Category: கிரேசி மொழிகள்

கிரேசி மொழிகள்

  • மீனாட்சி திருக்கல்யாணம்….!

     

    ஈசனார் மீனாள் இணைந்த திருமணத்தை
    பூசலா நாயனார் போலவே -யோசனையில்
    கண்டு களித்ததை கூறிடக் கற்பகத்தின்
    குண்டு குமாரனே(பிள்ளையார்) காப்பு….(1)….

    ———————————————————-
    கல்யாணக் கதை கதையாம் காரணமாம்
    —————————————————-

    சென்றமுறை பார்வதி சம்பு திருமணத்(து)
    அன்றமர்ந்தான் தெற்கில் அகத்தியன் -குன்றென
    மீண்டுமவன் காண மதுரையில் மீனாட்சி
    ஆண்டவன் கல்யாணம் ஆம்….(2)….

    பெண்வீட்டார் – பிள்ளை வீட்டார் அறிமுகம்
    ———————————————————–

    மண்சுமந்தோன் பிட்டுக்கு மாப்பிள்ளை, மைத்துனனோ
    மண்சுமந்த வாயன், மணமகளோ -மண்புகுந்த
    மேனாள் இமவான் மகளான மாதங்கி
    மீனாளாய் வந்த மலைப்பூ….(3)….

    நிச்சயதார்த்தம்
    ———————

    சித்திரைத் திங்களில் சித்திறை சொக்கனுக்கு
    இத்தரை வந்த, இமவானின் -புத்திரியை,
    தத்தாய் மலயத் துவசன் வளர்த்தவளை,
    முத்தண்ணா செய்தார் மணம்….(4)….

    கல்யாணப் பத்திரிகை
    ——————————–

    சித்திரைத் திங்கள் சனிக்கிழமை அன்றுபகல்
    இத்தரையில் மீன இலக்கினத்தில் -பத்தரைக்கு
    பின்னாலே மீனாளை அண்ணா மஹாவிஷ்ணு
    கன்னிகா தானம்சொக் கர்க்கு….(5)…

    கல்யாணச் சத்திரம்
    ————————-

    அத்தனைபேர் வந்ததால், ஆலவாயில் தங்கிட
    சத்திரம் இல்லாமல் சம்புமையாள் -கைத்தலம்
    பற்றுவதை மச்சான் பெருமாள் தமுக்கத்தின்
    வெற்றிடத்தில் வைத்தான்பார் விஷ்ணு….(6)….

    சீர் வரிசை
    ————–

    பிள்ளைக்கு சீராகப் பொன்னில் திருவோடும்
    வெள்ளி முலாமிட்ட வெண்ணீறும் -கொள்ளியிடும்
    குச்சிக்குப் பூணிட்டு காளைக்கு லாடமிட்டார்
    மச்சினர் மல்லாந்த மால்….(7)….

    வரதட்சிணை
    —————

    குவளைக்குள் பிச்சைக்கூழ் கொள்வோன் கறாராய்
    அவலுக்(கு) அளித்தேழை ஆன -குவளைக்கண்
    மாலோனை முன்ஜாமீன் மன்றாடி கேட்பதற்குள்
    பாலாழிக் கண்ணஅம் பேல்….(8)….

    ஜான்வாசம்
    ————–

    சித்திரை வீதியில் ஜான்வாசம், கொட்டாவி
    நித்திரை மைத்துனர் நீட்டிவிட -பித்தனமர்
    அக்காளை அஞ்சி அலங்காநல் லூர்சென்று
    உட்கார ஊர்வலத்திற்க்(கு) ஓய்வு….(9)….

    கண்ணூஞ்சல்
    —————–

    கண்ணூஞ்சல் ஆடினர் பெண்ணும்மாப் பிள்ளையும்
    விண்ணூறும் தேவர்கள் வீசிட -மண்ணூறும்
    மக்களண் ணாந்துமண மக்களைக் காட்டியிட்டார்
    கக்கமுறை சேய்களுக்குக் கூழ்….(10)….

    மாப்பிளைக் கண்ணுக்கு மையிடுதல்
    ———————————————-

    மாப்பிள்ளை கண்ணுக்கு மையிட்டோர் கைகளில்
    தீப்புண் தகிக்க தவித்தனர் -கூப்பிட்ட
    மைத்துனர் மாலன் மருத்துவனால் பச்சிலையை
    வைத்தணைத்தார் நெற்றிக்கண் வீச்சு….(11)….

    காசியாத்திரை-மாப்பிள்ளைத் தோழன்
    ———————————————-

    யாப்பில்லை என்றாலும் ஏழை தருமிக்கு
    மாப்பிள்ளைத் தோழன் மரியாதை -கூப்பிட்டு
    காசியாத்தி ரைக்கு குடைவிசிறி தந்தனன்
    ஈசன் விளையாடல் இது….(12)….

    சிவகாசி யாத்திரை செல்லல் தடுக்க
    விவகா ரமானமச்சான் விஷ்ணு -சிவகேசம்
    மேலமர்ந்த கங்கையை மொண்டு தரையிலிட
    ஆலவாய் காசிநகர் ஆச்சு….(13)….

    சம்பந்தி சண்டை
    ———————

    சொக்கன்கல் யாணத்தில் சம்மந்தி சண்டையிட
    விக்கினமாய் யாரும் வராததால் -சக்களத்தி
    கங்கை குதித்திறங்க செங்கண்மால் தம்பதிக்கு
    தன்கையில் ஏந்தித் தெளிப்பு….(14)….

    மாப்பிள்ளை-முறுக்கு
    ————————-

    குனித்த தலையாய், குதிகால் நடையாய்
    பனித்த விழியாய் பயந்து -தனித்திருந்து
    புக்ககக் கூடலில் பூனையாய் வால்சுருட்டி
    முக்கண்ணன் சொக்கன் முழிப்பு….(15)….

    மீனாளைப் பார்த்து மதுரை மயங்கியதில்
    மானாளை முற்றும் மறந்தது -தூணாளும்
    ஆய்ப்பிள்ளை மச்சான் அநுதா பமாயளிக்க
    மாப்பிள்ளை வாயில் முறுக்கு….(16)….

    கன்னிகாதானம்
    ——————-

    தாரையை வார்க்கையில் தன்சார்பில் தந்தையாய்
    யாரை நிறுத்துவது என்றீசர் -பாரமுற
    பாக்கையில் வந்தார் பெரிய புராணத்து
    சேக்கிழார் சாமி சபைக்கு….(17)….

    பாம்பலையில் தூங்கும் பெருமாள் சுபாவமாம்
    சோம்பலை விட்டு சுறுசுறுப்பாய் -மாம்பலம்
    நல்லிகுப்பு சாமியிடம் செல்ல சகோதரிக்காய்
    அள்ளிவந்தார் சேலை அலைந்து….(18)….

    கண்ணைப் பறிக்கின்ற கூறைப் புடவையில்
    மின்னலென மேடையில் மீனாள்தன் -அண்ணன்
    மடியமர நான்முகன் மாங்கல்யம் ஏந்த
    முடிந்தான் அரன்முடிச்சு மூன்று….(19)….

    அம்மி மிதித்தேறி அருந்ததி பார்த்தல்
    ————————————————

    சொக்கனுடம் மீனாட்சி அக்கினியைச் சுற்றிவரல்
    வக்கணையாய்க் காண வசிட்டனுடன் -அக்கணம்
    அம்மிமிதித்(து) ஏறி அருந்ததி பார்த்தனள்
    விம்மிஆ னந்தநீர் விட்டு….(20)….

    கல்யாணத்திற்கு வந்த VIP பிள்ளைகள்
    ————————————————

    கல்யானைக்(கு) அன்றுயிர் கொள்ளவைத்த சொக்கனைக்
    கல்யாணம் கொள்கிறாள் கன்னிமீனாள் -தொல்யானைப்
    பிள்ளையும் வேலனும் பார்த்ததால் பெற்றோர்க்கு
    இல்லையொண் ணாத இனிப்பு….(21)….

    கல்யாணச் சாப்பாடு
    —————————-

    உண்ட பெருவிருந்தால் குண்டோ தரன்கொண்ட
    தொண்டை அடைத்திடும் தாகத்தைக் -கண்டசிவன்
    கைவை எனச்சொல்லக் கைமாற்றி வைத்தவன்முன்
    வைகை விரைந்தாள் வளைந்து….(22)….

    மொய் எழுதுதல்
    ——————–
    மாப்பிள்ளை சொக்கன் மணமகள் மீனாளைக்
    காப்பிட்டுக் கொள்கிறார் கல்யாணம் -சாப்பிட்டு
    மொய்யெழுது வோர்க்குமச்சான் மாலோலன் தாம்பூலப்
    பையேந்தி நிற்பார் பணிந்து….(23)….

    நலங்கு
    ———

    விடக்கண்டன் சொக்கன் விடாக்கண்டன் ஆகி
    விடமறுத்தான் தேங்காய் நலங்கில் -படபடத்த
    கெண்டை விழிமீனாள் கோபிக்க அஞ்சியரன்
    அண்டத்துக் கோளை அளிப்பு….(24)….

    மாலை வரவேற்பு
    ——————–

    மச்சினன் வேண்டியதால் மாலை வரவேற்பில்
    அச்சிவன் தாண்டவம் ஆடிட -உச்சத்தில்
    ஓடிவந்து மீனாள் ஒயிலாக சேர்ந்துகொள்ள
    கூடலுக்குக் கூடுதல் கூத்து….(25)….

    சாந்தி முகூர்த்தம்
    ———————–

    முதலிரவில் மீனாள் கதவடைத்துச் சொன்னாள்
    மதுரைவாழ் மக்களின் மாண்பு –
    பதவிசாய் நாகரீகப் பண்பு -பொதுவிடத்தில்
    மாட்டோடும் ஓட்டோடும் மானத்தை வாங்காதீர்
    வீட்டோட மாப்பிள்ளை வாள்….(26)….

    இச்சென்று முத்தமிட ஈசன் நெருங்கிட
    நச்சென்று நாகம் நெளிந்தது -அச்சச்சோ
    என்றலறி மீனாள் எகிறி குதித்தோட
    அன்றுசிவ ராத்திரி ஆச்சு….(27)….

    பாலிகை கரைப்பு
    ———————–

    மாளிகை மீனாள் மயானனை ஏற்றிட
    பாலிகையை பெண்கள் பகிஷ்கரிப்பு -நாலுகை
    மைத்துனன் வைகையில் மோகினியாய் தானியத்தைக்
    கைத்தலம் ஏந்திக் கரைப்பு….(28)….

    கட்டுச் சாதக் கூடை
    —————————

    கழுத்தரவம் தன்னை கடாசி எறிந்தான்
    அழுத்தியுமை யாளை அணைக்க -பழித்தனர்
    கட்டு விரியன்கள் கட்டிக் குலாவிடும்
    கட்டுச்சா தக்கூடை கண்டு….(29)….

    மலயத்துவசன் பிரிவோபசாரம்
    —————————————

    கலையத் துவங்கினர் கல்யாணம் கண்டோர்
    அலையில் படுத்தான் அரிமால் -மலயத்
    துவசன் வளர்ப்பை தழுவிப் பகர்ந்தான்
    கவசமே கூடலைக் கா….(30)….

    சிவசிவ என்று சிரத்தில் மலையத்
    துவசனார் குட்டித் தொழுது -அவசரமாய்
    கெஞ்சினார் ”நஞ்சுண்டா மிஞ்சினாலும் மீனாளை
    நெஞ்சில் அமிழ்தாய் நிறுத்து”….(31)….

