இந்தத் தொடரில் நான் பதில் சொல்ல மிகவும் கஷ்டப்பட்டக் கேள்வி….முதல் கேள்வி….கேட்டது கல்கி ஆசிரியர் சீதா ரவி….”வாராவாரம் கல்கியில் வாசகர்கள் கேள்விக்கு
பதில் சொல்ல முடியுமா….?”….அன்றிரவு கனவில் நான் மகாபாரத ”நச்சுப்-பொய்கை” கரையில் நின்று கொண்டிருக்கிறேன்….கீழே தரையில் தருமன் உட்பட பாண்டவர்
ஐவரும் மயங்கி மாண்டுக் கிடக்கின்றனர்….அப்போது ஒரு அசரீரி குரல் ”கிரேஸி….”யக்ஷ ப்ரச்னம்” என்றால் என்ன….?”….” அது ஒரு தீபாவளி பட்சணம்” என்று நான் உளற
அப்போது பாண்டவர்கள் சார்பாக என்றும் எதற்கும் மயங்காத பொதிகை வேளுக்குடி கிருஷ்ணன் தோன்றி ”அட! சமத்தே ”என்பது போல என்னைப் பார்த்து சிரித்து விட்டு
”யக்ஷன் என்றால் யக்ஷன்….ப்ரச்னம் என்றால் கேள்வி” என்று சொல்லிவிட்டு வேய்ங்குழல் கிருஷ்ணனாக மாறி மறைந்து விட்டார்….அதேசமயம் விக்கிரமாதித்தியன் தோன்றி
” கிரேசி….கம்ப-ராமாயணத்தை எழுதியது யார்….?”என்று கேட்க….நான் அதற்கு ” யக்ஷன்” என்று சொல்ல, விக்கிரமாதித்தன்” பட்டி மவனே….கேள்வியிலேயே பதில் இருப்பது
தெரியவில்லையா….கம்ப-ராமாயணத்தை எழுதியது கம்பர்” என்று பகர்ந்து விட்டு ”அந்த கேள்வியை சாய்ஸ்ல விட்டதா நினச்சுக்கறேன்….மணிமேகலையை எழுதியது யார்”
என்று கேட்டு வேதாளம் போல என் தோளில் குந்தினார்….பளு தாங்காமல் நான் ”மணி” என்று பதில் சொல்ல என் தலை ரெண்டாயிரம் சுக்கல்களாக வெடித்தது….

கனவும் கலைந்தது….என் மனைவி என்னை எழுப்பி அந்த வாரக் கல்கியைக் காட்டினாள்….அதில் அடுத்த வாரத்திலிருந்து ”கிரேசியைக்-கேளுங்கள்” தொடர் ஆரம்பிப்பதாக
விளம்பரம்….அன்று ”எல்லாம் நல்லபடியாக நடக்க” நான் கபாலி கோவிலுக்குச் சென்றேன்….அங்கு தனது அமெரிக்க பேரனுடன் வந்த எனது எதிர் வீட்டு அங்கிள்
பேரனின் கேள்வியால் பட்டபாட்டைப் பார்த்தேன்….ஸ்வாமிக்கு அபிஷேகம்….பேரன் தாத்தாவைப் பார்த்து ”தாத்தா….வாட் ஈஸ் கோயிங் ஆன்”
என்று கேட்க, எ.வீ.தாத்தா ”காட் ஈஸ் டேகிங் பாத்” என்று அபிஷேகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்….அடுத்ததாக ஸ்வாமிக்கு அலங்காரம் செய்ய திரை போட்டார்கள்
….சஸ்பென்ஸ் தாங்காத சிறுவன் ”தாத்தா….இப்ப வாட் ஈஸ் கோயிங் ஆன்…?” என்று கேட்க, எ.வீ.தாத்தா”உம்மாச்சிக்கு டிரஸ் பன்ணறாங்க…” என்று அலங்காரத்தை அரைகுரை
ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்….”என்ன தாத்தா….உம்மாச்சி குளிக்கறதை(அபிஷேகம்) பாக்க அலவ் பண்ணவங்க டிரஸ்(அலங்காரம்) பண்ணிக்கறதை மட்டும் ஏன்
பாக்க அலவ் பண்ணல….” என்று கேட்க, மொழி பெயர்த்த எ.வீ.தாத்தா பதில் சொல்ல முடியாமல் என்னைப் பார்த்து முழி பெயர்த்தார்….விளையாட்டுப் பையன் கேள்விக்கே
பதில் சொல்ல முடியாதபோது வாசகர் கேள்விக்கு நான் எப்படி பதில் சொல்லப் போறேங்கறதை நினைத்த எனக்கு அன்று கர்பக்கிருகத்தில் கர்பம் கலங்கியது….ஆழம்
தெரியாமல் காலை விட்ட நான் முடவன்….இருந்தாலும் கல்கி என்ற கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்டேன்….

