இந்த வார வல்லமையாளராக நாடறிந்த தமிழ்க் கவிஞர் வைரமுத்துவை அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது. கவிஞர் கண்ணதாசனுக்குப் பிறகு, தமிழில் முதுகலைப் பட்டம்பெற்ற கவிஞர் வைரமுத்து பல்லாயிரக்கணக்கில் சினிமாவுக்குப் பாடல்கள் எழுதியவர். அவரது புதுக்கவிதைகள், கள்ளிக்காட்டு இதிகாசம் போன்றவை விகடன், குமுதம் போன்ற வெகுஜனப் பத்திரிகைகளில் வெளியாகி பல லட்சம் தமிழர்களால் படிக்கப்படுபவை. கடவுள்மறுப்புக் கொள்கையைக் கவியரசர் வைரமுத்து ஏற்றவர். அதனை வெளிப்படையாகத் தயங்காமல் அறிவிப்பவர். அதனால் தன் புகழும், வணிக நோக்கத்திற்கும் இடைஞ்சல்களைப் பற்றி அஞ்சாத தமிழ்க்கவிஞர் இவர். பாவேந்தர் பாரதிதாசன் பெரியாரின் அடியாராக வாழ்ந்தார். கலைஞர் கருணாநிதியின் பாதையில் கவிஞர் வைரமுத்து வாழ்கிறார். மூதறிஞர் இராஜாஜி 1946-ல் திரிவேணி என்னும் இதழில் ஆண்டாள் கற்பனை என எழுதினார் [1]. அக்கருத்தை அண்மையில் வெளிப்படுத்திய வைரமுத்திற்கு எதிரான கிளர்ச்சிகள் தமிழ்நாட்டில் எழுந்தன. ஆன்மீகம், நாத்திகம் என இருபுறமும் பல வாதங்களை தொலைக்காட்சி, பத்திரிகைகள், சமூக வலைத்தளங்கள் முன்வைத்துப் பரவலான அலசலுக்கு வழிவகுத்தன. தமிழின் நீண்ட, ஆழமான இலக்கிய வரலாறுகளை இன்றைய சமுதாயம் அறிதலுக்கு வைரமுத்து கட்டுரைகள் ஓர் தொடக்கப்புள்ளி. பல தமிழ்ப் புலவர்களைப் பற்றித் தம் கருத்துக்களை தினமணி நாளிதழில் எழுதிவந்த வைரமுத்து இப்பொழுது அத் தொடரை ”தமிழ் இந்து” (The Hindu group) பத்திரிகையில் தொடர்கிறார். இந்த வாரத்தில் வைரமுத்து திருநெல்வேலியில் கால்ட்வெல் பாதிரியாரும் அவரது திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் பாரியநூலின் விரிவான மொழியியல், வரலாறு, அரசியல் தாக்கங்களைப் பற்றி எழுதியுள்ளார். இதுவரை தொல்காப்பியர், திருவள்ளுவர், இளங்கோவடிகள், செயங்கொண்டார், கம்பர், அப்பர், ஆண்டாள், திருமூலர், வள்ளலார், உ.வே.சாமிநாதையர், பாரதியார், பாரதிதாசன், கருணாநிதி, மறைமலையடிகள், புதுமைப்பித்தன், கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், ஜெயகாந்தன் பற்றி எழுதிய வைரமுத்து ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ கண்ட கால்டுவெல் பற்றி ஆய்வுக்கட்டுரை இவ்வாரம் தந்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதியின் சமாதியில் பாலூற்றி அஞ்சலி செலுத்தினார் வைரமுத்து. https://patrikai.com/its-not-religious-ceremony-this-is-tamil-tradition-the-son-of-vairamuthu-explained-in-memory-of-karunanidhi-milk-poured/
“இது இந்துமுறை சடங்கு. அதை வைரமுத்த செய்தது தவறு” என்று சிலர் சமூகவலைதளங்களில் பதிந்துவருகிறார்கள்.

இது தவறு. ‘நீத்தார்க்கு பால் வார்த்தல்’ என்று தமிழ் மரபில் உண்டு. இறந்தவர் இடத்தை ஈரமா வைக்கிறது தமிழ் மரபு. இது இந்து மத சடங்கு அல்ல. எப்படி மலர்களை வைத்து அஞ்சலி செலுத்துகிறோமோ அதேமாதிரி பால் தெளித்து வணங்குவதும் நமது மண் சார்ந்த தமிழ் சார்ந்த மரபுதான்.

