மீனாட்சி பாலகணேஷ்

வளையல் அணிதல்

   (பெண்பால் பிள்ளைத்தமிழ்)

பெண்குழந்தைகளின் வளர்ச்சியில் நாம் கண்டு ரசிக்கப்போகும் அடுத்த நிகழ்வு கைநிறைய விதம்விதமாக வளையல்களை அணிந்துகொண்டு மகிழும் பருவத்திலிருக்கும் ஐந்து முதல் பத்து வயதினரான சின்னஞ்சிறு பெண்குழந்தைகளைத்தான். வளையல்கள் பெண்களின் அழகு சாதனங்கள். மங்கலச்சின்னங்கள். கலகலவென ஆர்க்கும் பலநிறங்களிலான கண்ணாடிவளை முதல் இரத்தினம், முத்து, மரகதம் என நவரத்தினங்களையும் வைத்திழைத்த பொன்வளைகளும் கங்கணங்களும் கூடப் பெண்களின் விருப்பத்திற்கானவைதாம்!

பண்டிகை நாட்களாகட்டும், ஊர்க்கோவிலில் திருவிழாவாகட்டும், பிறந்தநாள் ஆகட்டும்; புதுவளைகள் அணிவதில் பெண்களுக்குண்டான ஆசை அளவிட முடியாதது. இதற்குச் சின்னஞ்சிறுமிகளும் விலக்கில்லை.

60-70 ஆண்டுகள் முன்புவரைகூட வளைவியாபாரி ஒருவர் முதுகில் பத்திரமாகக் கட்டித்தூக்கிய வளையல் மூட்டையுடன் கிராமத்துத் தெருவிலோ, அல்லது நகரத்துத் தெருக்களிலோ ‘வளையல் வாங்கலையோ வளையல்!’ எனக்கூவியபடி செல்வதுண்டு. அல்லது ஓர் அம்மாள் கூடையில் கண்ணாடி வளையல்களை அழகாகப் பாங்காக அடுக்கிவைத்துக்கொண்டு, “வளேல், வளேல், வளேல,” என்று கூவியவண்ணம் தெருத்தெருவாகச் சென்று விற்பாள். ஏதாவது ஒரு வீட்டுத் திண்ணையில் தனது மூட்டையை இறக்கிவைத்து, மேற்துண்டால் வியர்வையைத் துடைத்தபடி, வெற்றிலைச்சாற்றை ஒருபுறம் உமிழும் வளையல் வியாபாரி, அந்த வீட்டுக் குழந்தையிடம், “பாப்பா, குடிக்கத் தண்ணீர் கொடேன்,” என்பார். பல நேரங்களில் பாப்பா செம்பில் கொணரும் நீரைத் தொடர்ந்து அந்த வீட்டம்மாளும் இன்னொரு ஏனத்தில் கடுகும் கருவேப்பிலையும் தாளித்துப் பெருங்காயமும் உப்பும் கலந்த சுவையான மோரைக் கொண்டு வந்து கொடுப்பாள். தாகத்தோடு நடந்து வந்திருக்கும் வளையல் வியாபாரி ஆவலோடு அதைப் பருகிமுடித்தபின், “புதுப்புது நிறங்களில் பச்சைவளை, பட்டுவளை, தங்கநிறவளை கொண்டு வந்திருக்கேன், பார்க்கிறீகளா?” எனத் தாமே முதுகில் சுமந்துவந்த துப்பட்டியை விரித்து வளையல் மூட்டையை அவிழ்ப்பார்.

