தோழமை
ராமலக்ஷ்மி
’காலத்துக்கேற்ப மாறவே மாட்டாயா?’
கடந்து செல்லும் மனிதரில்
எவரேனும் ஒருவர்
கணை தொடுத்த வண்ணமாய்.
‘முயன்றுதான் பார்ப்போமே’
முளைவிட்ட பிரயத்தனங்கள்
தளிர்விடும் முன்னே உயிர்விட…
திகைத்து நின்ற வேளையில்
‘ஏன் மாற வேண்டும்?
நீ நீயாகவே இரு
பிடிக்கிறது அதுவே எனக்கு’
காலை வெயிலின் இதமென
கனிவாக நட்பொன்று சொல்ல
சட்டென்று மொட்டவிழ்ந்தாற்போல்
முகிழ்ந்தது மாற்றம்
படபடத்துத் திறந்த
மனதினுள்ளிருந்து
அணிவகுத்து மேலெழுந்த
பலநூறு பட்டாம்பூச்சிகளின்
எழில் வண்ண
சிறகோவியங்களில் பிரமித்து
கிளம்பிய கைதட்டல்களில்
வந்தது பெருமிதம்
தோள்நின்ற தோழமையை நினைத்தே.