பகுதி -8  : ‘ எந்தன்’, ‘உந்தன்’

பேரா. பெஞ்சமின் லெபோ

‘ எந்தன்’, ‘உந்தன்’ என்ற மொந்தன் பழங்கள் இரண்டை இந்தப் பகுதியில் பார்ப்போம் எனச் சொல்லி இருந்தேன்.மொந்தன் பழங்களுக்கும் இந்தச் சொற்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை தான். இருந்தாலும்,  வாழைகளில் பல வகை உண்டு அல்லவா: மலை,பேயன், ரஸ்தாளி, பூவம், கற்பூரவள்ளி,….

இத்தனை  வகைகள் வாழைப் பழத்தில் உள்ள நாடு(கள்)  தென்னிந்தியா, தாய்லாந்து, மலேசியா….வாகத்தான் இருக்கும். ஆப்பிரிக்க  நாடு, குவாடலூப், ஆந்தி… போன்ற தென்னமெரிக்க  நாடுகளில் எல்லாம் ஒரே பச்சைப் பழம் மட்டும்தான்.
அது போல, பிழைகள்  தமிழில் பலப் பல உண்டு. அவற்றுள் மிக அதிகமான பிழை இந்த ‘ எந்தன்’, ‘உந்தன்’தான். நம்  இணையதள அல்லாவுதீன் என்ன சொல்கிறார் :

‘ எந்தன்’ என்ற சொல் 2 98 000 முறையும்
‘உந்தன்’ என்ற சொல் 2 71 000  முறையும் பயன்பட்டுள்ளனவாம் !

இவ்வளவு பேர் இச் சொற்களைத் தவறாகப் பயன்படுத்துவதற்கு என்ன காரணம்? நம் வாசகர், தமிழ் ஆர்வலர், செருமனியில்  வாழ்பவர் திரு அமுதம் சிவன் மிகச் சரியான காரணம் ஒன்றைத் தன் மடலில் (சற்று முன் வந்தது : 17 .10 .2011 ) :

‘ எந்தன் ‘  – ‘ உந்தன் ‘ என்பனவெல்லாம் தவறான பிரயோகங்கள் என்பது

இந்த அரை நூற்றாண்டுக்குப் பிறகுதான் எனக்குத் தெரியவருகிறது.
…………………………………………………………

………ஒருசில மேதைகளைத்தவிர, வெறுமனே தமிழார்வத்தை மட்டும் கொண்டிருக்கும் என்போன்றவர்களுக்கு, இந்தச் சினிமாக்கவிஞர்கள்தான் சட்டென்று கண்ணுக்குத்தெரிகிறார்கள்.

அந்தத் தவறுகளுக்கெல்லாம், இனிமையான இசையெனும் தங்கமுலாம் பூசி, என்றென்றும் அழியாதபடி, மூலைமுடுக்கெல்லாம் கொண்டுபோய்ச் சேர்த்துவிடுகிறார்கள்’.

இதைத்தான் ஔவை, ‘இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று’ என்று சொன்னார் போலும். ஐயா  சிவம் அமுதம்சிவம் சொன்னது  மிக மிக உண்மை.

 

அந்தக்காலப் பாட்டு ஆனாலும்

'எந்தன் கண்ணுக்குள்ளே உன்னைப் பாரு 

அது காவியம் ஆயிரம் கூறும் !' படம் :  மரகதம் (1959) குரல்கள்: T M S, ராதா ஜெயலக்ஷ்மி  இசை: M S சுப்பையா நாயுடு.

