திருச்சி புலவர் இராமமூர்த்தி

அரசியல்   நெறியின்    வந்த    அறநெறி    வழாமல்     புல்லி
வரைநெடுந்   தோளால்   வென்று   மாற்றலர்  முனைக்கண்   மாற்றி
உரைதிறம்       பாத நீதி      ஓங்குநீர்     மையினின்      மிக்கார்
திரைசெய்நீர்ச்   சடையான்   அன்பர்   வேடமே  சிந்தை  செய்வார்

பொருள்:

அரசியல் நெறியிலே வந்த அற வழிகளில் வழுவாமற் பாதுகாத்து, மலைபோ லுயர்ந்த தமது தோள்வலிமையாற் பகைவர்களைப் போரில் வென்று மாற்றி, முன்னோர் மொழிந்தவற்றி னின்றும் சிறிதும் பிறழாது ஓங்குகின்ற நீதிநிலையிலே சிறந்தவராகியும், அலைபொருந்திய கங்கையைச் சடையிலே தரித்த இறைவனது அடியார் வேடத்தினையே சிந்தையுட் கொண்டவராகி  வாழ்ந்தார்.

விளக்கம்:

அரசியல் நெறியில் வந்த அறநெறி – அரசியல் செல்லும் வழியினைப்பற்றி அறநூல்களில் விதித்த ஒழுக்கம். இதுபற்றித் திருவள்ளுவர் திருக்குறளுட் கூறியனவும், பிறவும் இங்கு வைத்துக் காண்க.

அரசியல் நெறியின் அறநெறியல்லாதனவும் வருவது உலகத்திற் காணப்படுதலின், அரசியல்நெறி யென்றதனோ டமையாது அதில் வந்த அறநெறி என்றார்.

“கொடுங்கோன் மன்னர்வாழுநாட்டிற்,
கடும்புலி வாழுங் காடு நன்றே“,

“ஆறலைக்கும் வேடு அலன் வேந்தும்   அலன்“

என்பன  போன்ற  நீதிநூல் உரைகள் காண்க.

“அறம் பொருளின்பமான அறநெறி வழாமற் புல்லி“ என முன்பாடலில் கூறியதனையும் இங்கு வைத்துக் காண்க.

கருணையே உருவமாகிய நமது அப்பர் பெருமானைச் சமண்சமயச் சார்பில் நின்றவனாகி, அலைத்துச், செயல் புரிந்த அரசனைப்

“பெருகுசினக் கொடுங்கோலன்“  என்றும்  “பூபாலர் செயன்மேற்கொள் புலைத்தொழிலோன்“ என்றும்,  மூர்த்தி நாயனாரது திருப்பணிக்கு முட்டுப்பாடு செய்த வடுகக்கருநாட மன்னனைக் “கொடுங் கோன்மை செய்வான்“ என்றும்,

அரசியல்  அறத்தில் நின்ற  அமைச்சர் பெருமானாகிய சேக்கிழார்   கூறியதும்   இங்கே  காணத்   தக்கவை.

“மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர்“

என்றபடி, மேலல்லாராகியும் மேல்நாட்டார் என்ற பேரால் இந்நாளில் அறியப்பட்ட இத்தாலியர், உருசியர், சர்மானியர், ஸ்பெயினர் முதலிய பல நாட்டவரும் அரசியல்  என்ற பெயரால்   செய்யும் பற்பல கொடுங் கோன்மைக் கொலைச் செயல்களையும் இங்கு வைத்து உண்மை காணலாம்.

அடுத்து, ‘வரை நெடுந் தோளால் வென்று மாற்றலர் முனைகள் மாற்றி’ என்ற தொடரை  மாற்றலர் முனைகள் வென்று மாற்றி என்று மாற்றிக்   கொள்க.

இங்கே ‘’தோள்’’  என்பது , படை முதலிய அங்கங்களுக்கே யன்றித், தம் தோள் வலிமைக்கு குறியாய் நின்றது. அடுத்து வரைநெடுந்தோள் என்பது மலைபோலுயர்ந்து நீண்டதோள். மலைபோலிருத்தலாவது சலியா திருத்தலும், உயர்ந்து பெருமை கொண்டிருத்தலும் முதலியன. “தோள்வலி கூறுவோர்க்கே“ என்ற விடத்துச் சங்கோத்தர விருத்தியிலே நம்  மாதவச் சிவஞானசுவாமிகள் மிக விளக்கமாகக் கூறியதை  இங்கே எண்ணலாம்.

அறநெறி வழாமற் புல்லி நின்ற இவ்வரசர்   ‘’மாற்றலர் முனைகள் வென்று மாற்றுதற்குக்‘’  காரணம் யாதெனின், தமது நாட்டினைக் கைப்பற்றுதற்கு அறநெறி தவறிப்பிற அரசர் படையெடுப்பின் தற்காத்துக் கொள்ளுதற் பொருட்டும்,  அவசியமாயின இடத்துப் பிற அரசரை அறநெறி நிறுத்துதற் பொருட்டும் போர் நிகழும்   ஆதலின் வென்று மாற்றுதல் வேண்டற் பாலதாயிற்றென்க. வென்று என்றதைத் தற்காப்பினும், மாற்றி என்றதைப் பிறரது அறம் பிறழ்தலை மாற்றுதலினும் என்று கொள்க.

‘’வென்று’’ என்பது, இவ்வரலாற்றில் வரும்  பின் நிகழ்ச்சியின் முற்குறிப்பாம்.

அடுத்து, ‘’உரை திறம்பாத நீதி’’ என்ற தொடர், அரசியலறத்தினைப்பற்றி முன்னோர் உரைத்த உரைகளினின்றும் பிறழாதவகை செலுத்திய நீதி. இதுவும்  இவ்வரலாற்றின் முடிபினைப் பற்றிய முற்குறிப்பென்பதைக் காணலாம்  இதற்குச் சத்திய நெறியினின்றும் திறம்பாத எனவும், சொன்ன சொல்  தவறாத எனவும் பொருள் கொள்ளலாம்.

‘’திரை செய் நீர் – அலை பொருந்திய கங்கை.

அன்பர் வேடமே சிந்தை செய்வர் – வேடமே – சிவனடியார்களது திருவேடத்தினையே கருதி வழிபட்டனர். குலம், குணம் முதலிய பிறிதொன்றினையும்  சிந்திக்காமல்  அடியார் சிவவேடமே  சிந்தித்தார் இதுவும்  இவர் வரலாற்று  நிகழ்ச்சிக்குக்  காரணமாகிய  முற்குறிப்பாம்.

-வேடமொன்றினையே யன்றிப் பிறவற்றைச் சிந்தித்தல், இவர் மெய்யடியார், இவர் பொய்யடியார் – எனப் பலவகையாலும் வேறுபாடுபடுத்தும் நிலைவரு மாதலின் அது வாராமற் காக்கும் ஒழுக்கத்தில் நின்றமையானும், -இவ்வரலாற்றில்  இவர், பின்னர்த், தம்மை அடர்த்தானைப் பகைவன் என்று காணாதுஅவன் தாங்கிய  வேடத்தினையே மெய்ப்பொருளெனத் தொழுதன ராதலானும்,

-அதுவே மெய்ப்பொருள் என்று கொண்டதே இவரது வாழ்க்கை  உண்மையாதலானும், வேடமே  என்று தேற்றம் பெறக்  கூறினார்.

-மேலும் அரசாங்கத்திற்குரியதாய் விதித்த வேடந் தாங்கி வந்தோனை, அவ்வேடத்தினை நோக்கி இயல்பில் அவன்பால் அரசாங்கத்திற்குரிய வணக்கம் செலுத்துவோமே யன்றி, அவனது குணம் குலம் முதலியவற்றைக் கண்ட பின்னர் வணங்கும் வழக்கின்மைபோல, அடியவர் வேடமே சிந்தித்து வழி படுதற்குரியது என்ற கொள்கை  குறித்ததுமாம்.

‘’அரசியல் நெறியில் வந்த அறநெறி வழாமற் புல்லி’’ என்றதனாலும் இவர் சைவச் சார்புடையரேனும் தமது அரசின்கீழ் வாழும் எல்லா வகையி னரையும் கோட்டமின்றிக் காத்து வந்தார் என்க. “கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது“ என்பது அப்பர் பெருமான் தேவாரம்.

நமது ஆங்கில அரசர் தாம் கிறித்துவமதச் சார்புடையரேனும் பிற எல்லாச் சமயங்களையும் காவல் புரிந்துவரும் அறநெறி முறையும் இங்கு வைத்துக் காண்க என்கிறார்.

**(ஆனாலும்    இவ்வுரையாசிரியரே,தம் காலத்தில்   வ.உ.சிதம்பரனாருக்கு  ஆங்கில  அரசு புரிந்த  கொடுமையை எதிர்த்து  வழக்காடி வென்ற  வழக்கறிஞர்  என்பதையும்  நினைத்துப் பார்க்க வேண்டும்! வ.உ. சிதம்பரனார்  மேல்   பொய்வழக்கிட்டு அவரைச்  சிறையில் தள்ள முயன்றோரை எதிர்த்து வழக்காடி வெற்றி பெற்றவர், இந்நூலின் உரையாசிரியர் சிவத்திரு.சி.கே. சுப்பிரமணிய முதலியார் ஆவார்!  அதனை நன்றியோடு நினைந்த வ.உ. சிதம்பரனார்  தம்  மூன்றாம்  மகனுக்கு   சுப்பிரமணியம் என்றே  பெயரிட்டார்) **

அடுத்து, ‘’மாற்றலர் முனைக்கண் மாற்றி’’ என்றதனாற் பகைவரால் வரும்பயத்தை வாராமற் காக்கும் அரசர் கடமை குறிக்கப்பெற்றது எனவும், அது புறக் காவலினையும். நீதி ஓங்கும் நீர்மை என்றது அகக் கரணத்தாற் செய்யும் உட்காவலினையுங் குறிக்கும் எனவும், வேடமே சிந்தை செய்வார் என்றது அவர் தம் உயிர்க்குச் செய்துகொண்ட காவலினைக் குறிப்பதென்றும் கூறுவாருமுளர்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.