திருச்சி புலவர் இராமமூர்த்தி

பாடல்

திங்கள்சேர்  சடையார்   தம்மைச்   சென்றவர்  காணா  முன்னே,
அங்கணர்    கருணை   கூர்ந்த   அருள்திரு    நோக்கம்   எய்தத்
தங்கிய   பவத்தின்   முன்னைச்   சார்புவிட்  டகல ,  நீங்கிப்
பொங்கிய   ஒளியின்நீழல்   பொருவில்  அன்புருவம்   ஆனார்.

பொருள்

விரைந்து சென்று  சடையில்  பிறைநிலவை  அணிந்த  பெருமானைநேரில் காணா முன்னரே, திண்ணனார் பால்  அழகிய கருணைக்கண்  கொண்ட சிவனார் அருள்  பார்வை இவர்பால்  பொருந்தியது.  அதனால், இவருக்கு  இறுதியாகத்  தங்கிய வேடர்குலப்  பிறப்பு, இதுகாறும்  பெற்றிருந்த பழவினைச்  சார்புடன்  இவரை விட்டு  நீங்கியது! பெருமானின் பேரொளிப் பிழம்பில்  திளைத்து ஒப்பற்ற  அன்பே உருவமாய்  விளங்கினார்.

விளக்கம்

சென்றவர் சடையார் தம்மைக் காணாமுன்னே என்று மாற்றப்பட்ட தொடர், நேர்படச் சென்றவராகிய  திண்ணனார், பெருமானைக்  காணுதற்குமுன் என்றது காணாமுன் என நின்றது.

அங்கணர் என்ற சொல், கிருபைக் கண்ணுடையவரைக்  குறித்தது. கண்ணுக்கு அழகாவது கண்ணோட்டமுடைமை. கருணைகூர்ந்த அருட்டிரு நோக்கமெய்த என்று இப்பொருளை இங்குச் சொற்பொருள் விரித்துக்காட்டினார். அருட்பார்வை செய்கின்றாராதலின் அங்கணர் எனும்  பெயராற்கூறினார்.

கருணைகூர்ந்த நோக்கம்,  அருட்டிரு நோக்கம் எனக்கூட்டுக. கருணைகூர்ந்த

நோக்கமாவது இருவினைப்பயனை ஊட்டித் திரோதான உருவமாய் நின்ற மறக்கருணைமாறி, அறக்கருணையாய்ச் சிறந்த நோக்கம்.

அருள்திருநோக்கம் என்பது சட்சுதீட்சை, இதனை,

“சிஷ்ய : ஸமீக்ஷ்யதே பாசபந்த விமோக்ஷாய தீக்ஷேயம் சாக்ஷுஷீபவேத்”

(பாசபந்தம் நீங்கும்பொருட்டுச்சீடன் [ஆசாரியனால்] பார்க்கப்படுகின்றான்) என்று ஆகமங் கூறும்.

“முன் சினமருவு திரோதாயி கருணையாகித்
திருந்தியசத் திநிபாதந் திகழு மன்றே”

என்ற சிவப்பிரகாசம்  என்ற ஞானசாத்திரத்தால் கருணைகூர்ந்த திருநோக்கம் விளக்கப்பட்டது.

நோக்கம் எய்த   என்ற தொடர்,   அருட்பார்வை இவர்பாற்பொருந்த எனப் பொருள் பட்டது.

“தானென்னைப்,
பார்த்தான் பழையவினைப் பஞ்சமலக் கொத்தையெல்லாம்,
நீத்தான் நினைவுவேறாக்கினான் – ஏத்தரிய,
தொண்ணூற் றறுவர்பயில் தொக்கிற் றுவக்கறுத்தான்,
கண்ணூறு தேனமுதங் காட்டினான்”

என்ற நெஞ்சு விடுதூதுங் காண்க. இத்திரு நோக்கம் முன்னாட் கயிலாயத்தில், காளத்திசார்ந்து பூசைசெய்து

“சாருநாள்  ஏலவே முத்தியும்   ஈதும்போ” வென்று அருளிச்செய்த காலத்து இறைவன் பார்த்த அருட்பார்வையின் தொடர்ச்சியாதலின், அவர் (திண்ணனார்) காணாமுன் எய்தியது. அவரது முன்னைத்தவம் இதற்குக் காரணமாம். ஏனையோர்க்கும் அவ்வாறு  எய்தாமைக்கு அவ்வவர் தவ மின்மையே காரணமெனவும் இறைவன் யாவரையும் ஒன்றாகவே காண்பவன் எனவும் கண்டு கொள்க.

தங்கியபவம்  என்பது,  இவ்வுலகில்வந்த வேடராகிய இப்பிறப்பு. பவம் – பிறத்தல் உண்டாதல். இனி, இதற்குத் தங்கிய – எஞ்சி நின்ற, பவம் – பிறப்பு என்று கூறலுமாம். இவ்வொருபிறப்பே இவர்க்கு எஞ்சிநின்றது என்றபடி.

முன்னைச்சார்பு விட்டு அகல  என்ற தொடர்,  முன்னைச்சார்பு – அநாதியே தொடர்ந்துநின்ற சார்பாகிய மல மாயை கன்மங்கள். விட்டு அகல- விடுத்துப்போக. விடுதல் – சேர்க்கையின்றாதல். நீங்கி – அவற்றினின்றும் விடுபட்டு.

