அம்மாவின் ஞாபகம்!
பாகம்பிரியாள்
அறியா வயதில்
அம்மா, விளையாட்டுத் தோழி.
அறிவு சற்றே வளர்ந்த பின்
அவள் ஒரு வழிகாட்டி.
தம்பி, தங்கை என்று
உறவுகளின் வருகை சேர்கையில்,
தேடட்டும் அம்மா என்று
ஒளிந்துகொண்ட நாட்கள் எத்தனை?
வேலை என்று, வாழ்க்கைப் பாதை மாறியதில்,
காலச் சக்கரம் வெகு தூரத்தில்
என்னைக் கொண்டு சென்ற போது,
விழி நீர் கசிந்து,
சோகம் பூசிக்கொண்டது அம்மாவின் முகம்.
புது உறவுகள் வந்த பின்
அவளின் நினைவு சற்றே பின் சென்றது.
பிறகு பேசுவோம், பேசுவோம் என்றே
நாட்களும் நழுவின.
காதலில் விழுந்து எழுந்து
சோகம் கப்பிய முகமாய்
கவிதைக் கருவை சுமந்து
அங்கும் இங்கும் திசை தெரியாது
கலங்கிய போது ஏனோ நினைவில் வந்தன,
அம்மாவின் மேடிட்ட வயிறும்
அயர்ந்த முகமும்.
என்னையும் அறியாமல் கண்களில் கண்ணீர்.