குறளின் கதிர்களாய்…(336)

செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்...(336)
தன்றுணை யின்றாற் பகையிரண்டாற் றானொருவ
னின்றுணையாக் கொள்கவற்றி னொன்று;.
– திருக்குறள் – 875 (பகைத்திறம் தெரிதல்)
புதுக் கவிதையில்...
உதவிடும் துணையில்லை
வருத்திடும் பகை இரண்டு,
இந்நிலையில்
தனியே இருக்கும் ஆட்சியாளர்
பகையிரண்டில் ஒன்றைத்
தனக்கு
இனிய துணையாய்
ஆக்கிக் கொள்க…!
குறும்பாவில்...
தனக்குத் துணையில்லை பகையிரண்டு,
தனியான ஆட்சியாளர் பகையில் ஒன்றைத்
தனக்கு நற்றுணையாக்கிக் கொள்க…!
மரபுக் கவிதையில்...
உதவிடத் தனக்குத் துணையில்லை
உறுபகை யுள்ளது இரண்டாக,
பதறிட வேண்டாம் ஆட்சியாளர்
பகையினைக் கண்டே தனிமையிலே,
சிதறிட வைக்கப் பகையினையே
சிறந்த வழியது ஒன்றுண்டு,
உதவிடும் வகையில் பகையொன்றை
உற்ற நட்பாய் ஆக்குதலே…!
லிமரைக்கூ..
தனிமையில் இரண்டாய்ப் பகையே,
உற்ற துணையாய் ஒருபகையை ஆக்குதலே
ஆட்சியாளர் உய்யும் வகையே…!
கிராமிய பாணியில்...
தெரிஞ்சிக்கோ தெரிஞ்சிக்கோ
பகயோட நெலய
நல்லாத் தெரிஞ்சிக்கோ..
ஒதவி செய்யத்
தொண இல்லாதபோது
தனக்குப் பக ரெண்டுவந்து
தனியா நின்னா
ராசாங்கத்தில உள்ளவங்க
செய்யவேண்டியது இதுதான்,
தனக்கு ஒதவுற வகையில
ஒரு பகய
தொணயாக்கிட வேண்டியதுதான்..
அதால
தெரிஞ்சிக்கோ தெரிஞ்சிக்கோ
பகயோட நெலய
நல்லாத் தெரிஞ்சிக்கோ…!