இதற்குள் தெருவில் உள்ள வீடுகள் அனைத்திலிருந்தும் பெண்கள், பெரியவர்களும், இளம்பெண்களும், சிறுமிகளும், குழந்தைகளுமாகக் கூடிவிட்டிருப்பார்கள். வியாபாரியும் அகலமான பெரிய திண்ணையில்தான் தமது மூட்டையை இறக்கியிருப்பார். அத்தனை வளையல்களையும் புதுப்புது நிறங்களையும் கண்ட பெண்கள், வளையல்கள் போலவே கலகலப்பார்கள். அக்காள்மார், அன்னையர், அத்தை, பாட்டிகளின் உற்சாகம் சின்னஞ்சிறு சிறுமிகளையும் தொற்றிக் கொள்ளாதா என்ன? தமது குட்டிக்கைகளை நீட்டியவண்ணம், “தாத்தா, மாமா,” என உறவுகொண்டாடியபடி வளையல் அணிவிக்க சின்னஞ்சிறுமிகள் முந்துவார்கள். வியாபாரியும், பொறுமையாக, சாமர்த்தியமாக அனைவரையும் மகிழ்விக்கும் வண்ணம் குறும்பாக, வேடிக்கையாக, எதார்த்தமாகப் பாட்டுக்களைப் பாடியபடி, வளையல்களை எடுத்துக் காட்டிக்கொண்டே, அவரவர் கைகளில் அழகுற அணிவித்து விடுவார். ஓரிரு வளைகள் உடைந்து விடும், அவற்றை ஓரமாகப் போட்டு விடுவார்.

சிறுமிகளுக்கு முதலில் அணிவித்து, அவர்கள் முகங்களைப் புன்னகையில் மலரச் செய்துவிட்டு, இளம் பெண்களுக்கும், அன்னையர்க்கும் கூட அணிவித்து விடுவார்.

வளையல் வியாபாரியின் வரவை எதிர்நோக்கி வீடுகளில் தாலாட்டுகள் பாட்டிமார்களால் பாடப்பட்டன!

வாரும் வளைச்செட்டியாரே! வந்திறங்கும் திண்ணையிலே!
கொச்சிட்ட திண்ணையிலே! கோலமிட்ட வாசலிலே!
(கொச்சிட்ட- அழகான)
அகலமுள்ள திண்ணையிலே நீளமுள்ள வாசலிலே
கம்பளியைப் போட்டு கனத்த சுமை இறக்கும்!
துப்பட்டியைப்போட்டு தங்கவளைத் தூக்கு இறக்கும்!

கறுப்புவளை உண்டாமோ காவலனார் கண்மணிக்கு?
சிகப்புவளை உண்டாமோ சுந்தரனார் பெண்மணிக்கு?
பச்சைவளை உண்டாமோ பாண்டியனார் பேத்தியர்க்கு?
நீலவளை உண்டாமோ நிமலனார் செல்வியர்க்கு?

பொட்டுமிட்டு மையுமிட்டு பொற்கொடிக்குப் பூச்சூட்டி
பக்கத்தே கன்னத்தில் திருஷ்டிப்பொட்டு வையுங்கள்!1

இவ்வாறு வளையல்கள் இன்றுவரை அனைவர் உள்ளங்களிலும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் விளைவிக்கும் ஒரு பொருளாக உள்ளது. வெளியூர் சென்றுவரும் தந்தைமார் தமது அருமைப் பெண்குழந்தைகளுக்கு அவரவர்கள் வசதிக்கேற்ப வளையல்களை வாங்கிவந்து பரிசாகக் கொடுத்தனர்.

பிறந்து சில மாதங்களே ஆன சிறு குழந்தைக்கும் கையில் கருநிற வளைகளைப் போட்டு வைப்பார்கள்- காற்று, கறுப்பு அண்டாதிருக்க இவையே காப்பாகும்.

அடடே! இன்று சாமிநாத மாமா வீட்டில் அவர் மகள் காமாட்சிக்கு வளைகாப்பாயிற்றே! வளையல் வியாபாரி முருகப்பனுக்குக் கொண்டாட்டம்தான்! காமாட்சிக்கு வளையடுக்கும் சாக்கில் ஊரே வளைகளணிந்து மகிழும். அதோ! கேட்கிறதா அவர் பாடிக்கொண்டே சிரித்த முகத்துடன் பச்சையும் சிகப்புமாகக் கண்ணாடி வளையல்களை காமாட்சியின் கரங்களில் அடுக்குவதை!

‘வளை குலுங்கினாற்போல மழலைமொழி பேசும்
கிளை பெருகி வாழவே வளை சூட்டுகின்றோம்.’2

இவ்வாறெல்லாம் பெருமைமிகுந்த வளையலுக்கு இலக்கியத்தில் இல்லாத இடமும் உண்டோ?

சிவபெருமானே வளையல் வியாபாரியாகி மதுரைவீதிகளில் வளையல் விற்றதனைத் திருவிளையாடல் புராணம் பாடிப் பெருமிதமடைகின்றதே! கதையை நினைவு கூர்வோமா?

தாருகாவனத்து முனிவர்களுக்குத் தாங்களே அனைவரிலும் உயர்ந்தவர்கள் எனும் செருக்கு மிகுந்தது. அவர்களது அகந்தையை அழிக்கத் திருவுள்ளம் கொண்ட சிவபிரான் பிட்சாடனர் கோலம் கொண்டார். பிச்சை எடுக்க வந்த பேரருளாளனின் அழகில் மயங்கிய முனிவர்களின் பத்தினியர் அவர்பின் செல்லத் தலைப்பட்டனர். கைவளைகளும் மேகலையும் கழல, ஆடை கலைய பிட்சாடனருடன் சல்லாபிக்க முயன்றனர். அவரும் அங்கிருந்து மறைந்துவிட்டார். பத்தினியர் தம் நிலையிழந்ததனை அறிந்த முனிவர்கள் அவர்களை மதுரை நகரில் அழகான வணிகமகளிராய்ப் பிறக்கவும், சாபவிமோசனமாக, சோமசுந்தரக்கடவுள் அவர்களைத் தீண்டும்போது சாபம் விலகும் எனவும் கூறினர்.

அவ்வாறே அப்பெண்கள் மதுரையில் வணிகமகளிராகப் பிறந்து அழகுற வளர்ந்து பருவமடைந்தனர்.

அந்த மாட மதுரைநகர்க் கரசா கியசுந் தரக்கடவுள்
வந்து நும்மைக் கைதீண்டும் வழியிச் சாபங் கழியுமெனச்
சிந்தை தளர்ந்த பன்னியருந் தென்னர் மதுரைத் தொன்னகரிற்
கந்த முல்லைத் தார்வணிகர் காதன் மகளி ராய்ப்பிறந்தார்.3

அப்போது சிவபிரான் வளையல் வியாபாரியாக அழகுக்கோலத்துடன் வளைகள் விற்றவண்ணம் தெருக்களில் சென்றார். மறைப்பொருளை உரைசெய்த மணிவாயைத் திறந்து, “வளை வாங்குவீர்,” என்று கூறியவரிடம் வணிகர்குல மகளிர் வளை வாங்கச் சென்றனர்.

மன்னு மறையின் பொருள் உரைத்த மணிவாய் திறந்து வளை கொண்மின்
என்னும் அளவில் பருவ முகில் இமிழ் இன்னிசை  கேட்டு எழில் மயில்போல்
துன்னு மணி மேகலை மிழற்றத் தூய வணிகர் குல மகளிர்
மின்னு மணி மாளிகை நின்றும் வீதி வாயில் புறப்பட்டார்4                                                

‘எமக்கு வளை அணிவிப்பீர்,’ எனவும், ‘இது பெரிதாக உள்ளது; சிறியவளை அணிவியும்,’ என்றும், அணிவித்த வளைகளைப் புறம்சென்று உடைத்தெறிந்துவிட்டு வந்து பின்னும் வளை அணிவிக்க வேண்டியும், ஆசையாகக் கைகளை நீட்டி அவர்தொட்டு வளை அணிவிக்க மகிழ்ந்தும், ‘நாளையும் வந்து வளை அணிவிப்பீர்,’ என வேண்டியும் பலவாறாக அவ்வணிக மகளிர் உவகைப்பெருக்கில் வளையல் வியாபாரியிடம் பேசி மகிழ்ந்தனர்.

பின் நடப்பனவற்றைத் திருவிளையாடற் புராணத்தில் காணவும். அவ்வணிக மகளிர் அனைவரும் ஐயன் கையால் வளையணிவிக்கத் தொடப்பட்டதால் முத்தி அடைந்தனர்.

பழங்காலத்தில் ஆடவர்கள் மகளிரின் கையைத் தொடுவது குற்றமெனச் சமுதாயம் கருதியது. ஆனால் வளைச்செட்டி பெண்ணின் கையைத் தீண்டுவது குற்றமாகாது. வளையலை வளையல் செட்டி அணிவிக்க, அணிய வேண்டுமென்ற சமுதாய விதியும் ஒருகாலத்தில் வழக்கிலிருந்தது!

வள்ளிமீது மையல்கொண்ட முருகன் வள்ளியின் கரத்தைத் தீண்டி இன்பமுற நினைத்தான். அதற்கு வழி யாது? வளையல் செட்டி வேடம் கொண்டான்.