    கோயிலுக்குல் புகுதல்
    —————————-

    சித்தரின் சன்னிதியில் சொக்கனும் மீனாளும்
    சுத்திவந்து தம்பதியாய் சேவித்து -தத்தம்
    கருவறைக்குள் செல்வதைக் கண்ட மதுரை
    அரஹர சம்போவென்(று) ஆர்ப்பு….(32)….

    பல ஸ்ருதி
    ————-

    மாதரசி மீனாள் மஹாதே வனைமணந்த
    போதரிசி வாழ்த்தைப் பொழிந்தோர்க்கும் -காதுருசி
    கொண்டதைக் கேட்டோர்க்கும் கேட்டதை சொன்னோர்க்கும்
    விண்டதெலாம் வாணியவள் வாக்கு….(33)….கிரேசி மோகன்….!

    Share
  • ’’கிரகணம்’’….!

     

     

    ”சிவன்தலை சூடிய சந்திரனை பாம்பு
    கவர்ந்திடு மோவாயால் கவ்வி!, -சிவந்ததுமூன்(BLOOD MOON)
    போக்கில் தடம்மாற, பூமி புகுந்ததால்
    காக்காஊஷ் ஆச்சு கலை(சந்திரன்)’’….!
    (அல்லது)
    ‘சிவன்தலை சூடிய சந்திரனை பாம்பு
    கவர்ந்திடு மோவாயால் கவ்வி!,-உவந்திடும்,
    அஞ்ஞானக் கேள்விக்(கு) அட!பதில் என்னவோ!,
    விஞ்ஞானம் விட்ட வழி’’….!

    ’’அகந்தை கிரகணம் ஆன்ம நிலவுள்
    புகுந்து பிடிக்கும் பளிச்சை, -உகந்துன்னுள்,
    நானார் விசாரிக்க நம்மைவிட்(டு) ஓடுமே:
    சோணா சலரமணன் சொல்’’….கிரேசி மோகன்….!

    Share
  • ஸ்ரீ ரமண வசனாம்ருதங்கம்…..!

    ’பாலக்காட்டு மணி அய்யர்’’(காந்து )….!

    —————————————————

    குரு எத்துனை அவசியமோ, சீடன் அத்துனை முக்யம்….!
    ————————————————————————————————————-
    எங்கள் குழு(கிரேசி கிரியேஷன்ஸ்) இயக்குனர், நண்பன் காந்துவுடன் டெலிஃபோனில் பேசிக் கொண்டிருந்தேன்….அப்போது அவர் ‘’பாலக்க்காட்டு மணி அய்யரைப்’’ பற்றி சிலாகித்து சுவையான அனக்டோட்ஸை பறிமாறினார்….மிருதங்கம் பலா மரத்தால் செய்வார்களாம்….உடனே நான் அப்ப அவர் ‘’பலாக்காட்டு மணி அய்யர்’’ என்றேன்….காந்து ரஸித்தார்….நிற்க இல்லை அமர்க….
    உடனே பாரதிதாசரின் ‘’வேரில் பழுத்த பலா’’ நினைவுக்கு வந்தது….வெண்பாவுக்கு நல்ல ஈற்றடியாகப் பட்டது….இருந்தாலும் ‘’வேரில் பழுத்த விலா’’ என்று இருந்தால் மோனை சரியாக இருக்குமே, ஆனால் பொருள் சரியில்லையே என்று மூளையைக் கசக்கியபோது தோன்றிய வெண்பா….மாவீரன் அருச்சுனன் பேரில்….எண்ணங்களின் இழுத்த இழுப்புக்கெல்லாம் செல்வதை ஸ்ரீ பகவான் ரமண மகரிஷி ‘’சேஷ்டை’’ என்கிறார்….வாழ்வதே சும்மா இருக்கத் தெரியாத ‘’சேஷ்டைதான்’’….’’சேஷ்டை’’ வெண்பாவைப் பார்ப்போம்….!

    ‘’தோள்வலி மிக்கவன், தீரன் தனஞ்ஜெயன்
    கேள்விக் கணைதொடுத்துக் கீதையை, -வேள்வியாய்,
    தேரில் அமர்ந்தவன் தாஸனாய்ப்(சீடனாய்ப்) பெற்றதால்,
    போரில் பழுத்த பலா’’….கிரேசி மோகன்….!

    ”மதிய உதயம்”….
    ———————————

    சூரி நாகம்மாள் ஸ்ரீ ரமணாஸ்ரம லேகுலு….!
    பகவானுக்கு மிகவும் பிடித்த நூல்கள், ”யோக வாசிஷ்டம்”,
    ”ரிபு கீதை”, ”திரிபுரா ரஹஸ்யம்”…..!

    ”பூத,வர்த்த மான, பவிஷ்யத், இவைமூன்றும்,
    ஈதனை ஒத்த இடையூறாம், -சாதகனை,
    மொய்த்து மொசுக்கிடும், முக்திப் பழம்தனை,
    வைத்தியம்”வா சிஷ்ட வகுப்பு”….கிரேசி மோகன்….!

    வகுப்பு என்று முடித்தமைக்கு காரணம், ”என்னதான் புத்தகத்தில்
    படித்தாலும், குருமூலம்(TEACHER) அறிந்து கொள்வதே சிலாக்கியம்….பூதப் பிரதிபந்தம்-இறந்தகால பந்தங்களினால் ஏற்படும் இடையூறு….வர்த்தமான, பவிஷ்யத்-முறையே -நிகழ்கால,
    எதிர்கால இடையூறுகள்….வாசிக்கவும் வித்யாரண்யர் எழுதிய ”பஞ்சதசீ”….இதை உறுதி செய்வது ”வாசுதேவ மனனம்”….!

