் நீந்துமுகம் ஒன்று
நச்சரவம் மீதுநட மாடும்முகம் ஒன்று
பால்நிலவு ராதைமுகம் பார்க்கும்முகம் ஒன்று
பாரமுலை பூதகியின் ப்ராணமுகம் ஒன்று
காலனென மாமனுயிர் கொண்டமுகம் ஒன்று
ஆலிலையில் பாலனென ஆழ்ந்தபெரு மாளே”….
இராமன் திருப் புகழ்….!
“கோசலைகு மாரனென கொஞ்சுமுகம் ஒன்று
தேசுமுனி வாசிஷ்ட யோகமுகம் ஒன்று
கோசிகனின் சீடனென கண்டமுகம் ஒன்று
கோரமகள் தாடகையை கொன்றமுகம் ஒன்று
ஈசன்சிலை யாகசிலை இற்றமுகம் ஒன்று
வாசமகள் ஜானகியின் ஆசைமுகம் ஒன்று
ஆசுகவி மாருதியின் நட்புமுகம் ஒன்று
ஆதிகவி ஒதுமிதி காசபெரு மாளே”….!
நிவேதனம் கோகுலாஷ்டமி
———————————-
திருக்கண் ணமுது திரள்கின்ற வெண்ணை
பருப்புதயிர் சாதம் பழங்கள் -உருக்குலைந்து
அண்டாவில் சாறு அதிரசம் சீடைமுறுக்கு
உண்டேனுன் நாமம் உரைத்து….!
மார்கழி மாதத்தில் மாடுகள் மேய்த்திரவில்
ஓர்கழி ஊது குழலோடு -ஊர்புகும்
கார்முகில் வண்ணன்மேல் கோதூளி மின்னிட
பார்மிசை ராப்பக லாச்சு….!
திருவிருந்த மார்பன் திருத்துழாய் மார்பன்
மருவிருந்த மார்பன் மகனாய்ச் -சிறையில்
கருவிருந்த மார்பன் தெருவிருந்த மண்ணை
பெருவிருந்தாய் உண்ட புதிர்….!
காலை எழுந்தவுடன் கண்ணன் பெயர்சொல்லி
மூளை அடுப்பை மூட்டிடு -மாலை
மலைவனம் சென்றாயர் மாடுகள் மேய்க்க
அலைபவன் பேரால் அணை(SWITCH OFF)….!
பூந்தன மாதோடு சாந்தமும் பூசிய
காந்தனே கண்துயில்ஏ காந்தனே -நான்தினம்
நின்புகழ், நின்னெழில், நின்கதை, நின்னருள்
வெண்பாவில் பாட விரும்பு….!
டோங்க்ரே மகராஜ் பாகவதத்திலிருந்து….
—————————————————-
அங்கை படுக்கையாய் அதரம் தலையணையாய்
செங்கமலக் கண்ணிமைகள் சாமரமாய் -தொங்குமெழில்
புல்லாக்கு மேல்குடையாய் வல்லா னுடன்வாழும்
புல்லாங் குழலுந்தன் பேறு….கிரேசி மோகன்….!