அருள்திருநோக்கால் முன்னைச்சார்புவிட்டு நீங்குதல் என்பதன்  விளக்கம்:

“உயிர், தான் முன்னே செய்து கொள்ளப்பட்ட புண்ணிய விசேடத்தால்  தனக்கு அந்தரியாமியாய் இதுகாறும்  உள் நின்று  உணர்த்திவந்த பரம்பொருளே இப்பொழுது குருவடிவமுங் கொண்டெழுந்தருளிவந்து சீவதீக்கைசெய்து, ‘மன்னவகுமாரனாகியநீ ஐம்பொறிகளாகிய வேடருட்பட்டு வளர்ந்து நின் பெருந்தகைமை அறியாது மயங்கியிடர்ப்பட்டாய்: நின்பெருந்தகைமையாவது இவ்வியல்பிற்று  என்று  அறிவுறுப்ப, அறிந்த போதிலேயே, அவ்வேடரை விட்டு நீங்கி, அன்னிய மின்றி, அநன்னியமாந் தன்மையின் நிலைபெற்று, அம்முதல்வன்றிருவடிகளையணையும்” என்று சிவஞான போதம்எட்டாஞ் சூத்திரத்தின் பிண்டப்பொழிப்புரைக்கும் ஆற்றால் எமது மாதவச் சிவஞானசுவாமிகள் இதனை விளக்கியதுகாண்க.

பொங்கிய ஒளியின் நீழல் என்ற தொடர்,  பொங்குதல் – விரிந்துவிளங்குதல். ஒளியின் நீழல் ஒளியினது நீழலின்கண். ஒளி என்றது ஈண்டுக் காளத்திநாதரை. நீழல் – அவரது திருவடி. அத்திருவடியினிடத்து.

“திருக்காளத்தி யுள்ளிருந்த ஒளியே யுன்னை
யல்லாலொன்று முணரேனே”

என்ற ஆளுடையநம்பிகளதுதேவாரமும்,

“அடித்தொண்டர் துன்னு நிழலாவன …….. அடித்தலமே”

என்ற திருவிருத்தமும்

“தண்ணிழலாம்பதி” என்ற சிவஞானபோதம் ஒன்பதாஞ்சூத்திரமும், அதனுரையுங் காண்க. இறைவனைப் பேர்ஒளியாகத் தியானித்தல் சிவாகமங்களில் விதிக்கப்பட்டது.

“ஆயிர ஞாயிறு போலு மாயிர நீண்முடி யானும்” என்ற அப்பர்சுவாமிகளது  தேவாரமும்,

“ஞாயிறு கடற்கண் டாஅங்கு ,
ஓவற விமைக்குஞ் சேண்விளங் கவிரொளி”

என்ற திருமுருகாற்றுப்படையும், பிறவும்காண்க.

கண்டம், கண்டாகண்டம் அகண்டம் என ஒளிகள் மூவகைப்படும். கண்டஒளிகளாகிய விளக்குமுதலியவையும், கண்டா கண்ட ஒளிகளெனப்படும். கதிரவன்,  மதிமுதலியனவும் அகண்ட ஒளியாகிய சிவ வொளியி்ன்முன்னர்ப் பிரகாசிக்கமாட்டா. சிவவொளியே ஏனைஎல்லா வொளிகளுக்கும் ஒளிதரும் காரணமாம் ஆன்மஞானம் ஏனை அந்தக்கரணஞானம். இந்திரியஞானங்களின் மிக்கு அவற்றிற்கு மூலமாய் நிற்பதுபோலச் சிவவொளியே ஏனைஎல்லாவொளிகட்கும் மேலாய்நிற்பது. அது சுயஞ்சோதி,பரஞ்சோதி, அலகில்சோதி என்று பலதிறப்பட அறியப்படும்.  “சோதியே சுடரே சூழொளி விளக்கே” என்ற திருவாசகத்தில் இவ்வியல்பு விளக்கப்பட்டமை காண்க.

“ஒளியாய்  ஒளியதன்  ஒளியாய்   ஒளியதன்
ஒளியும்  தணிதரும்  ஒளியாகி”  என்ற பேரூர்ப்புராணமும்   காண்க.

பொருவில் அன்பு உருவம் ஆனார், என்ற தொடர், திருவடி  நீழலின்கண்ணே

அன்பு அடங்காது மீதூர அந்த அன்பே தமக்கு வடிவமாக ஆயினார். முன்பு செய்ததவத்தினீட்டம் முடிவிலா இன்பமான அன்பினை எடுத்துக்காட்டிற்று; அருட்டிரு நோக்கத்தால் முன்னைச் சார்புவிட்டு அகன்றது; அகலவே பொங்கிய ஒளியின்  நீழலை நேர்பட்டார்; படுதலும், அதனிடத்து அடங்காது மீதூர்ந்த அன்பே தம்   வடிவமாகப்பெற்றார் என்பதாம்.

இனி, அன்பே சிவம்; சீவன்சார்ந்ததன் வண்ணமாவன்; சிவனைச்சார்ந்தசீவன் அவனதுருவாகிய அன்புருவமாவன் என்றலுமாம். “பரிவின் றன்மை யுருவு கொண் டனையவன்” கல்லாடம்.

இப்பாடலால் இறைவனின் அருள் திருநோக்கம் எய்திய திண்ணனார், தம் பழம் பிறப்புகள், பழவினைகள் ஆகியவற்றின்  தொடர்பு  முற்றவும் நீங்கப் பெற்றார்  என்பதும், இறைவனின் திருவருட் பேரொளி அவரை ஒப்பற்ற  அன்பே உருவமாய்  ஆக்கியதும் பெறப்பட்டது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *