-மேகலா இராமமூர்த்தி

போர்க்களத்தில் தன்னை நாடிவந்த தம்பி வீடணன் இராமனைவிட்டுத் தன்னோடு சேர வந்திருக்கின்றான் என்று தப்புக்கணக்குப் போட்ட கும்பகருணன், அதன் பாதகங்களை எடுத்துரைத்து இராமனோடு அவன் இணைந்திருப்பதே சரியென்று அறிவுரை கூறுகின்றான். அவற்றைச் செவிமடுத்த வீடணன், தான் வந்ததன் உண்மை நோக்கத்தை அண்ணனிடம் எடுத்துரைக்க விரும்பி, “அண்ணா! நான் தங்களிடம் சொல்லுதற்குச் செய்தி ஒன்று உளது” என்றுரைக்கவே, அதனைச் சொல்லுமாறு பணிக்கின்றான் கும்பகருணன். அதனைத் தொடர்ந்து தன் எண்ணத்தை வெளியிடத் தொடங்குகின்றான் வீடணன்.

”அண்ணா! அறியாமை மிகுந்தவனாகிய எனக்கும் இன்னருள் சுரந்த இராமன், நீ அவனை அடைக்கலமாக அடைந்தால் உன்னையும் காப்பான். மயக்கம் தரும் பிறவிப் பிணிக்கு அவன் மருந்தானவன்; சகடம்போல் சுற்றிவரும் இவ்வுலக வாழ்வை நீக்கி வீட்டுலகை அளிப்பவன்.

அவன் எனக்குத் தந்த செல்வம் மிகுந்த இலங்கையையும் அதன் அரசுரிமையையும் பிறவற்றையும் நான் உனக்குக் கொடுத்து உன் ஏவலின்வழி வாழ்வேன்; உன் தம்பியாகிய என் மனவருத்தத்தைப் போக்கி நாம் பிறந்த குலமரபை விளங்கச் செய்வாய்!

தீச்செயல்களைச் செய்வார்களாயின் அவர்கள் அன்பிற் சிறந்தவர், உடன்பிறந்த உறவினர், தாயாகிய அவ்வை, தந்தைமார் என்றெல்லாம் எண்ணிப் பார்ப்பரோ தருமத்தை நோக்குபவர்கள்? நீ அவற்றை அறிவாய் அல்லவா? உனக்கு நான் சொல்லவேண்டியது என்ன இருக்கின்றது? தூய செயல்களைச் செய்யத் துணிந்தபோது பழிவந்து தொடர்வது உண்டோ?

தீயவை செய்வர் ஆகின் சிறந்தவர் பிறந்த உற்றார்
தாய்அவை தந்தைமார் என்று உணர்வரோ தருமம் பார்ப்பார்
நீஅவை அறிதி அன்றே நினக்கு நான் உரைப்பது என்னோ
தூயவை துணிந்தபோது பழிவந்து தொடர்வது உண்டோ.
(கம்ப: கும்பகருணன் வதைப் படலம் – 7413)

அறத்தை நோக்குபவர் – அதன்வழி நடக்க விழைபவர், அண்ணன் தம்பி தாய் தந்தை என்று அன்புநோக்கிலும் பாசநோக்கிலும் பாராது, அவர்கள் தவறுசெய்யின் அவர்களைவிட்டு நீங்குவர்; அவ்வாறு செய்தால்தான் பழி தொடராது; அன்றேல் அத்தீயோரின் பழிபாவங்களுக்கு நாமும் துணைபோனது போலாகும் என்பதே ஈண்டு வீடணன் கும்பகருணனுக்குச் சொல்லும் அறிவுரை.    

தன் உரையைத் தொடர்ந்த அவன், ”ஐயனே! உன் இளமை வறிதே ஏக, வாணாளை வீணாளாய் இதுவரை உறங்கிக் கழித்தாய்; இப்போது இராவணனுக்காக உயிரைப் போக்கி எதனை நீ அடையப் போகின்றாய்?

இராமனை அடைந்து அவன் கருணைக்கு நீ பாத்திரமானால் உன் உறக்க சாபம் நீங்கலுற்று, அழிவில்லா ஆயுள்பெற்று, இணையில்லா இலங்கை அரசினை ஆட்சி செய்வாய்; அதற்குரிய காலமும் வந்துவிட்டது. ஆதலால், என்னோடு இராமனைக் காண வருவாய்!” என்று கும்பகருணனை வேண்டி அவன் திருவடிகளைத் தன் சிரமேல் சூடினான் வீடணன்.

தன் காலில் வீழ்ந்து வணங்கிக் கிடந்த தம்பி வீடணனை எடுத்து மார்புறத் தழுவிக் கண்களில் கண்ணீர்சொரிந்த வண்ணம் பேசத் தொடங்கினான் கும்பகருணன்…

”மார்பில் தாரணிந்த மைந்தனே! என்னை நீண்டநாள் அருமையாய் வளர்த்து இன்று தன் கையாலேயே போர்க்கோலம் பூணுவித்துப் போர்க்குச் சென்று வா என்றனுப்பிய அண்ணன் இராவணனுக்காகப் போரில் உயிரைக் கொடாது, நீரில் எழுதிய கோலத்தைப்போல் விரைந்து அழியக்கூடிய வள வாழ்வை விரும்பி அந்த இராமனிடம் போய்ச் சேரமாட்டேன்; என் துன்பத்தை நீ போக்க விரும்பினால் கார்மேகம்போல் கரிய திருமேனியுடைய இராமனை விரைவில் சென்றடைவாய்” என்றான்.

நீர்க்கோல வாழ்வை நச்சி நெடிதுநாள் வளர்த்துப் பின்னைப்
போர்க்கோலம் செய்து விட்டாற்கு உயிர்கொடாது அங்குப் போகேன்
தார்க்கோல மேனி மைந்த என்துயர் தவிர்த்தி ஆகின்
கார்க்கோல மேனியானைக் கூடுதி கடிதின் ஏகி.
(கம்ப: கும்பகருணன் வதைப் படலம் – 7426)

நிலையில்லா வாழ்வுக்காக இந்நாள்வரை எனைப் புரந்த அண்ணனைத் துறத்தல் முறையன்று என்ற கும்பனின் உரை அவன் செய்ந்நன்றியறிதலில் சிறந்த செம்மல் என்பதைத் தெள்ளிதின் விளக்குகின்றது.

”தம்பி வீடணா! நற்கருத்தினைக் கொள்ளாத் தலைவன், தீத்தொழில் செய்ய எண்ணினால் அவன் அவ்வாறு செய்யாவண்ணம் தடுத்துத் திருத்துதல் இயலுமாயின் அன்றோ திருத்தலாம்? அவ்வாறு இயலாது போனால் அவனுக்கெதிர் சென்று அடையத்தக்க பெரும்பொருள் உண்டோ? ஒருவனுடைய உணவை உண்டு வளர்ந்தவர் செய்தற்குரிய செயல் அவனுக்காகப் போர்த்தொழில் புரிபவராகி ஒப்பற்ற அத்தலைவன் முன்னர்ச் சாதலே ஆகும்.” என்றான்.

கருத்துஇலா இறைவன் தீமை கருதினால் அதனைக் காத்துத்
திருத்தலாம் ஆகின் அன்றோ திருத்தலாம் தீரா தாயின்
பொருத்து உறுபொருள் உண்டாமோ பொருதொழிற்கு உரியர்ஆகி
ஒருத்தரின் முன்னம் சாதல் உண்டவர்க்கு உரியது அம்மா.
(கம்ப: கும்பகருணன் வதைப் படலம் – 7428)

உணர்ச்சிப் பிழம்பாய் மாறித் தன் மனத்தைக் கும்பகருணன் வீடணனுக்குத் திறந்துகாட்டும் இடமிது.
புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து.
(குறள் – 780)

எனும் வள்ளுவத்துக்கு விளக்கமாய் அமைந்திருக்கின்றது கும்பனின் உரை.

”தேவரும் மற்றுளோரும் போற்றி வணங்க மூவுலகையும் ஆண்ட அண்ணன், இராமன் கணைகளால் தாக்குண்டு தன் படைகளோடும் உறவினர்களோடும் தனக்காக இறக்கத் தம்பியும் இன்றி மண்மேல் மாண்டு கிடக்கலாமா?  

எவ்வாறாயினும் அண்ணனின் பகைஞர்களைக் கும்பிட்டு வாழ்தல் என்னால் ஏலாது, தம்பி! கடல் போன்ற வானர சேனையையும் அங்கதனையும் சுக்கிரீவனையும் அனுமனையும் இராம இலக்குவரையும் எதிர்நின்று வென்று உலகத்தை மூடுகின்ற பனிக்கூட்டம் ஒழித்துக் கதிரவனைப் போல் சுற்றித் திரிவேன் பார்!” என்று ஆவேசமாக வீடணனிடம் பேசுகின்ற கும்பகருணன், உடனே சினம் தணிந்து தெளிந்த சிந்தையனாகி,

”ஐயனே! நீ விரைந்து இராமனிடம் செல்! போரில் இறக்கப் போகின்ற நாங்கள் நரகு புகாவண்ணம் உரிய கடன்களாற்ற அங்குச் சென்றிடுக!

அழியாது வாழ்பவனே! ஆகவேண்டிய காலத்தில் எதுவும் ஆகியே தீரும்; அதுபோல் அழியவேண்டிய காலத்தில் அழிந்து சிதறிப் போகும்; அவ்வாறு அழியப் போவதை பக்கத்தில் நின்று பாதுகாத்தாலும் அஃது அழிதல் திண்ணம். அதனைக் குற்றமற உணர்ந்து தெளிந்தோர் உன்னைக்காட்டிலும் எவர் இவ்வுலகில் உளர்? ஆதலால், துன்பமுறாது, எம்மைக் குறித்து இரங்காது செல்வாயாக!” என்ற வாழ்க்கைத் தத்துவத்தைத் தம்பிக்கு உணர்த்தி, தன் நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்பதைப் புலப்படுத்துகின்றான் கும்பகருணன்.

ஆகுவது ஆகும் காலத்து அழிவதும் அழிந்து சிந்திப்
போகுவது அயலே நின்று போற்றினும் போதல் திண்ணம்
சேகுஅறத் தெளிந்தோர் நின்னில் யார்உளர் வருத்தம் செய்யாது
ஏகுதி எம்மை நோக்கி இரங்கலை என்றும் உள்ளாய்
(கம்ப: கும்பகருணன் வதைப் படலம் – 7437)

தான் சொல்லவேண்டிய கருத்துக்களைச் சொல்லிவிட்ட கும்பகருணன், அருமைத் தம்பி வீடணனை மீண்டும் இறுகத் தழுவிக்கொண்டு நீர்நிறைந்த கண்களால் அவனை நெடிதுநோக்கி, “உனக்கும் எனக்குமான உடன்பிறப்பு எனும் தொடர்பு இன்றோடு முடிந்துவிட்டது அல்லவா?” என்று வேதனைமேலிட விளம்புகின்றான்.

இனியும் பேசி அவன் மனத்தை மாற்றவியலாது என்பதை உணர்ந்த வீடணன், அவன் அடிகளை மீண்டும் பணிந்து விடைகொண்டு இராமனிடம் திரும்பினான்.

கும்பகருணனுக்கும் வீடணனுக்கும் இடையிலான சோதர பாசத்தை அழியாச் சித்திரமாய் இப்பகுதியில் தீட்டிக் காட்டியிருக்கும் கம்பரின் கவியாற்றல் நம்மை பிரமிக்கவைக்கின்றது.

இராமனிடம் திரும்பிய வீடணன், ”ஐய! குலப்பற்று சிறிதும் தீர்ந்திலாத அண்ணன் கும்பகருணனின் மனத்தை என்னால் மாற்ற இயலவில்லை” என்று கூறவே, ”உன் எதிரில் உன் முன்னோனாகிய கும்பகருணனைக் கொல்லுதல் இனியதன்று என்று கருதியே அவனை அழைத்துவரச் சொன்னேன்; இனி நாம் செய்யக்கூடியது ஏதுமில்லை; விதியை யார் வெல்லமுடியும்?” என்று விடையிறுத்துக் கும்பகருணனுடனான போருக்கு ஆயத்தமானான் இராமன்.

கும்பகருணன் புரிந்த போரை 187 பாடல்களில் விரிவாகப் பாடியிருக்கின்றார் கம்பர். கம்பராமாயணத்தில் இடம்பெறும் மிகப்பெரும் போர்ப் படலங்களுள் இதுவும் ஒன்று.

நீலன், அங்கதன், அனுமன் என ஆற்றல்மிகு வானரர்கள் கும்பகருணனோடு போரிட்டுத் தோற்கின்றனர்; குரக்குச் சேனையும் பாதிக்குமேல் அழிந்தொழிந்தது. அதுகண்டு கும்பனோடு போருக்கு வருகின்றான் சுமித்திரையின் சிங்கமான இலக்குவன்.  அவனைக் கண்ட கும்பன், ”இராமன் தம்பியாகிய நீயும் இராவணன் தம்பியாகிய நானும் போர்செய்வோம் வா! குற்றமில்லா எங்கள் குலக்கொடியான சூர்ப்பனகையின் நாசியை அரிந்த வெற்றிவீரனே! அவள் கூந்தலைப் பற்றியிழுத்த உன் கரத்தை நிலத்தில் வீழ்த்தப்போகின்றேன்; காத்துக்கொள்!” என்றான்.

”சொல்லை விடுத்து வில்லை எடுப்பதே எங்கள் வழக்கம்” என்று இலக்குவன் மறுமொழி பகரவே, தம்பியர் இருவரும் போரில் இறங்கினர். இலக்குவனை அனுமன் தோளில் தூக்கிக்கொண்டான். நெடுநேரம் நடைபெற்ற அப்போரின் ஒருகட்டத்தில் இலக்குவன் விடுத்த கணையால் கும்பகருணனின் தேர் அழிந்தது; பாகர் இறந்தனர்; வானவில்லையொத்த அவனுடைய பெரிய வில்லும் துண்டானது. அவன் தரையில் நின்று போரைத் தொடர்ந்தான்; அவன் தரையில் நிற்பதுகண்டு இலக்குவனும் அனுமன் தோளிலிருந்து தரையில் இறங்கிப் போர் புரியலானான்.

அப்போது அங்குவந்த சுக்கிரீவனைக் கண்ட கும்பகருணன் இலக்குவனை விடுத்து அவனோடு போரைத் தொடங்குகின்றான். சுக்கிரீவன்மீது அவன் ஒரு சூலத்தை எறிய இடையில் புகுந்த அனுமன் அதனை முறித்தெறியவே, அனுமனைத் தன்னோடு போர்புரிய அழைக்கின்றான் கும்பகருணன்; அவன் அதனை மறுத்துச் சென்றுவிடுகின்றான்.

கும்பகருணனுக்கும் சுக்கிரீவனுக்கும் போர் தொடர்கின்றது. சுக்கிரீவனைப் பற்றிய கும்பகருணன், அவனைத் தன் பலம் பொருந்திய கரங்களால் இறுக்கவே அவன் மூர்ச்சையானான். மூர்ச்சையுற்ற சுக்கிரீவனை இலங்கை மாநகரை நோக்கிக் கும்பகருணன் தூக்கிச் செல்லும் காட்சியை,

”மனப் புழுக்கத்திற்குக் காரணமான வெஞ்சினமுடைய கும்பகருணன் சுக்கிரீவனைத் தூக்கிக்கொண்டு போபவன், வருத்தமில்லாத கிரகத்தன்மையுடைய இராகு எனும் (கரும்)பாம்பு போல் ஆயினான்; கதிர்விடும் சூரியன் மகனாகிய சுக்கிரீவனோ இராகுவால் விழுங்கப்பட்ட மதிபோல மெலிந்து தோன்றினான்” என்று உவமை நயந்தோன்றப் பாடுகின்றார்.

புழுங்கிய வெஞ்சினத்து அரக்கன் போகுவான்
அழுங்கல்இல் கோள்முகத்து அரவம் ஆயினான்
எழுங்கதிர் இரவிதன் புதல்வன் எண்ணுற
விழுங்கிய மதிஎன மெலிந்து தோன்றினான்
. (கம்ப: கும்பகருணன் வதைப் படலம் – 7542)

சுக்கிரீவன் நிலைகண்ட அனுமன், ”உன்னோடு போர்புரிய மாட்டேன்” என்று கும்பகருணனிடம் கூறியதை நினைந்து, அவனை எதிர்க்காமல் கைகளைப் பிசைந்துகொண்டு அவன்பின்னே செல்கின்றான். போர்க்களத்தில்கூடச் சொன்ன சொல் தவறாத அறம் கடைப்பிடிக்கப்படுதலை இங்கே காண்கின்றோம்; இதனையே அறப்போர் என்றனர் சான்றோர்!

சுக்கிரீவனின் நிலையை வானரர்கள் வாயிலாய் அறிந்த இராமன், கடுஞ்சினத்தோடு தன் அம்புகளால் மதிலெழுப்பிக் கும்பகருணன் இலங்கைக்குள் புகுவதைத் தடுக்கவே, தன் பயணம் தடைப்பட்டதைக் கண்ட கும்பன் திரும்பிப் பார்க்கின்றான்; அங்கே நின்ற கொண்டல்வண்ணனைக் கண்டு சீற்றம் கொண்டவனாய்,

”இராமா! என் கையிலிருக்கும் சுக்கிரீவனை உன் ஆற்றலினால் நீ விடுவித்துவிடுவாய் என்றால் சீதையையும் சிறையிலிருந்து விடுவித்தவன் ஆவாய்” என்று அறைகூவல் விடுக்கின்றான்.

அதுகேட்டு முறுவலித்த இராமன், ”சுக்கிரீவனைத் தூக்கிச் செல்லும் உன் தோளெனும் குன்றை நான் வெட்டி வீழ்த்தாவிட்டால் உனக்குத் தோற்றவனாவேன்; அதன்பின்னர் வில்லையே பிடிக்கமாட்டேன்” என்று சபதம் செய்தான்.

அதனைத் தொடர்ந்து இரு கூரிய அம்புகளைக் கும்பகருணனின் நெற்றியை நோக்கி இராமன் பாய்ச்சவே, குன்றிலிருந்து அருவிகொட்டுவதுபோல் கும்பனின் நெற்றியிலிருந்து குருதி கொட்டியது. அக்குருதித் துளிகள் தன் முகத்தின்மீது பட்டதால் அதுவரை மயக்கத்திலிருந்த சுக்கிரீவன், நீர் தெளித்து எழுப்பியதுபோல, மயக்கம் தெளிந்தான். ஆனால், யாரிடமும் தோற்றறியாத கும்பகருணனோ குருதி வெளியேறியதால் சோர்ந்து மயக்கமுற்றான்.  

எதிரில் இராமன் நிற்பதைக் கண்டு களிப்புற்ற சுக்கிரீவன் மானவுணர்வும், நாணும் கொண்டவனாகிப் பகைவனான கும்பகருணனின் நாசியையும் காதுகளையும் கடித்துப் பிடுங்கிக்கொண்டு சென்று தன் கூட்டத்தாருடன் இணைந்தான்.

கும்பகருணனின் சோர்வு சுக்கிரீவனுக்கு அவனைத் தாக்க நல்வாய்ப்பாய் அமையவே, அதனைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு, வானரத்துக்கே உரிய இயல்போடு, அவன் உறுப்புக்களைக் கடித்து எடுத்துச் சென்றுவிட்டான். 

மயக்கம் தெளிந்த கும்பகருணன் தன் நாசியும் காதுகளும் அறுப்பட்டதை உணர்ந்து அவமானமும் வெட்கமும் உற்றவனாய் இன்னும் கடுமையாய்ப் போர்புரியத் தொடங்கினான்.

[தொடரும்]

*****

 கட்டுரைக்குத் துணைசெய்தவை:

1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.
2.
கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.
4. கம்பனில் மக்கள்குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.