முனைவர் பட்டம் பெற்றேன்

அண்ணாகண்ணன்

சென்னைப் பல்கலைக்கழகத்தின் 154ஆவது பட்டமளிப்பு விழா, 2011 நவம்பர் 4ஆம் நாள் நடைபெற்றது. தமிழக ஆளுநர் மாண்புமிகு ரோசய்யா, தமிழக உயர்கல்வி அமைச்சர் மாண்புமிகு பி.பழனியப்பன், பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் தலைவர் பேரா.வேதப்பிரகாஷ், சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கர்னல் முனைவர் திருவாசகம் உள்ளிட்ட பலரும் பங்கேற்றுச் சிறப்பித்தனர். இந்த நிகழ்வில் எனது முனைவர் பட்டத்தைப் பெற்றேன்.

விழா மேடையில் நான்

சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் பச்சையப்பன் கல்லூரியில் முனைவர் வா.மு.சே. ஆண்டவர் வழிகாட்டுதலில் தமிழில் மின்னாளுகை என்ற தலைப்பில் எனது முனைவர் பட்ட ஆய்வேட்டினை 2010 ஏப்ரல் 5 அன்று சமர்ப்பித்தேன். இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள அறிஞர்கள், இந்த ஆய்வேட்டினை மதிப்பிட்டு, மிக நலனுடைத்து என்ற குறிப்புடன் முனைவர் பட்டம் வழங்கப் பரிந்துரைத்தனர். அதைத் தொடர்ந்து, முனைவர் பட்டத்திற்கான வாய்மொழித் தேர்வு, 2011 ஜூன் 28 அன்று, சென்னை, பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்றது. முனைவர் ப.டேவிட் பிரபாகர், புறத் தேர்வாளராய் வருகை தந்தார். அவரும் ஆய்வு நெறியாளருடன் இணைந்து, எனக்கு மிக நலனுடைத்து  (Highly Commended) என்ற அடிப்படையில் முனைவர் பட்டம் வழங்கலாம் எனச் சென்னைப் பல்கலைக்கழகத்திற்குப் பரிந்துரைத்தார்.

முனைவர் பட்டத்திற்கான வாய்மொழித் தேர்வு

வாய்மொழித் தேர்வின் போது நிகழ்த்திய காட்சி உரை

இதையடுத்து, 2011 நவம்பர் 4ஆம் நாள் நடைபெற்ற சென்னைப் பல்கலைக்கழத்தின்  154ஆவது பட்டமளிப்பு விழாவில் முனைவர் பட்டத்தைப் பெற்றேன். மொத்தம் 372 பேருக்கு நேரிலும் 80105 பேருக்கு வாராமுகமாகவும் பட்டங்கள் வழங்கப்பெற்றன. பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் தலைவர் பேரா. வேதப்பிரகாஷ் பட்டமளிப்பு விழாச் சிறப்புரை ஆற்றினார். கல்வியின் மூலம் வறுமையை ஒழிக்க முடியும் என அவர் பேசினார்.

பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஒரு மணி நேரம் மட்டுமே இருக்க முடியும்; இதனால், முனைவர் பட்டங்களை மேடையில் பெறுவதற்கு நேரம் இருக்காது; பெயர்களை மட்டும் வாசிப்பதாக முதலில் சொல்லப்பெற்றது. இது, முனைவர் பட்டம் பெறுவோருக்குக் கண்ணியமாய் இருக்காது என்பதால் அனைவரும் வெளிநடப்பு செய்வோம் என முனைவர் பட்டம் பெறுவோர் இருக்கையை விட்டு எழுந்தனர். பல்கலைக்கழகத் துணைவேந்தர் கர்னல் முனைவர் திருவாசகம், இதனை வித்தியாசமாகக் கையாண்டார். நேர நெருக்கடி காரணமாக, பட்டங்களை ஆளுநர் தம் கையால் வழங்காமல், அவர் வரும் முன்பே பட்டங்களை வழங்கினர். முனைவர் பட்டம் பெறுவோருக்கு அவரவர் இருக்கையிலேயே பட்டங்களை அலுவலர்கள் வழங்கினர். ஆளுநர் வந்ததும் பட்டம் பெற்றோர், அதனை ஆளுநரிடம் காட்டி, வாழ்த்துப் பெற்றனர். ’படுத்த பிறகு போர்த்திக்கொள்வதற்குப் பதில், போர்த்திக்கொண்டு படுப்பது போல்’ எனச் சக பட்டதாரி ஒருவர் இதனை வர்ணித்தார். ’பட்டங்களை அளிக்க வேண்டிய ஆளுநர், அனைவரிடமிருந்தும் பட்டம் பெறுகிறார்’ என அடுத்தவர் குறிப்பிட்டார். மேடையிலும், முறையான காலம் அளிக்காமல், அவசர கதியில் நகர அழுத்தம் கொடுத்தனர். இதனால், தெளிவான, நேரான புகைப்படம் எடுக்க அவகாசம் இல்லாமல் போயிற்று.

மறவன்புலவு க. சச்சிதானந்தனுடன் நானும் என் அம்மாவும்

ஆளுநர் எந்திரகதியில் நிகழ்வை நடத்தினார். அச்சடித்த வழக்கமான வாசகங்களைப் படித்தார். அவற்றையும் சிறு புன்னகையும் இன்றி, இறுக்கமாகவே வாசித்தார்.  தமது கூற்றாக ஒரு சொல்லும் சொல்லவில்லை. பட்டம் பெறுவோர் பெயர்கள் வெகு வேகமாக வாசிக்கப்பெற்றன. இதனால் பெயர் அறிவிக்கப்பெற்று, வெகு நேரம் கழித்தே பட்டம் பெறுவோர் மேடை ஏறினர். ஆறு ஆண்டுகள் ஆய்வு நிகழ்த்தினாலும் ஆறு விநாடிகளும் மேடையில் நிற்க இயலாத நிலை. மேடை மோகம் எதுவும் நமக்கு இல்லாவிட்டாலும் நிதானம், நளினம், கண்ணியம் ஆகியவற்றுடன் விழாக்கள் நடைபெற வேண்டும் என விரும்புகிறோம். அதற்கு மாறாக, பட்டமளிப்பு விழா, முற்றிலும் ஒரு சடங்காகவே நிறைவேறியது. 99 விழுக்காட்டினர் பட்டம் பெறும்போது, எவரும் கரவொலி எழுப்பவில்லை. மிகச் சிலருக்கு அவர்களின் நண்பர்கள், குடும்பத்தினர் மட்டும் கரவொலி எழுப்பினர் (மாற்றுத் திறனாளர் முகமது கடாபி மட்டுமே விதிவிலக்கு). பட்டம் பெறுகிறோம் என்ற உற்சாகம் அறவே இல்லாத நிலையில், போலிச் சிரிப்புடன் பட்டங்களைப் பெற்றோம். பட்டம் பெற்றதும் ஆளுநர் முன்மொழிய, பட்டம் பெற்றோர் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.

பா.கிருஷ்ணன், மறவன்புலவு க. சச்சிதானந்தன் ஆகியோருடன் நான்

ஆய்வாளர்கள் பற்றிய அறிமுகம், நிகழ்த்தப்பெற்ற ஆய்வின் சிறப்புகள், ஆய்வு முடிவுகள், அவற்றின் பன்முகப் பயன்பாடுகள், மேற்கொண்டு தொடர வேண்டிய ஆய்வுகள், அதற்கான வழிகாட்டுதல்கள், ஊக்க உதவிகள் என எதுவும் இங்கே இல்லை.  ஆய்வுகளை ஊடகங்களுக்கும் மக்களுக்கும் இவற்றால் பயன்பெற வேண்டிய தொழில் துறையினருக்கும் சீரிய முறையில் கொண்டு செல்வதற்கான முயற்சி இல்லை. இவற்றைப் பட்டமளிப்பு விழாவில் செய்ய முடியவில்லை எனில், அதே நாளில் இதற்கான தனி நிகழ்வை ஏற்பாடு செய்திருக்கலாம். வழக்கம் போல, இந்த ஆய்வேடுகள், பல்கலைக்கழக அடுக்குகளில் துயில் கொள்ள வேண்டுமா? இவற்றைப் பல்கலைக்கழக இணையத்தளத்தில் ஏற்றி வைத்தாலாவது சிறு பயன் கிட்டலாம்.

பட்டமளிப்பு விழாவில், ஆய்வுகளைக் காட்டிலும் ஆளுநரும் இதர பிரமுகர்களும் முக்கியம் என்ற கண்ணோட்டம், வெளிப்பட்டது. மரியாதை இவ்வாறு இருப்பின், உயர் கல்வியின் நிலை பற்றி ஆதங்கப்படுவதில் பொருள் உண்டா? ஆய்வுகளை ’இவ்வாறு’ சிறப்பித்தால், ஆய்வாளர்கள் எவ்வாறு ஊக்கம் பெறுவர்? இவர்களால் சமுதாயத்திற்குப் பயன் விளைய வேண்டும் என்று வாயளவில் சொன்னால் மட்டும் போதுமா?

அரங்கின் உள்ளே இப்படி என்றால், வெளியில் நிலை வேறாக இருந்தது. வெளியில் மழை பெய்துகொண்டிருக்க, எவரும் குடையுடன் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால், குடை, படக்கருவி, செல்பேசி உள்ளிட்டவற்றைத் தம் வாகனங்களில் வைத்துவிட்டு, பலரும் நனைந்தபடியே அரங்கினுள் வந்தனர். அரங்கின் வாயிலில் ஓர் அறையை உருவாக்கி, அங்கு இந்தப் பொருள்களை வைத்திருக்கலாம் என நண்பர் யோசனை கூறினார். வெளியே படக்கருவியுடன் பலரும் சுற்றிக்கொண்டிருந்தனர். ஒரு படத்திற்கு ரூ.100 என்ற நிலையில் அவர்களுக்கு நல்ல வேட்டை கிடைத்தது.

கோவி.செழியன், அண்ணாகண்ணன், ஹாஜா கனி

ஒரே ஆறுதல், நண்பர்களைச் சந்தித்ததே. என் நண்பர்கள் சிலரும் என்னுடன் இணைந்து முனைவர் பட்டம் பெற்றனர். சென்னை மேடவாக்கம் காயிதே மில்லத் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் பேரா.ஹாஜா கனி, தினமணி தில்லிப் பிரிவின் செய்தி ஆசிரியர் பா.கிருஷ்ணன், திருவிடைமருதூர் சட்டமன்ற உறுப்பினர் கோவி.செழியன், அருப்புக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வைகைச்செல்வன், இலங்கையைச் சேர்ந்த நந்தினி, கவிக்கோ அப்துல் ரகுமானின் சகோதரி… உள்ளிட்ட பலரும் முனைவர் பட்டம் பெற்றனர். ஹாஜா கனியின் தாயார் ஆயிஷா மரியம், என்னையும் தம் மகனாகக் கருதி அன்பு செலுத்துபவர். மனதார வாழ்த்தினார்.

ஹாஜா கனியின் அம்மா ஆயிஷா மரியம் அவர்களுடன் நானும் என் அம்மா சவுந்திரவல்லியும்

ஹாஜா கனியின் அம்மா ஆயிஷா மரியம் அவர்களுடன் நானும் ஹாஜா கனியும்

என் தாயார் சவுந்திரவல்லி, நண்பர் மறவன்புலவு க. சச்சிதானந்தன் இருவரும் என்னுடன் வந்து, நேரில் வாழ்த்தினர். சச்சி அவர்கள், எமக்கு மதிய விருந்து அளித்துச் சிறப்பித்தார். மின்னஞ்சலிலும் இணையத்தளங்களிலும் தொலைபேசியிலும் குறுஞ்செய்தியிலும் பலரும் வாழ்த்தினர். அவர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.

