டாக்டர் ஸ்ரீதர்….!
செல்லப் பிள்ளை ஸ்ரீதர்
——————————-
மருந்துக்கு அடங்காதது மந்திரத்துக்கு அடங்கும் என்பார்கள்….டாக்டர்.ஸ்ரீதரிடம் ஆஸ்த்மா மருந்தும் இருக்கு, கற்பகாம்பாள் ஆலய மந்திரமும் இருக்கு….நோயாளியின் ஆஸ்த்மா சாந்தி அடையும் டாக்டர் ஸ்ரீதரால்….அதேசமயம் நோயாளியின் ஆத்மா சாந்தியடையாமல் காப்பாற்றுவாள் கற்பகாம்பாள் தனது செல்லப் பிள்ளை ஸ்ரீதருக்காக….செய்யும் தொழிலே தெய்வம் என்பார்கள்….ஸ்ரீதருக்கோ ” தெய்வம் தொழலே தொழில்”….” என்னால முடிஞ்சதை செஞ்சுட்டேன் ….இனி ஆண்டவன் விட்ட வழி ” என்பார்கள் மற்ற வைத்தியர்கள்….ஸ்ரீதருக்கோ ஈஸ்வரன் கபாலி கம்பவுண்டர்….ஈஸ்வரி கற்பகாம்பாள் நர்ஸ்….அப்புறம் என்ன சார்…. ஸ்ரீதரிடம் செல்பவர்களுக்கு நோயோடு பிறவிப் பிணியும் தீர்ந்து விடும்….BOUNCE ஆனாலும் பரவாயில்லை என்று செக்கில் கூட கற்பக-தாஸன் என்றுதான் கையெழுத்திடுவார்…. எங்கள் குழுவைச் சேர்ந்த நடிகைக்கு ”வீஸிங்” பிரச்சினை….ஸ்ரீதரிடம் போகச் சொன்னேன்….அவளுக்கு ”ஆஸ்த்மாவும்” போச்சு….ஆக்டிங்கும் இம்ப்ரூவ் ஆகிவிட்டது….என் குழுவில் சேர வருபவர்களுக்கு நான் இப்போதெல்லாம் சொல்வது ”எப்படியாவது ஆஸ்த்மாவை வரவழைத்துக் கொண்டு டாக்டர் ஸ்ரீதரிடம் செல்லுங்கள்….அவர் கொடுக்கும் மருந்தால் உங்கள் நடிப்பு மெருகேறும் ”….மற்ற டாக்டர்களுக்கு ”கைராசி” என்றால் ஸ்ரீதருக்கு கைகொடுப்பாள் கற்பகாம்பாள் ஆசி….
”எமக்குத் தொழில் எழுத்து” என்றார் மகாகவி பாரதியார்….ப்ரிஸ்க்ரிப்ஷனில் கவிதை எழுதும் ஸ்ரீதருக்கு வைத்தியம் தொண்டு….கவிதை தொழில்….”மருந்து சாப்பிடும் போது குரங்கை நெனைக்காதே” என்பார்கள்….வித்தியாசமான வைத்தியர் ஸ்ரீதரோ மருந்து தரும்போதே ”வானுயர அவன் வாழ்த்தும் வானர தெய்வமவன்” என்று இலக்குவணைக் காப்பாற்றிய அந்த சமய சஞ்சீவியை நினைப்பூட்டுவார்….வாசி வாசியென வாசிக்க வைக்கும் இந்த மயிலாப்பூர் வாசியின் கவிதைகள்….வாசி என்றால் மூச்சுக் காற்று என்ற ஒரு அர்த்தம் தமிழில் உண்டு….நமது மூச்சுக் காற்று தென்றலாய் வீச, இவர் மூச்சு விடாமல் வைத்தியம் பார்ப்பார்….
SRIDHAR IS A BREATH-TAKING POET and BREATH-GIVING DOCTOR….
நகமும் சதையும் என்பது பழைய பாணி….நாசியும் வாசியும் போல இவரும் இவரது துணைவியாரும் இணைந்திருக்கவும்….எல்லோருக்கும் நீண்ட ஆயுளைத் தரும் இவருக்கு நீண்ட ஆயுளை தரவும் இவர் வணங்கும் மயிலை மாதா கற்பகாம்பாளை, இந்த மணி விழா நன்நாளில் வேண்டுகிறேன்….
அன்பன் க்ரேஸி மோகன்….
——————————————————————————————————————————————————————————————————————————-