‘இ-கோர்ட்’ திட்டத்துக்கு ரூ.935 கோடி
நாடு முழுவதும் நீதிமன்றங்களில் தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்தும் ‘இ-கோர்ட்’ திட்டத்துக்கு மறுமதிப்பீட்டு நிதி ரூ.935 கோடி வழங்க, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சவைக் குழு செப்.16 அன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.
தேசிய ‘இ-நிர்வாகம்’ திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் நீதிமன்றங்களில் தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப வசதிகள் செய்து தரும் நோக்கில் இலக்குடன் கூடிய ‘இ-கோர்ட்’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் 2100 நீதிமன்ற வளாகங்களில் உள்ள 13,348 நீதிமன்றங்களில் இந்த வசதிகளை செய்து தர 2007ஆம் ஆண்டு ரூ.441.8 கோடிக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
மேலும் பல நீதிமன்றங்களில் இந்த வசதியைச் செய்து தரும் நோக்கில் இத்திட்டம் மறுமதிப்பீடு செய்யப்பட்டது. இதையடுத்து மறுமதிப்பீட்டுத் தொகையான ரூ.935 கோடியில் பணிகளை நிறைவேற்றப் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு, செப்.16 அன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்படி, 3069 நீதிமன்ற வளாகங்களில் உள்ள 14,249 நீதிமன்றங்களில் தகவல் தொழில்நுட்ப வசதிகள் செய்யப்படும். 2100 வளாகங்களில் உள்ள 12,000 நீதிமன்றங்களில் இப்பணி 2012 மார்ச் 31ஆம் தேதி நிறைவடையும். மீதமுள்ள 969 வளாகங்களில் உள்ள 2249 நீதிமன்றங்களில் பணிகள் 2014 மார்ச் 31ஆம் தேதி முடிவடையும்.
இத்திட்டத்தின் கீழ் டபிள்யூ, ஏ.என். தொடர்பு வசதி, வழக்கு மற்றும் நிர்வாகம் தொடர்பான தகவல்களை டேட்டா என்ட்ரி செய்தல், கம்ப்யூட்டர்களுக்குத் தடைபடாத மின்சார வசதி செய்தல், விசாரணைக் கைதிகளை ஆஜர்படுத்துவதில் உள்ள சிரமங்களைக் குறைக்கும் நோக்கில் நீதிமன்றங்களிலும் சிறைகளிலும் வீடியோ கான்பரன்ஸ் வசதி செய்தல் ஆகிய பணிகளும் மேற்கொள்ளப்படும்.
இத்திட்டத்தைச் சிறப்பாக நிறைவேற்ற ஆலோசனைகள் வழங்குவதற்காக மத்திய நிதித் துறையில் உயர்நிலைக் குழு அமைக்கப்படும்.