இது குறித்து தொல்காப்பியத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. என் தாத்தா இறந்த நேரத்தில் எங்கள் குடும்பத்தில் இருந்த யாரும் மத ரீதியான சடங்குகள் செய்யவில்லை. பால் தெளிப்பது மட்டுமே நடந்தது. என் அப்பாவின் பூர்வீக கிராமத்தில் இந்தப் பழக்கம் இன்றளவும் உண்டு.

ஆகவே இதை பாலூற்றுவது மத சடங்கு அல்ல.. நம் மண்ணின் மரபு.. இதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார் கபிலன் கார்க்கி.

கால்டுவெல்: திராவிட முகவரி – கவிஞர் வைரமுத்து
https://tamil.thehindu.com/opinion/columns/article24789366.ece
“சம்ஸ்கிருதம்தான் இந்தியாவின் மொழிகளுக்கெல்லாம் தாய் என்ற கருதுகோள் ஐரோப்பிய வெளியெங்கும் ஆணித்தரமாக நம்பப்பட்டது. மாக்ஸ் முல்லர் போன்றவர்கள் வடமொழி இலக்கியம் – பண்பாடு – கலை என்பதைத் தாண்டித் தெற்கு நோக்கித் திரும்பவே இல்லை. திராவிட மொழிகளை வடநாட்டார் ‘பைசாச பாகதம்’ அதாவது ‘பேய்களின் மொழி’ என்றே பேசிவந்தனர். கோல் புரூக் – காரி வில்கின்ஸ் போன்ற ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்களும் வடமொழியே திராவிட மொழிக் குடும்பத்தின் மூலம் என்ற மூளைச் சலவைக்கு ஆளாகிக் கிடந்தனர். இதற்குப் பின்னால் ஒரு ‘மொழிஅரசியல்’ இருந்தது. அதை உடைத்து தமிழ்மொழி என்றொன்று உண்டென்றும் ஞானக் கருவூலங்கள் கொட்டிக்கிடக்கும் ஆதிமொழி அதுவென்றும் எழுத்துருவில் ஐரோப்பாவிற்கு அறிவித்தவர்கள் பைந்தமிழ் பயின்ற பாதிரிமார்களே. கால்டுவெல் என்ற யுக சம்பவம் நிகழ்வதற்குக் கால்கோள் செய்தவர்களைக் காலம் மறக்காது.”

“தமிழர் சமயம், தனித் தமிழ், இந்தி எதிர்ப்பு, சுயமரியாதை இயக்கம், தமிழ்ப் பாதுகாப்பு, தமிழ் அரசு, முதலிய கருத்தோட்டங்களுக்கும், இயக்கங்களுக்கும், எழுச்சிகளுக்கும், கோரிக்கைகளுக்கும் கால்டுவெல் பாதிரியாரது ‘மொழியியல்’ கருத்துரைகள் தோற்றுவாயாக இருந்தன என்பது உண்மைக்குப் புறம்பாகாது. பிற்கால அரசியல், சமூக, சமய இயக்கங்கள் பலவற்றின் ஆன்மீகத் தந்தையாகப் பாதிரியார் விளங்குகிறார். அவ்வாறாயின் பேராசிரியர் சுந்தரம்பிள்ளை பாதிரியாரது ஞானபுத்திரன் ஆவார்: மறைமலையடிகளும் அவர் போன்றாரும் ஞானப் பௌத்திரர் ஆவர்” – பேரா. க. கைலாசபதி, யாழ்ப்பாணம்

https://www.vikatan.com/news/tamilnadu/135127-vairamuthu-released-article-about-caldwell.html
‘கால்டுவெல் இல்லை என்றால் திராவிடம் இல்லை’ கவிஞர் வைரமுத்து பேச்சு
https://www.dailythanthi.com/News/State/2018/08/26003618/If-not-Caldwell-Dravid-does-not-vairamuthu.vpf
”இரண்டு தமிழர்கள் சந்தித்துக்கொண்டால் பல்லவர் காலத்தில் ‘நமஸ்காரம்’ என்றார்கள். விஜயநகர ஆட்சியின்போது ‘தாசானு தாசன்’ என்று தெண்டனிட்டுக்கொண்டார்கள். நவாப்புகளின் ஆட்சியில் ‘சலாம் அலேகும்’ என்றார்கள். பிரிட்டிஷ் ஆட்சியில் ‘குட் மார்னிங்’ என்றார்கள். விடுதலைப் போராட்ட இந்தியாவில் ‘வந்தே மாதரம்’ என்றார்கள். விடுதலைக்குப் பின் ‘ஜெய்ஹிந்த்’ என்றார்கள். திராவிட இயக்கம் வளர்ந்த பிறகுதான் இரண்டு தமிழர்கள் சந்தித்துக்கொண்டால் ‘வணக்கம்’ என்று வாய் மணக்கச் சொன்னார்கள்.

கால்டுவெல் கண்டறிந்த திராவிடம் என்பது தமிழர்களின் சொல்லை மட்டுமல்ல இனத்தை, நிலத்தை, வரலாற்றை, கலாசாரத்தை மீட்டுக்கொடுத்தது. அயர்லாந்திலே பிறந்து இங்கிலாந்திலே வளர்ந்து தமிழ்நாட்டில் இறங்கி சென்னை முதல் இடையன்குடி வரை கால்நடையாகவே பயணப்பட்டு தமிழுக்கும், தமிழருக்கும் தொண்டு செய்து மறைந்து இடையன்குடி ஆலயத்தில் அடக்கமாகிக்கிடக்கும் கால்டுவெல் ‘திராவிட கொலம்பஸ்’ என்று கொண்டாடத்தக்கவர்.

கால்டுவெல்லின் பெருமையை இலக்கண உலகம் புரிந்துகொள்வதைவிட அரசியல் உலகம் புரிந்துகொள்வதைவிட இன்றைய இளைய உலகம் புரிந்துகொள்ளவேண்டும். கால்டுவெல்லை அறிந்துகொண்டால் உங்களுக்குப் பேரறிவின் பெருங்கதவு ஓசையோடு திறக்கும். கால்டுவெல்லின் தமிழ்த்தொண்டைக் காலம் வணங்குகிறது. பைன் மரங்களுக்கிடையே பிறந்து பனை மரங்களுக்கிடையே உறங்கும் மொழியறிஞனை நாங்களும் வணங்குகிறோம்.” – வைரமுத்து, பாளையங்கோட்டைச் சொற்பொழிவு.

கால்ட்வெல் தெரிந்தெடுத்த “திராவிட” என்னும் ஆரியமொழிச் சொல் இன்று மொழியியல் துறையில் நிலைத்துவிட்டது: https://en.wikipedia.org/wiki/Dravidian_languages   இன்றைய அமெரிக்க ஆங்கிலத்தில் சொல்வதானால், Dravidian = Tamil-like languages எனப் பொருள்படும். பவளம் > ப்ரவாலம், கமுகு > க்ரமுகம், … என்றெல்லாம் ஆதற்போல, சம்ஸ்கிருதத்தில் தமிழ் > தமிட > த்ரமிட/த்ரவிட எனத் திரிந்துள்ளது. பேரா. ஆ. ரா. வெங்கடாசலபதி கால்ட்வெல்லுக்கு முந்தைய பிரான்சிஸ் வைட் எல்லிஸ் என்னும் சென்னை கலெக்டர் திராவிட மொழிக் குடும்பக் கோட்பாட்டை வெளிப்படுத்தியதைக் குறிப்பிட்டுள்ளார். இதற்கான முக்கிய ஆய்வுகள் மிச்சிகன் பல்கலைப் பேரா. தாமஸ் டிரவுட்மன் அவர்களால் செய்யப்பட்டது. பேரா. இராம. சுந்தரம் அழகாக அதனைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். https://tamil.thehindu.com/opinion/columns/article24798085.ece

இந்திய பழைய வரலாற்றை அறிந்துகொள்ள, சென்ற இரண்டு நூற்றாண்டுகளில் மூன்று மிக முக்கியமான கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன:
(1) இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பம் – சர் வில்லியம் ஜோன்ஸ் – 1786.
(2) தமிழ் அதன் திராவிட மொழிக் குடும்பம் – பிரான்சிஸ் வைட் எல்லிஸ் – 1816.
(3) சிந்து சமவெளி நாகரீகம் கண்டுபிடிப்பு – சர் மார்ட்டைமர் வீலர் – 1924.

