ஆர்.சூடாமணி, என் மானசீகக் குரு

1

sudamani, choodamani, soodamaniஅன்புள்ள அண்ணாகண்ணன் அவர்களுக்கு,

வணக்கம் பல.

எழுத்தாளர் ஆர்.சூடாமணி அவர்களின் மறைவைப் பத்திரிகை வாயிலாக அறிந்தபோது மிகவும் வேதனைப்பட்டேன். எனது முன்னோடி அவர். நான் எழுத ஆரம்பித்த புதிதில் அவரது பரிசு பெற்ற “மனத்துக்கு இனியவள்” நாவலைக் கலைமகளில் படித்த போது மெய் சிலிர்த்தேன். அற்புதமான உணர்வுப் பேழை அந்த நாவல். ஜன்னலோர மலர் போல அமர்ந்து, இந்த உலகையே தன் உணர்வுப் பாதையால வலம் வரும் ஒரு கதாநாயகியைப் பற்றியது. பிறகு தான் தெரிந்தது, அவரும்  உடல் ஊனமுற்ற காரணத்தால் அதிகம் வெளியில் வர முடியாத நிலை என்பதை அறிந்தபோது, மிக்க வேதனைப் பட்டேன்.

ஒரு முறை மறைந்த திரு. கி.வா.ஜ. அவர்கள் என்னிடம் சொன்னார்கள். “உன்னால் முடிந்தால் சென்னை வரும் போது ஒரு முறை சூடாமணியைப் பார்” என்றார்கள். என் மானசீகக் குருவை உடல் நலிந்த நிலையில் பார்க்க, மனம் ஏனோ இடம் கொடாத காரணத்தால், அந்த நிகழ்வு நடைபெறாமலே போயிற்று.

பம்பாய்த் தமிழ்ச் சங்கத்தில் என் நாடகமும் சூடாமணியின் நாவலும் பரிசு பெற்றபோது அவரைச் சந்திப்பதற்கென்றே சென்னை சென்றேன். ஆனால் அதுவும் நடைபெறாமலே போனது என் துரதிருஷ்டம்.

அதன் பின் அவரின் ஒவ்வொரு படைப்பையும் ஆர்வத்துடன் படிப்பேன். சில வருடங்களுக்கு முன் ஒரு கதை. வயது காரணமாகத் தன் பெயர்
மறந்து போய்விடக் கூடாது என்பதற்காகத் தன் பெயரையே பல முறை எழுதிப் பார்த்துக்கொள்ளும் ஒரு கதாபாத்திரம்… என் மனத்தைப் பாதித்த  கதை.

மென்மையான உணர்வுகளை அற்புதமாக வெளிப்படுததும் ஆற்றல் படைத்தவர். சுய தம்பட்டம் அடித்துக்கொள்ளத் தெரியாதவர். அவரைப் போலவே அவர் மரணமும் அமைதியாக ஆர்ப்பாட்மின்றி நிகழ்ந்துவிட்டது.

என் மானசீகக் குருவுக்கு இந்தக் கடித அஞ்சலியைத் தவிர என்னால் வேறு ஒன்றும் செய்ய இயலவில்லை. என் எண்ணங்களைச் சொற் புஷ்பங்களாக்கி, சமர்ப்பித்து, அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

அன்புடன்,
விமலா ரமணி

========================

படத்திற்கு நன்றி – குமுதம், சிலிகான் ஷெல்ஃப்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.