பாஸ்கர்

எழுபதுகளின் முடிவில் எம் ஜி ஆர் ஆட்சியில் மாணவர்களுக்குப் பதினைந்து ரூபாய் பஸ் பாஸ். இலவசமாக எங்கும் செல்லலாம். எங்களுக்குக் கொண்டாட்டம்-பிரயாணச் செலவு இல்லை. பசிக்குப் பொறை சிங்கள் டீ. எப்போதும் ஒரு நாயர் கடை எங்கேயும் உண்டு. படிப்பெல்லாம் பிடிப்பு இல்லை. வீட்டுக்காகக் கல்லூரிக்குச் சென்றோம். அரட்டை. சினிமா, பத்திரிகை சிவாஜி. இது தான் வாழ்க்கை. வாராவாரம் மாங்காடு, திருவேற்காடு. எங்கள் கும்பலின் அலட்டல் பேச்சு, பேருந்து முழுக்கக் கேட்கும். எல்லோர் பார்வையும் எங்கள் மீது. இதில் நடுவே ஆங்கில அலட்டல் வேறு.

சிறு வயசு. என் பக்கத் துணை சந்திர மௌலி. சுருக்கமாய் மௌலி. காலை அஞ்சு மணிக்குக் கச்சேரி ஆரம்பம். இந்த பாசில் சுற்றாத ஊர் இல்லை. படிப்பறிவு குறைவாய் இருந்த எனக்குப் பள்ளியில் தர்ம பாஸ். கல்லூரியில் பஸ் பாஸ். எல்லாம் மடியில் விழுந்த ஆப்பிள். பல்லவனில் எல்லாத் திசையும் எங்களுக்கு அத்துபடி.. சில இருக்கைகளில் எங்கள் பெயரும் இருக்கும். எல்லாம் எங்கள் பால்பென் கைவண்ணம். வாழ்க்கை எல்லோரையும் ஈர்க்கவே என்று ஆணித்தரமாய் நம்பின காலம்.

இந்த மயக்கம் அந்த வயதில் நிஜம். ஆனால் படிப்பு அதற்கு விலை என்பது எனக்குப் புரிய கொஞ்ச காலமானது. சேர்ந்து அரட்டை அடித்த கூட்டம் தனித்தனியாகப் படிக்கச் செல்ல நான் தனியானேன். மூணு வருஷம் காணாமல் போனது அன்று தான் தெரிந்தது. பெரிய வலி. நான் இன்னும் பட்டதாரி இல்லை எனப் புரிந்த பெரிய வலி. இனி காலை எழுந்து கல்லூரிக்கு வர வேண்டாம் என்பது சந்தோஷம் இல்லை. பெரிய துக்கம். புத்திசாலி இல்லையெனினும் என் காதல், அந்த கல்லூரி மேல் படர்ந்து இருந்தது.

இந்த வலியில் இரண்டு மாதம் கழித்து பரீட்சை எழுதப் பேருந்தில் அமர்ந்தேன். டிக்கெட் டிக்கெட் என நடத்துர் என்னைக் கேட்க, வேதனையான தொண்டையில் ஜெயின் காலேஜ் ஒன்னு என்றேன். என் வலி அவருக்குத் தெரியாது. விவரம் தெரிந்து நான் வாங்கின முதல் டிக்கெட். என்னால் இருக்கையில் கர்வமாய் அமர முடியவில்லை. மூணு வருஷப் படிப்பைத் தாண்டி அந்த பஸ் பிரயாணம் எனக்கு ஒரு போதி மரம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *