(Peer Reviewed) லீலாதிலகம் பாட்டிலக்கணமும் இராமசரிதம் பாட்டும்
முனைவர் ச. காமராஜ்,
முதுமுனைவர் பட்ட ஆய்வாளர்,
தமிழ்த் துறை, கேரளப் பல்கலைக்கழகம்
லீலாதிலகம் பாட்டிலக்கணமும் இராமசரிதம் பாட்டும்
முன்னுரை:
மலையாளக் கவிதையின் அடிவேர் குறித்துச் சிந்திக்கும் ஒருவருக்கு கி.பி. பதினான்காம் நூற்றாண்டில் இருபெரும் இலக்கிய வடிவங்கள் வழங்கி வந்தமையை லீலாதிலகம் குறிப்பிடுகிறது. அவை ஒன்று பாட்டு, மற்றொன்று மணிப்பிரவாளம் ஆகும். மணிப்பிரவாளத்தின் வடிவத்தை விரிவாக விளக்கி அதன் உள்ளடக்கத்தை உறுதி செய்வதே லீலாதிலகத்தின் முக்கிய குறிக்கோளாக இருந்து
வந்துள்ளது. அது மட்டுமல்லாமல் அதற்கிடையில் மணிப்பிரவாளத்திற்கும் முன்னர் வழங்கி வந்த பாட்டு வடிவம் குறித்து லீலாதிலக ஆசிரியர் குறிப்பிட்டு, அதன் உருவத்தையும் வரையறை செய்கிறார். இங்கு பாட்டு என்பது இன்று நாம் சாதாரணமாக வழங்கும் பொருளில் இல்லை, அன்று பயன்படுத்தப்பட்டு வந்தது என்பதும் கவனத்தில் கொள்வேண்டியுள்ளது. அது, மலையாளத்தின் முதல் இலக்கிய
வகையாகும். மணிப்பிரவாளத்தை விடப் பழமையும் மிகுந்த இலக்கியச் செல்வாக்கும் கொண்டதாகப் பாட்டு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. ஆகவே மலையாளத்தின் தனித்தன்மை நிறைந்து நிற்பது பாட்டு வடிவத்திலும், இலக்கியத்திலுமே ஆகும்.
பாட்டு விளக்கம்:
செய்யுளியலில் இலக்கியத்தின் புற வடிவம் குறித்துப் பேசுகின்ற தொல்காப்பியம் யாப்பு என்னும் செய்யுள் உறுப்புகளைக் கூறுகையில் சில இலக்கிய வகைகளைத் தருகிறது. பாட்டு, உரை, நூல், வாய்மொழி, பிசி, அங்கதம், முதுசொல் (தொ.செ.1336) என யாப்பின் கீழ் கூறப்பட்டுள்ள ஏழு வகைகளில் பாட்டு தவிர எஞ்சியவை அளவியல் பகுதிகளில் எடுத்துரைக்கப்படுகின்றன. தொல்காப்பியர் இலக்கிய வகையில் பாட்டையே முதன்மையாகச் சிறப்பித்துக் கூறுகிறார். செய்யுளியலில் பாட்டு குறித்த விளக்கங்களே பெரும்பான்மையாகவும், விளக்கமாகவும் இடம் பெற்றுள்ளது. பாட்டே இலக்கியத்தின் சாரமாக விளங்குகிறது.
பாட்டில் தான் இலக்கியத்தின் முழுத்தன்மையும் அனுபவத்தை உணர்த்தும் ஆற்றலும் செறிவாக உள்ளன என்று ஆபர்கிரோம்பி, பாட்டின் ஆற்றல் மிக்க தன்மையை எடுத்துக் கூறுகிறார் (Abar Gromphy – Principles of Literary criticism). பாட்டின் ஒவ்வோர் அடியும் சிறப்பாக அமைய வேண்டும் என்பார் தொல்காப்பியர் ”அடியின் சிறப்பே பாட்டெனப்படுமே” (தொ.செ.1292).
பாட்டிற்குரிய அடிகளை அவர் ஐந்து வகைகளாகக் கூறுகிறார். அவை, குறளடி, சிந்தடி, அளவடி, நெடிலடி, கழிநெடிலடி (தொ.செ.1293, 94, 95, 96, 97) போன்றவையாகும். நான்கிலிருந்து ஆறெழுத்துகளைக் கொண்டது குறளடி. ஏழிலிருந்து ஒன்பது எழுத்துகளைப் பெற்று வருவது சிந்தடியாகும். பத்திலிருந்து பதினான்கு எழுத்துகளைக் கொண்டது அளவடி. பதினைந்திலிருந்து பதினேழு எழுத்துகளைக் கொண்டது நெடிலடியாகும். பதினெட்டிலிருந்து இருபது எழுத்துகளை உடையது கழிநெடிலடியாகும். இவ்வரையறைக்குப் பொருந்திய அடிகளால் ஆனதே பாட்டு என்பதும் தொல்காப்பியரின் கருத்தாகும்.
மேலும் தொல்காப்பியர் வெண்பாவின் வகைகளைக் கூறுமிடங்களில் அங்கதப் பாட்டு, இடைநிலைப் பாட்டு, நெடுவெண் பாட்டு, குறுவெண் பாட்டு என்றும் (தொ.செ.1375) உரை வகை பற்றிக் கூறுமிடத்தில், பாட்டிடை வைத்த குறிப்பினானும் எனவும் ( 1429), பண்ணத்தி பற்றிக் கூறும் போது, பாட்டிடைக் கலந்த பொருளவாகிப் பாட்டின் இயல பண்ணத்தி இயல்பே என்றும் (1436), வண்ணம் பற்றிப் பேசுமிடத்தில் அகப்பாட்டு, புறப்பாட்டு வண்ணம் எனவும் பயன்படுத்துகிறார்.
இங்குப் பாட்டு என்னும் சொல்லைப் பயன்படுத்தும் இடங்களில் ஏன் அனைத்து இடங்களிலும் பா என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கக் கூடாது? பாட்டு, பா (ஆசிரியம், வெண்பா ஆகியவற்றைக் குறிக்க) என்ற இரு சொற்களை அவர் ஏன் பயன்படுத்த வேண்டும்? இந்த இரண்டில் ஒன்றை மட்டும் ஏன் பயன்படுத்தியிருக்கக் கூடாது? இந்த இரண்டிற்கும் இடையில் ஏதேனும் வேறுபாடு உள்ளதா? என்ற பல்வேறு கேள்விகள் நம்முள் எழுகின்றன. எனவே பாட்டு என்பதற்கும், பா என்பதற்கும் வேறுபாடு இருப்பதாலேயே தொல்காப்பியர் இவ்விரு
சொற்களையும் பயன்படுத்தியுள்ளார் எனச் சிந்திக்கத் தோன்றுகிறது. அவ்விரண்டிற்குமான வேறுபாடு தான் என்ன? எதுகை, மோனை முதலிய தொடை முதலானவையே அவ்வேறுபாட்டிற்கான காரணமாக அமைகின்றது.
அகவல் என்பது ஆசிரியம்மே – இதில் வரும் அகவல் என்பது அகவன் மகள், அகவலன், வேலன் போன்றோருடன் தொடர்புடையது. இவர்களுடைய பாட்டில் எதுகைக்கு அவ்வளவு கட்டாயமில்லை. அது போகிற போக்கில் தானாக வந்தால் உண்டு. ஆனால் அதில் வரும் ஆசிரியம் என்பது புலவர் மரபோடு தொடர்புடையது. இங்குப் புலவர் மரபையும் கூறும் முதல் நூலாகத் தொல்காப்பியம் விளங்குகிறது. கூர்ந்து நோக்கினால் தொல்காப்பியச் சிந்தனைப் பள்ளி, தமிழ்ப் பாட்டைப் பாவாக மாற்றுகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். பாட்டு என்பது தொல்காப்பியத்தில் பழங்காலச் சொல்லின் எச்சமாகவே பதிவாகியுள்ளது. அது பாட்டு, பாவாக மாறிக்கொண்டிருந்த காலக்கட்டம்.
பாட்டு வரலாறு
தமிழ்ப் பாட்டு வடிவங்களின் வரலாற்றை கூர்ந்து ஆராய வேண்டியுள்ளது. முதன் முதலில் அகவல் என்னும் பாவகையே தோன்றியுள்ளது (அகவல் என்பது ஆசிரியம்மே) அகவலுக்குப் பின்னர் தோற்றம் பெற்றது வெண்பாவாகும். இதனுடைய ஓசை என்பது செப்பலோசையாகும். இசையோடு பாடுவதற்குப் பெரிதும் உறுதுணையாக நிற்பது. வெண்பாவிற்குப் பின்னர் தோன்றியது கலிப்பாவின் ஒரு பகுதியான தாழிசை பாடுவதற்காகவே அமைந்ததாகும். தாழிசை என்னும் பெயரே இதனைச் சுட்டுகிறது.
தேவாரம் முதலான திருப்பாட்டுகள் அனைத்தும் பண்களுக்கு எனப் பட்டவையே. பிற செய்யுள் வகைகளும் கூட இசையோடு இனிமையாகப் பாடுவதற்கு ஏற்றவையாக இருக்க வேண்டும் என்று அக்கால ஆசிரியர்கள் கொண்டார்கள்.
இதனாலேயே ஆசிரிய விருத்தம் முதலிய செய்யுள் வகைகள் தமிழ்ப் பெரியோர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சீவக சிந்தாமணி முதலிய காவியங்களின் விருத்தங்கள் இதற்கு எடுத்துக்காட்டாக அமைகின்றன.
இசையின் இனிமைக்கும் செய்யுளின் இனிமைக்கும் பொருளின் இனிமைக்கும் பேரெல்லையாகக் கம்பராமாயணம் விளங்குகிறது. அதில் உள்ள விருத்தப்பாக்கள் செம்மையான நடையில் சென்று தமிழ் மக்களுடைய பேச்சில் இயற்கையாகவுள்ள ஒத்திசையோடு அமைந்திருக்கின்றன. அக்காலத்துப் பெரும்பான்மை மக்கள் வழங்கிய சொற்களை இவ்விருத்தங்களில் மிகுதியாகக் காணலாம் என்றும் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை (எஸ்.வையாபுரிப்பிள்ளை, தமிழ்ப் பாட்டும் இசையும், பக்.113-114) விளக்குவார்.
எனவே இன்ன பாவினத்தைப் பாடுவதில் மிகவும் வல்லவர் என்று அவரை அந்தப் பாவுடன் இணைத்துப் பேசும் சிறப்பு காணப்படுகிறது.
”வெண்பாவில் புகழேந்தி பரணிக்கோர்
சயங்கொண்டான் விருத்த மெனும்
ஒண்பாவிற்கு உயர்கம்பன் கோவைஉலா
அந்தாதிக்கு ஒட்டக் கூத்தன்
கண்பாய கலம்பகத்திற்கு இரட்டையர்கள்
வசைபாடக் காள மேகம்
பண்பாகப் பகர்சந்தம் பாடிக்காசலால்
ஒருவர் பகரொணாதே”
இதனால் பா வகைகளைப் புனைவதில் வல்லவர் தம் சிறப்பை அறிந்துகொள்ள முடிகிறது.
பாட்டிலக்கியம் – இலக்கண வரையறை :
திராவிட மொழிகளுக்குரிய உடைமையே பாட்டு ஆகும். லீலாதிலகம் பாட்டின் இலக்கணத்தை ,
”த்ரமிட சம்காதாட்சர நிபந்தமெதுக மோன
வ்ருத்த விசேச யுக்தம் பாட்டு” (லீ.தி. சிற்பம் ஒன்று. சூத்திரம்11)
பாட்டு என்பது திராவிட எழுத்துகள் மட்டும் உடையதாய், எதுகை, மோனையுடன் விருத்தச் சிறப்பொடு பொருந்துமாறு அமைவது. அதாவது மணிப்பிரவாள விருத்தங்களிலிருந்து வேறுபட்டுத் திராவிட விருத்தங்களில் அமைவதே விருத்த விசேசம் ஆகும்.
