தவறின்றித் தமிழ் எழுதுவோமே!

0

பேரா. பெஞ்சமின் லெபோ

பகுதி 5 –இ      : ஒரு? ஓர்? மயக்கமா? தயக்கமா ? மனத்திலே குழப்பமா?

சென்ற பகுதியில் ‘ஒரு’ ‘ஓர்’  – தமிழ் முறைமை பற்றிப் பார்த்தோம்.

– தமிழ் முறைமைக்கும ஆங்கில முறைமைக்கும் உள்ள ஒரே ஒற்றுமை :
உயிர்மெய்க்கு முன் ‘ஒரு ‘ / ‘a’ , உயிர்  முன்  ‘ஓர்’ /  ‘an’  வருதல் மட்டுமே .
-இவிரண்டு மொழிகளுக்கும்  உள்ள வேறுபாடு : தமிழ் முறைமையில் ‘ஒரு’ , ‘ஓர்’ , சில, பல போன்ற அடைகள் பெயருக்கு முன்னால் வரும் ; பெயருக்குப் பின்னால்  வரின், ‘ஒரு’ , ‘ஓர்’ என்பன ‘ஒன்று’ / ‘ஒருவர்’ என்றாகும்.  தமிழில், உயர்திணை அடைகள் பெயருக்குப் பின் வருதலே முறை.

ஆங்கிலத்தில் எல்லாப் பெயர் அடைகளும் பெயர்ச் சொல்லுக்கு முன்பாகவே வரும்.

இனி  a, an பற்றிய  ஆங்கில முறைமையைக் காண்போம். அக்கால ஆங்கில இலக்கணம் இவற்றை எண்ணுப் பெயரடைகள் (numerical adjectives) என்றே கூறும். ஆனால் தற்காலத்திய மொழி நூலார் இவற்றையும்  ஏனைய  பெயர் அடைகளையும் deteminers’ என்கின்றனர். ஆங்கிலத்தில் இவை ஏறக்குறைய 50 உண்டு  ; பிரஞ்சில் அதற்கும் மேலே இருக்கும். இவற்றுள் நாம் கவனிக்கப்  போவது மூவகை எண்ணுப் பெயரடைகளை மட்டுமே.
‘a’,’an’- இவை ‘indefinite article / determiner’ ஆகும்  ; ‘the’ – இது ‘definte article / determiner’ -ஆம்.
இவை ‘a’,’an’ பெயர்ச் சொல்லுக்கு முன் வரும் ; வந்தே தீரும். வரவேண்டும்.இதுதான் ஆங்கில முறைமை.
காட்டாக,
he is a good boy! ; the girl I saw is an angel.
இதுதான் ‘நல்ல’ ஆங்கிலம். நாம் ‘செந்தமிழ்’ என்று சொல்வது போல ‘நல்ல ஆங்கிலம்’ என்பதனை ஆங்கிலத்தில் ‘Queen’s / King’s English’  என்பர். இந்த இடங்களில் ‘a’, ‘an’ போடாமல் எழுதினால்  ஆங்கிலேயர்(கள்) எள்ளி நகையாடுவர்(வார்கள்).
(இவை இடாமலே  எழுதக் கூடிய இடங்களும் உண்டு அவற்றை ‘zero article’ என்பர்  ; இவற்றைத் தவிர்த்து எழுத வேண்டிய இடங்களும் உள. இது  ”ellipsis’ எனப்படும். இவற்றை இங்கே விரித்துக் கூற இடம், களம், காலம்  இல்லை).

