கமல் ஹாசனின் மக்கள் நீதி மையம்
பாஸ்கர்
கமல் ஹாசனின் கட்சி வளர்ந்து வருகின்றது. அவர் பேச்சு, அரசியல் சூழல் புரிந்துள்ள நிலை மிக தெளிவாக இருக்கிறது. லஞ்ச லாவண்ய அரசியல் எதிர்ப்பாளர் என்ற ஒரு ஆயுதமே இன்று அவருக்குப் பெரும்பலம். அவருக்கு நல்ல உடல் நிலை உள்ளது. தமிழக அரசியலைத் தேசிய அரசியலை ஊன்றிப் பார்த்த அவர், நிச்சயம் மக்களுக்கு நல்லது செய்வார் என்று நம்பலாம்.
பணத்துக்கு ஆசைப்படும் வயதெல்லாம் தாண்டிவிட்டார். புகழ் போதை தவிர்க்க முடியாது. அதுவும் கடந்து போகும். நல்ல இலக்கிய, கலை அறிவு அவருக்கு உண்டு. நல்ல மொழிப் பரிச்சயம் அவருக்கு. டில்லி சென்றால் இந்தியில் பேசலாம். அடுத்த மாநிலங்களுக்குச் சென்றால் அவர்கள் பாஷையில் உரையாடலாம் . முடிவுகளைச் சட்டென எடுக்கிறார்.
இன்னும் கொஞ்சம் மக்களுடன் நெருங்கி அவர்கள் உயரத்தில் இருந்து பேசினால் நெருக்கம் அதிகமாகும். நடிப்பதில்லை என முடிவும் எடுத்துவிட்டார். அவரின் சில சாமர்த்திய முடிவுகள், ஒரு திட்டமிடலைச் சொல்கின்றன. வசீகரம் மாறவில்லை. அவர் நாத்திகர் எனச் சிலர் கிண்டல் செய்வதை ஒப்புக்கொள்ள முடியாது. நாத்திகன் நல்லது செய்யக் கூடாதா? அல்லது நாத்திகன் நல்லவனாக இருக்கக் கூடாதா என்ன?
எல்லாவற்றிற்கும் ஒரு மாற்று சிந்தனை அவருக்கு உண்டு. விஞ்ஞானம் புரிந்து, தொழில்நுட்பம் தெரிந்த, தன்னை மாற்றிச் சம காலத்திற்கு உயர்த்திக்கொண்டு உள்ள அவரது புரிதல், நிச்சயம் தேசத்திற்கு நல்லது. அவர் மற்றவர்கள் போல இயல்புத் தமிழில் பேசி, மிகுந்து யோசித்துப் பதில் கொடுத்து, தன்னை மையப்படுத்திக் கொள்ளாமல் இயல்பாய் இருப்பின், மிகுந்து சாதிப்பார்.
வாழ்க மக்கள் நீதி மையம். திராவிடக் கட்சிகளுக்கு மாற்று வேண்டும் என யோசிப்பவர்கள் நிச்சயம் அவருக்கு ஆதரவு அளிக்க வேண்டும். இன்று இல்லாவிட்டாலும் சில காலத்தில் அவர் கட்சி இங்கு நிச்சயம் வேரூன்றும்.