Tag: இலந்தை சு. இராமசாமி

  • ஐயப்பன் காவியம் – 9

    ஐயப்பன் காவியம் – 9

    -இலந்தை சு. இராமசாமி

    இந்திரலோகப் படலம் – தொடர்ச்சி

    அழகெனில் இஃதே அழகெனச் சொல்லும்
    அற்புத மோகினி யாகப்
    பழகிய வள்போல் படபட விழிகள்
    பரிவுடன் அரக்கனை நோக்கக்
    குழைவொடும் ஈர்க்கும் குறுநகை யோடும்
    குறுகினள் அரக்கனின் பக்கம்
    ஒழுகிடும் வாயன் பத்மனும் பார்த்தான்
    உடன்கரம் பற்றிடப் போனான் 122

    “இருயிரு, பத்மா, ஆடலில் சிறந்தோன்
    என்பதை முன்னரே அறிவேன்
    ஒருபெரும் போட்டி ஆடுவோம் நாமே
    உன்னையும் வென்றிடு வேன்நான்
    சரிவர ஆடி என்னைநீ வென்றால்
    தந்திடுவேன் உனக் கெனையே
    பருவரை யதனைச் சரிசமப் படுத்து
    பந்தயம் தொடங்குவம் என்றாள் 123

    மரத்தினை ஒடித்தான், மலைகளைப் பொடித்தான்
    வடிவுடன் தளத்தினை அமைத்தான்
    தரத்தினில் மிகுந்த தனையவள் வெல்லச்
    சாத்தியம் இலையென நினைந்தான
    கரத்தினைத் தட்டித் தொடங்கெனச் சொன்னான்
    கால்களை தூக்கிக் குதித்தான்
    வரத்தினைப் பெற்ற செருக்கினால் பத்மன்
    மகிழ்ச்சியின் எல்லையில் நின்றான் 124

    *

    கால்களால் குதித்தாள் – இரு
    கைகளால் நொடித்தாள்- விழி
    காட்டியே நடித்தாள்-பின்
    மேல்குதிப்பதும் கீழ்குதிப்பதும்
    வேகமே பதித்தாள்- தரை
    மீதிலே மிதித்தாள் 125

    கால்களால் குதித்தான் – மரம்
    கைகளால் பொடித்தான்-கனல்
    கக்கியே குடித்தான்- பின்
    மேல்குதிப்பதும் கீழ்க் குதிப்பதும்
    வேகமே சிதைத்தான் – தரை
    வீழ்ந்திடப் புதைத்தான் 126

    முத்திரை விரித்தாள்- மிக
    மோகமாய்ச் சிரித்தாள்- விழி
    மூடியே பிரித்தாள்-பின்
    சித்திரந்தனை ஆட்டுவித்தாய்ச்
    சீக்கிரம் அசைத்தாள்- இசை
    தேனென இசைத்தாள் 127

    முத்திரை விரித்தான் – பயம்
    மூட்டிடச் சிரித்தான்-மலை
    மோட்டினைச் சரித்தான்-பின்
    தத்தரத்தரத் தத்தரத்தரத்
    தாளமே பிடித்தான் பல்லைச்
    சத்தமாய்க் கடித்தான் 128

    *

    வேகம் வேகம் வேகம் வேகம் வேகமெடுத்தாள்- தன்
    வித்தகங்கள் யாவும் காட்டி வீசி நடித்தாள்
    பாகம் பாகம் பாகம் பாகம் ஆட்டி நடித்தாள்- காணும்
    பக்க மெல்லாம் தானிருக்கும் தோற்றம் கொடுத்தாள் 129

    வேகம் வேகம் வேகம் வேகம் வேகமெடுத்தான் -தன்
    வித்தகங்கள் யாவும் காட்டி விந்தை தொடுத்தான்
    பாகம் பாகம் பாகம் ஆட்டிப் பல்லை இளித்தான் – தன்
    பக்கத்தில்தான் வெற்றியென்று பாடிக் களித்தான் 130

    வளைந்தாள் விழுந்தாள் எழுந்தாள் குழைந்தாள்
    இடுப்பில் கரம் வைத்தாள்
    நெளிந்தாள் துளைந்தாள், குனிந்தாள் நிமிர்ந்தாள்
    சிரத்தில் கரம் வைத்தாள் 131

    வளைந்தான் விழுந்தான் எழுந்தான் குழைந்தான்
    இடுப்பில் கரம் வைத்தான்
    நெளிந்தான் துளைந்தான், குனிந்தான் நிமிர்ந்தான்
    சிரத்தில் கரம் வைத்தான் 132

    *

    சடபட படபட சிரமும் வெடித்தது
    தரையோ அவனுடல் எடையில் பொடித்தது
    கடகட கடகட அகிலம் சிரித்தது
    கடுமன அரக்கரின் கருவம் மரித்தது
    எடுமெடு மெடுமென திசைகள் அதிர்ந்தன
    எரிகல் பலப்பல இறங்கி உதிர்ந்தன
    படபடபடபடவென அமரர் இறங்கினர்
    பரவசம் மிகமிகக் களியில் கிறங்கினர் 133

    -தொடரும்

    Share
  • ஐயப்பன் காவியம் – 8

    ஐயப்பன் காவியம் – 8

    இலந்தை சு. இராமசாமி 

    ஐயப்பன் காவியம் 

    இந்திரலோகப் படலம்

    பதினொரு சீர் விருத்தம்

    மா மா மா மா மா மா காய் மா மா காய் மா

    யார டாநீ  இந்தி ராவா என்னை மீறி ஆளுவதா
    ஆகா திங்கே  நீவெளியே வாடா
    பார டாயென் கொம்பி ரண்டைப் பாய்ந்து வந்து  குத்திடுவேன்
    பம்மு கின்றாய் ஆட்சியொரு கேடா
    வேரெ டுப்பேன்  வீழ வைப்பேன் வெற்றி யோடு நானி ருப்பேன்
    வேக மாய்நீ ஓடிடா மூடா
    பேரு  ரைத்துக் கால் விழுந்து நீபிழைத்துப்  போய்விட டா
    பிச்சை போட்டேன் வந்துடனே  போடா

    என்று ரைத்தாள் பின்குதித்தாள் தேவ ரெல்லாம் ஓடிடவே
    இந்தி ரன்சிம் மாசனத்த மர்ந்தாள்
    வென்று விட்ட கர்வம் கொண்டு மேலும் கீழும் தான்குதித்தாள்
    விண்ண டுங்கி ஆடிட மிதித்தாள்
    சென்று விட்ட தேவர்  தம்மைக் கொன்று விட்டா லென்னவெனெத்
    தேடித் தேடி ஓடியங்க லைந்தாள்
    நின்றிருந்த ஊர்வ சியை இரம்பை யைத்தி லோத்த மையை
    நீங்க ளென்முன் ஆடுகெனச்  சொன்னாள்

    வாலெ டுத்துத் தாஞ்சு ழன்றே இந்த வண்ணம் ஆடுகென்றாள்
    வாலுக் கெங்கே போவரவர் பாவம்
    காலெ டுத்துத்     தான்குதித்துக் கற்றி ருந்த வித்தையெலாம்
    காட்டி னார்கள்  என்னசெய்யக் கூடும்?
    மேல டுத்த மூக்கி ன் வழி மூச்சுவிட்டுத் தான்கு தித்து
    முட்டு கிறாற் போலமகிடி வந்தாள்
    ஓலமிட்ட ரம்பையர்கள் நாலு பக்கம் ஓடி னார்கள்
    ஓடவிட்டு வேடிக்கை பார்த்தாள்.

    கற்ப கத்தைப் பேர்த்தெ டுத்தாள் கா ம தேனு வையழைத்தாள்
    காய்ச்சியபால்  கொண்டுவரச் சொன்னாள்
    சொற்படிகேள் என்று சொல்லி வெள்ளை வண்ண யானையின் மேல்
    சொர்க்க மெல்லாம் சென்று சுற்றி வந்தாள்
    அற்பு தங்கொள் புட்ப கத்தில்  ஆள்க ளோடு தானமர்ந்தே
    அண்ட மெல்லாம் சுற்றி வந்து கண்டாள்
    கற்ப னைகள் தாங்க டந்த தொல்லை யெல்லாம் தான் கொடுத்தாள்
    கையெ டுத்து யாவையும்பொ டித்தாள்.

    ஓரிரண்டு இடங்களில் நிரையசை விட்டிசைத்து மாச்சீர் போல ஒலிக்கும்: எ.காய்ச்சி யபால்     சொற்ப டிகேள்)

    எழுசீர் விருத்தம்

    காய் காய்  காய் காய் காய் காய் மா!

    தூங்குமட்டும் பாடுதற்குக் கின்னரரை  வரச்சொன்னாள்
    சொப்பனத்தும் கக்கவெனச் சிரித்தாள்
    பாங்கியர்கள் வேண்டுமென்றாள் பக்கமவர் வந்துநின்றால்
    பல்லிளித்துக் கதிகலங்கச் செய்தாள்
    ஆங்குவைத் திருந்தமதுக் குடமனைத்தும் கையெடுத்தே
    அப்படியே வாயூற்றிக் குடித்தாள்
    ஈங்குவரச் சொல்லுங்கடி இந்திரனின் துணைவிகளை
    என்றுசொல்லிக் கெக்கலித்துச் சிரித்தாள்

    பட்ட த்து மகாராணி  போனயிடம் தெரியவில்லை
    பாவமவள் மிகப்பயந்து போனாள்
    விட்டுப்போய்   இந்திரனும் வேறெங்கோ இருக்கின்றான்
    வேறெதுவும் யாமறியோம் தேவி
    எட்டித்தான் நிற்கின்றோம் என்வேண்டும் சொல்லுங்கள்
    ஏலும்வரை செய்கின்றோம் என்றே
    முட்டித்தான் தள்ளுவளோ எனப்பயந்தே ஏவலர்கள்
    முறையிட்டுத் தாமொதுங்கி நின்றார்

    “இங்கேவா விசுவகர்மா இந்தச்சிம் மாசனத்தை
    என்வடிவுக் கேற்பச்செய் என்றாள்
    அங்கேசென் றவன் சொன்னான்” இந்தச்சிம் மாசனமோ
    ஆள்வடிவுக் கேற்றபடி மாறும்
    சங்கேதம் ஒன்றுண்டு சாற்றுகிறேன் அதைச் சொன்னால்
    தக்கபடி தான்மாறிக் கொள்ளும்”
    சிங்கா தனத்தருமை வியந்தபடி அவள்சென்றாள்
    தேவரெலாம் வாய்பொத்தி நின்றார்.

     

    Share
  • ஐயப்பன் காவியம் – 7

    ஐயப்பன் காவியம் – 7

    -இலந்தை  சு. இராமசாமி 

    தேவகாண்டம்

    அனுசூயைப் படலம்

    கலிவிருத்தம்

    நிலைபெறும் கற்பினள் உலகினில் யாரோ
    நலமுறத் தேடுவோம் வாமெனச் சேர்ந்தே
    அலைமகள் கலைமகள் மலைமகள் ஆய்ந்தார்
    பலருமே அனுசுயை என்றுப கர்ந்தார் 72

    முத்தொழில் தேவியர் எப்படி எனவே
    அத்திரி மகரிஷி அற்புத மனைவி
    உத்தமி கற்பினில் ஒப்பிலி அவளே
    பத்தினிச் சிகரமென் றொப்பினர் பலரே 73

    அரனையும் அரியையும் மறையவன் தனையும்
    விரைவுடன் நெருங்கியே வினவினர் அவர்கள்
    சரிசரி அதுசரி என்றனர் உடனே
    இருகரம் சிரசினில் வைத்தனர் தொழுதார் 74

    *

    எண்சீர் விருத்தம் – காய் காய் காய் மா

    ஒப்பரிய கற்புடையள் என்றுரைத்தீர் நீங்கள்
    உடனதனைச் சோதிக்க விரும்புகிறோம் நாங்கள்
    இப்பொழுதே மூவருமே அவளிடத்துச் சென்றே
    “எங்களுக்குச் சோறிடுக அம்மணமாய் நின்றே
    ஒப்பவிலை எனில்சாபம் தந்திடுவோம் என்றே
    உரைத்திடுக என்றவர்கள் சொன்னார்கள் நன்றே!
    அப்பொழுதே அவ்விடத்தை நீங்கியவர் சென்றார்
    அனுசூயை யிடம்சென்றே அப்படியே சொன்னார் 75

    “எங்களது வீட்டிற்கே எழுந்தருளி உள்ளீர்
    எவ்வளவு பேறெமக்கு! மும்மூர்த்தி சேர்ந்தே
    இங்குவரக் கொடுத்துவைத்தோம் , எதைக்கேட்ட போதும்
    இங்கதனைக் கொடுப்பதுவே எங்களது தர்மம்
    சங்கடமே படவேண்டாம். கேட்டபடி செய்வேன்
    சாமிகளே, குழந்தைகளாய் மாறிடுக “ என்றாள்
    அங்கவர்கள் உடனடியாய்க் குழந்தைகளாய் மாற
    அநுசூயை அம்மணமாய் சோறூட்டி நின்றாள். 76

    குழந்தைகளும் அம்மணமே, கொடுத்தவளும் அஃதே
    குறைவின்றி மூவருமே அநுசூயை ஊட்டம்
    விழைந்திருந்தார், சென்றவர்கள் ஏன்மீள வில்லை
    வேறெதுவும் ஆனதுவோ எனவுள்ளத் துள்ளே
    உழன்றபடி தேவியர்கள் உடனங்கே வந்தார்
    உள்ளநிலை தாம்கண்டார் உண்மையையு ணர்ந்தார்
    குழந்தைகளை மறுபடியும் முன்பூல மாற்றக்
    கும்பிட்டு வேண்டுகிறோம் எனவிறைஞ்சி நின்றார் 77

    தேவியரும் இவ்விடத்தே வந்ததெங்கள் பேறு
    தெய்வதமே இங்கிருக்க எதுவேண்டும் வேறு
    மூவரிவர் அம்சமென எனக்குமகன் வேண்டும்
    முன்வந்தே ஒப்புவிரேல் மாற்றுகிறேன் மீண்டும்
    ஆவதினி உம்கையில் முடிவுசொல்க” என்றாள்
    அங்ஙனமே ஆகிடுக எம்தாயே” என்றே
    மூவருமே மொழிந்தார்கள், முன்போலே மாறி
    முறைமுறையே தத்தமதி ருப்பிடம டைந்தார். 78

    சொன்னபடி அநுசூயை பெற்றனளோர் பிள்ளை
    சுடர்மூன் றங்கொன்றான அவன் ஞானக் கொள்ளை
    அன்னவனைத் தத்தாத்தி ரேயனெனும் பேரில்
    அழைத்தார்கள் அவன்பெரிய ஞானியிந்தப் பாரில்
    உன்னதமாய் எங்களரும் அம்சமென இங்கே
    ஒருபெண்ணைத் தருகின்றோம், அவள் எங்கள் பங்கே
    என்றனர் முத்தேவியர்கள், காலவ முனிக்கோர்
    எழில்மகவாய் வந்துதித்தாள் அவளதுபேர் லீலை! 79

    தத்தனுக்கு வேதங்கள் கலைகளெலாம் தந்தை
    தானாசா னாயிருந்து கற்றுக்கொ டுத்தார்
    வித்தைகளை, உபநிடத நூல்களையும் கற்றான்
    வினயமுள ஞானியெனப் போற்றிட வளர்ந்தான்
    புத்திரியைச் காலவரும் பத்திரமாய் வளர்த்தார்
    பொங்குமெழில் கொண்டயிளம் பெண்ணாய்த் திகழ்ந்தாள்
    தத்தனுக்குப் பெண்லீலா வதியைமணம் புரியச்
    சம்மதித்த பெற்றோர்கள் மணம் செய்து வைத்தார் 80