லீலாதிலகம் குறிப்பிடும் பாட்டு என்பது, சங்க இலக்கியப் பாட்டு மரபோடு அதிகம் பொருத்தப்படுவதில்லை. லீலாதிலகத்தின் பாட்டு என்பது, விருத்தம். இதில் எதுகை மோனை என்னும் இரு தொடைகள் மட்டுமே பெற்றுவரும். அதிலும் எதுகை என்பது, அடி எதுகை மட்டுமே வரும். நான்கு அடிகளிலும் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை ( பக்.41.பேரா.இளைய பெருமாள் மொழிபெயர்ப்பு) விருத்தம் அல்லது பாட்டின் இலக்கணத்தைத் தழுவி ஏ.ஆர்.இராஜராஜ வர்மா மலையாள விருத்த மஞ்சரியில்,
”பத்தியம் வார்க்குந்ந தோதல்லோ
வ்ருத்த மென்னிக சொல்வது
சந்தஸ்ஸென்னால் அட்சரங்ஙளில்
எத்தர யெந்நுள்ள க்னுல்பத்தியம்”. (வி.ம.3)
சொற்கோவையின் ஒருங்கிணைப்பை விருத்தமென்று சொல்கிறோம். ஒரு பாட்டில் ஓர் அடியில் எத்தனை எழுத்துகள் வரவேண்டுமென்ற விதி வரையறை உள்ளது. தொல்காப்பியருடைய அடியின் சிறப்பை ஏ.ஆர்.இராஜராஜ வர்மாவும் மேற்கொள்கிறார். ஆனால் இருபது எழுத்துகளுக்கும் மேலாக இருபத்தாறு வரையுள்ள எழுத்துகள் வரலாமென்பது அவர் கொள்கை. அதற்கும் மேலான எழுத்துகள் ஓர் அடியில் வருவது பாட்டல்ல என்பது அவரது கருத்தாகும்.
தொல்காப்பியர் இருபது எழுத்துக்களுடய கழிநெடில் அடிகளுக்கு மேலாக வரலாகாது என்று குறிப்பிடுவது, செய்யுளுக்கு. எழுத்து எண்ணும் போது மெய்யெழுத்துகளும் என்ணப்படலாம். இது பொது விதியாகும். தொல்காப்பியம் பாட்டு என்று கூறியதைப் போன்று மலையாள யாப்பிலக்கண நூலான விருத்த மஞ்சரி, கிளிப்பாட்டு, துள்ளல் பாட்டு, வஞ்சிப் பாட்டு முதலான வகைகளைக் கூறுகின்றது.
The word Pattu means only song. But here it is used to signify a school of poetry with certain definite rules. This is different from songs and folklore in M. which are also called pattu sometimes. Ex. Vattakan Pattukal, Krisna pattu etc. – K.M George. P.101.
மலையாள மொழியில் பாட்டு வகைகள் குறித்து எஸ்.சுப்பிரமணியன் கூறுவது இங்கு நோக்கத்தக்கது. இராமகதப் பாட்டு, கிளிப் பாட்டு, துள்ளல் பாட்டு, வஞ்சிப் பாட்டு அல்லது தூணிப் பாட்டு, பாணப் பாட்டு, குறத்திப் பாட்டு, மாற்றான் பாட்டு, ஞானற்றுப் பாட்டு, வேடன் பாட்டு, தாராட்டுப் பாட்டு, குட்டிகளுடே பாட்டு, அய்யப்பன் பாட்டு, காணிப் பாட்டு, இடநாடன் பாட்டு, வடக்கன் பாட்டு, தெக்கன் பாட்டு, கிருஷிப் பாட்டு, படப் பாட்டு, ஓணப் பாட்டு, மாப்பிள்ளைப் பாட்டு, அடச்சுதுறப் பாட்டு…. (பக்.1977, The Commenness in the Metre of the Dravidian languages,D.L.A)
திராவிட எழுத்துகள்: ( த்ரமிட சம்காதாட்சர நிபந்தம்)
இது பாட்டின் மிகவும் முக்கியமான பகுதியாகும். பாட்டானது திராவிட எழுத்துகள் (உயிரெழுத்து பன்னிரண்டும் மெய்யெழுத்து பதினெட்டும்) கொண்டு மட்டும் எழுதப்பட வேண்டும்.
திராவிட எழுத்துகளிலுள்ள எழுத்துகள் கலந்து வருகின்ற வடமொழிச் சொற்களைத் தற்சமமாக மட்டும் பயன்படுத்த வேண்டும். அல்லாதவற்றைத் தற்பவமாக்கிப் பயன்படுத்தலாம்.
