அயோத்தி வழக்கில் செப். 24ஆம் தேதி தீர்ப்பு
ராமஜென்மபூமி – பாபர் மசூதி வழக்கின் முக்கிய தீர்ப்பு விரைவில் வெளிவர உள்ளது. இந்நிலையில் நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை நாட்டு மக்கள் அனைவரும் அமைதியுடன் ஏற்குமாறு மத்திய அமைச்சரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.
ராமஜென்மபூமி – பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பு, 2010 செப். 24ஆம் தேதி வர உள்ளது. அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை அனைத்துத் தரப்பு மக்களும் அமைதியுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலும் இந்தத் தீர்ப்புக்கு மதிப்பளித்து, கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு மத்திய அமைச்சரவை வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக தில்லியில் செப்.16 அன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:
ராமஜென்மபூமி – பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பை அலகாபாத் உயர்நீதிமன்றம் 2010 செப். 24ஆம் தேதி வழங்கவுள்ளது. நீண்டகால சட்ட நடைமுறைகளின் விளைவாக இத்தீர்ப்பு வெளியாகிறது. எனவே நீதிமன்றத் தீர்ப்புக்கு மதிப்பளிக்க வேண்டியது அவசியம். அதே நேரம், தொடர்ந்து நடக்கும் நீதிமன்ற நடவடிக்கையின் ஒரு படியாகவே இதைக் கருத வேண்டும். அயோத்தி விவகாரத்தின் தீர்வு என்பது அனைத்துத் தரப்பினரும் ஏற்காத பட்சத்தில் இதோடு முடிந்து விடுவதில்லை. தொடர்ந்து சட்ட ரீதியிலான நடவடிக்கை தேவை என்று எந்தத் தரப்பாவது கருதும் பட்சத்தில் அதற்கும் சட்ட ரீதியாக ஏராளமான தீர்வுகள், வழிகள் உள்ளன.
இதைக் கருத்தில் கொண்டு, தீர்ப்பு வெளியான பிறகு நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களும் அமைதியுடனும் கட்டுப்பாட்டுடனும் இருக்க வேண்டும். எந்தத் தரப்பினரும் எந்த வகையிலும் இன்னொரு தரப்பினரை, துன்புறுத்தும் வகையிலோ, அவர்களது மனம் புண்படும் வகையில் கொண்டாடும் செயல்களில் ஈடுபடுவோ கூடாது.
நீதிமன்றச் செயல்பாடாகவே இந்தத் தீர்ப்பைக் கருத வேண்டும் என்று மக்களை மத்திய அமைச்சரவை கேட்டுக்கொள்கிறது. தீர்ப்பு வெளியான பிறகு, முழு அமைதி மற்றும் சட்ட ஒழுங்கைக் கடைப்பிடிக்குமாறு அனைத்துத் தரப்பினரையும் கேட்டுக்கொள்கிறது. சிறப்பாகப் போற்றப்படும் இந்தியாவின் கலாச்சாரமும், எல்லா மதத்தையும் மரியாதையுடன் போற்றும் பண்பாடும் அனைத்துத் தரப்பினராலும் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
இந்தியா தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் நடைபோட்டு வருகிறது. நமது வளர்ச்சியை உலகம் முழுவதும் பாராட்டுகின்றது. நமது இலக்கையோ நோக்கத்தையோ விட்டு விலகும் வகையில் எந்தவொரு பேச்சோ, செயலோ அமைந்துவிடக் கூடாது என்று அனைத்து தரப்பினரையும் மத்திய அமைச்சரவை கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.