    இல்லறத்தில் விருப்பமிலை என்றிருந்த போதும்
    இதுகடமை எனவுணர்ந்தே அவளைமகிழ் வித்தான்
    நல்லறமாய் பெற்றோர்கள் மகிழ்கின்ற வண்ணம்
    நான்காண்டு குறையின்றி வாழ்ந்தார்கள் நன்றே!
    எல்லையிலாப் பரம்பொருளை என்றும்மனத் திருத்தி
    இல்லறத்தை விட்டுவிட முடிவெடுத்தான் தத்தன்
    மெல்லமெல்ல மனைவியிடம் விருப்பத்தைச் சொன்னான்
    விடைகொடுக்க வேண்டுமென மிகக்கெஞ்சிக் கேட்டான். 81

    ‘என்ன குறை வைத்துவிட்டேன்? ஏனிந்த முடிவு?
    இன்னும்மக வேதுமிலை, கசந்ததுவோ வாழ்க்கை?
    அன்றுதிரு மணப்போதில் அம்மிமிதிக் கையிலே
    அக்கினிமுன் சொன்னதெலாம் மறந்ததுவும் ஏனோ?
    என்னைமிக மகிழ்வாக வைத்திருப்ப தாக
    எடுத்துரைத்த வார்த்தைகளை ஏன்மறந்து போனீர்?
    அன்னைதந்தை இதைக்கேட்டால் மிகவருந்து வார்கள்
    ஆகாது நும்செய்கை எனமேலும் சொல்வாள் 82

    தவம் புரிய வேண்டாம் – நாதா
    சடை வளர்க்க வேண்டாம்
    நவநவமாக இன்பங்கள்
    நாளும் சுவைத்திடலாம் 83

    கட்டுத் தளரவில்லை- இன்னும்
    கால்கைகள் சோரவில்லை
    சுட்டித் தனம் செய்யக் குழந்தைச்
    சொந்தங்கள் ஏதுமில்லை 84

    வயதும் ஆகவில்லை – நமது
    வாலிபம் மாறவில்லை
    தயவு செய்திடுவீர் – எனது
    தாபம் குறைத்திடுவீர் 85

    என்றுலீ லாவதியாள்- மிக
    இரந்து கேட்குங்கால்
    இன்னும் திடமாகத் தத்தன்
    எண்ணம் இயம்பிநின்றான் 86

    இறைவன் பாதத்திலே – சேரும்
    எண்ணம் கருதிவிட்டேன்
    உறுதி செய்துவிட்டேன் – பெண்ணே
    உதவி செய்கவென்றான் 87

    விட்டுக் கொடுத்திடவே – சற்றும்
    விருப்பம் இல்லாமல்
    கொட்டினாள் கண்ணீரை அவனைக்
    கும்பிட்டுச் சொல்லுகிறாள் 88

    மாலையிட்டு மணம் முடித்த மஹிஷி நான் இருக்கும்போது
    வனவாசம் போவதுவும் முறையோ – இந்த
    மங்கையிடம் ஏதேனும் குறையோ?

    மஹிஷி என்ற உரிமையிலே மணவாளா சொல்லுகிறேன்
    வனவாசம் போவதுவோ கடமை- அதை
    மறுப்பதுவும் மஹிஷி என்னும் உரிமை 89

    இருவரும் மாறி மாறி
    எடுத்தெதைச் சொன்ன போதும்
    ஒருவரும் நிலைவி டுத்தே
    ஒப்புதல் கொடுக்கவில்லை
    பெருகிடும் சினத்தால் தத்தன்
    பேதையும் வருந்தும் வண்ணம்
    ஒருபெரும் சாபம் தந்தான்
    உத்தமி பதறிப் போனாள் 90

    மிகமிக வேண்டிக் கேட்டும்
    மீளவும் மகிஷி என்னும்
    தகுதியால், உரிமை தன்னால்
    தடையினை விதித்த தாலே
    மகிஷியாய்ப் பிறக்கச் சாபம்
    வழங்கினேன் என்றான் தத்தான்
    தகர்த்திடும் சினத்தினாலே
    தழலெனக் கொதித்தாள் லீலா! 91

    வாழ்க்கையிலே சுகம் கேட்டால் கோபமா – அதற்கு
    மகிஷியாகப் போகச் சொல்லிச் சாபமா?
    ஆழ்ந்த என்றன் அன்புசற்றும் சரியுமா- எங்கே
    அடுத்தாலும் உமையழைப்பேன் தெரியுமா? 92

    மஹிஷமாகப் பூமியில் நீர் பிறக்க வேண்டும்- இந்த
    மஹிஷியோடு கூடி அன்பிற் சிறக்க வேண்டும்
    அகிலமெல்லாம் என் காலில் வீழ வேண்டும் – மிக்க
    அன்புடனே நாமிருவர் வாழ வேண்டும்\ 93

    எழுசீர் விருத்தம்

    கரம்பன் என்னும் அரக்கன் மகளாய்க்
    காட்டு மகிஷ முகத்தோடே
    திரும்பப் பிறப்பை எடுத்தாள் லீலா
    தீமை மிகுந்த மனத்தோடே
    உருவில் பெருத்தாள், உளத்தில் சிறுத்தாள்
    ஒவ்வோர் செயலும் உக்கிரந்தான்
    கரத்தில் எடுத்துப் பிடித்தால் போதும்
    கனத்த மலையும் பொடிப்பொடிதான் 94

    மரத்தைப் பொடித்தாள் மலையைப் பொடித்தாள்
    வனத்தைப் பொட்டல் ஆக்கிவிட்டாள்
    சிரத்தை யாகத் தவங்கள் செய்து
    சீக்கிரத்தில் அயனிடத்தே
    வரத்தைப் பெறுவாய் மகளே என்று
    வழியைச் சொன்னான் அவள்தந்தை
    கருத்தை நெஞ்சில் ஆழப் போட்டே
    கடிய தவத்தை அவள் செய்தாள் 95

    உண்ண வில்லை உறங்க வில்லை
    உட்கா ராமல் ஒருகாலால்
    மண்ணை மிதித்து மறுகால் மடித்து
    மாறா நிலையில் அவள்நின்றாள்
    எண்ணத் துள்ளே அயனைநிறுத்தி
    எழுநூ றாண்டு தவம்செய்தாள்
    விண்ணை வெப்பம் தாக்கத் தேவர்
    விதிர்விதிர்த்துப் போனார்கள் 96

    இன்னும் காலம் தாம தித்தால்
    எரிந்து போவோம் எனவெண்ணி
    முன்னே சென்று பிரம னிடத்தே
    முறையிட் டார்கள் தேவரெலாம்
    என்ன செய்ய? வரத்தைக் கொடுத்தே
    இடரைப் போக்கி வருகின்றேன்
    என்று சொல்லிப் பிரமன் சென்றார்
    எதிரே நின்றார் அவள் பார்த்தாள் 97

    “பெண்ணே உன்றன் தவத்தைக் கண்டு
    பெரிதும் மகிழ்ந்தேன். வரங்கேட்பாய்
    விண்ணோ மண்ணோ பிறந்தார்க் கெல்லாம்
    மேவும் மரணம் அதனாலே
    எண்ணிப் பார்த்தே எந்த வகையில்
    எய்த வேண்டும் எனக்கேட்பாய்
    பெண்ணே அதனைத் தருவேன் என்றே
    பிரமன் சொல்ல அவள் கேட்டாள் 98

    “அரனும் மாலும் இணைந்து பிறந்த
    அரிய குழந்தை மண்ணகத்தில்
    அரசன் ஒருவ னிடத்தே ஈரா
    றாண்டு தங்கி வளர்ந்தவனால்
    மரணம் நிகழ வரத்தைத் தருக
    வணங்கு கின்றேன், எனச்சொன்னாள்
    பிரமன் சொன்னார்” தருகின்றேன் நான்
    பிழைசெ யாதே வாழெ”ன்றார். 99

    வரத்தைப் பெற்ற மகிழ்ச்சி தன்னில்
    மண்டைக் கனமும் ஏறியதால்
    உரத்தை எங்கும் காட்ட எண்ணி
    ஓல மிட்டாள், பெரிதாகச்
    சிரித்தாள், நடக்க இயலாவொன்றைச்
    சிந்தித்தோ மென்றுள மகிழ்ந்தாள்
    கரத்தைக் குவித்தாள் ரம்ப னிடத்தே
    கதையைச் சொன்னாள் , அவன்மகிழ்ந்தான் 100

    ஆணும் ஆணும் பிள்ளை பெறுதல்
    ஆகா தம்மா ஆகாது
    வீணில் கால விரயம் இன்றி
    விண்ணை நோக்கிச் சென்றிடுவாய்
    காணும் தேவர் எல்லாம் உன்னைக்
    கண்டு பதறி ஓடட்டும்
    வேணும் படைகள் கூட்டிச் செல்வாய்
    வெற்றி உனதே “ எனச் சொன்னான்.. 101

    -தொடரும்

    Share
  • ஐயப்பன் காவியம் – 6

    ஐயப்பன் காவியம் – 6

    -இலந்தை சு. இராமசாமி

    மகன் வேண்டு படலம்

    விளம் விளம் விளம் விளம் விளம் மா மா – எழுசீர் விருத்தம்

    அரண்மனை எதிரிலே அமைந்தபூங் காவனம் அதனிலே அமர்ந்த வண்ணம்
    விரல்நுனி கடித்தெதோ துயரினில் இருந்தபோல் வீற்றிருந் தாளி ராணி
    அருகினில் மன்னவன் ஆதர வாகவே அவள்கரம் கையெ டுத்தான்
    கருநிற விழிகளில் வழிந்திடும் நீரினைக் கைகளி னால்து டைத்தான்.    53

    அங்கொரு மரத்தினில் காகமொன் றாசையாய் அதன்குஞ்சுக் குணவை ஊட்டும்
    பொங்கெழில் காட்சியைப் பார்த்ததும் வேதனை பொங்கிட அழுது தீர்த்தாள்
    ”இங்கெனக் கிப்பிறப் பில்மக வில்லையோ ஈசனே,”என்று நொந்தாள்.
    சங்கடம் அதனையே பார்த்தவன் விழிகளும் தாமாகக் கசிந்த வன்றே!    54

    “இன்னொரு திருமணம் என்னவ, விரைவிலே ஏற்புடன் செய்து கொள்க
    அன்னவள் வழியினில் மகவினைப் பெறுவதும் ஆகலாம் செய்க” வென்றே
    மன்னவ னிடத்திலே அரசியும் சொல்லிட மன்னவன் மறுத்து விட்டான்
    இன்னமும் வாய்ப்புள திறைவனை வேண்டுவோம் ஏதுமோர் வழிபி றக்கும்    55

    என்றனன் மன்னவன் , இருவரும் எழுந்திட எத்தனிக் கின்ற நேரம்
    மன்னனின் குலகுரு குறுமுனி அவ்விடம் வந்தனர் ,வணங்கி னார்கள்
    ”என்னவோ மாதிரி இருக்கிறீர்  என் குறை?”  என்றவர் வினாயெ ழுப்ப
    “என்றனின் குலம்விளங் கிடமக வில்லையே எனுங்குறை “ என்று சொன்னான்  56

    சொக்கனைக் கேட்கலாம் சொல்லுவான், ஓர்வழி , துயரினை விடுக வென்றே
    அக்கறை யாகவே சொல்லிய அகத்தியர் “அரசனே, நாளைக் காலை
    தக்கதோர் வகையிலே தொழுகைகள் செய்துபொற் றாமரை  வரவ ழைத்தே
    இக்குறை தீரவென் செய்வதென் றொருமடல் எழுதியே கேட்ப மென்றார்       57

    அடுத்தநாள் காலையில் முறைப்படி பூசைகள் அரனுக்குச் செய்த பின்னே
    தொடுத்திடும் விழைவுடன் பொற்றா மரைக்குளம் தூயராய்ச் சென்று நின்றார்
    எடுத்தவோர் ஓலையில் மன்னவன் கோரிக்கை எழுதினார் முனிவர் கோமான்
    விடுத்தனர் வேண்டுகோள் அரியபொற் றாமரை மேலெழ வேண்டு மென்றே!    58

    ”அறந்தலை நிறுத்திடும் அரியபொற் றாமரை ஆக்கமே போற்றி போற்றி
    சிறந்தநூல் ஏதெனத் தேர்ந்தளிக் கின்றதோர் தெய்வமே போற்றி போற்றி
    மறைந்துநீ இருக்கிற இடத்தினை  விடுத்திவண் வருகவே மேலெ ழுந்து
    புறந்தலைப் பட்டுநீ ஓலையை ஏற்றருள் புனிதமே போற்றி போற்றி             59

    என்றலும் நடுவிலோர் சுழலெழுந் தார்த்திட எங்கணும் மீன்கள் துள்ள
    ஒன்றடுத் தொன்றெனப் பரவின சுழல்களும் ஒளிர்ந்தது பொய்கை வெள்ளம்
    பொன்னிற மாகவோர் பொகுட்டெழுந் துயர்ந்தது  பூத்த து கண்ப றிக்க
    தன்னிரு கரங்களைத் தலைக்குமேல் தூக்கியே தவமுனி வணங்கி நின்றார்.       60

    மன்னனும் அவனது மனைவியும் வணங்கிட வந்தது  கரையின் ஓரம்
    மின்னொளிர் தாமரை நடுவிலே ஓலையை விடுத்தனர் முனிவர் நன்றே
    தன்னிடம் தந்தவவ் வோலையைப் பெற்றபொற் றாமரை அங்கி ருந்து
    சென்றது நடுவிலே நின்றது பின்னது சென்றது நீரி னுள்ளே.                     61

    “அரனிடம் சென்றது விடையினை பெற்றிவண் அடைவதற் காகும் நேரம்
    பரவுக ,  அரனையே பாடுக , அவன்புகழ் பாங்குடன் போற்றி செய்க
    உருகியே சொல்கிற உளமுணர் வேண்டுதல் உண்மையில் நலம்கொடுக்கும்
    அரசனும் அரசியும் தொடங்குக” எனமுனி  சொல்லவும் தொடங்கி னார்கள்.     62

    “ஆதியே, அநாதியே அருமறை மூலமே ஆண்டவா போற்றி போற்றி
    சோதியே , தூயனே, சொற்பொருள் வேதியா, சொக்கனே போற்றி போற்றி
    நீதியே, நிர்மலா, நிர்குணா, நாயகா, நேசனே போற்றி போற்றி
    போதமே புண்ணியா, பூரண மானவா, புனிதனே போற்றி போற்றி               63

    பைந்தமிழ்ப் புலவனே, பரமனே, புராரியே, பாண்டியா போற்றி போற்றி
    நந்தியின் தலைவனே, நாதனே, ஞானியே, நம்பனே போற்றி போற்றி
    சுந்தரா அங்கயற் கண்ணியின் துணைவனே, சூக்குமா, போற்றி போற்றி
    சொந்தமே ஆனவா, சூத்திர தாரியே, சுடரொளி போற்றி, போற்றி               64

    கயிலையின் நாதனே, காசியில் விஸ்வனே, காரணா போற்றி போற்றி
    மயிலையின் ஈசனே மலைமகள் கேள்வனே, வானவா, போற்றி போற்றி
    சுயம்புவே, தாணுவே, தொன்மையில் தொன்மையே தோன்றலே போற்றி போற்றி65
    தயவுளோய், சங்கரா, சாமிக்குச் சாமியே, தத்துவா போற்றி போற்றி

    விடையனே, சூலனே, விநாயகன் தந்தையே, வீரனே போற்றி போற்றி
    சடையனே, சடையினில் கங்கையைக் கொண்டவா, சத்தியா போற்றி போற்றி
    படமெடுத் தாடிடும் பாம்பினைப் பூண்டவா, பரிவுளோய் போற்றி போற்றி
    சுடலையில் நடமிடும் நீலமணி கண்டனே, தொடக்கமே போற்றி போற்றி”        66

    மா மா விளம்- அறுசீர் விருத்தம்

    பாடு கின்ற போற்றிகள்
    பண்ணில் தோய்ந்த நேர்த்திகள்
    கூடு கின்ற போதிலே
    குளத்தி ருந்து தாமரை
    ஏடு தூக்கி வந்ததே
    என்ன வென்றே ஆர்வமாய்
    வாடி நின்ற மன்னவன்87
    வாங்கிக் கண்ணால் நோக்கினான்                               67

