மனித நேயம் எங்கே போச்சு?

0

விசாலம்

Vishalamபிறப்பு என்றால் இறப்பு என்பதும் கூடவே நிற்கும். அதைத் தவிர்க்க முடியாது. ஆனால் அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் ஒரு மனித நேயத்துடன் நாம் அந்தச் சூழ்நிலையில் நடந்துகொள்ளலாமே. இந்த எண்ணம் வந்தது ஒரு ஹோட்டலில். ஆம். இரண்டு வாரங்கள் முன் நான்  என் சிநேகிதியுடன் மாலை ஒரு ஹோட்டலுக்குச் சென்றிருந்தேன்.

நாங்கள் அமர்ந்தவுடன் ஒரு மனிதர் {நடை உடையைப் பார்த்தால் ஒரு பிரமுகர் போல் தோன்றியது} எங்கள் முன் வந்து அமர்ந்த்தார். அவருடன் அவரின் நண்பரும் இருந்தார். முகத்தில் ஒரு பரபரப்பு…. பொங்கல், வடை, காபி ஆர்டர் செய்தார். பின் “தம்பி அப்பறம் குலோப்ஜாமுன் எடுத்து வாப்பா” என்று தன் கைக்குட்டையால் முகத்தைத் துடைத்துகொண்டார்.

இதில் என்ன வியப்பு! எல்லோரும் இதைத்தானே செயவார்கள் என்று நினைக்கிறீர்களா? கேளுங்கள் மேலே சொல்கிறேன். அவருக்கு மொபைலில்  ஒரு கால் வந்தது. இவர் பதிலுக்குச் சத்தமாகப் பேசினார்.

“என்ன? பாடி (body) இன்னும் எடுக்கவில்லையா? நல்ல வேளை… நான் கழன்று வந்துவிட்டேன். ஒரு தடவை மாட்டிண்டா, ஒன்பது மணி ஆய்டும். தவிர ஆக்சிடண்டு கேசு வேற! போலீஸ் நம்ம கழுத்த அறுப்பான், கேள்விக்கு மேலே கேள்வியா கேட்டு”.

அவருடன் கூட வந்த நண்பர் கேட்டார், “என்னப்பா… என்ன சொல்றான் பாபு? உன்னைத் தேடறானா? ஆமாம்….. ஆபீசிலேயே உயிர் போயிடுத்தா? அப்ப நீ சீனியர் மோஸ்ட் ஆச்சே. அங்க இருக்க வேண்டாமோ? இப்படி தின்ன ஓடி வந்துட்டாயே” சிரிக்கிறார் நண்பர்.

“அட போப்பா! போலீஸ் வந்து ஆயிரம் கேள்வி கேட்டு……. ஒரே தலவலி. கொஞ்சம் கையில் கொடுத்தேன். நகர்ந்துட்டான். என்னிடத்தில் தான்   இநதப் பையன் மணி வேலை செய்தான். காலம்பற வந்தவன் இப்ப இல்லை” என்று சொல்லிக்கொண்டே குலோப்ஜானைச் சுவைக்கிறார்.

“உனக்குன்னு எல்லாரும் வெய்ட் செஞ்சுண்டிருப்பாங்களே”

“போறச்ச ஒரு மலர் வளையம் வாங்கிண்டு போகணும். என் கைல மலர் வளையம் பாத்தாங்கன்னா பசங்க ஒன்னும் நினைச்சுக்க மாட்டாங்க. மேனேஜர் இதுக்குத்தான் போனாரோன்னு எண்ணிப்பாங்க. என்ன செய்யறது, எனக்குப் பசி தாங்காதே!’

இவற்றை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்த எனக்கு, ஆர்டர் செய்த காபி கூட உள்ளே இறங்க மறுத்தது. பாவம் யார் பெற்ற பிள்ளையோ? இப்படியும் ஒரு சிலர் இருக்கிறார்கள்.

எங்கே  மனித நேயம் ஒளிந்து கொண்டது? தன் உயிரைக் கொடுத்து, மேலே வளர்த்து, sincere ஆக வேலை செய்த அந்த  நல்ல மனிதன் செத்த அன்றே, அப்போதே அவனுடய boss குலோப்ஜாமூன் தின்கிறாரே…. என்ன என்று சொல்ல! மனம் வருந்தினேன்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *