இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . (287)

அன்பினியவர்களே!

அன்பான வணக்கங்களுடன் அடுத்தொரு வாரத்தில் மற்றொரு மடலுடன் அன்பு வாசகர்களுடன் கருத்தாட விழைகிறேன். காலம் காற்றாகக் கரைந்து 2018ஆம் ஆண்டு இறுதியை நோக்கி அவசரமாய் ஓடிக் கொண்டிருக்கிறது. கடந்த இரண்டரை வருடங்களாக இங்கிலாந்து முழுமையாகத் தன்னை “ப்ரெக்ஸிட்” எனும் புதை சேற்றுக்குள் புதைத்துக் கொண்டு செல்கிறது. இந்த “ப்ரெக்ஸிட்” எனும் சொல்லின் பின்னால் இங்கிலாந்து நாட்டில் ஏற்படப்போகும் சிக்கல்களின் ஆழத்தை”ப்ரெக்ஸிட்” தேவை என்று வாக்களித்த மக்கள் முழுமையாக அறிந்து கொண்டிருக்கிறார்களா? என்பது சந்தேகமே!

2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் திகதி ஐக்கிய இராச்சியம் உத்தியோகபூர்வமாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது என்பது தவிர்க்கப்படமுடியாத உண்மை. மிக விரைவாக அக்காலக்கெடுவை நோக்கிப் போய்க்கொண்டிருக்கும் இங்கிலாந்தின் முன்னால் இருந்த முக்கியமான தேவை இவ்வெளியேற்றம் எவ்வகையில் இங்கிலாந்தின் மீதான பாதிப்புகளை மிதப்படுத்தும் வகையில் அமையப்போகிறது என்பதை நிர்ணயிப்பதே. அவ்வகையிலான நிர்ணயிப்பின் வெற்றி அவ்வெளியேற்ற உடன்படிக்கையை ஐரோப்பிய ஒன்றியத்தின் புரிந்துணர்வுடன் செயல்படுத்துவதிலேயே தங்கியுள்ளது.

இவ்வெளியேற்ற உடன்படிக்கையின் முக்கிய அம்சங்கள் இங்கிலாந்தைப் பொறுத்தவரையில் பின்வருவனவற்றை முக்கியமாக உள்ளடக்கியிருக்க வேண்டும் என்பதே.

  1. இங்கிலாந்துக்கும்,ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளுக்குமிடையிலான மக்களின் போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவது அதாவது ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளின் பிரஜைகள் இலகுவாக விசா இன்றி இங்கிலாந்துக்குள் வந்து பணிபுரியலாம் எனும் நிலையைக் கட்டுப்படுத்துவது.
  2. ஒவ்வொரு வருடமும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதிக்காக இங்கிலாந்து செலுத்தும் பலகோடி ஸ்டேலிங் பவுண்ஸ்-ஐ நிறுத்துவது.
  3. ஐரோப்பிய நீதிமன்றம் இங்கிலாந்து நீதிமன்றத் தீர்ப்புக்களில் செலுத்தும் ஆதிக்கத்தை நிறுத்துவது.
  4. பொது விவசாயத் திட்டம்,மற்றும் பொது மீன்பிடித் திட்டம் ஆகியவற்றில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவது
  5. இங்கிலாந்து சுயாதீனமாக மற்றைய ஐரோப்பிய ஒன்றியத்தைத் தவிர்ந்த உலகநாடுகளுடன் வர்த்தக உடன்படிக்கைகளை மேற்கொள்வது.
  6. தனிநாடான தெற்கு அயர்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவ நாடாகும்; ஆனால் அதே சமயம் வடஅயர்லாந்து ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பகுதியாகும்.ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியத்தின் வெளியேற்றத்தின்போது இவ்விரு பகுதிகளுக்குமிடையில் ஒரு நிரந்தரமான எல்லைக்கோட்டைத் தவிர்ப்பது.

மேற்கூறியவைகளை முக்கிய இலக்காகக் கொண்டிருந்தாலும் வேறு சில விடயங்களும் சர்ச்சைக்குரியதாக இருந்தன. இதற்கான பேச்சுவார்த்தை ஐக்கிய இராச்சியத்துக்கும், ஐரோப்பிய ஒன்றியத்துக்குமிடையில் ஏறக்குறைய கடந்த இரண்டரை வருடங்களாக நடந்து வந்தது. பல விடயங்களில் உடன்பாட்டை எட்டினாலும் அயர்லாந்து எல்லைப்பிரச்சனையே இழுபறியாக இருந்தது. வெளியேறும் காலக்கெடு அவசரமாக நெருங்கிக் கொண்டிருந்த நிலையில் இருவாரங்களின் முன் பிரதமர் தெரேசா மேயும், இந்த ப்ரெக்ஸிட்டுக்கான அமைச்சரும் உடன்பாட்டை முழுமையாக எட்டி விட்டதாகக் கூறினார்கள். அதைத் தொடர்ந்து அவ்வுடன்படிக்கையை அமைச்சரவையில் சமர்ப்பித்துவிட்டு அதற்குப் பொறுப்பாக இருந்த அமைச்சர் தனக்கு அவ்வுடன்படிக்கையில் திருப்தி இல்லையெனக்கூறி தனது அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார். அவரோடு இணைந்து மற்றொரு அமைச்சரும் இராஜினாமா செய்தார்.

பிரதமரின் நிலை மோசமாகி விட்டது. பிரதமர் பதவியிலிருப்பாரா? மாட்டாரா? எனும் விவாதம் காரசாரமாக ஊடகங்கள் மத்தியிலும், அரசியல் விமர்சகர்கள் மத்தியிலும் எழுந்தன. ஆனால் பிரதமர் மிரளவில்லை. நான் எது செய்தாலும் அது எனது பதவியை முன்னிறுத்துவதற்காக அல்ல. நாட்டின் நன்மையைக் கருதியே செய்வேன் என்பதே அவரது வாதமாக இருந்தது. பிரதமரின் இவ்வுடன்படிக்கைக்கு நாலாபக்கமும் இருந்து எதிர்ப்பலைகள் கிளம்பின. அவரது கட்சியைச் சார்ந்த பல பாராளுமன்ற உறுப்பினர்களே பகிரங்கமாக பிரதமரின் உடன்படிக்கையை எதிர்த்தனர். பிரதமரின் கட்சியைச் சேர்ந்த 48 பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர் மீது நம்ப்பிக்கையில்லை என்று கட்சி மேலிடத்துக்குத் தெரிவித்தால் அவர் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படும். அப்படியோர் நிலை வருமென பலராலும் கூறப்பட்டது. ஆனால் அவருக்கெதிராக 48 பேர் முன்வரவேயில்லை.

சகல எதிர்ப்புக்களுக்கும் முகம் கொடுத்த பிரதமர் தனது உடன்படிக்கையை முதல்கட்டமாக ஐரோப்பிய ஒன்றியத்தலைவர்களின் ஒப்புதலைப் பெறும் கைச்சாத்துப் பெறும் முயற்சியில் இறங்கினார். அடுத்தடுத்து ஜரோப்பிய ஒன்றியத்துக்கு விஜயம் செய்து பல கூட்டங்களை நடத்தினார். விளைவாக கடந்த 25ஆம் திகதி ஜரோப்பிய ஒன்றியத்தலைவர்களின் ஏகமனதான ஒப்புதலை பிரதமர் தெரேசா மேயின் உடன்படிக்கை பெற்றது. ஆனால் இவ்வுடன்படிக்கைக்கு எதிராக இங்கிலாந்தில் ஒலிக்கும் கோஷங்களின் தீவிரம் குறைந்தபாடில்லை. சரி இனி அடுத்தகட்டம் என்ன ?

டிசம்பர் மாதம் வரும் கிறீஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னதாக இவ்வுடன்படிக்கை இங்கிலாந்துப் பாராளுமன்றத்தில் அதன் அங்கத்தினர்களின் ஒப்புதலுக்கு வாக்கெடுப்புக்கு விடப்படும். தற்போதைய கணிப்புகளின்படி இவ்வுடன்படிக்கை பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பிரதமரோ மக்களுக்கும், அம்மக்களை பிரதிநிதிப்படுத்தும் பாராளுமன்ற அங்கத்தினர்களுக்கும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். அதாவது தனது உடன்படிக்கை தோல்வியடைந்தால் அதன் விளைவுகள் பாரதூரமாகவே இருக்கும் என்பதே அது. விளைவாக இங்கிலாந்து எதுவிதமான உடன்படிக்கையும் இல்லாமல் வெளியேறுவது அன்றி மக்களின் விருப்பத்துக்கமைவாக ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவது முடியாமல் போவது எனும் இரண்டு முடிவுகளை நோக்கித் தள்ளுவதாகவே இருக்கும் என்கிறார்.

அருமையான ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது.

“நதியினில் வெள்ளம்
கரையினில் நெருப்பு
இரண்டுக்கும் நடுவே
இறைவனின் சிரிப்பு
ஏனிந்தச் சிரிப்பு?“

பிரதமர் தெரேசா மே அவர்களுக்குத் தமிழ் தெரிந்தால் இப்பாடலைத் திரும்பத் திரும்பக் கேட்பாரோ ? பொறுத்திருந்து பார்ப்போம்.

மீண்டும் அடுத்த மடலில்…

அன்புடன்
சக்தி சக்திதாசன்

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.