இந்தக்காலப் பாட்டு ஆனாலும்
'எந்தன் வானின் காதல் நிலவே
இன்று தேய்வது எதனால் நிலவே' படம்: காதல் வைரஸ்.
தமிழ்த் திரைப்படப் பாடல்களில் இத்தவற்றை நிறையவே காண முடிகிறது.தவறு எனத் தெரியாமலே இத்தவற்றைத் தொடரும் நாவலாசிரியர்கள், கட்டுரை ஆசிரியர்கள், மத போதகர்கள், புற்றீசல்களாய்ப் புறப்பட்டு இணையதளங்களில் சுற்றித் திரியும் புதுக்(கவிதைக்)கவிஞர்கள், ஏன், மரபுக் கவிதை சிறப்பாகப் பாடும் கவிஞர்கள் கூட, இத்தவற்றைச் செய்பவர்கள் பல்லாயிரக் கணக்கில் உள்ளனர். அடுத்து, திரு சிவம் அமுதம்சிவம் இன்னோர் உண்மையைப் பிட்டு வைக்கிறார் : 'இவ்வளவுகாலமும், நமது பேராசிரியர் அவர்களைப்போல , எத்தனையோ தமிழறிஞர்கள் , தலை தலையென்று அடித்துக்கொண்டுதான் இருந்திருப்பார்கள். '
உண்மைதான், ஆம், ஆம், இருந்தார்கள், இருக்கிறார்கள், இனியும் இருப்பார்கள்.
இதனை என் கட்டுரைகளில் பலமுறை சுட்டிக் காட்டி இருக்கிறேன்.தினமணியில் பேராசிரியர் கவிக்கோ.ஞானச்செல்வன் அவர்கள்' பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!'எழுதி வருவதை மின்தமிழ், தமிழுலகம் போன்றவற்றில் சுட்டிக் காட்டி இருந்தனர். இப்படி எத்தனை பேர், எத்தனை முறை எடுத்துச் சொன்னாலும் கேட்போர் மிகக் குறைவே! நீங்கள் அப்படியே தமிழ் இலக்கணத்தில் மூழ்கவேண்டும் என்பதில்லை. அவற்றைப் படித்தவர்கள், கற்றவர்கள் சொல்லுவதையாவது கேட்டுக் கடைபிடிக்கலாம் அல்லவா! இதனைத்தான் வள்ளுவர், 'கற்றில னாயினும் கேட்க ' என்றார். 'அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்' என்பது பழமொழி.ஆகவே எங்களைப் போன்றோர் அடித்துக்கொண்டே இருக்கிறோம். அம்மிதான் நகர்ந்தபாடாக இல்லை! ஆனால் அவை எல்லாம் 'செவிடன் காதில் ஊதிய சங்காகவும்' 'புல்லோர்க்கு நல்லோர் சொன்ன சொல்லாகவும்' (நன்றி கம்பன்) புறம் போகின்றனவே!
போனாலும், இவை ஏன் தவறு என்று விளக்கி என் கடமையைச் செய்கிறேன்.
 

'எந்தன்' - இச் சொல்லை எப்படிப் பிரிக்கலாம்?
எம் + தன் ; இதில் எம் எனபது பன்மை , தன் என்பது ஒருமை!
இங்குப் பன்மையோடு ஒருமையைச் சேர்த்துக் குழப்பி 'எந்தன்' என்ற சொல்லைப் பெய்கிறார்கள்.
இது ஒருமையைக் குறிப்பதாக இருந்தால் எப்படி வரவேண்டும்? வரும்?
என் + தன் > (தகரம் றகரமாகும் என்னும் புணர்ச்சி விதிகளின் படி,) என்+றன் > என்றன் என ஆகும்.
முறுக்கு மீசைப் புலவன் பாரதி இச் சொல்லைப் பல இடங்களில் மெய்ப்பித்திருப்பதைக் காணலாம் :


மந்த மாருதம் வீசுறும் போதினும்
வானில் மாமதி தேசுறும் போதினும்
கந்த மாமலர் கண்ணுறும் போதினும்
கானநல்லமுது உண்ணுறும் போதினும்

சந்தமார் கவி கற்றிடு போதினும்
தாவில் வான்புகழ் பெற்றிடுபோதினும்
எந்த வாறினும் இன்புறு போதெல்லாம்
என்றன் நெஞ்சகம் ஏந்திழை பாலதே

இது போலவே,
நின்+தன்>  நின்றன் என வரும்

மறுபடி பாரதி பாடலையே பாருங்கள் :
'காற்று வெளியிடைக் கண்ணம்மா -
நின்றன்காதலை எண்ணிக் களிக்கின்றேன்'


'பச்சைக் குழந்தை யடி - கண்ணில்
பாவையடி சந்திரமதி
இச்சைக் கினிய மது - என்றன்
இருவி ழிக்குத் தேநிலவு
நச்சுத் தலைப் பாம்புக் குள்ளே - நல்ல
நாகமணி யுள்ள தென்பார்
துச்சப் படு நெஞ்சினிலே - நின்றன்
சோதி வளரு தடீ'

இந்த முறைப் படி, 'உந்தன் ' என்ற சொல்லைத் திருத்தினால்,

'உந்தன்'> உம்+தன் ; உன்+தன்> உன்றன் என வருதல் வேண்டும்.
சரி பன்மையாக இருந்தால்?
உம்+தம்> உந்தம் ; எம்+தம்> எந்தம்

இனிமேலாவது, 'எந்தன்' 'உந்தன்' என்ற மொந்தம் பழங்களைக் கைவிட்டுவிட்டு
'என்றன்', 'உன்றன்' எனச் சரியாக எழுதுவோமா ?
பி.கு. :

- இது பற்றி எவரும் இணையதளத்தில் எழுதியதாகத் தெரியவில்லை.
- 'என்றன்' எனச் சரியாக எழுதுவோர் 27 800 மட்டுமே.

- 'உன்றன்' எனச் சரியாக எழுதுவோர் 15 700 மட்டுமே.

 

 

 

 

 

 

 

 

 


 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *