-மேகலா இராமமூர்த்தி

புகைப்படக் கலைஞர் திரு. சரவணன் தண்டபாணி  எடுத்த இப்படத்தை அவரது ஒளிப்படத் தொகுப்பிலிருந்து தேர்ந்தெடுத்து படக்கவிதைப் போட்டி 294க்கு வழங்கியுள்ளார் திருமிகு. ராமலக்ஷ்மி. புகைப்படக் கலைஞர், தேர்வாளர் இருவருக்கும் என் நன்றி!

மலரும் மலர்முகச் சிறுவனும் அருகருகே ஒருவரையொருவர் நோக்கிக் கொள்ளும் எழிற்காட்சி நம் உள்ளம் கவர்கின்றது. இதற்குப் பொருத்தமாய்க் கவிதை தீட்ட, காட்சிக்குக் கவினைக் கூட்ட அழைப்போம் நம் கவிஞர்களை!

*****

”விரிந்து மலர்ந்த மலரைப்போல் சிரித்து மலர்ந்த முகத்தோடும் பொய்யில்லாச் சொல்லோடும் பிள்ளையாய் இருந்தால் தொல்லையில்லை” என்று பிள்ளைப் பருவத்தைப் போற்றுகின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

பிள்ளை உள்ளம்

துள்ளிப் பாயும் வெள்ளோட்டம்
பள்ளம் மேடு பார்ப்பதில்லை
கள்ளம் இல்லா உள்ளத்தில்
பொய்யும் கசடும் சேர்வதில்லை

விரிந்து மலர்ந்த மலரைப் போல்
சிரித்து மலர்ந்த முகம் கொண்டு
திறந்து வைத்த புத்தகமென – மனதை
மறைத்து மூடிப் பூட்டவில்லை

சொல்லும் சொல்லில் பொய்யில்லை
வெள்ளை கருப்புப் பேதம் இல்லை
உள்ளத்தில் உள்ளதை மறைப்பதில்லை
பிள்ளையாய் இருந்தால் தொல்லையில்லை

*****

”மண்ணில் மலரும் மலர்களோ தண்ணீரில் மலரும் மலர்களோ எவையாயினும் தாமே நம் கைக்குக் கிட்டா; முயன்று பறித்தால்தான் வசப்படும்; அவ்வாறே வாழ்வில் வாய்ப்புகளையும் தேடிப் பெற்றிடு மனிதா!” என்று நல்வழிகாட்டுகின்றார் திருமிகு. இராதா.

மண்ணில் மலரும் மலர்களாயினும்
தண்ணீரில் மலரும் மலர்களாயினும்
கண்ணுக்குத் தெரிந்த மலர்கள் நம்
கைகளுக்கு வருவதில்லை ….

குளத்தில் மலரும் அல்லியைப் பறிக்கக்
குளிர்ந்த நீரில் இறங்கி உடல் நனைய
மூச்சை அடக்கி நீந்தி முயன்றால்
எட்டாதாயினும் கிட்டிடும் நம் கைகளில்

அதுபோல்…..
வாழ்வு சிறக்க வாய்ப்புகள் பல உண்டு

வாய்ப்புகள் வாசல் தேடி வருவதில்லை
மலரைத் தேடும் தேனீக்களைப் போல

மனிதனே நீயும் வாய்ப்பைத் தேடிட வெற்றி நிச்சயம்….

*****

சிந்தனைக்கு விருந்தளிக்கும் கவிதைகளைப் படைத்திருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள்!

அடுத்து நாம் காணவிருப்பது இந்த வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பதை…

மாறுபாடு!

துள்ளித் திரியும் வயது,
துடுக்காகச் சென்று
சிறுவன்
பறித்துவிட்டான் மலரை…

சுள்ளென வெயிலில்
மலர்
வாடுவது கண்டு
வாடுகிறது அவன் முகமும்
வருத்தத்தில்…

பிஞ்சு மனத்திற்குப்
புரிகிறது தவறென,
அஞ்சுகிறது அவன் மனது…

அச்சமிது போய்விடுகிறதே
அவன் வளர்ந்ததும்,
ஆம்
பஞ்சமா பாதகங்களையும்
அஞ்சாமல் செய்கிறானே
மனிதன்..

இதுதான் இயற்கையா,
மாறுமா மனிதனின் குணம்…!?

”அறியாமல் பறித்த அழகுமலர் வெயிலில் வாடுவது கண்டு வாடும் பிஞ்சு மனம், வளர்ந்தபின் பஞ்சமா பாதகங்களையும் அஞ்சாமல் செய்வதேன்?” என்று வினவி, மனிதனின் குண மாறுபாடு குறித்து நம்மையும் யோசிக்க வைக்கின்ற இந்தக் கவிதையைத் தந்திருக்கும் திரு. செண்பக ஜெகதீசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

 

 

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க