கால்ட்வெல் வாழ்ந்தபோதே வெளியான இரண்டாம்பதிப்பு (1875 CE) பல தகவல்களைக் கொண்டுள்ளது. படித்தருளுக.
https://archive.org/stream/comparativegramm00caldrich#page/n5
அறிஞர் கால்ட்வெல் திராவிட மக்களின் சமயம், சமூக அமைப்பை விளக்கினார். அவர் காலத்தில் சங்க இலக்கியங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அச்சேறவில்லை. தமிழ்ப்பீடம் அமைந்துள்ள  ஹார்வர்ட் என்றால் அறியாத தமிழர் இன்று இல்லை. ஹார்வர்ட் பல்கலையில் 50 ஆண்டுகளுக்கு முன்னர் சங்க இலக்கியத்தை ஜார்ஜ் ஹார்ட் ஆராய்ந்தார். அவரது சங்க காலச் சமயம், சமூகம் பற்றிய ஆய்வுகளும் புதிய ஒளி அளிப்பவை. இந்தியாவில் வேதமொழியாளர் சமயம், சங்கத் தமிழர் சமயம் இரண்டுக்குமான வேறுபாடுகளை இவ்வாய்வுகள் காட்டுகின்றன. ஹூஸ்டன் பல்கலையில் தமிழ்ப் பேராசிரியரைப் பதவியில் அமர்த்த முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம்.

தமிழ்த் தேசிய வாதங்கள் ஃபேஸ்புக் சமூக தளத்தில் தமிழர்களிடையே பிரபலம். அவ்வியக்கத் தலைவர் பெ. மணியரசன் ஓர் ஆழமான எதிர்வினை வைரமுத்து கட்டுரைக்கு ஆற்றியுள்ளார்.
http://www.tamizhvalai.com/archives/19353
”ஆரியம் வெட்டிய திராவிடப் படுகுழிக்குள் வீழ்ந்தார் கால்டுவெல்” என்கிறார் திரு. பெ. மணியரசன். ஆனால், தொல்திராவிடம் என்னும் முந்துமொழி (Proto-Dravidian) என்று கால்ட்வெல் கருதுகோள் செய்து, அதற்கு பெயர் சூட்டியதில் பிழையேதுமில்லை. மொழியியல் என்னும் விஞ்ஞானத்துறையின் அறிஞர்கள் யாவரும் முந்துதொல்மொழி (Proto-Language) என்ற கருதுகோளை ஏற்பவர்கள் தாம் என்பது குறிப்பிடத்தக்கது. திராவிட மூலமொழியில் இருந்து சங்கத்தமிழ் மாறியிருக்கிறது. அவை இரண்டும் ஒன்றல்ல. நேற்றைய ‘இந்தியா டுடே’ பத்திரிகையில் சிந்துவெளி மக்கள் முந்துதிராவிட மொழி பேசியிருக்கலாம் என்று மரபணு ஆராய்ச்சி முடிவுகள் வந்துள்ளன. அதாவது, அங்கே சங்கத் தமிழ் பேசவில்லை; ஆனால் தமிழோடு தொடர்புடைய ஒரு பழைய திராவிட மொழி அந்த நாகரீகத்தைக் கட்டியெழுப்பியோர் தாய்மொழி என்பது கருத்து.

உலகத் தமிழ் மாநாடு அடுத்த ஆண்டு முதல் தமிழ்ச் சங்கம் அமெரிக்காவில் தோன்றிய சிகாகோ நகரில் நடக்க உள்ளது. இந்தியவியல் (Indology) குழுமங்களிலே பல நூற்றுக்கணக்கான அறிஞர்கள் வடமொழி நூல்கள், ஆய்வுக் கட்டுரைகள் போன்றவற்றை இணையம் வாயிலாகப் பகிர்ந்து வருவதைக் காண்கிறோம். அதேபோல, இன்னும் சில லட்சம் பழைய புத்தகங்கள் (19-ஆம் நூற்றாண்டு, 1970 வரை) இணைய உலாக் காண்பதும், புகழ்பெற்ற, உலகத்தரம் வாய்ந்த ஆய்வேடுகளில் தமிழ், மொழியியல், தொல்லியல் கட்டுரைகளைத் தமிழர்கள் இனிவரும் காலங்களில் செய்வராக! அப்பொழுதுதான் செந்தமிழின் பெருமையும், திராவிட மொழியியலின் வளர்ச்சியும் உலக அறிஞர்களை நம் பக்கம் திரும்பச் செய்யும்.

நா. கணேசன்

[1] ஆண்டாள் யார்? – மூதறிஞர் இராஜாஜி, திரிவேணி, சென்னை, செப்டம்பர் 1948.
ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம் – முகநூலில் இருந்து.
http://viduthalai.in/page-1/156763-2018-02-03-10-03-17.html

[2] திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண நூல் தந்த கால்டுவெல் பாதிரியாருக்கு இந்தியா வெளியிடும் தபால்தலை!
http://nganesan.blogspot.com/2010/03/caldwell-indian-stamp.html

(இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், naa.ganesan@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் – https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 )

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.