கல்கி ஒரு போஜ ராஜ சிம்மாசனம்….அதில் உட்கார்ந்தவர்கள் கட்டுத் தறியாக இருந்தாலும் கம்பன், காளிதாசன் போல கவி பாட ஆரம்பித்து விடுவார்கள்….வழக்கமாக
பேட்டிகளிலும், நேருக்கு நேர் நிகழ்ச்சிகளிலும் ”கிரேசி….உங்கள் மறுபக்கம் என்னவோ ”….என்று கேட்பார்கள்….நான் பரிதாபமாக ”புற முதுகைக்” காட்டுவேன்….நான்
கற்றது கையளவு (அதுவும் என்னை ஊக்குவிக்கும் நண்பர்கள் கையளவு)….கல்லாத உலகளவைக் இந்த கேள்வி-பதிலுக்காகக் கற்று, முதுகைக் காட்டாமல் முதன்முறையாக
என் ஓரளவு மூளையைக்(ஈசான்ய-மூளையில் ஈஷிக்கொண்டிருந்ததை) காட்டினேன்…. கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் இந்த கேள்வி-பதில், வேள்வி-பதிலாக வெற்றிகரமாக
நடந்தது என்றால் அதற்கு பிரசுரரித்த கல்கியும் கேள்விகளைப் பிரசவித்த வாசகர்களும்தான் காரணம்….மற்ற காரணங்கள்….

சரித்திரத்தில் நான் தருமி அளவு தரித்திரம்….ஹாய்-மதன் ஆக முடியாது….ஜலதோஷ சயனஸ் தெரிந்த அளவு சயன்ஸ் தெரியாது…ஆக சுஜாதா லெவலுக்கு ”ஏன்? எதற்கு? எப்படி?”
பாடறியேன் படிப்பறியேன்….காமெடி கலக்கியம் தெரிந்த அளவுக்கு கருத்தாழமான இலக்கியம் இம்மியும் தெரியாது….சிரிப்பூர் சாக்லேட் கிருஷ்ணனான என்னால் அமுதசுரபி
திருப்பூர் கிருஷ்ணனாக ஆவது துர்லபம்….அந்துமணி எதார்த்தம், துக்ளக் சோவின் துல்லியம் இப்படி எந்தப் பக்கம் போனாலும் இடி….எதேச்சையாக என் நண்பன் சு.ரவி சொல்ல ”கண்டேன் கி.வா.ஜவை” ….அவரது கலைமகளில் வெளியான ”விடையவன்-பதில்களை” காலையும் மாலையும் நாக்கில் வேல் குத்திக் கொண்டு பாராயணம் செய்தேன்….அவரது
வார்த்தை ஜாலத்தைக் கையாண்டு, நானும் கி.வா.ஜ (கிரேசி வார்த்தை ஜாலம்) ஆக நப்பாசைப் பட்டேன்….கி.வா.ஜவின் மகன் முருகன் என் பால்ய நண்பன் என்பதால், வேறு
வழி இல்லாமல் கி.வா.ஜவின் ஆன்மா ”தொலையறது போ” ரீதியில் எனக்கு வழி காட்டியது….

தமிழ், ஆங்கிலம்,இந்தி,லத்தீன்,இத்தாலி ஏன் மெளனம் இப்படி எல்லா மொழிகளுமே ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்….உற்றுப் பார்த்தால் ஜாடை தெரியும்….உரசிப் பார்த்தால்
சிலேடை புரியும்….உதாரணம்….சமர்ப்பணம்….SOMEONEக்கு அர்ப்பணமே சமர்ப்பணம்….இந்தக் கேள்வி பதில் வெற்றிக்குக் காரணமான SOMEONEகள் அன்றிலிருந்து இன்று
வரை SAMEONEஆக இருக்கும் , எனது புனே நண்பன் சு.ரவியும், திந(தி.நகர்) நண்பன் ”என்னைப் போல் ஒருவனாகிய” இரா.முருகன்….சுடச்சுட நான் ஸெல்லில் அனுப்பும்
கேள்விக்கான பதில்களை ஆற அமர படித்து அபிபிராயமும் தருவார்கள்….அழகு படுத்தியும் இருக்கிறார்கள்….இந்தக் கேள்வி பதில்களில் நிறைய வெண்பாக்களைப் பார்க்கலாம்….
புனேவிலிருந்து CELL வழியாக எனக்கு வெண்பா இலக்கணத்தை ஸெல்லிக் கொடுத்தவன் சு.ரவி….”நட்புக்கும் உண்டோ அடைக்கும் நாதாங்கி”….நன்றி நண்பர்களே….

எனக்கு வந்த கேள்விகளிலேயே அதிகமாக வந்த கேள்வி ”கிரேசி….உங்களுக்குப் பின் நகைச்சுவையில் உங்கள் வாரிசு யார்….?”இந்தக் கேள்விக்கு விடை காண, எனது
இரண்டாவது மகன்பத்பனாபனிடம், சில கேள்விகளைக் கொடுத்து வேடிக்கைப் பார்ப்பேன்….”காட்டுக்கு போன ராமரை கொசு கடிக்காதா….?” என்ற வாசகரின் விபரீதக்
கேள்விக்கு ”கடித்துமலேரியா பரப்பும் கொசு பெண்-கொசு….பெண்-கொசு ராமரைக் கடிக்காது….ஏனென்றால் அவ்ர் ஏக-பத்தினி விரதன் ”என்ற பதிலைக் கூறி ஜாலிம்-லோஷன் தடவிக்கொள்ளும் அளவுக்கு என் மகன் புல்லரிக்க வைத்தான்….”பெத்தபொழுதில் பெரிதுவக்கும் தந்தைதன் பிள்ளையை-இத்தரைக்கு வாரிசெனும் போது”….குறள் கூறி மகிழும் அளவுக்கு எனக்குக்கிடைத்த போனஸ் இது….”உன் நன்றி வேண்டாம்….சொத்தில் பாதியை சன்மானமாகக் கொடு” என்கிறான்….வாயுள்ள பிள்ளை….

முகம் தெரியாத ஆனால் முகவரி தெரிந்த, கேள்வி கேட்டு என்னைக் குடைந்த கல்கி வாசகர்கள் ,போஜ ராஜ சிம்மசனத்தில் ஏறும் போது இருபுறமும் இருந்து வினாக்கள்
தொடுத்து விழி பிதுங்க வைக்கும் பதுமைகள்…..”கேள்வி கேட்பது கஷ்டமா ?….பதில் சொல்வது கஷ்டமா ?” என்ற கேள்விக்கு ”யாமறிந்த பதில்களிலே கேள்வி கேட்பது போல
கஷ்டமானது எங்கும் காணோம்” என்பதுதான் என் பதிலாக இருக்கும்….”சார் என் வயது இருபத்தியெட்டு” என்ற என் நாடகக் கதாநாயகன் மாதுவின் பதிலுக்கு ஏற்ற
கேள்வியை நான் ஒரு இரவு முழுக்க முழித்தேன்….” மாது உனக்கேன்ன ஒரு இருவத்தியேழு வயசு இருக்குமா….?” என்று மாதுவின் வீட்டுக்காரர் கேட்க, அதற்கு மாது” கூட
ஒண்ணு சேத்துக்குங்க சார்” என்று சொல்ல ,பதிலுக்கு வீட்டுக்காரர் ”இருணூத்தியெழுவத்தி ஒண்ணா ” என்று கேட்க, அரங்கம் ஜோக்கால் அதிரும்….தோல்Vயில்
”V FOR VICTORY” இருப்பது போல கேள்’வி’யில் ”வி” FOR விடை இருக்கிறது….கல்கி வாசகர்கள் கேள்வி வீசகர்கள்….”கிரேசி நீ பெண்ணாக மாறினால்….கிரேசி நீ
காணாமல் போனால்….கிரேசி நீ கடவுளானால் ” என்று கேள்விகள் கேட்டு, அதற்கு சமயோசிதமான பதிலை யோசிக்க இல்லாத கந்தை மூளையை கசக்க வைத்து
கட்டிக் கொள்ள வைத்து கெட்டிக்காரனாக்கிய கல்கி வாசகர்களுக்கு வடிவேலுவாக ஒரு கேள்வி ”என்ன வச்சு காமெடி கீமடி பண்ணலியே….!”….

வாசகர் தபாலில் வாராவாரம் வழக்கமாக ஒருவராவது இந்தக் கேள்வியைக் கேட்டிருப்பார்கள்….”உங்கள் நகைச்சுவைக்கு யார் காரணம்…?”….”யார்” என்பதை பொருத்தமாக
இந்த முன்னுரையில் முழங்க விரும்புகிறேன்….நான் கும்பிடும் சாமி, நகைச்சுவைக்காக பிரத்தியேகமாக அவதரித்து, அப்புசாமியைப் பெத்த சாமி திரு.பாக்கியம் ராம’சாமி’….
கடவுள் உண்டு என்று சொல்லும் ஆஸ்திகனையும், இல்லை என்று சொல்லும் நாஸ்திகனையும் நகைச்சுவையால் ”உண்டு-இல்லையென்று” ஆக்கும் ஹாஸ்திகன் இவர்….
ஆள் பாதியான எனக்கு அணிந்துரையைக் கட்டிவிட்டு ஆடை பாதி தந்த அந்த ஆயிரங்காலத்து பயிருக்கு இந்த நேற்று முளைத்த நகைச்சுவைப் புல்லின் நன்றி…
பாதி ஆடை தந்தது பாக்கியம் என்றால் அணிந்துரையாக மீதி ஆடை தந்து இந்த புத்தகத்தை மேம்படுத்தியவர் அமுதசுரபி ஆசிரியர் ” திருப்பூர் கிருஷ்ணன் ” சார்….
அமுதசுரபியில் வெண்பாக்களில் ”ரமணாயணத்தை” எழுதவைத்து, என்னுள் இருக்கும் கவிஞனை எனக்கே கண்டு பிடித்து காட்டிக் கொடுத்த ” இலக்கிய கொலம்பஸ்”
திருப்பூரார் எனக்கு வழிகாட்டி ஆற்றுப்படுத்தும் பொறுப்பூரார்….அவருக்கும் அடியேனின் நன்றி….

கடைசி கடைசியாக என்னை கணினியில் எழுத கற்றுக் கொடுத்த ச.ந.கண்ணனுக்கு நன்றி….போன வாரத்திற்கு அடுத்த வாரம் பதில் அனுப்பும் இந்த லேஸி-மோகனை
தலையெழுத்தே என்று தாங்கிக் கொண்ட கல்கி ஆசிரியர் குழுவைச் சேர்ந்த கதிர் ”பாரதி, சூர்யாக்களுக்கு”, அடுத்த ஜென்மத்தில் ஆழ்வாராகப் பிறந்து ”பல்லாண்டு பாடி”
வாழ்த்துகிறேன்….ஒவ்வொரு வாரமும் கல்கியைச் சேர்ந்த ”கண்ணப்பனும்-தாமுவும்” அடுத்தவார விடைகளுக்கான வினாக்களைக் கொண்டு வருவார்கள்….விடைகளுக்காக நான்
இல்லாத முடியை பிய்த்துக் கொள்வதை வக்கிரமாக ரசிக்கும் என் வீட்டார் அப்போது ”வினா வேங்கடேசம் வராரே! வராரே!….விடை வேங்கடேசம் தராயோ! தராயோ!” என்று என்னை எழுப்பி சுப்ரபாதம் பாடுவார்கள்….சிரமத்தைப் பார்க்காமல் சீன யாத்திரிகர்கள் ”யுவாங்-சுவாங்” போல வாசகர் கேள்விகளை ஏந்தி வந்த ”கண்ணப்பன்-தாமு”வுக்கு நன்றி….

முடிவாக….கல்கி வாசகர்களுக்கு பகவான் ஸ்ரீ ரமண மகரிஷியின் ”நான் யார்” கேள்வியை வைக்கிறேன்….திருப்திகரமான விடை சொல்லும் வாசகருக்கு குருவாயூர் துலாபாரத்
தராசில் குந்த வைத்து எடைக்கு எடை என்னையே தருகிறேன் போறுமா….!

——————————————————————————————————————————————————————————————————————————-

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *