அக இலக்கியச் சிறு பாத்திரங்கள்- 15 (தலைவனின் தந்தை)
ச. கண்மணி கணேசன் (ப.நி.),
முன்னாள் முதல்வர் & தமிழ்த் துறைத்தலைவர்,
ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி.
முன்னுரை
அகப்பாடலில் தலைவனின் தந்தை நேரடியாகப் பாடல் காட்சியில் இடம்பெறவுமில்லை. எங்கும் பேசவுமில்லை. பேசியதாகக் கூறப்படவும் இல்லை. ஆனால் தலைவன், செவிலி, தோழி ஆகியோர் கூற்றுகளில் தலைவனின் தந்தை பேசப்படுவதால் சிறுபாத்திரத் தகுதி பெறுகிறான்.
தம்முள் ஒத்த இரு தந்தையர்
தம்முள் முகிழ்த்த காதலை எண்ணி வியக்கும் தலைவன்;
“எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்” (குறுந்.- 40)
என்று தலைவியை நோக்கி வினவும் போது; இரண்டு தந்தைகளும் ஒப்பவே பேசப்படுகின்றனர். காதலர் கோணத்தில் தந்தையரிடையே ஏற்றத்தாழ்வு இல்லை.
செவிலி கூற்றில் தலைவனின் தந்தை
மகளின் இல்லறச் சிறப்பைக் காணவந்த செவிலி;
“அகன்பெருஞ் சிறப்பின் தந்தை பெயரன்” (ஐங். – 403)
சிறுதேர் உருட்டுவது கண்டு தலைவன் மகிழ்ந்தான் என்று சொல்லும் போது ‘தந்தை’ தலைவனைப் பெற்றவனைக் குறிக்கிறது. மிகுந்த புகழுக்கும் பெருமைக்கும் உரியவனாகத் தலைவனின் தந்தை போற்றப்படுகிறான். மரபு வழாமல் தன் மகனுக்குத் தந்தையின் பெயர் வைத்து மகிழ்ந்தமையும் குறிப்பாகத் தெரிகிறது.
தோழி கூற்றில் தலைவனின் தந்தை
“நன்மனை வதுவை அயர இவள்
பின்னிருங் கூந்தல் மலர் அணிந்தோயே
இனிது செய்தனையால் நுந்தை வாழியர்” (ஐங்.- 294)
என்று; தலைவன் அறத்தை நிலைநாட்டியவுடன் அவனது தந்தை வாழ்த்தப் பெறுகிறான். தலைவியைக் கைவிடாத அறமாகிய மணவினை அவனைப் பெற்று வளர்த்த தந்தையின் பெருமைக்குரிய சிறப்பாகிறது.
தலைவன் கூற்றில் தந்தை
திருமணத்திற்குப் பின்னர் புறத்தொழுகியதால் ஊடல் கொண்ட தன் மனைவியிடம் வாயில் வேண்டும்போது தலைவன்; மிகுந்த நம்பிக்கையுடன் தன் மகனை அள்ளி அணைத்து;
“மேதக்க எந்தை பெயரனை யாம் கொள்வேம்” (கலி.- 81)
என்று சூழ்நிலையைச் சமாளிக்கத் தன்னுடைய தந்தையின் மேன்மையையும் அவரது பெயர் தாங்கிய மகனையும் ஒருங்கே துணைக்கு அழைக்கிறான்
தானே தந்தையாகும் தலைவனின் பெருமையும் இழிவும்
தலைமைப் பாத்திரமாகிய தலைவன் மகனைப் பெற்ற பின்னர்; இயல்பாகவே தந்தை எனும் தகுதி பெற்று அவ்வாறே அழைக்கப்படுவது மட்டுமின்றி; அறவழிப்பட்டுத் திருமணத்திற்கு ஒத்துழைக்கும் போது; தோழி கூற்றில் தந்தை என்னும் பெருமைக்கு உரியவன் ஆகிறான்.
“புதல்வன் கவைஇயினன் தந்தை” (ஐங்.- 409);
என்று தலைமக்களது துயிலும் நிலை பற்றிச் செவிலி வருணிக்கும் போது தலைவனே ‘தந்தை’ என்று மகிழ்ச்சி பொங்கச் சுட்டப்படுகிறான். பெண் மகவு பெற்ற தலைவன் அகஇலக்கியம் எங்கும் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வரைவிடை வைத்துப் பொருள் தேடச் சென்று மீண்டவன் தலைவியை மணம்பேசிப் பூச்சூடிய போது தோழி மனம் நிறைந்து அவனைப் போற்றி;
“இனிது செய்தனையால் எந்தை வாழிய” (அகம்.- 104)
எனத் திருமணத்திற்கு முன்னரே தலைவனுக்குத் தந்தைப் பதவி கொடுக்கிறாள். மகப்பேற்றுக்குப் பின்னர் வினைவயிற் பிரிந்த தலைவன் மீண்டுவரத்; தூங்கிக் கொண்டிருக்கும் மகன் பேசுவது போலத் தான் பேசும் தலைவி;
“வந்தீக எந்தை” (நற்.- 221)
என்று தந்தை மகன் உறவுக்கே முதலிடம் நல்குகிறாள். ‘வாருங்கள் தந்தையே’ என்று அவள் அழைத்து மகிழ்வது அவர்களது இல்லறத்திற்கு உயிரோட்டமாக இருக்கும் மகப்பேறு பற்றிய கொள்கை விளக்கம் எனில் மிகையாகாது.
கணவன் புறத்தொழுக்கத்தில் ஈடுபட; அவனது பரத்தமை தலைவியால் இகழப்படும் போது அங்கதச் சுவையுடன்;
“வாழியர் எந்தை” (அகம்.- 46);
என்று நையாண்டி செய்யப்படுகிறான். ‘இவன் மனிதனே இல்லை’ என்னும் வசை பெறும் (கலி.- 84) இல்லத்தலைவனாகிய அவன் காதுபடவே அவனது செய்கையை மகனிடம் பேசுவது போல்; ‘உன் தந்தை’ என்று சுட்டி; விமர்சனம் செய்கிறாள் தலைவி. (கலி.- 80, 82, 85, 86). தன் கணவன் என்று சொல்லாமல் ‘உன் தந்தை’ என்று பேசும் காரணம்; இல்லறத்தின் நிலைத் தன்மைக்கு மகப்பேற்றின் அடிப்படைத் தேவையைக் கூறாமல் கூறுகிறது.
“அடக்கமில் போழ்தின்கண் தந்தை காமுற்ற” (கலி.- 82)
பிற பெண்கள் பற்றிக் குழவிப் பருவத்து மகனிடமே பேசுகிறாள்.
“மாதர் மென்நோக்கின் மகளிரை நுந்தை போல்” (கலி.- 86)
நாடாதே என்ற அறிவுரையைக் கேட்டுப் புரிந்து கொள்ளும் பருவமோ பக்குவமோ இல்லாதவனிடம் அவள் புலம்புவது; ஏதும் செய்யலாகாத அவளது கையற்ற நிலையையும் ஆற்றாமையையும் தெளிவாக்குகிறது. இயல்பான நிகழ்வுக்குத் தானாகக் காரணம் கற்பித்துத் தலைவி கூச்சலிடும் போதும் தலைவன் தந்தை என்னும் தகுதிப்பெயர் பெறுகிறான். சேடியோடு வெளியே அனுப்பிய மகனைக் கொஞ்சிப் பரத்தை அவனுக்கு மோதிரம் அணிவித்து அனுப்ப;
“செறியாப் பரத்தை இவன் தந்தை மார்பில்” (கலி.- 84)
‘செய்த புணர்குறி போல்; மகனின் கையில் சுறாவின் ஏற்றைக் குழித்த மோதிரம் அணிவித்து அனுப்புவது; என் கணவனைத் தன் வசப்படுத்தக் கொள்வேன் என்று விடும் சவாலின் குறியீடு ஆகும்’ என்று சேடியிடம் பொருமும் போது தலைவியின் மிதமிஞ்சிய மனஅழுத்தம் தான் வெளிப்படுகிறது. விளையாடச் சென்ற மகனைத் தலைவனின் புறத்தொழுக்கத்திற்குக் காரணமான பெண்கள் ஆசையுடன் எடுத்துத் தழுவ; வீடு திரும்பும் மகனின் உடலில் அவரது அணிகலன்கள் பதிந்திருக்கும் தடத்தைப் பார்த்துப் புலம்பும் போது; நிலைவாயிலைப் பற்றிக்கொண்டு தலைவன் நின்ற கோலம்;
“தந்தையும் வந்து நிலை” (கலி.- 83)
என்றே பதிவு பெறுகிறது.
தொன்மக் குறிப்பில் தலைவரின் தந்தை
மகாபாரதப் போரில் அசுவத்தாமன் தன் தந்தை துரோணாச்சாரியரைக் கொன்ற சிகண்டியைத் தானே முயன்று தலையைத் திருகிக் கொன்று சினம் தீர்த்துக் கொண்ட தொன்மக் குறிப்பு;
“தாளின் கடந்து அட்டுத் தந்தையைக் கொன்றானை” (கலி.- 101)
எனக் காளையைச் சிறப்பிக்கப் பயன்பட்டுள்ளது.
மடலேறும் தலைவன் காமன் தன்னைத் துன்புறுத்துவது பற்றிப் பேசுங்கால்; இன்னொரு தொன்மத் தந்தையாகத் திருமாலைச் சுட்டி;
“நெடியோன் மகன்நயந்து தந்தாங்கு” (கலி.- 140)
என நெடியோனைத் தந்தை ஆக்குகிறான்.
‘தந்தை’ சிறுபாத்திரம் உணர்த்தும் சமூகக் கொள்கை
தந்தையின் பெயர் தன் மகனுக்கு உரியது எனும் பாரம்பரியம்; ‘தந்தை பெயரன்’ எனும் உறவுமுறைப் பெயரில் தொன்றுதொட்டுத் தமிழ்ச் சமூகக் கொள்கையாக நிலவி வருவதைத் தொகை நூல்கள் ஆவணப்படுத்தியுள்ளன. பெண் பிள்ளை பெற்ற தலைவனுக்கு அகஇலக்கியத்தில் இடம் காணப்படாமை தமிழ்ச் சமுதாயத்தில் நிலவிய ஆண் முதன்மைப் போக்கை வெளிப்படுத்துகிறது.
முடிவுரை
காதலர் நோக்கில் தம் தந்தையரிடையே ஏற்றத்தாழ்வு இல்லை. செவிலியும் தோழியும்; தலைவனும் தன் தந்தையைப் பெருமைக்கு உரியவராகப் பேசுகின்றனர். தலைமைப் பாத்திரமாகிய தலைவன் மகனைப் பெற்ற பின்னர்; இயல்பாகவே தந்தை எனும் தகுதி பெறுகிறான். அறவழிப்பட்டுத் திருமணத்திற்கு ஒத்துழைக்கும் போதே; தந்தை என்னும் பெருமைக்குரியவன் ஆகிறான். பரத்தமை தலைவனை இழிந்த தந்தை ஆக்குகிறது. தலைவனது தந்தை பெயர் அவனது மகனுக்கு உரியது என்பது தமிழர் பாரம்பரியம். பெண் குழந்தை பெற்றதாகப் பேச்சே எழாமல் இருப்பது ஆண் முதன்மைச் சமுதாயக் கொள்கையைக் காட்டுகிறது. துரோணாச்சாரியாரும் நெடியோனும் தொன்மம் சார்ந்த தந்தையராக அகஇலக்கியத்தில் இடம் பெறுகின்றனர்.