கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
அதர்மமே யானாலும் அஞ்சாது செய்யும்
சுதர்மம் சுதந்திர சொர்கம் -பதமுறும்
பாதுகையே போய்ச்சொல் தூதுவனாய்க் கண்ணனிரு
காதுகளில் காத்திருப்பே னென்று….!
கீழ்கொவள வீடில் குடியேறப் போகின்ற
ஆழ்கல்விக்(கு) ஈசா அயக்ரீவா -கூழ்கவலை
போக்கதனைப் போக்க பிராட்டியுடன் ஏளினோய்
காப்பெனக்கு உந்தன் குளம்பு….!
ஊர்செட்டிப் புண்ணியத்தில் உய்யும் அசுவமே
மார்தட்டிச் சொல்லும் மடையன்நான் -சீர்கொட்டும்
வெண்பாக்கள் யாத்துன்மேல் வாழும் வரமருள
பெண்பால் பாரதியே பார்….!
சண்டித் தனமாய் சகத்தில் உழல்கின்ற
நொண்டிக் குதிரைநான் நாரணா -அண்டி
வருவாய் அருகே குருவாகிக் காட்டு
பரிமேல் அழகா பரிவு….!
அரிமுகம் கண்டேன் அறிமுகம் கொண்டேன்
பரிமுகப் பெம்மான் பெயரால் -திருமகள்
செய்யாள் மடியிருக்க அய்யா அயக்ரீவா
கையால் அனுக்கிரஹம் காட்டு…..!
புல்லும், படிகநீரும், புண்ணாக்கும் கொள்ளும்நான்
அல்லும் பகலும் அளித்திடுவேன் -மெல்லும்
தலம்செட்டிப் புண்ணியத்தில் தங்கும் பரியே
பலனெட்டெட் ஆயகலை போடு….
ஊர்செட்டிப் புண்ணியத்தில் உய்யும் அசுவமே
மார்தட்டிச் சொல்லும் மடையன்நான் -சீர்கொட்டும்
வெண்பாக்கள் யாத்துன்மேல் வாழும் வரமருள
பெண்பால் பாரதியே பார்….கிரேசி மோகன்….!
சிரமதில் கொள்ளை முறமதில் ஏந்தி
பரிமுகன் உண்ண புரவிதன் குளம்பை
இருபுஜம் வைக்க இருக்கையாய்த் தந்து
உறவினில் தோழன் ஆனஞான தேசிகா….(கோபுலு சார் ஓவியம்….ஒரு தீபாவளி மலரில் பார்த்த ஞாபகம் பரியே….!)