    AVM RAAJU வுக்கு பதில் மெயில் வழி….!
    —————————————————————————–

    .ராஜு, இந்தக் குழப்பம்(திருக்கு) எனக்கும் உண்டு….இதை நான் வேடிக்கையாக எழுதியுள்ளேன்….!
    குரு எத்துனை அவசியமோ, குருவை சீடன் தேடிக் கண்டு பிடித்தல் அத்துனை முக்யம் என்பார் ஸ்ரீ ரமண மஹரிஷி அவர்கள்….!இதை நான் வேடிக்கையாக எழுதியுள்ளேன்….!
    ZENபா….!
    —————————-
    ஒரு சீடன் குருவைத் தேடிப் போனான்…குருவைக் கண்டதும் சீடன்….
    சீடன் -குருவே எனக்கு வழி காட்டுங்கள்….
    குரு -என்னைத் தொடர்ந்து வா….
    (சீடன் குருவைத் தொடர்ந்து செல்ல….திடீரென்று நரகம் வந்தது….சீடன் அதிர்ந்து போய்….)

    சீடன் -குருவே தாங்கள் ZEN தானே….(கேட்க)
    குரு -(பயங்கரமாய் சிரித்து…) நான் YAMAHA டா குருமுட்டை….(என்றார்)….

    ரமணர் சொல்லுவார் யாருடைய சன்னிதியில் உனக்கு நிம்மதி ஏற்படுகிறதோ(எந்த உபதேசமும் இல்லாமல்)அவரே குரு….

    ”சன்னிதி மாத்திரத்தில் சத்குருவைக் கண்டறிவாய்
    அன்நிதி கண்டபின் ஐம்புலனை, -கொன்னுதீர்:
    யாதுஊ ரேதான் யாவரும் கேளிர்தான்
    தீதொடு நன்றும் திருக்கு’’….கிரேசி மோகன்….

    Share
  • தத்த குரு வெண்பாக்கள்….!

     

    தத்த குரு வெண்பாக்கள்….!
    ———————————-

    அத்திரி இல்லாள் அனுசூயா தொட்டவுடன்
    மொத்தவுரு ஆனார்கள் மூவிறையும் -இத்தரையில்
    தத்தகுரு போலாமோ மத்தகுரு மார்களெலாம்
    சித்தமொரு மித்தவரைச் சேர்….(1)….!

    அத்தையுரு வற்ற அருவ சொரூபமாய்
    சித்தமொரு மித்தென்றும் சிந்திக்க -தத்தகுரு
    சூலம், டமருகம், சங்காழி ஏந்தியமூ
    மூலம் முனியாய் முளைப்பு….(2)….!

    வேதங்கள் நான்கும் விளையாடும் நாய்களாய்
    பாதங்கள் பற்றிப் பணிந்திருக்க -ஓதுமயன்
    தாணுமால் சேர்க்கையாய் தத்தகுரு தேவரை
    காணமால் கொள்வீர்கண் காள்….(3)….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180727 Yoga Vasishta – Guru PurNima – watercolour – charcoal -A4 -100 dpi lr

     

    லகு வாசிஷ்டம்
    ——————–

    வந்ததில் பற்றும் வருவதில் ஆர்வமும்
    அந்தநாள் ஞாபக ஆசையும் -தொந்தரவாம்
    ஆகவே மாயைக்(கு) அடங்காது ஆட்டத்தை
    ராகவா ஆடு ரசித்து….!

    ஆர்பரித்து ராகவா மேற்புரத்தில் ஆடுநீ
    பார்ப்பவர் கண்ணுக்குப் பற்றுதல்போல் -நீர்பரப்பாய்
    அஞ்சின்(ஐம்புலன்) அலைகளற்ற நெஞ்சிருக்க, வைக்கலாம்
    பஞ்சுக்(கு) அருகில் பிழம்பு….!

    இல்லாத ஒன்றை இருப்பதாய்க் காட்டிடும்
    பொல்லாத நெஞ்சமொரு போக்கிரி -வில்லாளி
    ராகவா, ஆகவே மோகவாய் போகாது
    யோகமாம் வாசிஷ்டம் எய்து….கிரேசி மோகன்….!

    குரு பஞ்சகம்….!
    ———————

    ஒருநோயும் அணுகாத உடல் ஆரோக்கியம்
    ஓகோ எனப்புகழ் , ஒரு மேரு திரவியம்
    குரு பத்மபாதம் மனம் குவியாதபோது
    கண்ட பயனென்ன பயனென்ன பயனென்னவோ….(1)

    திருவொத்த மனையாள் திடமான பிள்ளைகள்
    தங்கவோ மாளிகை தாயாதி உறவினர்
    குரு பத்மபாதம் மனம் குவியாதபோது
    கண்ட பயனென்ன பயனென்ன பயனென்னவோ….(2)

    மறை சாத்திரங்கள் முறையோடு பயின்றாய்
    உரைநடை பாட்டதில் கரைகண்டு வென்றாய்
    குரு பத்மபாதம் மனம் குவியாதபோது
    கண்ட பயனென்ன பயனென்ன பயனென்னவோ….(3)

    அருகாமை அண்டை அசலூர் அனைத்திலும்
    மருவிலா மதிப்புடன் மாசற்றிருப்பினும்
    குரு பத்மபாதம் மனம் குவியாதபோது
    கண்ட பயனென்ன பயனென்ன பயனென்னவோ….(4)

    ஈற்றடியில் ஈரேழு உலகாளும் மன்னர்கள்
    போற்றிடப் புலமையில் ஆற்றல் இருப்பினும்
    குரு பத்மபாதம் மனம் குவியாதபோது
    கண்ட பயனென்ன பயனென்ன பயனென்னவோ….(5)

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    ‘பாப்பா நெமிலிவாழ் பாலா திரிபுரை,
    காப்பாள், அடியார் கரம்பிடித்துச், -சேர்ப்பாள்
    அதியற் புதமான ஆன்ம உலகில்:
    துதியவளை சாக்லேட்டைத் தந்து’’….(1)

    ’’அமளி இலாத அமைதி லயத்தில்,
    ரமண மயமாய் ரமிப்பு, -நெமிலிவாழ்,
    பாண்டுரங்கன் சோதரி, பாலா திரிபுரையை
    வேண்டி யுறங்க வரம்’’….(2)

    ‘’காளி அரக்கர்க்கு, கற்பகம் பக்தர்க்கு,
    யாளி அமரும் எஜமானி, -தோளிரெண்டில்,
    வேலா யுதன்அண்ணன் வேழனைச் சுமந்திடும்,
    பாலா நவராத்ரிப் பெண்’’….(3)

    ’’வெள்ளை அரவிந்தம் வீற்று நெமிலியில்
    கொள்ளை அழகாய் கொலுவிருக்கும், -பிள்ளையவள்,
    பாலா திரிபுரையைப் போற்றிப் பணிவோர்க்கு
    நாளாம் நவராத்ரி நாள்’’….(4)

    ’’சுப்ரமண்ய அய்யரின் சொப்பனத்தில் வந்(து)ஆற்றில்,
    தெப்பமாய் நீந்திக்கண் தென்படுவேன், -அப்புறம்,
    ஆலயம் வேண்டாம், அகத்தில் குடிவைப்பீர்’’,
    வாலைபா லாஅருள் வாக்கு’’….(5)

    ‘’மூலாதா ரத்தினில் மூளும் கனலவள்,
    கோலா கலகோ குலன்தங்கை, -பாலா
    திரிபுரையைக் காண திருநெமிலி செல்வோம்
    ஹரிசோ தரியே அரண்’’….கிரேசி மோகன்….(6)

    ”சுண்டு விரலளவு சொப்புப் பதுமையாய்
    கண்டு பிடித்தனர் காட்டாற்றில், -கொண்டுவந்த,
    நாலா யிரத்தோன் நவனீதன் சோதரி
    பாலாம் பிகையவள் பேர்”….கிரேசி மோகன்….(7)

    விடிகாலை வெளிச்சம்”….
    ———————————–

    “மாலை மயக்கம், மதிய உதயம்அதி
    காலை வெளிச்சம் கனவாகும், -பாலை,
    திரிபுரையைக் கண்டு தரிசிப்போர் , தம்முன்,
    எரிபவை கூட எழில்”…..கிரேசி மோகன்….(8)

    ”பாலாவின் பேர்சொல்லி பாம்பை எழுப்பிடு.
    மூலாதா ரத்தில் முழிபிதுங்கும் : -தோளா
    யிரத்தில் உறங்கிடும், யாதவன் தங்கை,
    சிரத்தில் சிரிப்பாள் சிலிர்த்து’’….கிரேசி மோகன்….(9)

    ’’இமியளவும் தீங்கின்றி, இன்சொல் உரைக்க,
    நெமிலிவாழ் பாலா நெகிழ்வாள் , -ஞமலியின்,
    வாலை நிமிர்த்தித்தன், ஆளாய் அமர்த்துவது,
    பாலை திரிபுரையின் போக்கு’’….கிரேசி மோகன்….(10)

    ஞமலி -நாய்

    ”ஓலை ஜபமணி மாலை அபயமொடு
    காலை மடித்து கொலுவிருக்கும் -பாலை
    திரிபுர சுந்தரியைத் தேடி நெமிலி
    வருபவர் வாழ்வில் வளம்….கிரேசி மோகன்….(11)

    ”பயமகல பாலா, பலம்பெருக பாலா,
    லயமடைய பாலா, லலிதை -மயமான,
    ரூப தியான ரமிப்பில் இருப்போர்க்கு,
    ஆபத்(து) உதவி அவள்”….கிரேசி மோகன்….(12)

     

    ‘’திரிபுர சுந்தரி தேவி நமஸ்தே,
    பரிபூ ரணமுணர பாலா -சரிபுகல்வாய்,
    சாதகனாய் ஆக்கி சதாசர்வ காலமும்
    மாதவத்தில் மூழ்கயென், மனு’’….கிரேசி மோகன்….(13)

     

    ”தாலேலோ தாலேலோ தாயாரின் தாலாட்டு,
    பாலேலோ பாலேலோ பையனிவன் -தாலேலோ,
    தூங்காமல் தூங்கும் திருமால் சகோதரி
    ஓங்காரி பாலாவுக்(கு) ஓய்வு”….கிரேசி மோகன்….(14)

     

    ‘’கல்லைச் சிலையாக்கும் கல்லுளி மங்கம்மா,
    சொல்லைக் கவியாக்கும் சுந்தரி, -கொல்லை,
    குமுதத்தில் பூப்பாள் குலம்ஜாதி காணா,
    அமுதத்தன் தங்கை அவள்’’….கிரேசி மோகன்….(15)

     

    ‘’ஆலோல வள்ளியின் ஆம்படையான் அன்னையே,
    தாலேலோ பாடவந்தேன் தாயுனக்கு, -பாலேலோ,
    மாலோலன் தங்காய், மனோன்மணி கண்ணுறங்கு,
    காலேல கண்மலர்ந்து கா’’….கிரேசி மோகன்….(16)

    கா -காப்பாய்….

     

    ‘’பொற்கரத்தில் மாலையும், புத்தகமும் ஏந்தியவா(று)
    அற்புதங்கள் செய்ய அலைந்தனையே, -கற்பகமே,
    கண்ணுறங்கு பாலேலோ,கால்வலிக்கப் போகிறது,
    பண்ணுறங்கப் பாடுமெனைப் பார்’’….கிரேசி மோகன்….(17)

     

    ‘’ஈசனிரு கண்ணை இறுகநீ மூடியதால்,
    தேசம் இருண்டதே தேவியே ! -வீசிடும்
    கண்ணிமைகள் பொத்தியதி காலை எழந்திடலாம்,
    பெண்ணிமய பாலா படு’’….கிரேசி மோகன்….(18)

     

    ’’நையப் புடைப்பாள் நமதகந்தை போக்கிட,
    ஐயம் அகன்றதும் ஆதரவாய், -கையைப்
    பிடித்திழுத்துச் செல்வாள், பரமசுகம் கூட்ட,
    படித்ததெலாம் பாலாமுன் பாழ்’’….கிரேசி மோகன்….(19)

     

    ”அமளியில் லாமல் , அமைதியைக் காத்தால்,
    நெமிலிவாழ் பாலா நினக்குள், -கமலியாய்,
    நெஞ்சகத் தாமரையில் நின்று நிலைத்திருந்து,
    அஞ்சேல் அபயம் அளிப்பு”….கிரேசி மோகன்….(20)

     

    ‘’சீட்டிப்பா வாடையும் ,சில்க்கில் சட்டையுமாய்,
    நாட்டுப் புறஊர் நெமிலியின், -வீட்டுக்குள்
    வீற்றவளே பாலா , வருக வருகநான்
    சாற்றும்வெண் பாவை சகித்து’’….(21)….கிரேசி மோகன்….

     

    “கஷ்டம் கலைந்திடும் , இஷ்டம் இணங்கிடும்,
    அஷ்ட இலக்குமிகள் ஆசியால் -இஷ்டமாய்,
    சுக்குமி ளக்குதி திப்பிலி என்பதின்றி ,
    லக்கு(LUCK)பாலா ஊர்நெமி லி “….(22)….கிரேசி மோகன்….

    Share
  • ”ஸ்ரீ ரமண வசனாம்ருதம்’’….!

     

     

    ‘’சிரித்திடும் நானார்! , சிரிக்கவைக்கும் நானார்! ,
    விறைத்திட சுடுகாட்டில் வேக -எறிந்திடும்
    நானார்! ,எரிந்திடும் நானார்! , எரிந்தபின்
    நானார்! , புனரபிதான் நான்’’….கிரேசி மோகன்….

    Share
  • படமும், பாடலும்….!

     

    திருச்சிராப்பள்ளி மக்கள் பலர் கண்டிராத அழகிய மலைகோட்டை தெப்பக்குளம். நம் அரசர்கள் செதுக்கி வைத்த வரலாற்று பதிவு.

    களைப்போடு வீடணன் கைகால் கழுவுகையில்
    மலைக்கோட்டைப் பிள்ளை குறும்பால் -நிலைப்பாடாய்
    கொள்ளிடத் தீவில் கிடக்கும் அயோத்தியின்
    பள்ளிகொண்ட ரங்கனைப் பாடு….கிரேசி மோகன்….!

    திருச்சி என்றால் ‘’ஸ்வாமி ஒங்கரந்தாஜி’’ அடியேன் நினைவுக்கு வருவார்….அவருடைய தாயுமானவர் ப்ரவசனம் கேட்டு அன்று இரவே அடியேன் எழுதியது உங்களது மேலான் பார்வைக்கு….!

    தாயுமானவன் திருப்புகழ்
    ——————————

    மகப்பேறு காண மருத்துவச்சி ஆக
    அகம்புறம் தாயுமான அன்பே -மிகப்பசியாய்
    பிள்ளைக் கறியுண்ட பித்தா உனதுலீலைக்(கு)
    எல்லைதனை யாரறிவா ரே….!

    நோயுமாவான் சாய்ந்திடும் பாயுமாவான் மாற்றிடும்
    மாயமாவான் புத்தொளிர் காயமாவான் -நாயன்மார்
    நேயமாவான் நாடாதோர் சீயமாவான் தேற்றிடும்
    தாயுமாவான் தந்தை தவித்து….!

    வேதங்கள் அர்ச்சிக்கும் பாதாம் புயம்பற்ற
    போதா உனக்கில்லை பாழ்மனமே -தீதில்
    இராப்பகல் தோறும் இருந்தென்ன கண்டாய்
    சிராப்பள்ளி ஈசனைச் சேரு….கிரேசி மோகன்….!

    சங்கர சங்கர சம்போ சிவ சங்கர சங்கர சங்கர சம்போ

    சாதாரணன் போல வந்தான் -ஏதும்
    ஓதாமல் சில நேரம் சும்மா இருந்தான்
    வேதா ரண்யம் ஊர் என்றான் -இதில்
    சூதில்லை அம்மகாதேவன் தான் என்றான்….(1)….!

     

    உண்டென்று ஒன்றுண்டு கேளாய் -அதை
    உண்டு நான் உமிழ்கிறேன் ஒவ்வொரு நாளாய்
    விண்டவர் கண்டிலர் கண்டாய் -அதைக்
    கண்டு நீ கொண்டாட காட்சிகள் உண்டாய்….(2)….!

    பதி பசு பாசங்கள் மூன்றும் -முறையே
    விதி மதி வினை என்ற விவகாரமாகும்
    நிதி உந்தன் நெஞ்சிலே காண்பாய் -அது
    புதிதல்ல மணம்வீசும் பூத்த மலரான்மா….(3)….!

    புதிரான பூலோகக் கல்லை -நீ
    பொய்யென்றும் மெய்யென்றும் பேரிடத் தொல்லை
    அதுவென்றும் இதுவென்றும் இல்லை -சுத்த
    அதுவே இதுவாக ஆனந்த எல்லை….(4)….!

    பண்டைநாள் வந்ததோர் பூச்சி -அது
    பலவாய்ப் பெருகிடப் பாரென்று ஆச்சி
    கொண்டதோர் கோலமே காட்சி -அதை
    உண்டில்லை கண்டிடும் உறுதி ஆராய்ச்சி….(5)….!

     

    செத்ததோர் பாம்பிந்த தேகம் -சுக
    துக்கமிதில் காண்பது செல்லாத லாபம்
    அத்தைக்கு மீசைமேல் மோகம் -அத்தை
    சித்தப்பன் பார்த்திட சிரைத்திடும் யோகம்….(6)….!

    வேடனார் வேடத்தில் இறைவன் -அவனே
    விருந்தாகி நீயுண்ண வலைவீசும் இரைவன்
    பாடெல்லாம் அவனென்று பறைவாய் -ஜீவ
    பாவத்தில் பசுபாசம் மெழுகாகக் கரைவாய்….(7)….!

     

    பார்முதல் பூதம்நீ அல்ல -பஞ்ச
    புலன்களை ஆண்டிட முயலாதே வெல்ல
    யாரந்த நானென்று உள்ளே -உன்னிப்
    பாரவன் ஆன்மனாய் ஆகுவான் மெல்ல….(8)….!

     

    அன்பே சிவமென்ற ஜோதி -அதன்
    ஆதார சக்தியே அருளென்ற பாதி
    பண்பான பக்தர்கள் மீதி -இந்தப்
    பாங்குணர்ந் தோற்க்கில்லை பூலோக வ்யாதி….(9)….!

    போக்கத்த சொப்பனம் நனவு -ஆழ்ந்த
    தூக்கத்தில் நிற்பவன் யாரென்று வினவு
    சாக்கிதால் சஞ்சலம் தீரும் -ரமண
    வாக்கிதை மேற்கொள்ள வழிவந்து சேரும்….(10)….!

     

    இறப்பதும் பிறப்பதும் யாரு -இங்கு
    இருக்கையில் ஆராய்ந்து யோசித்துப் பாரு
    உறக்கமே இறப்பென்ற மாயை -உணர
    உறங்காமல் உறங்கிடப் போடான்மப் பாயை….(11)….!

    நம்பிக்கை அறிவாக நீளும் -அவ
    நம்பிக்கை அறியாமை அதுகுப்பைக் கூளம்
    எம்பிக்கை போடட்டும் தாளம் -ஆன்ம
    ஏகாந்த வாசியின் ஏற்றமே மூலம்….(12)….!

    இல்லாத இகம்சொப்ப னங்கள் -அதில்
    இன்பத்தைத் துய்ப்போர்கள் இருள்பெற்ற மாக்கள்
    உள்ளது ஓராயி ரங்கள் -உதறி
    உணர்ந்திடு உணர்வென்னும் உச்சிப் பனங்கள்….(13)….!

    சும்மா இருந்திடல் சுகமே -என்று
    சொன்னார்கள் முன்னோர்கள் சிவமாகு அகமே
    நம்மால் இயன்றது நகமே -அது
    நாளாக நாளாக நம்பிக்கை முகமே….(14)….!

    துன்மார்கப் பாதையில் துன்பம் -அந்த
    சன்மார்கமே சச்சிதா னந்த இன்பம்
    தென்மார்கம் பார்த்திடும் அன்பன் -மவுன
    தத்துவம் தோள்கொடுத் தேவுதவும் நண்பன்….(15)….!

    ஓயாது துழைத்திடும் பெண்மை -சக்தி
    ஓங்கார நாதத்தின் ரீங்காரத் தன்மை
    தாயாகி அன்பர்க்கு நன்மை -நல்கும்
    தத்துவம் அவளந்த பித்தர்க்கும் அம்மை….(16)….!

    போகாத ஊருக்கு போக -இங்கு
    சாகாது சாகிறோம் ஜனனித்து நோக
    தேகான்ம பாவம் முடிக்க -சிவ
    தேசிகன் சரணார விந்தம் பிடிக்க….(17)…..!

    செல்லாதா காசிந்த மேனி -இது
    இல்லாத போதுமி ருப்பவன் ஞானி
    கல்லாலின் கீழுற்ற கோலம் -அது
    சொல்லாமல் காட்டிடும் சித்தாந்த ஜாலம்….(18)….!

    பல்லாண்டு பல்லாண்டு வாழி -அந்த
    பரசிவம் ஒன்றுதான் பவுருஷம் தோழி
    உள்ளாண்ட போதவன் போதம் -வெளி
    உலகத்தில் விளையாட வேடிக்கை பூதம்….(19)….!

    சூலாயுதம் கொண்ட கையை -சக்தி
    வேலாயுதன் வந்த விழிகர்ப்பப் பையை
    ஆலால கண்டத்து மெய்யை -எண்ண
    அதுநெஞ்சில் ஊற்றிடும் ஆனந்த நெய்யை….(20)….!

    பொன்னார் மேனியன் இடையில் -வரிப்
    புலித்தோல் பூண்டவன் ஏறுவான் விடையில்
    உன்னார்வம் அவனெதிர் பார்ப்பான் -கொள்ள
    உண்ணா முலையோடு வந்தருள் சேர்ப்பான்….கிரேசி மோகன்….!

    சங்கர சங்கர சம்போ சிவ சங்கர சங்கர சங்கர சம்போ….
    ——————————————————————————-

    Share
  • கிரேசி மோகனின் “சங்கர லிங்காஷ்டகம்”

     

    பாடல்: கிரேசி மோகனின் “சங்கர லிங்காஷ்டகம்”
    இசை: குரு கல்யாண்

     

    சங்கர லிங்காஷ்டகம்
    —————————-

    சத்சிவ சித் தானந்தன லிங்கம்
    சகுண உபாசக நிர்குண லிங்கம்
    புத்தி அனுக்கிரக பாரதி லிங்கம்
    சத் குரு சங்கர தத்துவ லிங்கம்….(1)

    தொன்மையில் சிவமாய்த் தோன்றிய லிங்கம்
    தென்முகம் நோக்கிய தெய்வத லிங்கம்
    சின்மயமான சிதம்பர லிங்கம்
    சத்குரு சங்கர தத்துவ லிங்கம்….(2)

    ஆழ்நிலை த்யானத் தசலன லிங்கம்
    அண்ட சராசர மாயா லிங்கம்
    ஊழ்நாள் ஊர்த்தவ தாண்டவ லிங்கம்
    சத்குரு சங்கர தத்துவ லிங்கம்….(3)

    முப்புரம் கனலெரி மூட்டிய லிங்கம்
    மன்மத தகன மகாதவ லிங்கம்
    அப்புவிண் வாயுமண் அக்கினி லிங்கம்
    சத்குரு சங்கர தத்துவ லிங்கம்….(4)

    அயனரி அடிமுடி தேடிய லிங்கம்
    அலைகலை தலைமுடி சூடிய லிங்கம்
    நயன நுதலிடை நீறணி லிங்கம்
    சத்குரு சங்கர தத்துவ லிங்கம்….(5)

    ”கனக மகாமழை” காட்டிய லிங்கம்
    குருநெறி ”மனீஷா பஞ்சக” லிங்கம்
    அனுதினம் ”பஜ கோவிந்தன” லிங்கம்
    சத்குரு சங்கர தத்துவ லிங்கம்….(6)

    ஷண்மத ஸ்தாபக சங்கர லிங்கம்
    சத்திய சிவமய சுந்தர லிங்கம்
    உன்னத அத்வை தாம்ருத லிங்கம்
    சத்குரு சங்கர தத்துவ லிங்கம்….(7)

    இகபர சுகமருள் ஈஸ்வர லிங்கம்
    இம்மையில் மறுமையை ஈன்றிடும் லிங்கம்
    பகலென ஒளிர் பரமாத்மக லிங்கம்
    சத்குரு சங்கர தத்துவ லிங்கம்….(8)

    பலஸ்ருதி
    ————-
    ஜயஜய ஹரஹர சங்கர லிங்கம்
    ஜனன மரண நிலைநீக்கிடும் லிங்கம்
    தயவொடு தாயெனத் தேற்றிடும் லிங்கம்
    தந்தை சதாசிவ சங்கர லிங்கம்….

    Share
  • படமும், பாடலும்!

     

    குறும் பா….!
    ———————

    மூக்கறுந்த சூர்பணகை ரோஷம்
    நாக்கிருந்தும் தடுக்காதோர் மோசம்
    மானானான் மாரீசன்
    மண்ணானான் லங்கேசன்
    காகுத்தன்(ராமர்) கதை இதிகாசம்….கிரேசி மோகன்….!

     

    மாலை மயக்கம்….!
    ———————————

    சூரி நாகம்மாளின் “ஸ்ரீ ரமணாஸ்ரம லேகுலு”….

    “வேந்தன் இராமனே வேதாந்தி உன்னுள்ளே,
    சாந்தியே சீதையாம், சோகவன-மாந்தரே,
    மானார்வம் மாரீசம், நானார்வம் கொள்வோம்நாம்,
    சோணா சலராமன் சொல்”….கிரேசி மோகன்….

    Share
  • ’’காய நிர்மலேசர்’’….!

    ஆத்தூர் சிவன் கோயில் சொத்து ‘’காய நிர்மலேசர்’’…ஏனோ அருணாசலம் நினைவுக்கு வந்தார்….ஆத்தூர் மோகனுடன்(நிர்வாகி) பேசியபோது சேலத்தை சுற்றியுள்ள பஞ்ச பூத ஸ்தலங்களில் ‘’காய நிர்மலேசர்’’ கோயில் அருணை போன்று அக்கினி ஸ்தலம் என்று குறிப்பிட்டார்…அம்பாள் அகிலாண்ட வல்லி(அருணை உண்ணா முலை அம்மைக்கு சமானம்) சமேத காய நிர்மலேசரைத் துதித்தோம்….!கோயில் குருக்கள் நாடகத்திற்கு வந்து, காய நிமலேசர் ரக்‌ஷையைத் தாமே கட்டிவிட்டு பிரசாதம் கொடுத்தார்….!

    ”காய(மேனி) நிருமலேசா காய மிதைவெங்
    காயம்(உரித்தால் உள்ளே ஒன்றும் இலாது)ஆக் காது கருணைகொள் :-தூயத்தீ-
    ஜோதி வடிவான சம்புவே, சங்கரா
    ஆதிஅகி லாண்டோய் அருள்’’….கிரேசி மோகன்….!

    Share
  • ’’ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’

     

    இசையமைத்து பாடியவர் ’’குரு’’….!ஏனோ தெரியவில்லை அமரர் ‘’மெல்லிசை மன்னர்’’ அடியேன் நினைவுக்கு வந்தார்….!

    ’’ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’
    ————————————————-

    ‘’சங்குசக்ரம் சாரங்கம் தெண்டம்வாள் நந்தகி
    அங்கையேந்தும் அவதார விஷ்ணு
    ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….(1)

    ‘’மூணுமோர் மறைகள் மீட்க மீனமாய்க் கடலுள் சென்ற
    வானவைகுந்தனே
    ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….(2)

    ‘’கடல்கடைந்த போதன்று வடவரையை வழுவிடாது
    உடல்சுமந்த ஆமையே
    ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….(3)

    ’’கொம்பிலே குவலயத்தை கால்சிலம்பில் கோள்குலுங்க
    நெம்பிய வராகரே
    ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….(4)

    ‘’தானாடும் துட்டனைத் தரைமட்டம் ஆக்கிட
    தூணாடும் துரைசிங்கனே
    ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….(5)

    ‘’வந்தபின் வரம்வாங்கி அந்தவான் உலகளந்த
    அந்தணன் வாமனனே
    ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….(6)

    ’’ராமபரசு ராமஅரசு ராமபல ராமனாய்
    நாமமொன்று நடிப்புவேறு
    ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….(7)

    ‘’பூபாரம் போக்கவன்று பாரதப் போர்முடித்த
    கோபாலக் கண்ணனே
    ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….(8)

    ———————————————————————-

    Share