ஆங்கிலேய முறைமை என்ற இந்தக் கொம்பை நம் நாட்டு மேதாவிகள் விடாப் பிடியாகப் பிடித்துக்கொண்டார்கள். இதனால்தான் மேற்கண்ட வாக்கியங்களை மொழி பெயர்க்கும் போது, ‘அவன்ஒரு/ ஓர் நல்ல பையன்’ என்றும் ‘நேற்று பார்த்த அந்தப் பெண்  ஒரு/ ஓர் தேவதை’ எனவும்  எழுதுகின்றனர். பொதுவாகத்  தமிழில் எழுதும்  போதும் இப்படியே,  ‘அவன் ஒரு தொழிலாளி’, ‘மனித மனமஓர் குரங்கு’ என்றெல்லாம் வெள்ளையப்பனுக்குப் பிறந்த பிள்ளைகளாய் ஆங்கில முறைப்படி எழுதுகிறார்கள். இப்படி எழுதுவது தவறு என்று இவர்கள் இன்னும் உணரவில்லை  ; எவரும் உணர்த்தவில்லை போலும். இந்த இடங்களில் எல்லாம் ஒரு/ ஓர் எடுத்து விட்டுப் படித்துப் பாருங்கள். பொருள் மாறுபாடு வருகிறதா? இல்லையே. அப்படியானால்  இவை மிகைதாமே! பயனில் சொற்கள் இவை ; மிகையாக  வீணே இருப்பதை எடுத்தெறியவேண்டியதுதானே  முறை. இப்படிப்பட்ட ‘பயனில் சொல் பாராட்டுவானை மகன் எனல் மக்கட் பதடி எனல்’ என்கிறாரே திருவள்ளுவர். (இதனை முன்னரே குறிப்பிட்டு இருக்கிறேன்).

இக்காலப் புதுக்கவிதைக் கவிஞர்கள், மரபுக் கவிஞர்கள், கதை ஆசிரியர்கள், நாவலாசிரியர்கள், கட்டுரையாளர்கள், தாளிகை(பததிரிகை)யாளர்கள், மாணாக்கர்கள், தங்களால் தான் தமிழே நிலைபெறுகிறது என்று மார் தட்டும் பேர்வழிகள் …என எல்லாத் திறத்தாரும் தவறாகவே  எழுதி வருகின்றனர்.இவற்றைப் படிக்கும் தமிழறிஞர்கள், தமிழ்ப்  பற்றாளர்கள் , தமிழ் முழுதறிந்தோர் வாய்  புதைத்து  நெஞ்சம் பதைத்து நிற்கின்றனர்.  கோவணம் கட்டாதவன் ஊரிலே அதைக் கட்டியவன் பைத்தியக்காரன். தவறாகவே எழுதும் இவர்கள் தம் தவற்றைத் திருத்திக்கொள்ள என்றுதான் முன் வருவார்களோ! அறியாமை தவறில்லை ; அறிந்துகொள்ள முயலாமையே  பெருந்தவறு.

அடுத்ததாக ஆங்கிலத்தில் வருவது, ‘the’ என்னும் ‘definite article’.  இதன்  ஒலிப்பு உயிர்மெய்  எழுத்தின்  முன் ‘த’ என்றும் உயிர் முன் ‘தி’ என்றும்  ஒலிக்கவேண்டும். இதன் பயன்பாடு  என்ன? முதல் முறையாக   வரும்    பெயர்ச் சொல்லுக்கு ‘a ‘ / ‘an’ இட வேண்டும். அதன் பின் வரும் அதே,பெயர்ச் சொல்லைச் சுட்ட  ‘the’ என்பதைப்  பயன்படுத்தவேண்டும். அடிப்படை ஆங்கில இலக்கணம் இது.
காட்டு : I live in a house ; the house in which I live is old.

இந்த  ஆங்கில  முறைமை  தமிழில்  கிடையாது. ஆனால், நம்மவர்கள் மிக அழகாக, ‘நான் ஒரு வீட்டில் இருக்கிறேன் ; அந்த ஒரு வீடு பழையது ‘ என மொழி பெயர்ப்பார்கள்.  இங்கும் ‘ஒரு’வை உருவிவிட்டுப் பாருங்கள், பொருள் மாறுபடாது. ‘the’ என்னும் ஆங்கில’ definite article’ – ஐ, நாம் ‘அந்த’ இந்த’ ‘எந்த’ என்னும் சுட்டுப் பெயர் அடைகள் ஆக்கிவிட்டோம்.  அதனைத் தமிழும் ஏற்றுக் கொண்டது.(அந்த, இந்த, எந்த என்பன தமிழ்ச் சுட்டுப் பெயர்கள் ; அவற்றைச் சுட்டு அடைகளாகப் பயன் படுத்துவதில் தவறு ஏதும் இல்லை!). எனவே, ‘அந்த வீடு பழையது’  (என்று ‘ஒரு’வை  நீக்கிவிட்டுச்  சொல்லுவது ) சரியான தமிழே!

‘ஒரு’, ‘ஓர்’ என்பவை ஒருமை. இவற்றுக்குப் பன்மை என்ன? எண்ணுப் பெயர் அடையாக வரும் போது, இரண்டு மூன்று…..போன்றன பன்மையாகும். ஆனால்  வரையறுத்துச் சொல்ல இயலாத  இயலாத அளவைகளுக்குப் பன்மை ? ‘சில’, ‘பல’! இது தமிழ் முறைமை. ஆங்கில முறைமையில் எப்படி? ‘a’, ‘an’  ஒருமை. இவற்றுக்குப் பன்மை ? எண்ணுப் பெயர அடையாக வரும் போது தமிழ் போலவே, two , three, four… பன்மை ஆகும். ஆனால்  அளந்து சொல்ல முடியாத போது அளவைகளுக்குப் பன்மை ? ஆங்கிலத்தில் பன்மை கிடையாது. பதிலாக, ‘the’ என்பதையே பன்மையாகப் பயன்படுத்துகிறார்கள். காட்டாக :
‘I live in three houses‘ ;’ in all the houses I live,  I have electricity ‘.

அளவு  சொல்ல  முடியாதவற்றுக்குப் பன்மைச் சொல்லாக  ‘some’ ( less / little…) என்ற சொல் பயன்படுகிறது.   ஆனால்  இவை  அடைச் சொல்லாக  வரவேண்டிய அவசியம்  ஆங்கிலத்தில் இல்லை.அதாவது இட்டாலும் சரியே ; இடாவிட்டாலும் சரியே :
I need water  ; i need some water. இப்படி  வரும்  இவற்றை  ‘partitive noun’ என்று  அழைப்பர். பிரஞ்சில் இந்த முறைமை உண்டு. இங்கு இதன் பெயர் ‘partitive article’. ஒவ்வொரு பெயர்ச் சொல்லுக்கும் தக்காற்  போல் இது பிரஞ்சு மொழயில்  மாறும். அதாவது ஆண்பால் / பெண்பால் , ஒருமை/ பன்மைக்கேற்ப மாறும்.
காட்டு :
donnes moi  d‘eau (give me some water)
j ‘ai besoins du sucre  (I need some sujar)
Il cherche des livres (he searches some books).
இந்த முறைமை தமிழில் இல்லை. ஆனால், இதற்கு ஈடாக ஒரே  ஒரு சொல்லைப் பயபடுத்துகிறோம். அதுதான் ‘கொஞ்சம்’ என்ற சொல்.
தண்ணீர் கொடு ; கொஞ்சம் தண்ணீர் கொடு!
அவனைப் பேசச் சொல் ; அவனைக்  கொஞ்சம் பேசச் சொல்!.

ஆக ஒரு வழியாக ஆங்கில முறைமையைப் பார்த்து முடித்துவிட்டோம். இந்த ஆங்கில முறைமைகளைத்  தமிழ் முறைமையோடு குழப்பிக்கொண்டு,
‘அவர் ஒரு பகுத்தறிவாளர்’,  ‘ஆசிரியர் இரு மாணவர்களை அடித்தார்’ , ‘ஒரு காட்டில் ஒரு அன்னம் வாழ்ந்து  வந்தது’ … என்றெல்லாம் தவறாக  எழுதாமல்,
அவர்  பகுத்தறிவாளர்’,  ‘ஆசிரியர்,   மாணவர் இருவரை  அடித்தார்’ , ‘ஒரு காட்டில்  அன்னம் ஒன்று  வாழ்ந்து  வந்தது’ எனச் சரியாக எழுதுவோமா!