செட்டி வடிவுடன் வள்ளியிடம் சென்றதைத் திருத்தணிகையுலா,

‘…………………………பட்டி வள்ளி
கைவளைய லேற்றி – காலில் வளைந்தேற்றி,
மைவளையு நெஞ்ச மய லேற்றி- வெய்ய
இருட்டுவிடி யாமுன் இனத்தவர்கா ணாமல்
திருட்டுவியா பாரஞ்செய் செட்டி,’5 எனப்பாடுகின்றது.

முருகன் வள்ளியிடம் நெருங்கச் செட்டி வேடங் கொண்டதை அருணகிரியார்,

‘சித்திரப் பொற்குறப் பாவைபக் கம்புணர செட்டியென்
றெத்திவந் தாடிநிர்த் தங்கள்புரி சிற்சிதம் பொற்புயஞ்
சேரமுற் றும்புணரு மெங்கள் கோவே’6 எனப்பாடுகின்றார்.

(சிற்சிதம் – ஞானம்; வள்ளி ஞானத்தவள்)

மற்றொரு திருப்புகழ்,

‘செட்டி யென்றுசிவ காமி தன்பதியில்
கட்டு செங்கைவளை கூறு மெந்தையிட 
சித்த முங்குளிர நாதி வண்பொருளை நவில்வோனே’7

(இத்திருப்புகழ் திருவிளையாடல் புராணச் செய்தியைக் கொண்டது. செட்டி வடிவெடுத்துத் தேவி சிவகாமி (சிவகாமி – தடாதகைப் பிராட்டி) அரசாட்சி செய்த மதுரையில் செவ்விய கையில் வளையல் கட்டுக்களை விலைகூறி விற்ற எந்தை சிவபிரானுடைய உள்ளம் குளிர மூலப்பொருளை உபதேசித்தவனே!)

இக்கதைகள் வளையலின் பெருமையையும் அதுசார்ந்த அரிய திருவிளையாடல்களையும் உணர்த்தியதனால் இங்கு பகரப்பட்டன.
___________________________

இனி பிள்ளைத்தமிழுக்கு வருவோமா?

அரசிளங்குமரி சின்னஞ்சிறுமி தடாதகைக்குக் கைநிறையக் கலகலக்கும் சிவப்பு, பச்சை, மஞ்சள்நிறக் கண்ணாடிவளைகளை அணிந்துகொள்ள ஆசை! வளையல் வியாபாரி மூட்டையை அவளுக்காகவே எடுத்து வருவார். ஆறுவயதுச் சிறுமி மீனாட்சியின் கையிலும் அத்தனை தோழிமார் கையிலும், ஏன் அரண்மனையில் உள்ள பெண்டிர் அனைவரின் கையிலும் அவளுடைய ஆசைப்படி அழகழகான வளைகள் ஒலித்துக் கேட்போரை மகிழ்விக்கும். இன்றும் வளையல் வியாபாரி வருகிறார். தோழியர் அவரை அன்போடு அழைத்துப் பாயில் அமரக்கூறி, மீனாட்சிக்கு வளைகள் அணிவிக்க வேண்டுகின்றனர்.

முக்குறுணிப் பிள்ளையவனை உச்சிமோந்து முத்தமிடும்
மீனாளின் கையிலணி முத்து வளையல்!
நெக்குருகிப் பாடிய குருபரர்க்கு நெகிழ்ந்துருகி
பரிசிலளி பாண்டிய அரசிகை வளையல்!
அக்குரோணி சேனைகொண்டு அண்ணலொடு போர்தொடுத்த
அம்மையவள் கைகுலுங்கு மிரத்தின வளையல்!
பக்குவமாய் வந்துநீரும் பாயதனை விரித்தமர்ந்து
பாங்கான கைகளுக்குப் பல்வளைகள் சூட்டிடுவீர்!         (1)

            (இது தோழியர் வளையல் வியாபாரியை நோக்கிப் பாடியது!)

