நெம்பர்40, ரெட்டைத் தெரு….! by இரா.முருகன்….!
முன்னுரை by கிரேசி மோகன்….!
———————————————————————
கல்கி ”க்ரேஸியைக் கேளுங்களில்” கேட்டு நான் இன்னமும் பதிலளிக்காத கேள்வி….” உங்களுக்குப் பிடித்த வசனம் எது?(நீங்கள் எழுதிய சினிமா வசனமாகவும் இருக்கலாம்)….நான் பார்த்த சினிமா, நாடகங்களில் தேடியதில் சந்துஷ்டியாக ஏதும் அகப்படவில்லை….சினிமா வெண்ணெய்யை விட்டு சிறுகதை-நாவல் நெய்யில் அலைய ஆரம்பித்தேன்….”கண்டேன் வசன சீதையை”…. ”சாமி….இந்த தராசு எளுதின காயிதத்துக்கும் எளுதாத காயிதத்துக்கும் உள்ள எடை வித்யாசம் காட்டும்”-தி.ஜானகிராமனின் சிறு கதையில் வரும் இந்த வசனம் ”எதுக்கு நீயெல்லாம் வசனம் எழுதறே?” என்ற ரீதியில் என்னை விசனமாகப் பார்த்தது….” இனிமே வசனம் எழுதினே….உடைஞ்ச கைக்கும் உடையாத கைக்கும் உள்ள வித்யாசத்தை தராசு காட்டும்” என்ற தோரணையில் அச்சுறுத்தியது நான் அடுத்ததாகப் படித்த வசனம்….அது, அசந்தர்ப்பமாக நிகழ்ந்து விட்ட கர்பத்தைக் கலைக்க வந்த பெண்ணிடம் மருத்துவச்சி கூறுகிறாள் ” நாளைக்கு காலீல ஒண்ணும் சாப்பிடாம வெறும் வயத்தோட வாம்மா…வெறும் வயத்தோட அனுப்பிடறேன்”-இரா.முருகனின் ”நாள்” சிறுகதையில் வரும் இந்த வசனத்தை நான் சொல்லாத ”நாள்” கிடையாது , சொல்லாத ”ஆள்” கிடையாது, கமலஹாசன் உட்பட….சிறு-கதை தொகுப்புக்கள், அரசூர்-வம்சம் நாவல் என்று பாராயணம் செய்ததில், இந்த சீதக்காதிக்கு நான் சீத்தலைச் சாத்தனாராகி விட்டேன்….
ஹாஸ்யம் அளவுக்கு எனக்கு ஓரளவு ஜோஸ்யமும் தெரியும்….கையைப் பார்த்தல்ல….கை-எழுத்தைப் பார்த்து….வாத்தியார் சுஜாதா அமரராகவில்லை….சீடன் இரா.முருகனுக்குள் கூடு விட்டு கூடு பாய்ந்திருக்கிறார்….ஸ்ரீரங்கத்தனமாகட்டும், சிலிகான்தனமாகட்டும், சுஜாதாவுக்கும்-முருகனுக்கும் குறைந்த பட்ச ஒற்றுமை குமுதம் பாஷையில் ஆறு உண்டு….எதையும் கதையாக்கும் திறன், எழுத்தில் ஹாஸ்யம் கலந்த அமானுஷ்யம், உரை நடையில் ஒலிம்பிக்ஸ் வேகம், கமாவில் முற்றும் போடும் தைரியம், விஞ்ஞான பரிபாஷைகள், சாதுர்யமான சம்பாஷனைகள், மரபு PLUS அமரபு கவித்துவம்….இப்படி சுஜாதா போல இந்த முருகனுக்கு ஆறு முகம் உண்டு….பூ கட்டிப் பார்த்தேன், ரெண்டு விரலை நீட்டி என் பேரனைத் தொடச் சொன்னேன், கிளிக்கு தானியம் கொடுத்து CARDஐ எடுக்கச் சொன்னேன்….எல்லா ஜோஸ்யத்திலும் ”வருங்கால சுஜாதா- இரா.முருகன்” என்றுதான் வந்தது….பலிக்கவைக்க வேண்டியது முருகனின் கணினிக் கையில்தான் இருக்கிறது….
இவரோ இலக்கியவாதி….நானோ காமெடி கலக்கியவாதி….பிரபந்தத்திற்கு ”பெரிய-வாச்சான் பிள்ளையைப்” போல நான் வாஞ்சையான நட்பால் முருகனுக்கு ”வந்து-வாச்சான் பிள்ளை”….முன்னுரை எழுத இந்த தகுதி போதுமா என்று யோசித்துப் பார்த்தபோது ”ஸாரி கொஞ்சம் ஓவராகப் பட்டது….சரித்திரக் கதைகளில் மன்னர் வருவதற்க்கு முன்பு, கட்டியங்காரன் வருவதில்லையா?….அவனிடம் என்ன பாண்டித்தியமா எதிர் பார்க்கிறோம்….”பராக் பராக்” சொல்லத் தெரிந்தால் போதாதா, என்று என்னை நானே சுதாரித்துக் கொண்டேன்….
மறுபடியும் சுஜாதா….அசப்புல பாத்தா, ஸ்ரீரங்கத்து தேவதையும், ரெட்டைத் தெருவும் ஜாடைல ஒண்ணுதான்….தாயைப் போல பிள்ளை….என்னைக் கேட்டா முருகன் , இதுக்கு ”ரெட்டைத் தெரு ராட்சசர்கள்” என்று கூட நாமகரணம் சூட்டியிருக்கலாம்….இது முருகனின் பால்ய-BIOGRAPHY….”YOUTH IS WASTED ON YOUNG PEOPLE” என்பார் OSCAR-WILDE….இதையே ”கிளரொளி இளமை கெடுவதன் முன்னர்” என்பார் நம்மாழ்வார்….முருகன் முதிர்ச்சியோடு இளமையில் இருந்திருக்கிறார்….எழுத்தாளனுக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வித்யாசம்….எழுத்தாளன் பார்க்கிறான்….மற்றவர்கள் பராக்கு பார்க்கிறார்கள்….பால்யத்தில் பராக்குப் பார்த்ததை, எழுத்தாள எதிர்பார்ப்பில் த்ருண மாத்திரம் விடாது பதிவு செய்தது இவரது தீவீரத்தைக் காட்டுகிறது….EMOTIONS RECOLLECTED IN TRANQUILITY என்று WORDS-WORTH சொன்னது போல தான் ”கற்றதை, பெற்றதை, விற்றதை அப்புறம் மற்றதையெல்லாம்” ஆற அமர அசைபோட்டு ரெட்டை(தெரு) இலையில் பறிமாறியிருக்கிறார் இந்த டிஜிடெல் கேண்டீன்காரர்….தான் OBSERVE செய்ததை அறுசுவையோடு SERVE செய்திருக்கிறார்….என் மைலாப்பூரிலும் ரெட்டைத் தெரு ரகளைகள், ரகசியங்கள் உண்டு….அம்பது வருடங்கள் மைலாப்பூரில் நானும் மாணிக்கங்களைப் பார்க்காமல் வெறும குப்பைக் கொட்டிக் கொண்டிருக்கிறேன்….எழுதலாமென்றால் ”என் பெயரைத்” தவிர வேறு எதுவும் எழவு ஞாபகத்திற்கு வர மாட்டேன் என்கிறது….நான் அதிசயமாக எழுத வந்தவன்….ஆனால் முருகன் அவசியமாக எழுத வந்தவர்….
சிலருக்கு ஒரு கெட்ட பழக்கம் உண்டு….நாம் ஒரு நல்ல புத்தகத்தை படிக்கலாம் என்று ஆரம்பிக்கும் போது, எசகேடாக எதிரில் வந்து, ” இது பிரமாதமான புக்….நான் ஏற்கனவே படிச்சாச்சு” என்று, அதில் ஒரு வரி விடாமல் ஒப்பித்து விட்டு, நம்மை செவிடனாக பாவித்து ”நான் சொன்னதை காதுல போட்டுக்காதீங்க….நீங்களும் படிச்சு பாருங்க”என்பார்கள்….நாம் அதற்கு பிறகு அந்த புத்தகத்தைப் படிக்கும் போது , நமக்கு என்னவோ ”ரெண்டாம் தாரம்” கல்யாணம் செய்து கொண்டது போல இருக்கும்….அதனாலேயே இந்த தொகுப்பில் வரும் சம்பவங்களை, அது தொடர்பான ஹாஸ்யங்களை, முந்திரி கொட்டை போல சொல்லாமல், உள்ளங்கை நெல்லிக் கனி போல, நீங்களே அனுபவிக்க விட்டு விடுகிறேன்…. ஹாஸ்யப் புத்தகத்தைப் படிப்பது முதலிரவைப் போல….”சொல்லித் தெரிவதில்லை சிரிப்புக் கலை”….
சமீப காலத்தில் முருகனால் நான் பெற்ற பேறுகளைச் சொல்லப் போனால், இந்த முன்னுரை எனது சுய-சரிதையின் 56வது அத்தியாயமாகி விடும்….கண்ணன் பிறந்த கோகுலாஷ்டமி இரவில் எழுதியபடி சொல்கிறேன்….இவரது கற்பனை ஞானமும், சொற்களின் சாகித்யமும், பீடம் ஏறப் போகும் நாள் வெகு தூரத்தில் இல்லை….சொல்லிக் கொண்டே போகலாம் கிழக்கு வெளுக்கும் வரை….கண்ணதாசன் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது….” சொல்லச் சொல்ல இனிக்குதடா இரா.முருகா….”
——————————————————————————————————————————————————————————————————————————–