    “மன்ன னுக்குப் புதல்வர்கள்
    வாய்ப்பர் இரண்டு குழந்தைகள்
    ஒன்று மன்னன் வழியிலே
    ஒன்று மன்னன் வழியிலே

    என்றி ருந்த வாசகம்
    இன்பம் தந்த போதிலும்
    மன்ன வன்றன் மனத்திலே
    வந்த தங்கோர் ஐயமே!                                         68

    வாங்கிப் பார்த்த மாமுனி
    மன்ன வன்பால் கூறினார்
    ”ஏங்கி நின்றாய் மன்னவா
    இரண்டு புதல்வர் வாய்ப்பரே
    ஆங்கோர் செல்வன் வழியிலே
    அரசே உனக்குக் கிட்டுவான்
    பாங்காய் உன்றன் வழியிலே
    பையன் ஒருவன் பிறப்பனே!”                                 69

    என்று சொல்லி அகத்தியர்
    எழுந்த ஐயம் தீர்த்தனர்
    மன்ன னுக்கு மகிழ்ச்சியில்
    வார்த்தை ஏதும் வரவிலை
    தன்னுள் பொங்கும் மகிழ்ச்சியில்
    தத்த ளித்தார் இராணியார்.
    மன்னன் னோடி ராணியும்
    வணங்கி னர் மா முனிவரை..                                   70

    இதற்கு முன்னர் தேவர் உலகில் என்ன நடந்த தென்பதனை
    முதற்ப டிக்கு  நானிங் குரைப்பன்  முனிவர் அறிவார் வரலாறு
    விதிர்வி திர்த்துத் தேவ ரெல்லாம் விசனம் கொள்ளும் படியாக
    அதிர்வு தந்த மகிஷி பற்றி அடுத்த தாகக் கூறுவமே!                   71

    -தொடரும்.

    Share
  • ஐயப்பன் காவியம் – 5

    ஐயப்பன் காவியம் – 5

    -இலந்தை சு. இராமசாமி 

    நாட்டுப் படலம்

    மா மா காய் – அறுசீர் விருத்தம்

    பசுமை சூழ்ந்த எழுநாடு
    பாண்டி யர்தம் வளநாடு
    ஒசிந்து செல்லும் பஃறுளியின்
    ஊட்டம் பெற்ற திருநாடு
    திசைகள் எட்டும் புகழ்பரப்பித்
    திகழ்ந்த நாடு, பொழில்நாடு
    இசைகள் பாடும் பாவாணர்
    ஏற்றம் பெற்ற எழில்நாடு (43)

    பொருநை வையை, பஃறுளியும்
    புகழ்சேர் குமரி பம்பைநதி
    பெருகிப் பொங்கும் காவிரியும்
    பெருமை சேர்த்த நதிநாடு
    திரும்பு கின்ற திசையெல்லாம்
    திகழும் மலைகள் நிறைநாடு
    கரும்பு போலத் திதிக்கின்ற
    கன்னல் தமிழின் மொழிநாடு (44)

    குமரிக் கோடும் அதைத்தாண்டிக்
    கூடும் பெரிய நிலப்பரப்பும்
    அமைந்திருந்த பெருநாட்டில்
    அம்மை மீனாள் முன்னாளில்
    அமர்ந்தே ஆட்சி புரிந்தாளாம்
    அந்தக் காலப் பாண்டியர்க்குத்
    தமரே அன்றி எதிரியெனச்
    சாற்ற எவரும் அங்கில்லை (45)

    காய் காய் காய் மா – எண்சீர் விருத்தம்

    அம்மையருள் மீனாட்சி பரம்பரையில் வந்தோர்
    ஆண்டுவந்த தென்மதுரைத் திருநாட்டில் அந்நாள்
    செம்மைபெறும் உக்கிரபாண் டியனென்னும் மன்னன்
    சிறப்பாக ஆண்டுவந்தான், தேசத்தில் முன்னர்
    வம்புசெய்த கடற்கொள்ளைக் குறும்பர்களை மன்னர்
    வளைத்தொடுக்கி விட்டதனால், அந்நாட்டில் மக்கள்
    இம்மியள வும்பகைமை இல்லாமல் தம்முள்
    ஏதுமொரு பேதமின்றி இயல்பாக வாழ்ந்தார். (46)

    சுதைகொண்டு மனைகட்டி, வாய்க்கால்கள் வெட்டி
    சோவென்று பெய்மழைநீர், அவற்றுள் திருப்பி
    அதைச்சேர்க்கக் குளம்வெட்டி, நீர்த்தட்டுப் பாடே
    அங்கில்லை எனும்வண்ணம் சேமங்கள் செய்தார்
    விதியாக முப்போகம் விளைகின்ற நஞ்சை
    வெவ்வேறு தானியங்கள் விளைகின்ற புஞ்சை
    இதுபோல புவியெங்கும் இல்லையெனும் வண்ணம்
    எழில்கொஞ்சும் தென்மதுரை புகழ்பெற்ற தன்றே! (47)

    நாநயமே உண்டுமிக, இந்நாளைப் போல
    நாணயங்கள் ஏதுமில்லை, பொருள் மாற்றம் கொண்டார்
    பாநயமே மிகுந்திருக்கும் பாடல்களை நெய்த
    பாவாணர் நிறைந்திருந்தார், பைந்தமிழில் வல்லார்.
    பூநயமே நுகர்ந்திருக்கும் வண்டுகளைப் போலே
    புதுநயமாய்க் கலைபயிலும் நாட்டங்கள் கொண்டார்.
    ஓ,நியமம் மிகக்கொண்டார், உடல் வலிமை கருதி
    உடற்பயிற்சிக் கூடங்கள் பலப்பலவும் கண்டார் (48)

    காய் காய் மா தேமா – எண்சீர் விருத்தம்

    கனிவகைகள் விளைவனவோ கொஞ்ச மில்லை
    காய்கறிகள் மிகப்பொலிவாய் அவற்றை விஞ்சும்
    புனிதமுள பூசைக்குத் தேவை யான
    பூக்களுக்கும் பஞ்சமில்லை, அந்த நாட்டில்
    மனைகளிலே வெளித்திண்ணை கட்டி வைத்தே
    வருகின்ற வெளியார்க்கு வசதி செய்தார்
    தனிமையிலே உண்ணாமல் விருந்தை ஓம்பும்
    தகைமையிலே சிறந்திருந்தார், தகுதி மிக்கார் (49)

    போராடும் வாய்ப்பில்லை என்ற போதும்
    பொருதுகிற மல்லர்களோ நிறைய உண்டு.
    தேரோடும் வீதியுண்டு, சொக்க நாதர்
    தெருவேறி வீதியுலா வருவதுண்டு
    நீராடக் கடற்கரையில் வசதி யுண்டு
    நெஞ்சோடு கலப்பதற்குக் காதல் உண்டு
    தாராடும் வாழைமரத் தோப்பும் உண்டு
    சந்தனத்துக் காடுண்டு, வாசம் உண்டு (50)

    கடற்கரையின் வாயிலிலே சுங்கம் வாங்கும்
    கணக்காயர் அலுவலகம் உண்டு, நீல
    இடப்பரப்பில் பொருளேற்றி வந்திருக்கும்
    எண்ணற்ற நாவாய்கள் நிற்ப துண்டு
    புடைப்புடைய மீன்வகைகள் நித்த நித்தம்
    புதுபுதிதாய் ஏற்றிவந்து விற்பதுண்டு
    கடற்பறவைக் கூட்டங்கள் மேற்ப றந்து
    கச்சிதமாய் வட்டமிடும் காட்சி உண்டு? (51)

    அரணாக நெடுஞ்சுவர்கள் மன்னன் வாழும்
    அரண்மனையைச் சூழ்ந்திருக்க, அதனை ஒட்டி
    உருவாக்கி வைத்துள்ள அகழி ஒட்டி
    உயர்ந்திருக்கும் காவல்மரக் காடும் உண்டு
    வருவோர்க்கும் போவோர்க்கும் தடையே இன்றி
    வாசலென்றும் அடைக்காமல் திறந்திருக்கும்
    குருவாக அகத்தியரைக் கொண்டி ருந்த
    கோமகனும் சிறப்பாக ஆண்டு வந்தான். (52)

    Share
  • ஐயப்பன் காவியம் – 4

    ஐயப்பன் காவியம் – 4

    -கவிமாமணி இலந்தை சு. இராமசாமி 

    நகரப்படலம்

    கடல்கோளுக்கு முன்னிருந்த தென்மதுரை

    காய், காய், காய், காய் மா, தேமா- அறுசீர் விருத்தம்

    அம்மைதிரு மீனாக்ஷி அரசாண்ட தென்மதுரை அகில மீதில்
    செம்மைநகர் எனப்புகழைச் சேர்த்தநகர் சிறந்தநகர், தினமு மங்கே
    பொம்மெனவே புதுப்புதிதாய் மக்கள்வந்து பொலியுந கர், புனித மாகச்
    செம்மொழியாம் செந்தமிழின் முதலரங்கம் அந்நகரில் திகழ்ந்த வன்றே! 33

    தமிழ்வளர்க்கும் பஃறுளியும் தழைத்தோங்கப் புதுவெள்ளம் தாவிப் பாயும்
    அமிழ்தமெனும் அதன்நீரைப் பருகுவதால் உடல்நலத்தில் அந்நாள் மக்கள்
    நிமிர்ந்திருந்தார், இளங்காலை புலர்கையிலே மக்களெலாம் நேரே சென்று
    குமிழியிடும் அந்நதியில் குளித்திடுவார் மீனாட்சி கோவில் செல்வார் 34

    தொழிலறிந்தே உழைத்தவர்கள் இருந்ததனால் சோம்பேறிக் கூட்ட மில்லை
    உழவர்களின் ஏர்முனையின் கீறல்களால் ஊர்ப்புறத்தே நஞ்சை புஞ்சை
    செழுமைபெறும், பயிர்செழிக்கும், உணவிற்குச் சிறிதேனும் பஞ்ச மில்லை
    விழவெடுக்கும் திருநகரில் எந்நாளும் விழாக்கோலம் விளங்கு மன்றே! 35

    சோறடுவோர் தெருவினிலே விட்டகஞ்சி சூழ்ந்தெங்கும் கூடி வந்தே
    ஆறெனவே ஓடிவரும் அதில்நடக்கும் யானைகளின் அடிவ ழுக்கும்
    வீறுடைய மல்லர்களின் போட்டிகளும் விறல்களத்தில் மிகவும் உண்டு
    கூறுபுகழ் அறிஞர்களின் விவாதங்கொள் கொலுமேடை நிறைய உண்டே 36

    நாட்டியங்கள் பயில்வோர்கள் இதமாக நடமாட நடன மேடை
    பாட்டியற்றும் புலவர்கட்கும் பாட்டெழுத உதவுகிற பயிற்சி மேடை
    தீட்டுகிற ஓவியங்கள் கற்போர்க்குச் சித்திரங்கள் தீட்டும் மேடை
    நாட்டமுடன் இசைக்கலையைப் பயில்வோர்க்கு நல்லபல நாத மேடை 37

    நல்லபடி விலைகூறி நியாயமுடன் விற்கின்ற நாளங் காடி
    அல்லினிலும் பசியாற்றும் உணவகங்கள் நிறைந்திருக்கும் அல்லங் காடி
    சொல்வலர்கள் நூல்களினை அரங்கேற்றம் செய்கின்ற சூழ ரங்கம்
    வில்முதலாம் போர்க்கலையில் பயிற்சி பெற அங்கங்கே வீர மேடை 38

    மாலைகளைக் கட்டுபவர் கிள்ளியங்கே போட்டமலர் மலையாய்ச் சேரும்
    காலையிலே கோவிலுக்குப் போகிறவர் திருக்கூட்டம் கருத்தை ஈர்க்கும்
    மாலையிலே சோலைகளில் மலர்வாசம் நுகர்ந்திருக்கும் மக்கள் கூட்டம்
    ஓலையிலே எழுதுபவர் இலக்கியங்கள் படியெடுப்பர் ஒதுக்க மாக! 39

    மழைபொழியும் நீர்வீணாய்ப் போகாமல் வழித்தடாகம் வந்து சேரும்
    வழிகிறநீர் வாய்க்காலில் ஓடியங்கே பஃறுளியில் வந்து கூடும்
    பொழில்நிறைந்த ஊருக்குள் பூவாசம் மூக்குகளில் புளகம் ஏற்றும்
    விழிதிறந்து காதலர்கள் பேசிடுவர் களவுநெறி விதிக்குள் செல்லும் 40

    பசியென்ப தங்கில்லை, பட்டினியாய் இருப்பவர்கள் இன்மை யானே
    நசித்தவர்கள் அங்கில்லை நகரெங்கும் வறுமையென்ப தின்மை யானே!
    வசித்தவர்கள் அங்கில்லை வீடின்றி வாழ்ந்தவர்கள் இன்மையானே
    நிசிப்பயமே அங்கில்லை நெஞ்சத்தில் பயமறிந்தார் இன்மை யானே! 41

    கற்றவர்கள் அங்கில்லை, கல்லாதார் இல்லாத கார ணத்தால்
    அற்றவர்கள் அங்கில்லை ஆனவர்கள் ஆயிருந்த கார ணத்தால்
    உற்றவர்கள் அங்கில்லை எவருமங்கே உறவான கார ணத்தால்
    இற்றவர்கள் அங்கில்லை எல்லோர்க்கும் எல்லாமாம் கார ணத்தால். 42

    Share
  • ஐயப்பன் காவியம் – 3

    ஐயப்பன் காவியம் – 3

    -கவிமாமணி இலந்தை சு.இராமசாமி 

    பொதிகைப் படலம்

    விளம் மா தேமா – அறுசீர் விருத்தம்

    மந்தையாம் மேகம், வேழம்
    மலையெலாம் உலவும், கேட்க
    விந்தையாய்த் தென்றல் பாடும்
    வெளியெலாம் பச்சைப் பூச்சு.
    மந்திகள் பாசம் காட்டி
    வயிற்றிலே குட்டி தூக்கும்
    விந்தைகொள் பொதிகை மேடு
    மேற்கிலே திகழ்ந்த தன்றே! (23)

    காட்டிலே சிங்கம் போடும்
    கர்ஜனை மக்கள் வாழும்
    வீட்டிலே கேட்கும், பாயும்
    வேங்கையோ அவ்வப்போது
    நாட்டிலே எட்டிப் பார்க்கும்
    நாயெலாம் வரவு பாடி
    கூட்டமாய்ப் பாய வேங்கை
    கொட்டமும் அடங்கி ஓடும். (24)

    மூங்கிலின் உச்சி ஏறி
    முழுநிலா தொட்டுப் பார்க்க
    ஆங்கொரு கடுவன் முந்தும்
    அதையதன் துணைர சிக்கும்
    ஓங்கிய மரநெருக்கம்
    ஒளியினைச் சலித்துப் போடும்
    வீங்கிய தேக்கின் மேலே
    மேகங்கள் குடியிருக்கும். (25)

    மலைகளும் உயரம், அங்கே
    மரங்களும் உயரம், உள்ளே
    அலைகிற யானைக் கூட்டம்
    அளவிலே உயரம், இந்த
    நிலையிலே வானத் துக்கு
    நெருக்கமாய் இருப்பதாலே
    தலமதை வானோர் தங்கத்
    தகுந்ததாய்க் கருது வாரே! (26)

    சாரலில் நனைந்து கொண்டே
    தடவிடும் தென்றல் காற்றில்
    ஈரமும் அனுப வித்தே
    எதிர்வரும் மந்திக் கூட்டம்
    சாரியாய் அங்கு மிங்கும்
    தாவிடப் பயந்து கொண்டே
    நேரெதிர் அருவி பார்த்து
    நெருங்கிடும் மக்கள் கூட்டம் (27)

    வலம் வரும் முகிலின் மந்தை
    மலைகளின் முகட்டில் ஏறி
    உலவிடும், மரங்க ளெல்லாம்
    உரசிடும் ஒன்றை யொன்று.
    நிலவினைத் தடவிப் பார்க்கும்
    நெடுமரம், தரையின் மேலே
    பலவகைப் பூக்கள் மீது
    பாடிடும் தேனீக் கொள்ளை. (28)

    தெளிந்தநீர் அதனைப் போலே
    தேடியும் காணா வண்ணம்
    குளிர்ந்தநீர் அருவி கொட்ட
    குளிக்கிற மக்கள் பக்கம்
    வளைந்துநீர் தேங்கு கின்ற
    மடுவிலும் துளைந்து பார்ப்பார்
    நெளிந்திடும் நதியாய் ஓடும்
    நீர்வழி பயிரின் ஈட்டம் (29)

    புலிநகம் விற்போர் ஓர்பால்
    புதுப்புதுத் தந்த மாலை
    பலவகை விற்போர் ஓர்பால்
    பழங்களை விற்போர் ஓர்பால்
    விலையுயர் முத்து கொண்டு
    வீதியில் விற்போர் ஓர்பால்
    தலமெலாம் மணக்கச் செய்யும்
    சந்தனம் விற்போர் ஓர் பால் (30)

    மா மா காய் – அறுசீர் விருத்தம்

    சிகரத் திருந்து தேனருவி
    திடுதி டென்னக் கீழ்பாயும்
    பகர ஒண்ணா அழகோடு
    பாயும் செண்ப காதேவி
    தகவாய்க் குளிக்கும் வகையினிலே
    தழைந்து கொட்டும் சிற்றருவி
    சுகமாய்க் குளிக்க முதலருவி
    தொடர்ந்து கொட்டும் குற்றாலம் (31)

    இன்னோர் பக்கம் ஐந்தருவி
    இடையிற் பிரிந்து ஓலமிடும்
    தன்னே ரில்லாக் காட்டுக்குள்
    சத்தம் போடும் பேய்க்கூதல்
    என்னே வாசம், இதமென்றே
    எண்ண வைக்கும் மூலிகைகள்
    முன்னே மூன்று பிரிவாக
    மூலம் காட்டும் திரிகூடம் (32)

    Share
  • ஐயப்பன் காவியம் – 2

    ஐயப்பன் காவியம் – 2

    -இலந்தை சு. இராமசாமி 

    ஆற்றுப்படலம்

    பொதிகையில் சாரல் வீழப்
    பொழிந்திடும் அருவிக் கூட்டம்
    விதவித ஓசை யோடே
    வீழ்ந்திடும், மூலி கைகள்
    பதமுடன் தூக்கி வந்து
    பாய்ந்திட, என்றென்றைக்கும்
    புதுமையாய் ஓடும் ஆறு
    பொருநையைப் பாடு கின்றேன். (12)

    விண்ணினை வாரி வந்து
    வீறுடன் விளங்க , இந்த
    மண்ணிலே தருவன் என்றே
    மனத்திடைக் கொண்டதைப்போல்
    கண்ணிலே நல்ல வண்ணம்
    காணவே பொதிகை மேட்டில்
    பண்ணினைப் பாடிக்கொண்டு
    பாய்ந்திடும் பொருநை வெள்ளம் (13)

    பச்சைமா மலையின் வண்ணம்
    பளிச்சிடும் திருமா லைப்போல்
    உச்சிமேல் வெள்ளை நீத்தம்
    உணர்த்திடும் அரனின் தோற்றம்
    இச்சையாய் இரண்டு பேரும்
    இணைந்தருள் செய்து நிற்க
    விச்சையோ என வியக்க
    மேவிடும் பொருநை வெள்ளம் (14)

    தொன்மையால் பொருள்கள் ஏற்றுச்
    சுமப்பதால், பாசம் காட்டும்
    தன்மையால், மக்கள் தாகம்
    தணிப்பதால், தெளிவு கொண்ட
    நன்மையால், காலம் தாண்டி
    நடப்பதால், உரம்கொ டுக்கும்
    வண்மையால் தமிழைப் போல
    வழங்கிடும் பொருநை வெள்ளம் (15)

    கன்றெனக் குதிக்கும் , சட்டை
    கழற்றிய அரவம் ஊர்ந்து
    சென்றென நடக்கும், பின்னர்
    சினைப்பசு வென்னப் போகும்
    குன்றினை வளைக்கும், மக்கள்
    கும்பியை நிறைக்கும், வாழ்வில்
    ஒன்றிய உறவாய் நெஞ்சில்
    உறைந்திடும் பொருநை வெள்ளம் (16)

    தேடிடும் எதையோ காணச்
    செல்வது போல வேகம்
    ஓடிடும், வரவு கூறி
    ஓமெனக் குரலெ டுத்தே
    பாடிடும், பளிங்கு போலப்
    பரிந்திடும், கரைகள் எங்கும்
    கோடிடும், மக்கள் நெஞ்சில்
    குழைந்திடும் பொருநை வெள்ளம். (17)

    தத்தள தளத ளென்றே
    தாளமும் போடும் ஓர்பால்
    மத்தளம் இசைக்கும் ஓர்பால்
    மௌனமே காட்டும் ஓர்பால்,
    வித்தைகள் காட்டிக் கீழும்
    மேலுமாய்க் குதிக்கும் ஓர்பால்
    இத்தனை வயதென் னாத
    இளமையே பொருநை வெள்ளம் (18)

    மூலிகை தடவி மோந்து
    முன்வரும் நாற்றி லெல்லாம்
    பாலிகை தெளித்துப் பொங்கி
    பாய்ந்திடும் நதியின் பக்கம்
    நாலுகைக் கொண்ட வேழம்
    நற்றுணைத் தாகம் தீர்க்கும்
    சாலிகள் நீர் குடிக்கத்
    தழைத்திடும் பயிர்கள் கூட்டம் (19)

    வீழினும் நன்மை செய்யும்
    மேலவன் போல, மண்ணில்
    தாழினும் நன்மை செய்யத்
    தழைத்திடும் பொருநை நீத்தம்
    பாழினைக் கூட நல்ல
    பசுமையாய் மாற்றி, வாழக்
    கூழினை நல்கி, மக்கள்
    கும்பிடப் பொங்கி ஓடும் (20)

    பயிர்களில் ஜீவன் தூவிப்
    படைப்பதால் பிரமன், பின்னர்
    உயிர்த்தவை காப்ப தாலே
    ஓங்கிடும் திருமால், பொங்கும்
    துயர்தனை மாய்த்து நன்மை
    சூழ்வதால் சிவனார் என்றே
    செயத்தகும் முத்தொழில்கள்
    செய்துமும் மூர்த்தி ஆகும் (21)

    தமிழொடு பிறந்த நீத்தம்
    சரித்திர மாகும், உண்ணும்
    அமிழ்தென ஊட்டம் நல்கும்
    அதன்வழி பசுமை ஆக்கும்
    குமிழியிட் டோடும், தென்றல்
    கூடவே சிந்து பாடும்
    இமிழ்திரைக் கடலில் கூடி
    எல்லையைக் கடந்து போகும் (22)

    Share
  • ஐயப்பன் காவியம் – 1

    ஐயப்பன் காவியம் – 1

    -இலந்தை சு. இராமசாமி

    முன்னுரை

    முப்பது ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சி இது. நங்கநல்லூரிலுள்ள அர்த்த நாரீஸ்வர் கோவிலில் பிரபல உபன்யாசகர் இராமகதா ரத்னம் புதுக்கோட்டைத் தியாகராஜன் அவர்கள் கம்பராமாயணம் உபன்யாசம் நிகழ்த்திக் கொண்டிருந்தார். நிகழ்ச்சிக்கு நான் சென்றிருந்தேன். உபன்யாசத்தின் நடுவில் அவர் சொன்னார்: ”ஐயப்பன் கதையை உபன்யாசம் செய்ய முறைப்படியான காவியம் எதுவுமில்லை. இங்கே கவிமாமணி இலந்தை இராமசாமி வந்திருக்கிறார். அவர் ஐயப்பன் காவியம் ஒன்று எழுதவேண்டும். அதற்குரிய தகுதி உள்ளவர் அவர். கோயிலில் சுவாமி முன்னால் சொல்லியிருக்கிறேன். அவர் ஒத்துக்கொள்ள வேண்டும். 500 பாடல்களுக்குள் அமைந்தாலும் போதும்” என்றார். நான் எழுந்து ஒத்துக்கொண்டேன். உடனே என் மனத்தில் கதை பாண்டி நாட்டில் நிகழ்வதாக அமைக்கவேண்டும் என்று தோன்றியது. அதன்படி ஆற்றுப்படலமாகப் பொருநை நதியைக்கொண்டு எழுத் தொடங்கினேன்,. பிறகு புத்தகங்களைப் படிக்கும் போது கதை சேரநாட்டில் நடப்பதாகப் பல புத்தகங்களில் பார்த்தேன். காவியத்தில் பிழை வரக்கூடாதென்பதற்காக எழுதுவதை நிறுத்திவிட்டேன். பிறகு ஐயப்பன் வரலாற்றை வழிநடைச்சிந்தாக 64 ஆனந்தக் களிப்பு பாடல்களில் எழுதினேன். ஐயப்பன் வில்லுப்பாட்டு இரண்டு மணி நேரத்துக்கும் மேல் நிகழ்த்தும் மாதிரி எழுதி நிகழ்ச்சிகள் நடத்தினேன். எனினும் மனம் சமாதானமாகவில்லை. சென்ற மாதம் ஒரு ஆங்கிலக் கட்டுரையைப் படித்தபோது திருவாங்கூர் மகாராஜா பந்தள ராஜாவைப் பாண்டியராஜன் என்றுதான் அழைப்பார் என்று எழுதப்பட்டிருந்தது. உடனே விழித்துக் கொண்டேன். ஐயப்பன் காவியத்தை மீண்டும் தொடங்குவது என்று முடிவெடுத்தேன். பூதநாதோபாக்கியானம் ஐயப்பன் கதையை விரிவாகச் சொல்கிறது. ஸ்காந்தம் மாஹாசாஸ்தா கதையைப் பேசுகிறது. சிலப்பதிகாரத்தில் குறிப்புகள் உள்ளன. அப்பர் சாத்தனை மகனாய்ப் பெற்றான் என எழுதியிருக்கிறார்.

    என்றாலும் காலபேத குழப்பங்கள் ஏற்பட்டன. ஐயப்ப பக்தர் திரு அரவிந்த சுப்ரமணியம் ஸ்ரீ மஹாசாஸ்தா விஜயம் எனும் ஒரு ஆய்வுப் பதிப்பு வெளியிட்டிருக்கிறார். அப்புத்தகம் தற்செயலாகக் கையில் கிடைத்தது. முதலில் படித்தபோது குழப்பம் அதிகரித்தது. பிறகு மீண்டும் ஆய்வு செய்த போது குழப்பங்கள் ஒவ்வொன்றாக விலகின. கதையில் தெளிவு கிடைத்தது. எழுதத் தொடங்கிவிட்டேன். கவிஞர் விவேக்பாரதி வல்லமையில் வெளியிடுகிறோம் என்றார். அதைப் பேறாகக் கருதினேன். வல்லமை மதிப்பு மிக்க ஒரு தளம் என்பதை அறிவேன்.

    நான் எழுத எழுதக் காவியம் இங்கே தொடர்ந்து வெளியாகும். பொதுவாக விருத்தத்தில் எழுதுவது வழக்கம். நானும் அப்படித்தான் செய்யப்போகிறேன்,பாரதி பாஞ்சாலி சபதம் குறுங்காவியத்தைச் சிந்துப்பாடலில் எழுதி இடையிடையே விருத்தங்களைக் கொணர்ந்தார். நான் விருத்தப்பாக்களில் எழுதி இடையிடையே சிந்துப்பாடல்களைக் கொணரப் போகிறேன். வண்ணப்படல்கள், சந்தப்பாடல்களும் வரும். இயன்ற அளவு விருத்தத்தின் பல வகைகளைப் பயன்படுத்த முயல்வேன்,

    சாமியே சரணம் ஐயப்பா!

    அன்புடன்,
    இலந்தை சு இராமசாமி
    17-6-2019

    ஐயப்பன் காவியம்

    காப்பு

    வானின் றிறங்கியிந்த வையத்திற் போந்தவருள்
    ஞானத் திருசாஸ்தா நற்கதையை – ஆனநறுங்
    காவியமாய்ப் பாடக் கணபதியே காத்தருள்க
    பாவியக்கப் பாடும் படி.

    நூல்

    கலிவிருத்தம்

    உலகி லேயறம் ஓங்கி நிலைக்கவும்
    இலகு பக்தியின் ஏற்றம் சிறக்கவும்
    தலமொ ளிர்ந்திடத் தாரணி வந்தவன்
    மலர்ந றும்பதம் வாழ்த்தி வணங்குவாம்

    அவையடக்கம்

    பூத நாதனின் பொற்புடை மாக்கதை
    நீத மாய்த்தமிழ் நேர்ந்து கொடுத்திடப்
    போத மில்லெனும் போது மிறங்கினேன்
    சோதி மாமலை சுண்டெலி தூக்குமோ?

    ஈர நத்தையி ழுத்திடும் கோட்டிலே
    சார மாய்மொழி தானுள தாகுமோ?
    ஆர மாய்த் தமிழ் ஆய்ந்தவர் என்னையும்
    வார மாகவே வாழ்த்திய ருள்கவே!

    வேண்டும் காவியம் என்று விளம்பியே
    தூண்டி விட்டநல் தூயவர் ஆசியால்
    ஈண்டிம் மாக்கதை ஈசன் வரத்தினால்
    பாண்டி யன்மர பேந்தலைப் பாடுவேன்!

    அறம் நிறுத்திடும் ஆண்டவன் சாத்தனை
    மறம்வி ளைத்தொளி வார்த்தருள் ஐயனை
    திறம்ப லப்பல சேர்த்திடும் நாதனை
    பெறுந்த மிற்சொலில் பேசுவன் பாட்டிலே!

    கரணம் போட்டிடக் கைவராக் காவியம்
    சரணம் கூவிடத் தன்வச மாகுமே
    திரண மாத்திரம் செப்பிடப் போதுமே
    மரணப் போதிலே வந்தருள் கூட்டுமே!

    ஐயன் பெருமை

    மோகி னிக்கொரு முத்தனாய் வாய்த்தவன்
    பாகம் தந்தவன் பாலனாய் ஆனவன்
    போகி பூரண புஷ்கலா நாயகன்
    யோகி ஆனவன் ஓங்கெழில் ஐயனே!

    நீதி காக்கிற நேர்மை யுடையவன்
    சாதி பேதங்கள் தாண்டிய சத்தியன்
    சோதி யாகிடும் சுந்தரன் சூக்குமன்
    ஆதி யானவன் அற்புதன் காந்தனே!

    ஊர்ப்பு றங்களில் ஓங்கருள் செய்பவன்
    கார்க்கு லங்களைக் கட்டியே மேய்ப்பவன்
    பேர்ப டைத்தவன் பிள்ளையாய் வந்தவன்
    சேர்த்தி டுங்கரச் செண்டலங் காரனே!

    சபரி மாமலை தங்கி யருள்பவன்
    அபயம் நல்கிடும் அண்ணல ருந்தவன்
    இபத்தி லூர்பவன் என்றுமி ளையவன்
    சுபங்கொ டுத்திடும் தூமணி கண்டனே!

    பாண்டி நாட்டிலே பையனாய் வந்தவன்
    வேண்டிச் செந்தமிழ் வித்தகம் கொண்டவன்
    ஆண்ட வன்மகன் ஆரியங் காவினன்
    யாண்டும் உள்ளவன் ஐயனைப் போற்றுவோம்

    இலந்தை யூரன் இராமனின் பேருளோன்
    நலந்தி கழ்ந்திட நாயகன் ஐயனின்
    வலந்தி கழ்ந்திடு மாத்தமிழ்க் காவியம்
    சிலந்தி நெய்வதைத் தேர்ந்திவண் செய்வதே!

    பின் குறிப்பு: ஒரு காவியத்தின் பாயிரத்தில் யார் எழுதச்சொன்னது, யார் எழுதியது என்பதைக் கவிஞனோ வேறு பிறரோ சொல்லலாம். எழுதப்போகும் தெய்வத்தின் தன்மையையும் கோடிட்டுக் காட்டியும் எழுதலாம். கடவுள் வாழ்த்தும் அவையடக்கமும் அவற்றுள் அடக்கம்

    Share