குறளின் கதிர்களாய்…(396)

செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(396)
இலனென்று மெவ்வ முரையாமை யீதல்
குலனுடையான் கண்ணே யுள.
– திருக்குறள் -223 (ஈகை)
புதுக் கவிதையில்…
இரக்க வருவோரிடம்
இல்லாதவன் யானெனும்
இழிசொல்லைச் சொல்லாமையும்,
இல்லையென வருவோர்க்கு
இல்லையெனாது ஈவதுமாம்
இரண்டியல்பும்
இயற்கையிலே
உயர்குணம்
உள்ளோரிடம் உளதே…!
குறும்பாவில்…
இல்லாதவன் யானென்ற இழிசொல்
சொல்லாமையும், இரப்போர்க்கு ஈவதுமாம் இயல்புகள்
உயர்குணம் கொண்டோரிடம் உண்டு…!
மரபுக் கவிதையில்…
இரந்திட வருபவர் தம்மிடமே
இலாதவன் யானெனும் இழிசொல்லை
உரைத்திடா திருந்திடும் இயல்பதுவும்,
உண்டிட உணவுடன் பலகேட்டே
இரந்திடு வோர்க்கெலாம் இல்லையென்றே
இயம்பிடும் செயலதை விட்டொழித்தே
நிரம்பவே ஈந்திடும் இயல்பதுவும்,
நிலைத்திடும் உயர்குணத் தோரிடமே…!
லிமரைக்கூ…
உயர்குணம் மேலோரிடம் உண்டு,
இலாதவன் யானெனும் இழிசொல் சொல்லாமையும்
ஈந்திடலும், இரப்பாரைக் கண்டு…!
கிராமிய பாணியில்…
இருக்காத இருக்காத
குடுக்காம இருக்காத,
எரப்பவங்களுக்கு எப்போதும்
குடுக்காம இருக்காத..
குடுக்க ஒண்ணும் இல்லாதவன்
எங்கிற தரித்திரச் சொல்லு
சொல்லாம இருக்கிறதும்,
எரக்கிறவங்களுக்கு இல்லங்காம
ஏராளம் குடுத்து ஒதவுறதும்,
மேலான கொணம்
உள்ளவங்ககிட்ட எப்போதும்
நெறஞ்சி இருக்குமே..
அதால,
இருக்காத இருக்காத
குடுக்காம இருக்காத,
எரப்பவங்களுக்கு எப்போதும்
குடுக்காம இருக்காத…!