முனைவர் பட்டம் பெற்றுள்ள நிலையில், சென்னைப் பல்கலை, பச்சையப்பன் கல்லூரி, அதன் முதல்வர், தமிழ்த் துறையினர், என் நெறியாளர், மதிப்பீட்டாளர்கள், புறத் தேர்வாளர், பல்கலையின் முனைவர் பட்டப் பிரிவு, துணைவேந்தரின் தனிச் செயலர்கள், ஆய்வுக்கு ஒத்துழைத்த வல்லுநர்கள், நண்பர்கள், என் குடும்பத்தினர்… உள்ளிட்ட அனைவருக்கும் மீண்டும் என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

விழாப் படங்களை இங்கும் காணலாம்: http://www.flickr.com

===========================================

படங்கள்: மறவன்புலவு க. சச்சிதானந்தன் மற்றும் பிறர்

19 thoughts on “முனைவர் பட்டம் பெற்றேன்

 1. வாழ்த்துக்கள் சார் !!!தாங்கள் வாழ்வில் மேன்மேலும் பல உயரங்களை எட்ட இறைவனை வேண்டுகிறேன்.

 2. அன்பின் திரு.அண்ணாகண்ணன்,

  முனைவர் பட்டம் பெற்ற தங்களுக்கு எம் மனமார்ந்த நல்வாழ்த்துகள். தாங்கள் மென்மேலும் வளர எல்லாம் வல்ல எம்பிரானை வணங்குகிறோம். தமிழில் மின்னாளுகை என்ற அருமையானதொரு தலைப்பைத் தேர்ந்தெடுத்து மிகவும் பயனுள்ள வகையில் ஆய்ந்து பட்டமும் பெற்று வெற்றி வாகை சூடியிருக்கும் முனைவர் அண்ணாகண்ணனுக்கு மீண்டும் மனமார்ந்த வாழ்த்துகள்.
  அழகாக புகைப்படம் எடுத்ததோடு உடனிருந்து வாழ்த்தியமைக்கு திரு மறவன்புலவு சச்சிதானந்தன் அவர்களுக்கு நன்றி. 
  “ஈன்றபோழ்து பெரிதுவக்கும் இன்பம் தன்மகனை
   சான்றோன் எனக்கேட்டத்தாய்” 
  அத்தாய்க்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்!

  பவள சங்கரி

 3. கண்ண்ன் இதுதான் ஆய்வுலகம். நாம் அறிந்ததுதானே. அந்த நிகழ்வை அழகாக எழுதியிருந்தீர்கள்.

  ஆனாலும் சாதிக்கப் பிறந்தவர் தாங்கள். வாழ்த்துகள். டாக்டர் கண்ணன்.

  நெறியாளர் வா.மு.சே ஆண்டவர் என்று கூறியுள்ளீர்களே. செம்மொழி பயிலரங்கம் சென்ற ஆண்டு பச்சையப்பன் கல்லூரியில் வா.மு.சே. ஆண்டவர் நடத்தினாரே. தாங்கள் கலந்து கொள்ளவில்லையா?

 4. நீரோடை இலக்கியமாகவும், புதுமைப்பித்தனின் உண்மை விளம்பி இலக்கியமாகவும், முனைவர். அண்ணா.கண்ணனின் இதழியல் இலக்கியமாகவும், பி.ஶ்ரீ.யின் சித்திர இலக்கியம் போல், தாயும், பீகமும் ஆன தாயும் வாய்கொள்ளா சிரிப்புடன் கூடிய மகிழ்வு இலக்கியமாகவும் திகழ்ந்த இந்த கட்டுரையை மகிழ்ச்சியுடனும், மனவேதனையுடனும் படித்தேன். சில வருடங்களுக்கு முன்னால் இங்கிலாந்தில் ஒரு விருது. நான் இருந்தது இந்தியாவில். கனிவான அழைப்புகள் எத்தனை! அமெரிக்காவில் என் மகளுக்கு முனைவர் பட்டம். மூன்று நாள் விழா. ஆயிரக்கணக்கான பட்டதாரிகள். எத்தனை கரிசனத்துடன் கொடுத்தார்கள், தெரியுமா? என் மருமகனுக்கும் அவ்வாறே. கல்விதந்தைகளும், தாயார்களும், நம்மை தேடி வந்து ஃபோட்டோ எடுத்துக்கொண்டனர். பல தடவை பட்டம், கிரீடம், photo-opportunities. பாண்டு வாத்தியம். தூள்! ஆனால், கவர்னருக்கும், அமைச்சருக்கும் கார்-பார்க்கிங்க் கூட கிடையாது. கொல்லன் பட்டறையில் ஈக்கு என்ன வேலை? நான் குறை காண்பது, பல்கலைக்கழகம் மீது. அவர்களி அடிமை மோகம் தான் இந்த சிறுமைப்படுத்தியதிற்குக் காரணம். அது எல்லாம் போகட்டும். என் வாழ்த்துக்கள். வளமுடன் வாழ்க. அன்னையிடம் என் வாழ்த்துக்களை பகரவும்.

 5. ஆட்டுக்குத் தாடி போல ,மாநிலத்துக்கு ஆளுநர் எதற்கு என்று முழக்கமிட்டவர்கள், தாங்கள் பதவிக்கு வந்தபின்னர், தங்களுக்கு வேண்டிய ஆளுநர்கள் கிடைப்பாளர்களா என்று ஏங்க ஆரம்பித்தார்கள். எப்படியோ வசதியாக அரசியல் பதவிகளை வகித்தால் போதும் என்ற நிலைக்கும் வந்துவிட்டனர். இதன் தொடர்ச்சிதான், பல ஆண்டுகள் அரிதின் முயன்று, தக்க வழிகாட்டுதலுடன் ஆராய்ந்து எழுதப்பட்ட கருத்துக்ளுக்கு உரிய மரியாதை தராமல், அரசுப் பதவிகளுக்கு மட்டுமே கெள்ரவம் தரும் காலம் வருவதற்கு வல்லமை பிள்ளையார் சுழி போட்டிருக்கின்றது. நீதிமன்றங்களில் ”மைலார்ட்” என்று வெள்ளைக்காரர் காலத்தில் நீதீபதியை நோக்கி அழைத்த காலத்தை அழிப்பதற்கு50-55 ஆண்டுகள் தேவைப்பட்டன. அதுபோல் மெய்யான திறமையால் பெறும் முனைவர் பட்டங்களைப் பெறும் அறிஞர்கள் தினைத்துணையும் பாதிக்கப்படாவண்ணம், முழுமையான மரியாதையுடன், சுய கெள்ரவத்திற்கு எந்தவிதமான பங்கமில்லாமல், பட்டம் வழங்கும் நாள் விரைவில் வரப்போவது திண்ணம். என்னிடம் வரும் இளைஞர்களுக்கெல்லாம் நான் சுட்டுவது வல்லமை இணைய இதழையும், அண்ணா கண்ணனையும்தான். அவரது முயற்சிகள் சிகரம் தொடட்டும். வாழிய நீடு!

 6. உங்களின் வெற்றிகளின் நீண்ட பாதையில் இது முதலடியாக இருக்க எல்லாம் வல்ல பரம்பொருளைப் பிரார்த்திக்கிறேன்! வாழ்க! வளர்க!

 7. வாழ்க அண்ணா ……
  மிகத் தாமதமாக உங்களிடம் வந்து சேர்ந்த ’முனைவர்’ பட்டத்துக்கு வாழ்த்துகள் 

 8. ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன்மகனை
  சான்றோன் எனகேட்ட தாய்

  அண்ணாகண்ணன் முனைவரென்ற போது அதனினும்
  மகிழ்வார் அவர் தாய்…

  மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது… இன்னும் நிறைய வெற்றிகள் பட்டங்கள் சூட இறைவனை வேண்டுகிறேன்

 9. ஸாய்ராம். வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள் வல்லமை படைத்த (டாக்டர்) முனைவர் அண்ணா கண்ணன் அவர்களே வாழ்த்துக்கள். அயராது, தளராது உழைத்த உங்கள் வல்லமைக்குக் கிடைத்த பரிசு இந்த பட்டம். நீங்கள் பலருக்கு ஏணியாக இருக்கிறீர்கள், நீங்களும் ஏணியின் வெற்றிப்படிகளில் ஏறி ஒரு உயர்ந்த சிம்மாசனத்தில் அருகே ஒரு அண்ணி கண்ணனுடன் அமர்ந்து, சீரும் சிறப்புடன் கோலோச்சும் நாள் வந்திட வாழ்த்துக்கள். பட்டம் அளிப்பு விழா நடத்திய விதம் வருத்தத்தைத் தான் அளிக்கிறது. அது தானே,
  Indian/Tamil Nadu Brand. Anyways, all ends well, that ends well என்று கூறுவார்களல்லவா, அதுபோல், நம் அண்ணா கண்ணன் அவர்கள் முனைவராகிவிட்டார் என்ற மகிழ்வுடன் நிறைவு கொள்வோம். அன்புடன், மகிழ்வுடன் – நாகை வை. ராமஸ்வாமி

 10. முனைவர் பட்டம் பெற்றமைக்கு வாழ்த்துகள். தங்கள் வெற்றிப் யணம் மேலும் தொடர்க.
  கோதண்டராமன்

 11. அண்ணா கண்ணன் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த
  வாழ்த்துக்கள்! அரசியல்வாதிகள், அதிகாரிகள் கலந்து கொள்ளும்
  நிகழ்ச்சிகளில் உணர்ச்சிகள் இருக்காது என்பது நாம் அறிந்த
  ஒன்று தானே. உண்மையைச் சொல்லுவதற்குத் தைரியம்
  வேண்டும்! அது உங்களிடம் இருக்கிறது. உண்மையின்
  பக்கம் இருப்பதற்கு நாம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.
  மகாராஸ்ட்ராவில் முன்பு போஸ்லே என்று ஒரு முதல்வர்
  இருந்தார். அவரை ரேடியாலஜி பிரிவு கட்டடத்தைத் திறந்து
  வைக்க மருத்துவமனைக்கு அழைத்துள்ளனர். அவர் அங்கு
  கட்டடத்தைத் திறந்து வைத்துப் பேசும் பொது ரேடியோ
  செய்வதைப் பற்றிப் பேசியிருக்கிறார். எனவே உணர்ச்சி
  இல்லாவிட்டாலும் உளறல் இல்லையே என்று நாம்
  சமாதானம் அடைந்து கொள்ளவேண்டியது தான்!
  இரா. தீத்தாரப்பன், ராஜபாளையம்.

 12. //கட்டடத்தைத் திறந்து வைத்துப் பேசும் பொது ரேடியோ
  செய்வதைப் பற்றிப் பேசியிருக்கிறார்.//
  அட ராமா… இப்படியுமா!!!!!!!!!!!!

 13. அண்ணா கண்ணன்,
  முனைவர் பட்டம் பெற்றமைக்கு வாழ்த்துகள்.

 14. கெழுதகையீர் வாழ்த்துகள்…
  உள்ளதை உள்ள படியே காட்டும் மாயக்கண்ணாடி போலத் தங்கள் பதிவு இருக்கிறது.
  உரியவர் பார்த்தால் நலம் பல விளையும் 😉
  மீண்டும் வாழ்த்துகள்…

  எழுச்சியுடன்,
  கலை.செழியன்

Leave a Reply

Your email address will not be published.