அடுக்குமாடி குடியிருப்புகளும், ஆட்சியாளர்களின் அலட்சியப் போக்கும்
பவள சங்கரி
தலையங்கம்
சென்னையில் மீண்டும் ஒரு அவலம். நில அதிர்வாலோ அல்லது சுனாமியாலோ ஏற்பட்ட பேரழிவு அல்ல. அரசு அலுவலர்களின் அலட்சியப் போக்கால் ஏற்பட்ட அவலமே இது. அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு பாதுகாப்புச் சட்டங்கள் பல இருக்கின்றன. அவைகள் சட்ட அளவில் மட்டும் இருக்கும் போல் உள்ளது. கட்டிடம் கட்டுவதற்கு அனுமதி அளிப்பதற்கு முன்பு முறையான மண் பரிசோதனை, நில ஆய்வு மேற்கொள்ளப்பட்டதா என்று தெரியவில்லை. அந்த இடத்தில் ஆறு மாடிகள் கட்டலாம் என்று வல்லுநர்களின் அத்தாட்சி பெற்ற பின்புதான் பதினொரு மாடி கட்டப்பட்டது என்றால் பதினொரு மாடி கட்டி முடிக்கும் வரை அரசு பொறியாளர் எங்கு சென்றுவிட்டார். அவருடைய கவனத்திற்கு இந்தச் செய்தி எப்படி எட்டாமல் இருந்திருக்கும்? அவருடைய அலட்சியப்போக்கின் விலையாக இன்று எத்தனை உயிர்களை பலி வாங்கிவிட்டது. இந்தக் கட்டுமானப் பணியில் பயன்படுத்தப்பட்ட பொருட்களுக்கான தரச் சான்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. இது மாநகராட்சி அலுவலர்களின் அலட்சியப் போக்கால் ஏற்பட்ட அவலம். குடியிருக்க ஒரு வீடு சொந்தமாக வேண்டும் என்ற ஆசையில் எங்கோ இருந்துகொண்டு சிரமப்பட்டு, வாயைக்கட்டி, வயிற்றைக் கட்டி ஒரு வீட்டை வாங்குபவர்களும், இந்த கட்டுமானப் பணிகளுக்காக, வயிற்றுப்பாட்டிற்காக பீகார், ஆந்திரா, மத்திய பிரதேசம் போன்ற இடங்களிலிருந்து குடும்பத்துடன் வேலைக்கு வந்தவர்கள் என இரு சாராரும் இன்று கடுமையாகப் பாதிக்கப்பட்டு வேதனையின் உச்சத்தில் இருக்கிறார்கள். இறந்த பிறகு அவர்களுடைய பிணங்களை வந்துப் பார்த்து ஆறுதலளிப்பதைவிட, அமைச்சர் பெருமக்கள் தங்களுக்குக் கீழ் உள்ள நிர்வாக அதிகாரிகளை சரியான முறையில் பணியாற்றச் செய்திருந்தாலே இந்த கோர சம்பவத்தைத் தவிர்த்திருக்கலாம். கண் கெட்ட பிறகு சூரிய வணக்கம் செய்யாமல், இனியாவது சென்னை மாநகரைச் சுற்றி கட்டிக்கொண்டிருக்கும் குடியிருப்புகளை ஆய்வு செய்து, தரச் சான்றிதழ்கள் தருவார்களா மாநகராட்சி அலுவலர்கள் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தமிழக அரசும், கட்டுமான நிறுவனங்களும், கட்டிடங்கள் கட்டுவதற்காக தங்களுடைய வயிற்றுப்பாட்டிற்காக வெளியூரிலிருந்து வரும் தொழிலாளர்களுக்கு, உயிர் காப்பீடும், மருத்துவக் காப்பீடும் உறுதி செய்ய மனதுவைக்க வேண்டும். பல லட்சம் மதிப்புள்ள இந்தக் கட்டிடங்களை வாங்குபவர்களின் பாதுகாப்பிற்காகவும் குறைந்தபட்சம் ஐந்தாண்டுகளுக்கு காப்பீடு செய்யப்பட வேண்டும். இதில் பயன்படுத்தப்படக்கூடிய சிமெண்ட், மின்பொருட்கள், இரும்புப் பொருட்கள் போன்றவைகளின் தரம் பரிசோதிக்கப்பட வேண்டும். இனியாவது இது போன்ற மோசமான அழிவுகள் ஏற்படாமல் இருக்க அரசு ஆவண செய்ய வேண்டும். தமிழக அரசு நியமித்துள்ள ஒரு நபர் ஆணையம் இதன் போக்கில் எந்த அளவிற்கு ஆக்கப்பூர்வமாகச் செயல்படப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.