குறளின் கதிர்களாய்…(372)

செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(372)
மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்திய
தற்றது போற்றி யுணின்.
– திருக்குறள் – 942(மருந்து)
புதுக் கவிதையில்…
முன் உண்ட உணவு
முழுமையாய்ச் செரித்ததா
என்பதை
உடல் குறிகளால்
உணர்ந்தே அறிந்தபின் அளவாய்
உண்டால் மேலும்,
ஒருவனுக்கு
உடற் பிணிகளுக்கான
மருந்து என்பது
வேண்டவே வேண்டாம்…!
குறும்பாவில்…
உண்டது செரித்ததா என்பதை
உடல்குறிகளால் அறிந்தபின் அதற்கேற்ப உண்பவனுக்கு
உடற்பிணி மருந்தென்பதே வேண்டாம்…!
மரபுக் கவிதையில்…
முதலி லுண்ட உணவெல்லாம்
முழுதும் செரித்த நிலையதனை
அதனுக் கான குறிகளினால்
அறிந்த பின்னே அடுத்தவேளை
மிதமா யுணவு உண்ணுதலே
மிக்க நல்ல செயலாமே,
அதனால் அவன்தன் உடற்பிணிகள்
அகற்ற மருந்தே வேண்டாமே…!
லிமரைக்கூ…
உணவது முதலில் உண்டது
செரித்ததறிந்தே யுண்போர்க்கு மருந்தென்பதே வேண்டாம்,
அனுபவ அறிவில் கண்டது…!
கிராமிய பாணியில்…
தேவயில்ல தேவயில்ல
மருந்தே தேவயில்ல,
தேவைக்கேத்த ஒணவுதின்னா
மருந்தே தேவயில்ல..
மொதலுல தின்ன ஒணவு
செமிச்சதாண்ணு
ஒடம்புக் குறியளவச்சி
நல்லா அறிஞ்சபின்னே
அடுத்தவேள திங்கிறவன்
ஒடம்புக்கு
மருந்துண்ணு ஒண்ணு
வேண்டவே வேண்டாம்..
தெரிஞ்சிக்கோ,
தேவயில்ல தேவயில்ல
மருந்தே தேவயில்ல,
தேவைக்கேத்த ஒணவுதின்னா
மருந்தே தேவயில்ல…!