இதுவரை பார்த்தவற்றைச்  சுருக்கிச் சொன்னால் :
– ‘ஒரு’ – உயிர்மெய் எழுத்துக்கு  முன்னர் வரும்
– ‘ஓர்’ – உயிர் எழுத்துக்கு முன்னர் வரும்.
– ‘ஒரு’, ‘ஓர்’,  என்பன அஃறிணை ஒருமைப் பெயர்ச் சொல்லுக்கு முன்பும்
– ஒன்று என்பது அஃறிணை ஒருமைப் பெயர்ச் சொல்லுக்குப்  பின்பும் வரும்.
– ‘சில’ , ‘பல’ என்பன அஃறிணை பன்மைப் பெயர்ச் சொல்லுக்கு முன்பும் பின்பும் வரும்.
– உயர்திணைப் பெயர்ச் சொல்லுக்குப்  பின்பு  ஒருவர்  , இருவர், சிலர் , பலர் என வரும்.

ஆங்கில முறைமையைத் தமிழில் ஏற்றி எக்காலும் எழுக வேண்டா!
ஒரு? ஓர்? மயக்கம்,  தயக்கம்,   மனத்திலே குழப்பம் எல்லாம் தீர்ந்தனவா?

பி .கு :
‘ஒரு’, ‘ஓர்’ தொடர்பாகப் பழங் கதை ஒன்றைப் பகிர்ந்து கொள்ள விருப்பம்.

படிக்கட்டும் பைந்தமிழ்  பாடும் பச்சையப்பன் கல்லூரி. முதுகலை இறுதி ஆண்டு. அறிஞர் அண்ணாதுரை  அவர்களின்  விழுமிய நண்பர் பேராசிரியர் மா.கி.தசரதன் அவர்கள் வகுப்பு. அவர் சொன்ன செய்தி இது : பேரறிஞர்  முனைவர் மு.வ அவர்கள், ‘கயமை’ என்ற நாவலை எழுதி முடித்த சமயம்.வழக்கம் போல் அவரும் இவரும் காலை நடை பயிலச் சென்றபோது மு.வ அவர்கள் எதோ சிந்தனையில் மூழ்கி இருந்தாரரம். கொஞ்சம் நேரம்  காத்திருந்து  பார்த்தபின், மா.கி ஐயா, மு.வ அவர்களுடம் கரணியம் கேட்டாராம். அதற்குப் பேரறிஞர், “ஒன்றும் இல்லை…’கயமை’ நாவலின் கடைசி வரியை, ‘ஒழிந்தான் கயவன்’ என முடித்திருந்தேன். அது சரி இல்லையோ என்று தோன்றுகிறது. அதனால், ‘ஒழிந்தான் ஒரு கயவன் ‘ என மரிவிடலமா?  என யோசிக்கிறேன்” என்றாராம்.

அன்றைய மதியமே பல்கலைக் கழகத்தில் மு.வ அவர்களின் வகுப்பு இருந்தது. இலக்கியக் கொள்கைகள்  பற்றிச் சிறப்பாக வகுப்பு எடுப்பார். வகுப்புக்குச் செல்லும் முன் பேராசிரியர் அவர்களைச் சந்தித்து இந்த நிகழ்ச்சி பற்றிக் கேட்டேன். “ஆமாப்பா, உண்மைதான்.’ஒரு’ போடுவதற்கு ஓராயிரம் சிந்தனை செய்து இறுதியில் ‘ஒரு’ சேர்த்தேன்.” என்று மெல்லச் சிரித்துக்கொண்டே கூறினர்.

பேராசிரியர் முனைவர் மு  .வ. போன்ற  பேரறிஞர்கள் ஆயிரம்  முறை சிந்திதித்து ஒரே ஒரு முறை தக்க இடத்தில் ‘ஒரு’ இடுகிறார்கள். ஓகோ , அதனால் தான் அவர்கள் பேராசிரியர்களாகவும் பேரறிஞர்களாகவும் விளங்கினார்களோ!
நாமோ…… ?

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *