மறவன்புலவு க.சச்சிதானந்தன்

19.09.2010 ஞாயிறு முழுவதும் பதியவேண்டிய நிகழ்வுகளாயின.

காலை 09.00 மணிக்கு யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபைக்குச் சென்றேன். மாணவர்களுக்கான சைவ சமயப் போட்டிப் பரிசளிப்பு விழா நடந்துகொண்டிருந்தது. ஏறத்தாழ 200 மாணவர்களுக்குப் பரிசில்கள் வழங்கினர். யாழ்ப்பாணக் குடா நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளின் சிறார்கள் வந்திருந்தனர். அவர்களின் ஆசிரியர்கள், பெற்றோர்கள் வந்திருந்தனர்.

சிவநெறிப் புரவலர் த.சண்முகலிங்கம் சபையின் தலைவர். விழாத் தலைவரும் அவரே.

தேவாரம் தளத்தை மாணவர்களுக்கு விளக்க விரும்புவதாக முதல் நாளே அவரிடம் கேட்டேன், அன்புடன் அழைத்தார், வாய்ப்புத் தந்தார். சிறப்புரைகள், கலை நிகழ்ச்சிகள், பரிசளிப்பு எனக் காலை முழுவதும் நிகழ்ச்சிகளின் நெருக்கம் இருந்தும் எனக்கு 30 மணித் துளிகள் தந்தார். ஒளிப்படக் காட்சியாக விளக்கினேன். அனைவரின் பாராட்டுதலும் தேவாரம் தளத்துக்காயது.

காணொலி பார்க்க – http://www.youtube.com/watch?v=Ba6h_VRZLBc

யாழ்ப்பாணத்தில் இரு புத்தகக் காட்சிகள். சிறீலங்கா புத்தகசாலையாரின் 75ஆம் ஆண்டு நிறைவுப் புத்தகக் காட்சி. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் கிழக்குப் பதிப்பகதாரின் புத்தகக் காட்சி.

கிழக்குப் பதிப்பகக் காட்சிக்குப் போனேன். வியப்புத் தாங்கவில்லை. அருமை நண்பர் பத்திரி சேசாத்திரி அங்கிருந்தார். அவரையும் அவரின் நண்பர் சத்தியாவையும் அழைத்துக்கொண்டு யாழ்ப்பாணத் தெருக்கள் வழி சுற்றினோம்.

தந்தை செல்வா நினைவகம், தமிழாராய்ச்சி மாநாட்டில் உயிரிழந்தோர் நினைவகம், உடைந்த தமிழார்வலர் சிலைகள் எனப் பார்த்தபின் வல்வெட்டித்துறை நோக்கினோம். வழியில் வல்லை வெளியில் சாலையை மறைக்கும் புகார் மழை கொட்டியது. உடுப்பிட்டி சென்றதும் மழை இல்லை. வல்வெட்டித்துறை மருத்துவமனை சென்றோம். பிரபாகரனின் தாயார், திருமதி வேலுப்பிள்ளை பார்வதி அம்மாளைப் பார்த்தோம்.

2003இல் முசிறியில் ’துரையைப் (பிரபாகரனைப்) பார்க்க வேண்டும்’ என என்னிடம் கேட்ட தாயுள்ளத்தை நினைவில் கொணர்ந்தேன். அப்பொழுது அவர்கள் தெம்பாக இருந்தார்கள். வலது கைப் பக்கவாதம் சிறிதே இருந்தது. உடல் வழமை போலிருந்தது. தன் மருமகளையும் பேரர்களையும் பார்க்கும் ஆவலை என்னிடம் தெரிவித்தார்கள். அவர்கள் கிளிநொச்சிக்குப் பயணமாக என்னாலான உதவிகளை அப்பொழுது செய்திருந்தேன்.

வல்வெட்டித்துறையில் மருத்துவமனைப் படுக்கையில் துரும்பாக இளைத்திருந்தார்கள். ஒட்டி ஒடுங்கிப் படுத்திருந்தார்கள். வலது கைப் பக்கவாதம் கடுமையாக இருந்தது. சிறுநீர் குழாய் பொருந்திக் கழிந்தது. இடது கையில் குளுக்கோசு ஏற்றும் ஊசிமுனை இருந்தது. தமிழ்ச்செல்வி என்ற செவிலியர் ஆதரவாக இருந்தார்.

