என் ஜன்னலுக்கு அப்பால் – இரண்டு சம்பவங்கள்

0

பாஸ்கர்

சம்பவம் ஒன்று – இரண்டு வருடங்களுக்கு முன் நான், கொரோனா காலத்தில் சில இடங்களுக்கு உணவு கொடுக்கச் சென்றேன். அப்போது. ஒரு நண்பகல் கபாலி கோவிலில் வாயிலில் ஒருவரிடம் உணவைக் கொடுத்து, பின்னர் புகைப்படம் எடுக்க முனைந்தேன். அவர் உடனேயே என்னிடம் உணவைக் கொடுத்துவிட்டு, இந்தப் புகைப்படம் எல்லாம் வேண்டாம் எனச் சொல்லிவிட்டார். அவரிடம் நான் எனக்கு வந்த நிதியை உபயோகப்படுத்தியதற்கு நிரூபணம் செய்வதற்கு இது தேவை என்பதைக் கடைசி வரை புரிய வைக்க முடியவில்லை. அவரின் தன்மானம் இதில் பழுதுபட்டு இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு அவரிடம் வணக்கம் சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டேன். அவர் மேல் எனக்குக் கோபம் இல்லை. அவரின் உயரிய தன்மானம் எனக்கு நிச்சயம் இருக்க வாய்ப்பில்லை. அவரின் செய்கை எனக்கு அவரைப் பெரிய மனிதராக காட்டியது.

சம்பவம் இரண்டு – அதே நாளில் வடக்கு மாட வீதியில் ஒருவரைப் பார்த்து உணவைக் கொடுக்க முற்பட்டபோது அவர், நான் இப்போது தான் சாப்பிட்டு முடித்தேன் எனச் சொல்லிவிட்டு இதை வேறு யாருக்காவது கொடுக்க முடியுமா எனக் கேட்டார். அவரிடம் இதனை இரவுக்கு வைத்துக்கொள்ளலாம் எனச் சொன்ன போது அவர் சொன்னார்.

“இப்படிச் சேர்த்து வைக்க ஆரம்பித்தால், நாளை யார் வருவார் என இங்கேயே உட்கார்ந்து விடுவேன். தினமும் நீ வருவியா என எதிர்பார்ப்பேன். எனக்குத்தான் இதனால் கஷ்டம். இப்ப பசியில்லை, எனக்கு வேண்டாம். பசியோடு இருப்பவனிடம் கொடு” எனச் சொல்லி விட்டார்.

தர்மம் என்ற விஷயம் சுலபம் என்றாலும் இது போல நிகழ்வுகள் எல்லாம் பாடங்கள்.

அவருக்கு அப்போது பசியில்லை என்ற ஒரு வரியே அவரை ஒரு சிங்கம் போலக் காட்டியது. தர்மம் கேட்பவர்கள் நம்மைப் போன்றவர்கள். அவர்களைத் தரம் பிரிக்கக் கூடாது. அவர்களின் உயரிய குணங்கள் பெருமையான விஷயம்.

அன்று அந்த இருவரும் எனக்கு ஞான தர்மம் செய்தனர். பொருளற்று இடமற்று எங்கோ தூங்கி, எங்கோ உண்டு உறங்கும் இவர்கள் மேன்மையானவர்கள். தர்மம் கேட்பவரின் கண்களைப் பாருங்கள். உங்கள் கைகள் தன்னிச்சையாய் தர்மம் செய்யும். செய்ய வேண்டும்.

யாசிப்பவர்கள் வாழ்க. அவர்களுக்கு உதவுவோரும் வாழ்க.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.