வளையல் வியாபாரியும் அமர்ந்துகொண்டு பட்டுக்கயிற்றில் முடிந்து கொண்டு வந்திருக்கும் கட்டுக்கட்டான வளைகளை அவிழ்த்து மீனாட்சியின் கரத்திற்குப் பொருத்தமானவையும் தங்கநிறத்தில் வேலைப்பாடுகள் செய்யப்பெற்றுள்ளதுமான சிவப்பு, பச்சைநிற வளையல்களைப் பொருத்தமாக அவள் கரங்களில் அணிவித்தவர் அக்கரங்களின் அழகைக் கண்டு தாமும் கவிஞராகவே மாறிப் பாடுகிறார்!

பந்தும் கழங்குமாடும் பைந்தளிர்க் கரத்தினிற்கு
பச்சைவண்ணப் பட்டுவளையல்!
சிந்துர வண்ணக்கைக்கு மின்னும் சிகப்புவளையல்!
சுடர்மஞ்சள் சொர்ணவளையல்!
அந்தமில் ஆலவாய் அழகன் பற்றுங்கைக்கு
ஆடகப்பொன் ஐம்பொன்வளையல்!
சுந்தரியே நிரந்தரியே எம்மையாள் தடாதகையே
சூடிடுவாய்நீ அழகுவளையல்!                    (2)

(தோழியரும் வளையணிவிக்கும் வியாபாரியும் சேர்ந்து பாடும் பாடல்)

இப்பருவத்தைப் பாடல்களாக்க வேண்டும் என்ற அவாவில் எழுந்த இம்மூன்று பாடல்களையும் அவள் கரங்களையே திருவடிகளாகக் கருதி, பாடல்களை வளையல்களாக்கி அணிவிக்கிறேன்.

            சின்னஞ்சிறு சிவந்தகைகள், சொக்கனுக்கு மணமாலை
                   சூட்டிய செந்தளிர்க் கைகளுக்கு
         கன்னங்கரிய கருகுமணி வளைபொற் கங்கணமும்
                   கருத்துடன் அணிவித்துக் களித்த
         அன்னைகாஞ் சனமாலை பெற்றபேறு பெரிதன்றோ?
                   அங்கயற்கண் இன்னமுதே! ஆருயிரே!
         சொன்னவிப் புன்சொல்லால் செவ்வியவுன் புகழ்மாலை
                   சூட்டிடவே வளையல் சூட்டிடுவேன்!

(என் புன்மொழிகளையும் வளைகளாக்கி அவள் கரங்களைப் பாதங்களாய்க் கருதிச் சூட்டியது)            

(புதிய பிள்ளைப்பருவங்கள் தொடரும்)

பார்வை நூல்கள்:

1, 2. சம்பிரதாயப் பாடல்கள்.
3, 4. பரஞ்சோதி முனிவர், திருவிளையாடல் புராணம், வளையல் விற்ற படலம்.
5. கந்தப்பையர், திருத்தணிகை உலா.
6, 7. அருணகிரிநாதர்- திருப்புகழ்


திருத்தணிகையுலாவில் முருகன் வளையல்செட்டி வடிவில் சென்ற செய்தியையும் திருப்புகழில் முருகன், சிவபிரான் ஆகியோர் செட்டிவடிவங்கொண்ட செய்திகளையும்  மதிப்பிற்குரிய எனது பேராசிரியர், முனைவர் திரு. கோ. ந. முத்துக்குமாரசுவாமி அவர்கள் அளித்து இக்கட்டுரைக்கு மேலும் சுவை சேர்த்ததனை இங்கு நன்றியுடன் பதிவிட விரும்புகிறேன்.

சித்திரம் வரைந்தவர் எனது நண்பர் திருமதி உபாஸனா கோவிந்தராஜன். இவர் அமெரிக்காவாழ் சென்னைவாசி. சிலகாலம் மென்பொருள் பொறியாளராகப் பணிபுரிந்தார். பின் சித்திரம் வரையும் கலையில் தேர்ச்சி பெற்றார். இந்தியப் புராணங்கள், கதைகள் இவற்றை விளக்கும் சித்திரங்களை வரைவதில் ஆர்வம் உள்ளவர்.

இந்தக் கட்டுரைக்காகப் பிரத்தியேகமாக, சிறுமி மீனாட்சி ஆசையாக வளைகள் அணிந்துகொள்வதனை அன்னை காஞ்சனமாலை கண்டு களிப்பதனை வரைந்து கொடுத்துள்ளார்.


 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.