’தரதலம் தானாளந்தா பிளந்தா பொன்னன்
தனகசெந்தார் வருந்தாமல் வாணன் தன்னெ
கரமரிந்தா பொருந்தானவன்மாருடெ
கரளெரிந்தா புரானே முராரி கணா’ (இராம சரிதம்)
இங்கு முராரி, கரம் முதலான வடமொழிச் சொற்கள் தற்சமங்களாக உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. அதற்குக் காரணம், இவை திராவிட எழுத்துகளால்
அமைந்ததாலேயாகும். தரதலம்(dhara), தானவன்(danava) முதலான வடமொழிச் சொற்கள் திராவிட எழுத்துகளில் இல்லாததால் அவற்றை முறையே தரதலம், தானவன் எனத் தற்பவங்களாக மாற்றிக் கொடுக்கப்பட்டுள்ளன. அது மட்டுமல்லாமல் சொற்களைப் பெயர்த்துப் பாட்டில் பயன்படுத்தும் பழக்கமும் இருந்து வந்துள்ளது. (எ-கா) ஹ்ரண்யன் என்னும் சொல் பொன்னன் என்று பெயர்த்தும் கொடுக்கப்பட்டுள்ளது.
எதுகை:
த்வீதியாக்சரப் பிராசத்தினு இணையான ஒரு பிராசமே எதுகையாகும். மாத்திரைகளில் ஒலியமைப்பில் ஒரே போன்ற தன்மையை அதாவது எதுகை அதே போன்று கவனத்தில் கொள்கின்றது. அதாவது ஒரோ சொல்லிலும் இரண்டாவது எழுத்தும் அதுபோல முதல் எழுத்தின் ஒலியமைப்பும் ஒன்று போல வருவது எதுகையாகும். கொடுத்துள்ள எடுத்துக்காட்டில் ’தரதலந்தானளந்தா’என்று தொடங்கும் ஒன்றாவது வரியின் இரண்டாவது எழுத்தும் அடுத்த வரியின் ’ கரமிரிந்தா’ என்னும் சொல்லின் இரண்டாவது எழுத்தான ’ர’ மீண்டும் ஒன்று போல் வந்துள்ளது. அது மட்டுமல்லாமல் முதல் எழுத்தானது மாத்திரையில் ஒன்று போல் வரவேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
”கரமரிந்தா பொருந்தானவன்மாருடெ
கரளெரிந்தா புரானே முராரி கணா” (இராம சரிதம்)
மோனை:
மோனைக்கு பாதார்த்தாதிப் பிராசமென்று பெயர். ஒரு அடியின் முதல் சொல்லிலுள்ள முதல் எழுத்தும் இரண்டாவது அடியின் முதல் சொல்லிலுள்ள முதல்
எழுத்தும் ஒன்று போல வருவது மோனை. எடுத்துக்காட்டாக, ’கரமரிந்தா’ என்னும்
சொல்லின் முதல் எழுத்தாகிய ’க’வும், இரண்டாவது அடியில் ’கரளெரிந்தா’ என்னும்
சொல்லின் முதல் எழுத்தாகிய ’க’வும் ஒன்று போல வருவது.
”கரமரிந்தா பொருந்தானவன்மாருடெ
கரளெரிந்தா புரானே முராரி கணா” (இராம சரிதம்)
அந்தாதி அமைப்பு:
பாட்டானது, மோனை, எதுகை என்னும் இரண்டோடு நின்று விடாமல் அந்தாதிப் பிராசத்தையும் உள்ளடக்கியதாகத் திகழ்கின்றது. ஒரு பாட்டின் இறுதிச் சொல் கொண்டு அடுத்த பாட்டைத் தொடங்குகின்ற அந்தாதி முறை அச்சாக்கம் அவ்வளவாகப் பிரபலமில்லாத அக்காலத்தில் பாட்டை நினைவில் வைத்துக்கொள்வதற்கு அந்தாதி அமைப்பு முறையும் கையாளப்பட்டு வந்துள்ளது.
1.நடந்திடமுறைந்த வனுணர்ந்தளவில் நாசம்
துடங்கினது கடரிய தும்பமுள்ளிலேறி
அடங்கியங்க சென்றரசனெத்தொழுதுசொல்லத்-
துடங்கினன் விபீழண்ந்து துயரெல்லாம்.
2.அணைந்துயரம் தன்னெயறிந்தசியிணைக்கீ
ழிணங்கியறியிக்கு மடியனோடெளுதாயும்
பிச்சங்கமதொல்லா பிழை முழுக்கிலும்;நறுந்தா-
ரணிந்த குழலாளை யரசன்னு கொடு மன்னா,”
3.மன்னவர் பிரானொடு வழக்கினு துனிந்தா-
லென்ன கருமம் வருமதெ”ன்ற விடமெல்லாம்
பின்னயமவன் துயர்ந்து பேசுமளவேவந்-
துன்னதனி சாசரரொழ்க்கணம் நிறைந்தார்
4.நிறைந்தளவில் நீலமிகிலெப்பழி செய்யும் மெய்-
நிறம் கிளர்ந்த கும்ப கர்ணன் நிகில லோகம்
நிறைந்து முழங்கின்ற மொழியால் த்தமயனுள்ளம்
நிறந்து வருமாறு நிவிரத்தொழுதுரைத்தான்.
5.உரைத்தருளொல்லா சபலனாயலகில்யானிந்-
றொருத்தனுளனாகில் வந்துளைக்குமவர் தம்மெ
கருத்தருமல்லே பெரியகாரியங்கள் தாமே
வருத்துமவரென்றிக மந்திரிகள் வேறாய்
(இராம சரிதம் விருத்தம்- 6)
விருத்த விசேசம்:
மணிப்பிரவாளத்தில் பிரபலமான வசந்த திலகம், மந்த்ராக்ராந்தா முதலான வடமொழி விருத்தங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட திராவிட விருத்தங்களையே
விருத்த விசேசம் என்று அழைக்கப்படுகிறது. மாத்திரைக்கு முக்கியத்துவம் கொடுத்த திராவிட விருத்தங்களையே பாட்டுக் கவிகள் தம் படைப்பிற்குப் பயன்படுத்தியுள்ளனர். இந்நூலின் ஆசிரியர் திராவிட விருத்தத்தையே தம் நூலில் கையாண்டுள்ளார்.
இன்று பயன்பாட்டிலுள்ள பல்வேறு விருத்தங்களின் முந்தையே வடிவமே இராம சரிதத்தில் காணப்படுகின்றது. இவ்வாறாக விருத்த விசேசம் யுக்தம் என்னும் விதியும் இராம சரிதத்தில் பொருந்தி வருகின்றது. மலையாளத்தில் யாப்பின் உறுப்புகளான சீர், தளை போன்றவற்றிற்குக் கட்டுப்பாடு இல்லை. மாறாக நேர், நிரை, அசை போலக் கணங்களின் கோவை இடம் பெறுகின்றது. தொல்காப்பியம், விருத்த மஞ்சரி, மலையாள நெறிகளில் விருத்தம் எழுத்தெண்ணி அடிகள் அளவிடப்படுகின்றன.
நாற்சீர் கலிவிருத்தம்:
ஓர் அடியில் நான்கு சீர்கள் கொண்டு நான்கு அடிகளால் அமைவது. பதினான்கு எழுத்துகள் வரையிலான அளவடிகளால் அமைந்தவை. இராம சரிதத்தில் நாற்சீர் கலிவிருத்தமானது மூன்று, ஆறு, பதினொன்று, பதினைந்து, இருபத்தொன்று, இருபத்தெட்டு முதலான ஆறு படலங்களில் அமைந்துள்ளன.
(எ-கா)
இருந்த வண்ணமேயிருள் மறைந்திட துர-
ப்பரந்தகுடையும் தழையும் வெண் சவரி மற்றும்
கரைந்துமடவார் துதிசெய்யக்கனிவில் வந்தா-
நிருண்டமுகில் போலெழுமிராவணனித்த்தான்
(இராம சரிதம் விருத்தம்-3.1)
ஐஞ்சீர் கலிவிருத்தம்:
பதினேழு எழுத்துகள் வரையுள்ள நெடிலடி நான்கால் அமைவது. படலம் நூற்றியஞ்சில் கட்டளைக் கலித்துறையாகப் பதினொன்றாவது பாட்டு அமைந்துள்ளது.
(எ-கா)
மன்னவனே, மனம் மைதிலிதன்னி லலிந்தோ நீ
யென்னொடு முன்னமியங்ஙுமதொன்னு மிளக்குன்னு?
என்னது காரண மிந்திரசித்தினு மாதாவென்
னென்னெயறிந்தருளாதொழியின்னதினிக்காலம்
(இராம சரிதம் விருத்தம்-105.1)
அறுசீர் ஆசிரிய விருத்தம்:
இருபது எழுத்துகள் வரை பெற்று அறுசீர்க்கழி நெடிலடி நான்கால் வருவது. இவை ஈரசைச் சீர் பெற்று வரும்.
(எ-கா)
அரசர்கோனே! மேன்மேலரும் துயர்பிடித்தீவண்ணம்
புரிகுழலாழெனண்ணிப்போக்கும தொல்ல காலம்;
இருபது கரங்கள் தங்கமிலங்கைவேந்தனெயொரிக்கால்
க்கருதுக;களகசோகம் கைக்கொள்க கோபமிப்போள்!
(இராம சரிதம் விருத்தம் -2.2)
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்:
இருபத்திரண்டு எழுத்துகளான எண்சீர்க் கழிநெடிலடி நான்கினால் வருவது.
(எ-கா)
ஒக்கெங்கும ரிந்திட்டவ யெல்லாம்நிரவே வீழ்
ந்தொப்புள்ளச மைப்போடிட கெட்டித்தம்மில் விம்மி
த்திக்கெங்குமு லைக்கின்றவனு ற்றொன்றுள வாகி
த்திழ்க்கின்று தலைப்பந்திம லைப்பந்தி கனக்கே
தக்கம்வரு மிப்போரிலி லங்கைக்கர சன்றன்
சட்டற்றசி ரம்பத்தும றுத்தாலென்று மேடம்
கைக்கொண்டும னத்தினுக னத்தோரு விவேகம்
கைவந்தர சன்பண்டுக ழிந்தேடம்நி னைந்தான்.
(இராமசரிதம். விருத்தம் -100.1)
பதின்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்:
இருபத்து நான்கு எழுத்துகள் வரை பெற்றுப் பதின்சீர்க் கழிநெடிலடி நான்கினால்
வருவது.
(எ-கா)
“பிரியருதாத நீயிங்ஙனபி தாவுவெடிந்து நாடும்
பிழுகியிரந்து காடுமுரைந்து போந்தவனோட கன்றான்,
உருகுமல்லீநி னக்குடனுள்க்கு ருந்து விருந்த ல்லீவ
ந்தொளிவுள்ளிலங்க புக்கது போரும் நிந்திறம் நில்க்கதெல்லாம்
ஒருதுடநாங்கள் நின்னுடல்வெட்டி யொக்கனுகர்ந்தி தம்பெ-
ற்றுளவிளயாட்ட மாடுவுதென்று சென்றணையின்ற நேரம்
திரிசடகண்டு கொண்டுகனாவுதான றியித்த போதே
திரிந்தகலும்நி சாசரிமார டங்கியுறங்கி னாரே”
(இராம சரிதம். விருத்தம்- 4.1)
முடிவுரை
பாட்டின் வடிவத்தை முழுமையாகக் கடைப்பிடிக்கின்ற ஒரு நூலே இராம சரிதம் ஆகும். இராம சரிதத்தின் முக்கியத்துவத்தைப் பண்டிதர்களுக்கு இடையில் முதன் முதலாகக் கவனத்தில் கொண்டு வந்தவர் பேரா.ஹெர்மன் குண்டர்ட்டாகும். இந்நூல்
கி.பி.12-ஆம் நூற்றாண்டிற்கு இடையிலோ அல்லது 13-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலோ எழுதப்பட்டதாகக் கூறப்படுகிறது. இராம சரிதத்தின் ஆசிரியர் சீராமன் என அந்நூலின் இறுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்நூல் எழுதப்பட்ட காலம், ஆசிரியர் முதலானவற்றில் மாற்றுக் கருத்துகள் நிலவுகின்றன. இந்நூலில் மொத்தம் 1814 பாட்டுகள், 164 படலங்களாகப் பகுத்து எடுத்துரைக்கப்பட்டுள்ளன. லீலாதிலகம் கூறும் பாட்டின் இலக்கணத்தை முழுமையாகப் பின்பற்றுகின்ற நூலே இராம சரிதம் என்பதில் ஐயமில்லை.
துணைநூல் பட்டியல்
1. இராம சரிதம், பி.வி. கிருஸ்ணவாரியார், சாகித்திய பரிசத் சி.எஸ். லிமிடெட்,
எர்ணாகுளம், முதல் பதிப்பு 1956, விலை.10
2. இளங்குளம் குஞ்சன்பிள்ளை, லீலாதிலகம் குறிப்புகளுடன், நேசனல் புக் ஸ்டால்,
கோட்டயம், 1962
3. எருமேலி, மலையாள சாகித்தியம் காலக்கட்டங்களிலுடே, முதல் பதிப்பு, மே 1996, விலை.475.
4. தொல்காப்பியம், பொருள் (இளம்பூரணர் உரை) கழகவெளியீடு, சென்னை, 1973
5. பிரபாகரன், ம. தமிழ் மலையாளப் பாட்டு மரபுகள், EFEO, பாண்டிச்சேரி.
6. பிரபாகரன், ம. பாட்டும் தொடையும்: திராவிட மொழிகளுக்கிடையேயான தொடர்பு EFEO, பாண்டிச்சேரி.
7. மினாட்சிநாத பிள்ளை, ச.கம்பராமாயணமும் இராம சரிதமும் ஓர் ஒப்பாய்வு
8. ராஜராஜ வர்மா, எ.ஆர். விருத்த மஞ்சரி, நேசனல் புக் ஸ்டால், கோட்டயம்,1974.
9.வையாபுரிப்பிள்ளை, எஸ். தமிழர் பண்பாடு, தமிழ்ப் புத்தகாலயம், மயிலாப்பூர், சென்னை,1949
10. Abar Gromphy , Principles of Literary criticism, High Hill Published,1960
11. George,K.M. Ramacaritam and the study of Early Malayalam, , National Book stall, Kottayam, 1956
12. Subramanyan,S. The Commenness in the Metre of the Dravidian languages, D.L.A 1977
==========================================================
ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):
ஆய்வாளரின் முயற்சி பாராட்டிற்குரியது. ஆனால் கட்டுரையில் கருத்துத் தொடர்பு இல்லை. முன்னுரையில் லீலாதிலகம் பற்றித் தொடங்கி, தொல்காப்பியம் பற்றி விளக்கம் கொடுத்து, இராம சரிதத்தில் முடிவுரை அமைந்துள்ளது. ஆய்வின் நோக்கம் என்ன, ஆய்வுச் சிக்கல் என்ன, அதற்குத் தீர்வு என்ன என்ற முறைப்படி கட்டுரையை அமைக்கவில்லை. லீலாதிலகம், இராமசரிதம் குறித்த தெளிவான அறிமுகமும் விளக்கமும் காலமும் இல்லை. “லீலாதிலகத்தின் பாட்டிலக்கணப்படி இராமசரிதம் பொருந்தியுள்ளது” என ஆய்வாளர் காட்டியுள்ளார். ஆனால், லீலாதிலக ஆசிரியர், பாட்டிலக்கியத்திற்கு இராம சரிதத்தை மேற்கோள் காட்டியிருப்பதாக மலையாள இலக்கிய வரலாறு என்ற நூலின் ஆசிரியர் பரமேச்வரன் நாயர் குறிப்பிடுகிறார். எந்த நூல் முதலில் தோன்றியது? எதற்கு எது எடுத்துக்காட்டாக அமைகிறது என்ற தெளிவு, ஆய்விற்குத் தேவை. இராம சரிதத்தையும் லீலாதிலகத்தையும் தொல்காப்பியத்தையும் ஒப்பிட்டிருப்பது நன்று. எனினும் கட்டுரையில் இலக்கண வரையறைகளை மட்டும் விளக்காது, ஆய்வாளர் புதிய முடிவுகளைக் கண்டறிய முயன்றிருக்க வேண்டும்.
==========================================================
இது ஆய்வறிஞரின் கருத்துரை அல்ல. 1. ஒரு வருத்தம். என் M.A.தேர்வுக்கு முன்னால் எழுதியிருந்தால்,’எனக்கு அதிகம் மார்க் கிடைத்திருக்கும், 2. ஒரு குற்றம்: மேலும் பட்டை தீட்டிருக்க் வேண்டியிருந்தது. 3. ஒரு எச்சரிக்கை: இலக்கியத்தில் பரவலாக அங்கீகரிக்கப்பட்ட, ‘குட்டி’ என்ற தனித்தமிழ் சொல்லை மின் தமிழ் ஆளுமை மட்டுறுத்தும். அந்த பக்கம் போவதற்கு தகரியம் இருந்தால், ‘பொடியன்’ என்ற சொல்லை பயன்படுத்துவது விவேகம். சாக்கிரதை.