அவரது நினைவுகள் துல்லியமாக இல்லை. முசிறி மருத்துவர் இராசேந்திரனிடம் என்ன சொல்வது எனக் கேட்டேன். ’நான் சுகமாக இருக்கிறேன் எனச் சொல்லுங்கள்’ என்றார். இதைத் தவிர நான் எதையும் பேசவோ, அவர் கேட்கவோ முடியவில்லை.

செவிலியர் உதவியுடன் அவர் நிமிர்ந்து இருக்க, எம் முகங்களை அவருக்கருகில் வைத்துப் புகைப்படங்களாக்கினோம்.

அவரை ஆதரிக்கும் மருத்துவர் மயிலேறும்பெருமாளைப் பார்த்தோம். 70 வயதினர். ஓய்வுக்குப்பின் சேவையில் மீளமர்த்தித் தொடர்கிறார்.
அவரது கருத்துகளைக் கூர்ந்து கேட்டோம்.

அங்கிருந்து புறப்பட்டு, திரு. பிரபாகரன் வளர்ந்த வீடு சென்றோம். உடைந்திருந்தது. சிதிலமாயிருந்தது.

இந்திய அரசின் மறுவாழ்வுப் பணிகளைத் பத்திரி சேசாத்திரி பார்க்க விரும்பினார். அத்தகைய பணி எதுவும் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குள் தெரியும்படியாக இல்லை என்றேன்.

மறவன்புலவுக்கு அழைத்துச் சென்றேன். அந்த ஊரில் மொத்தம் 650 குடியிருப்பாளர். அவர்களுள் 300 பேர் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளோர். சுவிற்சர்லாந்து அரசு 300 வீடுகளைக் கட்டிக் கொடுத்துள்ளது. மார்ச்சு 2010இல் தொடங்கிய மறு சீரமைப்புப் பணி முடிவடையும் நிலைக்கு வந்துள்ளது. நான் படித்த பள்ளியை முழுதாகப் புதிதாகச் சுவிற்சர்லாந்து அரசு கட்டியுள்ளது. சமூகக் கூடம், சலவையாளர் தொட்டி என மறவன்புலவு ஊரக வளர்ச்சிக்குச் சுவிற்சர்லாந்து அரசு நேரடியாக, இலங்கை அரசு ஒப்புதலுடன் செயல்படுவதைத் பத்திரியும் சத்தியாவும் பார்த்தனர். சுவிற்சர்லாந்து அரசுச் சார்பாளர் ஒருவரே வந்து, யாழ்ப்பாணத்தில் தங்கி, பணி முன்னேற்றப் பணிகளை மேற்பார்வை செய்து, பணத்தைப் பட்டுவாடா செய்து, 7 மாதங்களில் 300 வீடுகளையும் பிற வசதிகளையும் செய்ததைத் பத்திரிக்கு விளக்கினேன். என்னுடன் ஊரவரும் சேர்ந்து விளக்கினர்.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு அழைத்துச் சென்று பத்திரியை விட்டேன். மோசமான சாலைகளாதலால் யாவரும் களைத்திருந்தோம்.

அடுத்து, சிறீலங்கா புத்தக சாலையின் 75ஆம் ஆண்டு நிறைவுக் காட்சியகம் சென்றேன். தெய்வேந்திரம் அண்ணன், கந்தசாமி தம்பி ஆகிய இருவரும் 75 ஆண்டுகளுக்கு முன் யாழ்ப்பாணத்தில் நகருள், காங்கேயன்துறை வீதியில் புத்தகசாலை ஒன்றை அமைத்தனர். யாழ்ப்பாணத்தின் மிகப் பெரிய புத்தக சாலைகளுள் ஒன்றாக வளர்ந்தது. 58 ஆண்டுகளுக்கு முன்னர் என் தந்தையார் சிறீ காந்தா அச்சகம் புத்தக சாலையைத் தொடங்கிய பொழுது, சிறீலங்கா புத்தக சாலைக்கு எதிர்ப்புறத்தில் இருந்த கட்டடத்தில் தொடங்கினார். எனவே தெய்வேந்திரம், கந்தசாமி இருவரும் எம்முடன் நெருங்கிப் பழகினர். கந்தசாமி மிக இனிமையாகப் பழகுவார். மாணவனான என் மீது அன்பு கொண்டிருந்தார். இப்பொழுது கந்தசாமியின் மக்கள் இருவர் புத்தக சாலையை நடத்துகின்றனர். என்னைக் கண்டதும் மட்டற்ற மகிழ்ச்சி அவர்களுக்கு. வாழ்த்தி பழைய நினைவுகளை அசைபோட்ட பின் புறப்பட்டேன். இருப்பிடம் திரும்பினேன்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *